My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.4.11

உண்மையின் நிழல்


லாபிக் கிசுகிசுப்பில்
நான் கருக் கொண்டேன்.
பாவக் கணக்கில்தான்
உருக்கொண்டேன்.
நான்
பாவத்தின் சம்பளம்.
என் விலை
மிக மிக அதிகம்.
நாட்டின்
தலைவிதியையே
திருத்திவிடும் பிரும்மா
தீட்டிவைத்த காவியம்.
கீழ்மட்டமான ஏழையாயிருந்து
உலகமட்டமான பணக்காரன் வரை
உருவெடுத்த உத்தமர்;
வாழ்ந்து காட்டிய
தியாகச் செம்மல்
தீட்டிவைத்த காவியம்.
என்னை நிமிர்ந்து
நீங்கள் பார்க்கும்
பொறாமைப் பார்வைகள்.
உங்கள் பார்வைகளை நான்
தவிர்த்துக்கொள்ள
தலை குனிந்துகொள்கிறேன்.
உங்கள் மூச்சுக் காற்றில்
உருகி விழுவேனோ என
பயங்கொள்கிறேன்.
பாலிவுட் பெருமூச்சும்
பத்திரிகைக் கிசுகிசுப்பும்
ஃபோர்பின் ஃப்ளாஷும்
என்னைக் கூச்சப்படவைக்கும்.
பண முலாம் பூச்சில்
அரிதாரமிட்டு,
மும்பை நகரத்துச் சந்தியில்
நிற்கவைத்து
அழகு பார்க்கப்படுகிறேன்.
ஒரு விபச்சாரி போல.
என் உயரத்தில்,
தலைக்குமேல்தான் சொர்க்கம்.
கை நீட்டினால்
கடவுளைத் தொடலாம்.
பரவசப்படுங்கள்.
என் காலடியில் நரகம்.
அது
என் ரிஷிமூலம்.
அது நாறுமென்பதால்
அதைக்காண விரும்பாதீர்கள்.
சேரிகள் பெருகிய
அழுத்தத்தின் விதியால்
பிதுங்கி மேலெழுந்த
பண வீக்கம் நான்.
நாட்டையே அடகிட்டு
இலாபக் கணக்கெழுதி,
ஊரை உலையிலிட்டு,
அவித்துத் தின்ற செரிமானகள்
இங்கே
கழிக்கப்படும்போது
குடலைப் பிடுங்கிக் குமட்டும்.
தன லட்சுமி
என் குபேர மூலைப் பெட்டியில்
தங்கியிருக்கிறாள்.
இது,
மக்கள் கொடுத்த வரம்.
தருத்திர லட்சுமி
இந்திய மூலை முடுக்கெங்கும்
தவம் கிடக்கிறாள்.
இது,
மக்களே இட்டுக்கொண்ட சாபம்.
இதுதான்
இந்தியாவின் விதி.
என் ரிஷி மூலத்தோடு
என்னை நோக்கப்பட்டால்
நான்
இந்தியாவின் அவமானச் சின்னம்.
என் ரிஷிமூலம் தவிர்த்து,
என்னை நோக்கப்பட்டால்
நான்
இன்னொரு தேசியச் சின்னம்.
சின்னத்தின் மதிப்பு
உங்கள்
பார்வையில்.
உங்களை நான்
வசீகரித்திருந்தால்
நீங்கள்
கனவு காணுங்கள்.
உங்களை நான்
அவமதித்திருந்தால்
கடப்பாரை எடுங்கள்.
இப்படிக்கு…
ஆன்டிலியா.

25.4.11

பிழை (சாய்பாபாவில் ஒரு கண்ணோட்டம்)




பிழை :
துப்பப்படக் காத்திருந்த
‘தொண்டை லிங்கம்’
குறுக்கால் அடைத்ததாவென்று
ஒரேயொரு முறையேனும்
வாயைப்பிளந்து பார்த்துவிட்டு,
பேஸ்மேக்கரின் மாஸ்க்கை
மூஞ்சியில் அப்பியிருக்கலாம்.
மருத்துவப் பிழை!
காலில் கிச்சுக்கிச்சு மூட்டி
ஒரேயொரு சிட்டிக்கை
விபூதியையாவது
விரல் வழியாய் வரவழைத்து
நெற்றியில் பட்டை போட்டு,
உயிர் பிழைத்தலுக்கான
உச்சக்கட்ட பரிசோதனையை
உத்தேசமாய்ப் பார்த்திருக்கலாம்.
சீடர்களின் பிழை!
இன்னும்
கூடக் கொஞ்சம் போட்டு
டொனேஷனை
டோர் டெலிவரி செய்துவிடுவதாக
கூவோ கூவென்று
கூவியிருந்தால்
போன உயிர் திரும்பியிருக்கலாம்.
பேஸ்மேக்கர் எதற்கு?
பக்தர்களின் பிழை!
கடவுளின் உயிரை
பிழைக்க வைக்கத் தவறிய
பேஸ்மேக்கர் – ஒரு
விஞ்ஞானப் பிழை.
தந்திரங்களில் வல்ல
நல் மேய்ப்பர்
நரியாரின் மரணம்.
ஆடுகள் தங்கள் இறைச்சியை
யாரிடம் சமர்ப்பிப்பது என
துக்கம் தாங்காமல்
தவித்துத் திரிகின்றன.
ஆடுகளின் பிழை!
மறித்துவிட்டார் பாபா;
பாவப்பட்ட பூவுலகில்
பணத்தைக் கொட்டும்
பல கோடித் தொண்டர்களை
பரிதவிக்க விட்டுவிட்டு!
கலங்காதிரும் கண்மணிகாள்;
பல கோடி சொத்துக்களை
பராமரிக்கும் நபராக,
மறித்துப்போன பாபா
உயிர்த்தெழுவார் ஒரு வாரிசாக.
அதுவும்
பிணம் புதைக்கும் முன்னரே.
வாரிசுப் போட்டியில்
தோல்வியைத் தழுவும்
கால் வாரப்பட்ட
வாரிசு போன்ற எச்சங்கள்;
இலவு காத்த
கிளிகளின் பிழை!
பெரியாரைப் பேணிய
பெரும் பெருந்தலைகள்;
தம் சொந்த நலம்கருதி
பேணிய பாவத்துக்காக
தவமாய்த் தவமிருந்து,
விபூதி வாசனையில்
பரிகாரம் தேடின.
பாபா பின்னால் ஓடின.
அடச் சீ… அடத் தூ…
அன்றே
அந்தப் பெரியார்க் கிழம்
‘கடவுள் இல்லை’
கொள்கைக்காக
விபூதியடித்த சத்தியத்தை
வாங்கி வைத்திருந்தால்
இந்த விபரீதம் நடந்திருக்குமா?
பெரியாரின் பிழை!
கொடூர முறைகளால்
கொலையுண்டு மாண்ட
மீனவர்களின் மரணத்திலும்
மனமுருகி அனுதாபப்படாத
ராஜ குல துரக பதாதிகளும்,
பிரதமரும், மந்திரிகளும்,
ராஜ தந்திரிகளும்,
எடுபிடிகளும், யாவரும்,
பாபாவின் மரணத்தின்
பாதிப்பால் புடை சூழ
ஆத்மார்த்த உணர்வோடும்,
மனிதாபிமான கதறாலோடும்,
வயிற்றிலத்துக்கொண்டே
சாவுக்குக் கோயிலுக்கு
வந்து சேர்ந்துவிட்டார்கள்.
மரணத்துக்காக வலைவீசும்
மீனவர்களின் மரணத்தில்
அனுதாபம் கோரப்பட்டால்,
குறைந்தபட்சமாக மீனவர்களுக்கு
லுங்கியை களைந்து
காவியங்கி அணிந்து கொள்ளும்
அடிப்படை அறிவையாவது
கற்றுக்கொடுங்கள்.
அற்பர்களே,
அது
மீனவர்களின் பிழை!
மாற்றான் தோட்டத்து
மல்லிகையின்
சாவுக்கும் கருமாதிக்கும்
கல்யாண வைபோகத்துக்கும்
போய்த் தொலைத்துவைத்தால்,
பத்தே நிமிடத்தில்
பதற்றமில்லாமல்,
சீட்டு கிழிக்கப்பட்டு
தொலைக்கப்பட்டுவிடுவார்கள்
என்பதுதான்
தமிழகக் கட்சிகளின்
தாரக மந்திரக் கொள்கை.
சரி எனும் ஆளுங்க்கட்சி;
தவறெனும் எதிர்க்கட்சி.
கொள்கை முரண்பாடு.
முரண்பாடுகளாலேயே
மூப்புக்கண்டு தள்ளாடும்
தேசியக் கட்சிகளின் கொள்கை.
இதோ,
கொள்கை மறந்து,
கோபம் தொலைத்து,
கண்ணீரும் கம்பலையுமாக,
சாவு வீட்டில் -
திமுகவும், அதிமுகவும்,
தேமுதிகவும்,
தடாலடிக் கட்சிகளும்,
மத சார்பற்ற காங்கிரசும்
மதம் சார்ந்த பிஜெபியும்…
விபூதி வாசத்தில்
பேயடித்தாற்போல
பிதற்றி,
ஒரே வரிசையில் உட்கார்ந்து,
கைகோர்த்து கும்பலிட்டு,
ஒப்பாரி வைக்கும்
கண்காட்சி காண
கண் கோடி கோடி வேண்டும்.
கட்சிகளின் ஒற்றுமையை
தவறாக யூகப்படுத்தியதால்
அது ஒரு
ஊடகப் பிழை!
இனி,
என் தாய்த் திரு நாடு,
துக்கம் தொண்டையடைக்க
எழுந்து நின்று
ஏழு நாள் துக்கம் கொள்ளும்.
அரைக்கம்பக் கொடி பறக்கும்.
தூர்தர்ஷன் பீப்பீ பாடும்.
வெடி குண்டு வெடித்து
வீர வணக்கம் செய்யும்.
அந்தப் பேய் அல்லது
பூத உடல் மீது
தேசியக்கொடி போர்த்தப்படும்.
இந்தத் துக்க வரிசையில்
எது குறைந்தாலும்
அது
தேசியப் பிழை!
பி.கு:
தூக்கலான துக்கத்தால்,
தப்பித் தவறி,
தொலைக்காட்சித் தொடர்கள்
துண்டிக்கப்படுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள்!
ஏனெனில்,
பெண்களின் சாபம் பொல்லதது.
சபிக்கப்பட்டுவிட்டால்,
பாபா சொர்கம் போவதும்
நாடு வல்லரசாவதும்
பிழையாகிப் போகும்!

21.4.11

நான் ஓமர் கையாம் எழுதுகிறேன்…




நான்
ஓமர் கையாம் எழுதுகிறேன்…

என்
இதயமும் மூளையும்
சிதைக்கப் பட்டுவிட்டதால்
இந்தக் கடிதத்தை
சிந்தனையேதுமின்றி,
என் விரல்களே
வரைந்துவிடுகின்றன.
அனிச்சையாய்.

இந்தக் கடிதத்தின் வார்த்தைகள்
அனிச்சையானவை.
தீச் சுட்டுவிடின்
வெடுக்கென இழுப்பதுபோல…
புலித் துறத்தலில்
‘அட்ரினல்’ சுரந்து
தலை தெறிக்க ஓடுவது போல…
கொல்லக் குறி பார்ப்போரை
திருப்பித்தாக்க
அதே ‘அட்ரினல்’ சுரந்து
எங்கள் கரங்கள்
கற்களைத் தேடுவது போல…
என் இந்த வார்த்தைகளும் கூட
‘அட்ரினல்’ கலந்ததுதான்.
மிகவும் அனிச்சையானது.

உங்களின் அனைத்து
கேள்விகளுக்கும்
என்னிடமிருப்பது
ஒரே பதில்தான்:
நான் யார் என்று
எனக்குச் சொல்லப்படாமலே
நான் கொல்லப்பட்டு விட்டேன்.
தீர்ப்புக்கு முன்னமே
மரண தண்டனை.

பாடப் புத்தகத்தில்
ஜனகணமன படித்து
ஒரு இந்தியன் என்கிற
இறுமாப்பில் நான் இருந்தபோதும்
சந்தேகப்படப் பட்டேன்.
சிறுவர்களின் விளையாட்டையும்
சந்தேகப்பட்டு,
ராணுவத் தோரணையில்
எங்கள் காதுகள்
திருகப்பட்டன.
அந்தத் திருகலில்தான்
நாங்கள் தனிமைப்பட்டதை
உணர்ந்து கொண்டோம்.
கோலியாடும் சிறுவர்களைக் கொன்று
வீரம் பயின்றது இராணுவம்.

சித்ரவதையில்,
விசாரணைக் கூடத்தில்,
என் உயிர் பிரியும் தருணத்தில்,
நான் என்னை உணர்ந்தேன்.
நான் இந்தியன் அல்ல;
வெறும் காஷ்மீரி என்று.
வெறும் காஷ்மீரியும் அல்ல;
வெறும் பிணமென்று.

விசாரணையின் பேரில்
கொல்லாதீர்கள் என்பது
எங்கள் கோரிக்கை.
ஆனால்
விசாரிக்காமலேயே
என்னைக் கொன்றுவிட்டார்கள்.

அதனால் நான்
என்னை இவ்வாறு
புரிந்துகொண்டேன் :
‘நான் இந்தியன் அல்ல;
பாகிஸ்தானியனும் அல்ல;
காஷ்மீரியனுமல்ல.
விடுதலை விரும்பிய
மனிதன்.’

நள்ளிரவில்,
இளம்பெண்ணின்
நகை போட்ட நடமாட்டம்தான்
காந்தி கோரிய
இந்தியாவின் சுதந்தரம்.
அதையே
நாங்கள் கோரியிருந்தால்
நகைப்புக்குறியது என்பீர்கள்.
எம் பெண்கள்
பகலிலேயே நடமாடும்
சுதந்திரம்தான் கோருகிறோம்.
சிறுவர்கள் ‘டீத்தூள்’ வாங்கி,
திரும்பவும் பத்திரமாக
வீட்டுக்குள் வந்துவிடும்
சுதந்திரம் கோருகிறோம்.
இரவிலல்ல,
பட்டப் பகலில்.

ஜீலம் நதிக்கரையில்
பதிந்த என் கால் தடங்கள்;
என் வீட்டு முற்றத்தில்
ஒட்டடை படிந்து கிடக்கும்
எனது புத்தகப் பை;
என் இரத்தக்கறையில்
தோய்ந்த துணிகள்;
நான் எதற்காகவோ
எடுத்து வைத்த
கற்குவியல்கள்;
இவைகள் யாவையும்
எமது விடுதலை வேண்டியே
அங்கேயே விட்டு வந்தேன்.



http://www.vinavu.com/2011/04/20/omar-khayyam/#comments

16.4.11

ஆள்காட்டி விரலால் கண்ணைக் குத்திக்கொள்!



ஆள்காட்டி விரலெனும்
அற்புத விளக்கே,
ஈன்று புறந்தந்த
தாயைச் சுட்டுவாய்.
சந்தேகம் ஏதுமின்றி
தந்தையைச் சுட்டுவாய்.
தோள் சுமக்கும்
தோழனைச் சுட்டுவாய்,
ஆசிரியனைச் சுட்டுவாய்.

ஆறு கடல் நாடு சுற்றி
வானவில்லை வளைத்தெடுத்து
வார்த்தைகளால் கோட்டையிட்டு,
ஆதலினால் காதல் செய்து,
அருமைக் காதலைச் சுட்டுவாய்.
காதலீன்ற
மகவையும் சுட்டுவாய்.

சுடு நெருப்பைச் சுட்டி
சூதும் வாதும் சுட்டி
ஏதிது தீதிது
எனவெலா முணர்ந்து
யாதொன்றையும் புரிந்து
இது அது எனது உனது என
தரம் பார்த்து பிரித்துச் சுட்டி…

யாது எது
ஏது என
கேள்விக் கணைகள் மூட்டி
நான் எனது எனக்கே என
தத்தமது உடைமை காட்டி,

வானிது வளியிது
ஊனிது உயிரிது
அறிவிது ஆற்றலிதுவென
அறிவியல் சுட்டி
யாவும் உணர்ந்து நீ
நல்லன தீயன
வல்லன வலியன
இன்னா இனிய
இன்ன பிற
எத்தனையோ சுட்டுவாய்.
சரிதான்…
நீ ஒரு சுட்டியான
சுட்டிதான்.
நீ திசைகாட்டும் பக்கமே
கண்கள் பாயும்.
கால்கள் நடக்கும்.
இதயம் துடிக்கும்.
நீ சுட்டியவனைத்தும்
சரியெனப் படும்வரை.
உன் விரலில்
சுரணை இருக்கிறது எனச்
சொல்லப்படும் வரை.

ஆனால் இன்று…
திருடர்களுக்குள்
உயர்ந்தவனும்
தாழ்ந்தவனும் உண்டென
ஒருவனைச் சுட்டினாய்.
நீ
வாக்கிட்ட குற்றத்துக்காக
உன் முகத்தில்
ஒரழியாக் கரும்புள்ளி.
உன் கரும்புள்ளிச் சுட்டல்
சாகசங்கள் செய்யும்.
உன் விரலால் உன் கண்கள்
குத்தப்பட்டு குருடாக்கப்படுவாய்.
பிறகு தான் காட்சிகள் மாறும்.

மலையைப் பிடுங்கி
காது குடைந்துகொள்வார்கள்
தண்டகாரண்ய முதலாளிகள்.
நாட்டையே
தோப்புக்கரணம் போடவைப்பார்கள்
அமெரிக்கப் பொருளாதாரவாதிகள்.
ஜன நாயகத்தையே
நிர்ணயிப்பார்கள்
அம்பானிக் கும்பல்கள்.
அட ஆள்காட்டி விரலே…
அவர்களை எங்களுக்கு
ஆள்காட்ட மறுத்து
அவர்களின்
தாள் படிந்தும் வணங்குகிறாய்.

இன்று நீ சுட்டியாதால்
உனக்கு கிடக்கப்போகும்
இலவசக் கோவணங்கள்.
நாளை உன் சோற்றில் மண்.
ஊழலையும் சுரண்டலையும்
கண்ணால் கண்டு
சொன்னபோதும்
சுட்ட மறுத்த விரலே…

உணவைத் திருடி
நீரைத் திருடி,
நிலத்தைத் சுருட்டி
உன் உருவையே
குலைத்துவிட்ட உண்மைகளை
நீ தெரிந்தும்
சுட்ட மறுப்பதேன்?

உண்மைகள் தெரிந்தும்
சுட்ட மறுப்பதால்
இனி நீ
சுட்டும் விரலல்ல…
மூளையிலிருந்து
நரம்புகள் துண்டிக்கப்பட்டு
பக்கவாதம் பீடித்த விரல்.
அறியாமை எனும்
புற்றுனோய் பிடித்த விரல்.
சாதி மத பேதப் புண்களால்
கடவுளெனும் சீழ் கோத்து
சாகக் கிடக்கும் விரல்.

கரங்களால் உழைப்பைத் தந்து
வியர்வையால் உலகம் காக்கும்
மற்ற விரல்களோடு
சேர்ந்து பிழைத்துக்கொள்.
அவ்வுழைப்பின் வலி
உனக்கும் சுரணை கொடுக்கும்!

13.4.11

வினவு மண்டைக்கு விளங்காத பொருளாதாரக் கொள்கை


இரு விரல் காட்டினால்
இரட்டையிலை.
ஐந்து விரல் காட்டினால்
அஞ்சுகத்தாய்ப் பெற்ற
புதல்வனின்
புராதனச் சின்னம்.
கையை ஆசீர்வதித்து
காட்டினால் அது
கைச் சின்னம்.
இதில் எங்கே எங்களுக்கு
‘ரெண்டு ரெண்டாய்’ தெரிகிறது
என்கிறீர்கள்?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
விழுந்தால் வீட்டுக்கு.
விழாவிட்டால் நாட்டுக்கு.
எங்கேயோ கேட்ட குரல்.
லாட்டரிக்குப் பொருந்தும்போது
பாட்டிலுக்குப் பொருந்தாதா?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
வீட்டுக் கடனுக்கே
வருமானம் கேட்கும்போது,
நாட்டுக் கடன் வாங்க
நாம் காட்டும் வருமானம்.
‘Liquidity’ பேலன்ஸ் ஷீட்…
லிக்கர் அடிக்கும் வருமானத்தில்.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
நாள் முழுக்க நாம் உழைத்து
நானூறு கூலி வாங்கி,
அதிலிருந்து நூறெடுத்து
நாட்டுக்கே அர்ப்பணிப்போம்.
போதையும் ஏறும்;
பொருளாதாரமும் ஏறும்.
போதை தந்த
பொருளாதாரத் தத்துவம்.
மன்மோகனும் சிதம்பரமும்
மூக்கின்மீது விரல் வைக்கும்போது,
வினவின் மூக்கு மட்டும்
வியர்ப்பது ஏன்?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
குடி குடியைக் கெடுக்கலாம்.
குடியிருக்கும் நாடு
கெடுவதில்லை.
குடியால் குடியரசு
கோபுரம்போல் வளர்வது
வளர்ச்சிப்பாதையன்றி
வீழ்ச்சிப்பாதையா?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
ஒரு ரூபாய் அரிசி
வேண்டும்.
ஒரு கிரைண்டர் மிக்சி
வேண்டும்.
நாள்முழுக்க நாடகங்கள்
நாம் கண்டு,
தொல்லை மறந்திட
தொலைக்காட்சியும் வேண்டும்.
இத்தனையும் கொடுத்தது
என் தாய்த்திரு நாடு.
நானென்ன செய்தேன்
அதற்கு?
நாட்டுக்கு அற்பணிப்போம்
நம் உயிரை.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
கதறியழுது
காரி மூஞ்சியில் துப்பி
துடைப்பக் கட்டையால்
துவைத்தெடுக்கும்
பொருளாதாரம் தெரியாத
போக்கற்ற மனைவி மக்கள்.
அவர்களிடமிருந்து நமைக்காக்க
அரசு வழங்கும் திட்டம்
மருத்துவக் காப்பீடு.
அதையும் தாண்டி
கை மீறிப் போனால்
நூத்திஎட்டு.
காது குத்தினால்
போதை வேண்டும்.
கருமாந்திரம் செய்தாலும்
போதை வேண்டும்.
இன்பத்திலும்
போதை வேண்டும்.
துன்பத்திலும்
போதை வேண்டும்.
குடித்துக் கிடக்க வேண்டும்.
அதற்கொரு காரணம்
வேண்டும்; வேண்டும்.
‘குவாட்டர்’ மூடியைத் திருகினால்
நாம் மந்தமாகி விடலாம்.
நாட்டின் பொருளாதாரம்
மந்தமாக வாய்ப்பில்லை.
நம் ஈரல் வீங்குவதால்
நம் நாட்டின்
பண வீக்கம்
பறந்து போகும்.
காரணம் கிடைத்துவிட்டது…
இனி
குடித்தே கிடப்போம்.
Ref :

8.4.11

நிலவின் ஒளியில் இரவின் மௌனம்



பயணச் சீட்டெடுத்து,
சன்னலோரத்து இருக்கையின்
நள்ளிரவு நெடும்பயணத்தின்போது,
நிலவும் வந்திருந்தது.
ஆனால் நான்
அதற்குச் சீட்டெடுக்கவில்லை.


சுடுகாட்டில் பிணமெரித்து
சோர்வில் திரும்புகையில்,
நிலவும் வந்திருந்தது
சோகமாய்.
ஆனால் அது
சுருட்டுப் பிடிக்கவில்லை.


அர்ஜுனன் தபசு முடிந்து
தூக்கக் கலக்கத்தில்
நடந்து வந்தபோதும்
நிலவு வந்திருந்தது.
அதற்கும் கதை புரிந்ததா
என்று தெரியவில்லை.


ஊருக்குள் உலாச் சென்ற
உற்சவர்
திரும்பி வந்தவுடன்
தயிர் சாதம் சுண்டல்.
'காலனி ஆள்' என்று
தொட்டுவிடாமல் இட்டதால்
சுட்டது தயிர் சாதம்.
எமைத் தொடாத ஆண்டைகளை
பெருமாளுக்கு சூடம் காட்டிய
ஐய்யரும் ஏன் தொடத் தவிர்த்தார்
என்பது எனக்குப் புரியவில்லை.
காத்திருந்த நிலவுக்கும்
சுட்டதா எனத் தெரியவில்லை.


அறுத்துக் கொண்டு போய்விட்ட
கறவை எருமைத் தேடி,
விடியலில் கண்டுபிடித்து,
கொட்டகையில் கட்டும்வரை,
வெளிச்சத்தில் மாடு தேட
நிலவும் கூட வந்தது!


ஏரிக்கரைச் சாய்வில் சாய்ந்தபடி
விவாதங்கள் நடந்து முடிந்து,
குழப்பங்களுடனே கலைந்தபோது
நிலவும் கூட்டத்திலிருந்தது.
விடை கண்டதாவெனத் தெரியவில்லை.


வாய்க்கால் மடை திறக்க
வெட்டிக் கொண்டு மாய்ந்தபோது
வாய்க்கால் நீரில்...
நிலவும் கலங்கியது.


வெள்ளி பார்த்து
தினம் எழுப்பும் தந்தை.
மதிப்பெண்ணுக்கான
விடியற்கால மனப்பாடப் போராட்டத்தை
என் நிலவும் ரசிக்கவில்லை.


இரவின் மௌனத்தில்
மனதின் இறுக்கத்தில்
சுக துக்கத்தில்
ஏதோ சொல்லியபடி
சில நாள் தேய்ந்தும்
சில நாள் வளர்ந்தும்
சில நாள் ஓடியும்
சில நாள் தவழ்ந்தும்
என் இனிய நிலவு
நாய் போல் கூடவே வந்தது.
ஆனால்,.
நான் அதை வளர்க்கவில்லை!


***

7.4.11

பெண்ணெனும் பளு...



ஒரு புர்கா கூடாரத்துக்குள்
ஒளித்து வைக்கப்பட்ட
எம் சகோதரிகளின் பரிமாணங்கள்.
பரிமாணங்களனைத்தும்
சுதந்திரந் தேடிய கூர்மத்திலிருந்தன.

இருளுக்குள் இருந்துகொண்டு
அவர்களின் கண்கள் மட்டும் 
ஒளிபாய்ச்சும் –
விலங்கொடிக்கும் விவரந்தேடி.
அவர்களின் கண்களில்
அந்த கையறு நிலையின் வீச்சம்.
அந்த ஒளிவெள்ளத்தில்
சமுதாயம் கண்கள்
கூசித்தான் போகவேண்டும்.
ஆனால் 
அவை
பார்ப்பதையே
தவிர்த்துக் கொண்டன!

அந்த ஒளிவெள்ளம்
ஆண்டவனை நோக்கியும்
பிரார்த்தித்துப் பாய்ச்சப்பட்டது.
அப்போது அந்த ஆண்டவன்
ஆண்களுக்கு மட்டுமே
போதனை செய்துகொண்டிருந்தான் –
பெண்களை எவ்வெவ்விதத்தில்
வழி நடத்த வேண்டுமென்று.
செய்வதறியாது திகைத்து,
அந்தக் ண்களிலிருந்து
ஒளிவெள்ளம் ஆண்டைகளின்,
ஆண்களின் குவியலுக்குள் 
பாய்ச்சப்பட்டது.
அவர்களோ 
போதனைகளின் போதையில்
அந்த இறைவனிடமே
சந்தேகங்களைக் மேலும் மேலும்
கிளறிக்கொண்டேயிருந்தார்கள்!
பெண்கள் எப்படியெல்லாம்
நடத்தப்பட வேண்டுமென்று!

இருளின் விடை காண
ஒளி பாய்ச்சித் தேடியபோதும்
கிடைத்தது…
மீண்டும் இருள்தான்!

அடிக்குங் கைகளைத்
தடுத்த போதும்,
இயலாமையில் அறற்றிப்
புலம்பியபோதும்,
இதயம் குமைதலால்
ஏனென்று கேட்டபோதும்,
சுமை பாரம் பூமிக்குள் அழுத்த
கைதொழுது அழுதபோதும்…
எம் சகோதரிகளுக்கு
கேட்காமலேயே கொடுக்கப்பட்ட
ஆறுதல் சுதந்தரம்
தலாக்!

புர்காவுக்குள் இருக்கும்
மூட்டை பளுவாயிருக்குமென்று
நினக்கும் நிமிடத்திலேயே
தலாக் எனும் வார்த்தை மூலத்தால்
ஒரு மூலையில் இறக்கிவைக்கப்பட்டு
ஆண்களின் பயணம்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது…

***

சாத்தான்களின் வேத அலறலில்
கழுத்திலேற்றப்பட்ட தாலி.
பெண்ணாய்ப்பிறந்த பெருமைக்காக
வாழ் நாள் முழுதும் 
விட்டகலா விலங்கு.
விலை கொடுத்து வாங்கப்பட்டதால்
விலங்கின் மதிப்பும் அதிகம்.
பொன்னும் பொருளுமாக
விலை கொடுக்கப்பட்டே
இவ்விலங்கு பூட்டப்படுகிறது.
கைமாற்றும், கடன் பெற்றும்,
கண்ணீர் உதிரம் சிந்தியும்
பெற்ற கடனை முடிக்கும்
பெண் பெற்ற பெற்றோர்.
கல்யாணம் சுப மங்களம்
ஆனால்
கடன் பட்ட வலியோடு...
மூன்று முடிச்சு விலங்குக்கு
முப்பத்து முக்கோடி
தேவர்களும் சாட்சி.

தாலியால் வேலியிட்டதால் -
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
அப்பெண்ணின் சுதந்தரத்தை
அக் கயிறொன்றே வழி நடத்தும்.
கட்டிய கணவன்
கொடியவனென்றாலும்
கட்டவிழாது.
கடவுள் சாட்சியாக
கட்டப்பட்ட முடிச்சுகள்
நீதிமன்றத்தில் மட்டுமே
நிறுத்தி அவிழ்க்கப்படும்.
அல்லது - 
அது கடைசியாக நிகழ்ந்துவிடும்...
அவளின் மரணத்தில்!

தாலி ஏற்றபின்
தாழ்ந்த தலை நிமிறக்கூடாது.
தாலி இழந்தபின்
தெருவில் எதிர் படக்கூடாது.
எனில்,
பெண்ணின் சுதந்தரம்
ஒரு தாலிக் கயிற்றுக்குள்தானா?

உதிரத்தில் மூழ்கி
உதிரத்தில் சிசு பிறந்தும்,
உதிரமென்பது தீட்டென்று
படைத்த பெண்டிரை வெறுக்கும்
பழம்பெரும் தெய்வங்கள்.
தெய்வங்களின் தராசு முட்களும்
பெண்களைத்தான் குத்துகின்றன.



***
யாதொரு மதத்திலும்
சாத்திரங்களும் சூத்திரங்களும்
பெண்களை தீது செய்வதேன்?

பெரிதும் படித்த பல்சான்றீரே,
ஞானம் முற்றிய பண்டிதரே,
யாதொரு மதத்திலும்
பாரபட்சம் பெண்ணுக்கு மட்டுமேன்
எனும் ஒரே கேள்விதான்
மனதை மாய்ந்து மாய்ந்து அறுக்கிறது.

***

பல நூறு மார்கத்திலும்
மதத்திலும் போற்றப்படும்
இவ்வண்ட சராசரத்து 
சக்தியுள்ள பெருந் தெய்வங்களே...
அகிலமாளும் ஆண்டவர்களே...
உங்களாலேயே படைக்கப்பட்ட
பெரியாரையும் பாரதிதாசனையும்
படித்துப் பாருங்கள்.
நீங்கள் எதை மறந்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
நினைவு படுத்துவார்கள்.
நீங்கள் எதை மறுத்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
எடுத்தியம்புவார்கள்.

குறைந்த பட்ச கோரிக்கையாக
நீங்கள் கொடுக்க மறந்த - 
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பேதமற்ற சம உரிமை 
கொடுத்தருள்வீராக.
ஏனெனில்
நீங்கள் படைத்த காலந்தொட்டு,
வாழ்வெனும் சக்கரம்
இவ்விரு சக்திகளால்தான்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.





http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/  பின்னூட்டத்தின் தொடர்ச்சி.







3.4.11

"சீச்சீ... போடுவதற்கு ஒன்றுமில்லை போ போ"



பிறப்புக்குக் கையேந்தி
பிறந்தபின் பாலுக்குக் கையேந்தி
அரிசிக்கும் கையேந்தி
அன்றாடம் அதையவிக்க,
சிடுசிடுக்கும் விளக்கெறிய,
சீமெண்ணைக்குக் கையேந்தி
பருப்புக்கும் கையேந்தி
பாழ் இருப்புக்குங் கையேந்தி,

குடத்தை வரிசையிட்டு
குவியும் கும்பலுக்குள்
தவிக்கும் வாய்த்
தண்ணீருக்குக் கையேந்தி
அவசியங்களுக்குக் கையேந்தி
அவ்வபோது கிடைக்கும்
இலவசங்களுக்கும் கையேந்தி
எப்போதும் கையேந்தி ஏந்தி...

கோயிற்புகக் கையேந்தி
குவளைகளுக்கும் கையேந்தி
பள்ளி செல்லக் கையேந்தி,
பாழும் படிப்புக்குக் கையேந்தி,
ஆசிரியன் அடிக்கும் கையேந்தி
ஆதரவுக் கையேந்தி,
சாதிக்கும் கையேந்தி
சாமிக்கும் கையேந்தி
மதத்துக்கும் மண்டியிட்டு
மௌனமாய்க் கையேந்தி,

உரிமைக்குக் கையேந்தி
உண்மைக்கும் கையேந்தி
தேவைக்குக் கையேந்தி
தினந்தோறும் கையேந்தி ஏந்தி...

வயிற்றுக்காய் உழைக்க
வேலைக்குக் கையேந்தி
கூழைக் கும்பிட்டு
கூலிக்குக் கையேந்தி
விளைநிலத்தைத் திரும்பக்கேட்டு
விவசா
க் கையேந்தி,


பெண்ணுக்கு மணமுடிக்க
மாப்பிள்ளையிடம் கையேந்தி,
சீதனம் கொடுக்க
சரவணாவில் கையேந்தி
செய்கூலி சேதாரத்தை
சிந்தாமல் கையேந்தி
புத்தாடை வாங்கி
பண்டிகைக் கொண்டாட
தள்ளுபடிப் படியிலே
தவமிருந்து கையேந்தி...

மருந்துண்டே உயிர்வாழ
மருத்துவமனையில் கையேந்தி
செத்துச் சவமாக,
சவமடக்கக் கையேந்தி...

கையேந்தும் நாம் பாமரர்கள்.
கைகளிரண்டும் ஏந்திஏந்தி,
மரபணுவிலும்
மாற்றம் கண்டு
திருவோட்டு உருவத்தில்
திரிந்தே போயின.

***

அதியமானிடம் அவ்வையார்
கையேந்தத் தொடங்கி,
பன்னாட்டுக் கம்பெனிகளிடம்
கருணானிதி/மாறன் கையேதியது வரை
நாம் கையேந்திப் பரம்பரைகள்.

வெளி நாடு வாழ் இந்தியர்களிடமும்,
கோக்கு பெப்சிகளிடமும்,
ஜப்பானிய ஐரோப்பிய கம்பெனிகளிடமும்
அமெரிக்காவிடமும்
அண்ட சராசரமும்,
மன்மோகன் பிரணாப் வகையறாக்கள்
உலகளாவிய நிலையில்
கையேந்துவதால்
நாமனைவரும் கையேந்தும் இந்தியர்கள்.

***

எதற்குமே கையேந்தும் அரசியல் கொள்கை!
நிதிக்காக கையேந்தும் 'ஹாவர்டு' நிதி மந்திரிகள்!
ஓட்டுக்காக கையேந்தும் அரசியல்வாதிகள்!
உலகமே வேண்டிக் கையேந்தும் பண முதலைகள்!

இப்படிக் கையேந்தி ஏந்தியே
அவர்கள் கைகளும் கூட
திருஓட்டு உருவத்தின்
சின்னம் ஆகின; திரிந்து போயின.

***
எத்தனையோ இருந்தும்
இப்போது ஆட்சி வேண்டி
அடிமைக் கையேந்திகளாகிய நம்மிடமே
வந்து கையேந்தும் ஆண்டைகள்,
அரசியல்வாதிகள்,
நடிகர்கள், நிலப்பிரபுக்கள்.

அவர்கள் நிலை கேவலமாக இருப்பதால்
"சீச்சீ... போடுவதற்கு ஒன்றுமேயில்லை எம்மிடம்...

போ போ"
என்ற உண்மையைச் சொல்லி
திருப்பியனுப்புவோம்!

***