My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

23.6.10

நதி...


நதிக்கரை நாகரிகம் - ஆனாலும் திராவிடம் :

வெள்ளையன் ஓடம் விட்ட நதி
பச்சையப்பன் நீராடிய நதி
கட்டாந்தரையை கண்டிராத நதி
வற்றாத ஜீவ நதி.

துணி வெளுக்கும் படித்துரைகள்;
படகுத்துரை மண்டபங்கள்;
பஞ்சகாலம் வந்தபோதும்
சஞ்சலமின்றி ஓடும் நதி!

***

ஆற்றின் அமைதியும்,
இருளும் நிலவும்,
சூரியனும் சூனியமும்
அழகுச் சித்திரம்தான் - ஆனாலும்
கண்களை மூடிக்கொண்டுதான்
காணவேண்டும்!
____

எங்களின் பிறப்பிடம், வசிப்பிடம்
வாய்ததெல்லாம் இங்கேதான்.
அதனால் - இது ஆறறங்கரை நாகரிகம்:
ஆனாலும் திராவிடப் பாரம்பரியம்!
தெளிவாய்த்தான் கூறுகிறோம்;
உங்களின் குழப்பதிற்கு
நாங்கள் எப்படி பொறுப்பாவோம்?

***

அமேசான் வாசிகள் போல்
ஆற்றங்கரைக் குடில்கள்.
எட்டுக்கு எட்டில் கீற்றோலைத் தட்டி.
கரையை சரித்துவிட்டால்
குந்திக்கொள்ளத் தரை!
நேரான கோடுபோட்ட தெரு -
ஒரு ஆள் போக, ஒரு ஆள் வர.
பதினாறடிச் சறுக்கலில்
மலைக் கிராமம்போல.
ஆனால் ஊரில்லை, பேரில்லை,
முகவரியுமில்லை!
தெருவுக்கும் பெயரிடவில்லை,
தெருவிளக்குமில்லை - அதனால்
மின்சாரமுமில்லை!!!

***

ஒன்றுபோலத்தான் குடில்கள் - ஆனால்
கூரைகள்?
வியந்துபோவீர்கள்:
அத்தனையும் சித்திரங்கள்;
கண்ணைப் பறிக்கும் வண்ணமயம்.
வர்ண ஜாலம் வீசும்;
வர்ண வாசமும் வீசும்!

***

அதோ...
அந்தப் படகுதுறைக்குப் பக்கதில்
எமது குடில்.
வியப்பாயிருந்தால் வந்து பாருங்கள்
கண்ணைப் பறிக்கும் வண்ணக் கூரையை...!

***

இதோ...
செல்வியின் சிரிப்பு,
கண்களில் தெறிக்கும் குறும்பு.
கன்னத்துக்குக் கன்னம் எட்டடி.
நெற்றிக்கும் கழுத்துக்கும் எட்டடி.
கனச்சிதமாய் கூரையில்
கவிழ்ந்து கிடக்கிறார்.

"அறுபைத்தைந்தின் அகவையை எட்டும்
தங்கத் தாரகயே வா...' - கட்சிக் கலரில்.
...ழ்த்த வயதில்லை - வணங்குகிறோம்"
எனும் எச்சம் தென்னங்கீற்றில்
சுருண்டு கிடக்கிறது!
அந்தக் குறும்புச் சிரிப்பு
உடம்பின் வருணணைக்கா
என்பது புரிந்தபாடில்லை.
மயிலை மாங்கொல்லையில்
கருவாடாயக் காய்ந்து கிடந்ததை
முந்தின மாதம் மீன்பாடி வண்டியில்
எங்க நைனா தள்ளிக்கொண்டு வந்தார்!

***

இந்த வாசல் தட்டியைப் பாருங்கள்...
மதுரைக்கார அழகிரி!
ஊருக்குப் புதுமுகம்.
அண்ணா சாலையில்
ஆளுயரத் தட்டியில்
அனாதையைய் நின்றிருந்தார்.
இதோ... இப்போது இங்கே!
முட்டிவரை வெட்டிவிட்டதால்
நாலடி உயர வாசலில்
கச்சிதமாய் நிற்கிறார்.
போகும்போதும் வரும்போதும்
கைகூப்பி வணக்கம் போடுவார்!

***

அந்த முனுசாமி வீட்டிலேதான்
வைகோ இருக்கிறார்.
ஐயகோ, கலங்கிய கண்கள்.
வைகோ கைகாட்டிய இடத்தில்
நட்சத்திர வடிவில்
முத்துக்குமார் படம்.
அதற்குக் கீழே
ஈழப் படுகொலைப் படங்கள்.
"ரத்த ஆறு ஓடும்" என்று
'ராவா'கப் பேசினவர் - அந்தோ...
சித்தம் கலங்குகின்றார்;
சிந்தையும் கலங்கினாரே...!

***

கஜா வீட்டுக்கு வாருங்கள் -அங்கே
விஜயகாந்த் இளிக்கிறார்.
கருப்பு எம்ஜியாராம் - ஆனால்
கண்கள் 'செவ செவ' என்று இருக்கும்.
கருப்பு எம்ஜியாருக்குப் பக்கதில்
பொறுப்பான பொண்டாட்டி.
அவருக்குப் பக்கதில்
ஆசை மச்சான்.
அதற்கும் பக்கத்தில்?
ரெண்டு காலிக்கட்டங்கள் - வாரிசுகளுக்கு!

கேப்டனின் ஆக்ரோஷம்
துல்லியமாகத் தெரிகிறது...
இந்த முறைக்கு பழுக்கப்போவது
எந்தத் தொண்டனின் கன்னமோ...?

***

முந்தானாள் வரையிலே
மங்காத்தா கூரையிலே
மருத்துவர் 'மாங்காய்' ராமதாசி இருந்தார்.
கூடவே அன்பு 'மனி' மகனும்.
அருமைத் தங்கையும்கூட இருந்தார்கள்.
ஆனால்... ஏனோ தெரியவில்லை -
'வீட்டுக்கு விளங்கலை'யென்று
மங்காத்தா தூக்கிப் போட்டாள் தெருவிலே.
இப்ப்போது அவள் கூரையில் ரித்தீஷ்!
ராமனாதபுரத்துச் சொந்தம்
ராசி பார்த்து
ரயிலேறி கொண்டுவந்தது!

***
ஆனால் ஐயா,
சிவாஜி இருந்திருந்தால் செத்திருப்பான் -
இந்த நடிப்புக்கு!
ஒரே முகம் - ஒரெயொரு முகந்தான்.
அதிலே மகிழ்ச்சியும் இருக்கும்,
சோகமும் ததும்பும்.
சூழ்ச்சியென்பது இருக்காதைய்யா.
இந்தச்சிக்கலான முகம்
இங்கிருந்து மூன்றாவது குடிசை!
யாரெனக் கேட்பீரேல்...
அவர்தான் அண்ணன் திருமா.

எப்படி ஐயா, எப்படி முடியும்?
ஆண்டாண்டு காலத்துக்கும்
இந்த ஆண்டையின் நடிப்பை
மறக்க முடியுமா?
மறுக்கத்தான் முடியுமா?

***

முக்கால்வாசிக் கூரைகளிளும்
ஓய்வெடுக்கும் முதியவர், கலைஞ்சர்.
இவர் -
ஏழயின் சிரிப்பில்
இரைவனைக் கண்டுவிட்டால் -
திண்ணை காலியாகக் காத்திருக்கும்
சென்னைத் தளபதி
பதினாறு புள்ளி 00000.25 அடி பாய்வார்!

***

கூட்டிக் கழித்தால்
தமிழகத்து எதிர்காலங்கள்
தொங்கிக் கொண்டிருக்கின்றன -
எங்கள் கூரைகளில்!
எப்படியென்று கேட்கிறீர்களா?
கர்ம வீரர்களாகவும், கலைஞ்சர்களாகவும்,
புரட்சித் தலைவர் / தலைவிகளாகவும்,
தளபதி / இளைய தளபதிகளாகவும்,
கேப்டன் களாகவும், எம்டன் களாகவும்,
சிறுத்தைகளாகவும், பன்றிகளாகவும்,
கருப்பு நிலாக்களாகவும்,
சூரியன் களாகவும், நட்ச்சத்திரங்களாகவும்,
அமாவாசைகளாகவும்,
விடிவெள்ளிகளாகவும், வெட்டுக் கத்திகளாகவும்,
வெங்காயங்களாகவும்,
மொத்ததில்...,

மொத்ததில்...
ஆரியர்களாகவும், திராவிடர்காளாகவும்!

***


அடடா...
அது அவர்கள் நாகரீகம்!
அவர்களுக்கு அவர்களாகவே
போர்த்திக் கொண்ட
நாமகரணத் துண்டுகள்!
புரியாமல் தவிக்கும் பிண்டமே...
இதுதாண்டா அரசியல் நாகரீகம்...!
ஆனாலும் எங்களுக்கு
ஆற்றங்கரை நாகரீகம்.
ஆனாலும் நாங்கள் ஆரியர்களல்ல...
திக்கற்றுப் போன திராவிடர்கள்தான்!

***
இன்னொரு நாகரீகம்...
சினிமா நாகரீகம் தெரியுமா உங்களுக்கு?
பம்பாயில் இருக்கும் இதே கிளை நதியின்
கரைகளில் வசிக்கும் நாய்கலைப் பற்றியது.
இந்திய சேரி நாய்களைப் பற்றிய
இங்கிலீசுப் படம் -
அள்ளிக் கொண்டுவந்தது ஆஸ்கார்களை...!
மேட்டுக்குடி மகிழ்ந்தது.
நடுத்தரம் சிலிர்த்தது.
வறுமைக் கோட்டில் இருந்தவர்களும்
கொண்ண்ண்டாடி விட்டார்கள்.
கொண்டுவந்துவிட்டான் ஒரு இந்தியன்.
அதுவும் ஒரு தமிழன் - டமிளிலேயே பேசினவன்.
கவுரவத்தை வீட்டுக்குக் கொண்டுவந்துவிட்டான் -
இந்தியக் கவுரவத்தை
சந்தியில் அல்லது சந்தையில் விற்ற பிறகு!

***

ஆரிய மாயையும்
திராவிட சூழ்ச்சியும்
உங்கள் நீரோட்டத்தின்
ஊற்றகிப் போனது.
அதன் ஜனனாயக ஒழுக்குத்தான்
இந்தக் கருப்புச் சாக்கடை.
இந்தச் சாக்கடையின் விளிம்பில்
சிக்கிக்கொண்டுவிட்ட நாங்கள் -
இதோ...
இந்தக் கரைச்சறுக்கலை
இறுகப் பிடிது மேலேறிவிட்டாலோ...

எங்களின் நெரிசல்
உங்களை நசுக்கிவிடும்.
எங்களின் வியர்வை நாற்றத்தில்
உங்களின் மூச்சுத் திணறும்.
எங்களின் வயிற்றில்
சோற்றுக்காய் சுரந்த அமிலம்
உங்களை சுட்டெரித்துவிடும்.
இந்தக் கருப்புச் சாக்கடையில்
ரத்த வீச்சம் வீசும்!

- புதிய பாமரன்.