My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.4.11

உண்மையின் நிழல்


லாபிக் கிசுகிசுப்பில்
நான் கருக் கொண்டேன்.
பாவக் கணக்கில்தான்
உருக்கொண்டேன்.
நான்
பாவத்தின் சம்பளம்.
என் விலை
மிக மிக அதிகம்.
நாட்டின்
தலைவிதியையே
திருத்திவிடும் பிரும்மா
தீட்டிவைத்த காவியம்.
கீழ்மட்டமான ஏழையாயிருந்து
உலகமட்டமான பணக்காரன் வரை
உருவெடுத்த உத்தமர்;
வாழ்ந்து காட்டிய
தியாகச் செம்மல்
தீட்டிவைத்த காவியம்.
என்னை நிமிர்ந்து
நீங்கள் பார்க்கும்
பொறாமைப் பார்வைகள்.
உங்கள் பார்வைகளை நான்
தவிர்த்துக்கொள்ள
தலை குனிந்துகொள்கிறேன்.
உங்கள் மூச்சுக் காற்றில்
உருகி விழுவேனோ என
பயங்கொள்கிறேன்.
பாலிவுட் பெருமூச்சும்
பத்திரிகைக் கிசுகிசுப்பும்
ஃபோர்பின் ஃப்ளாஷும்
என்னைக் கூச்சப்படவைக்கும்.
பண முலாம் பூச்சில்
அரிதாரமிட்டு,
மும்பை நகரத்துச் சந்தியில்
நிற்கவைத்து
அழகு பார்க்கப்படுகிறேன்.
ஒரு விபச்சாரி போல.
என் உயரத்தில்,
தலைக்குமேல்தான் சொர்க்கம்.
கை நீட்டினால்
கடவுளைத் தொடலாம்.
பரவசப்படுங்கள்.
என் காலடியில் நரகம்.
அது
என் ரிஷிமூலம்.
அது நாறுமென்பதால்
அதைக்காண விரும்பாதீர்கள்.
சேரிகள் பெருகிய
அழுத்தத்தின் விதியால்
பிதுங்கி மேலெழுந்த
பண வீக்கம் நான்.
நாட்டையே அடகிட்டு
இலாபக் கணக்கெழுதி,
ஊரை உலையிலிட்டு,
அவித்துத் தின்ற செரிமானகள்
இங்கே
கழிக்கப்படும்போது
குடலைப் பிடுங்கிக் குமட்டும்.
தன லட்சுமி
என் குபேர மூலைப் பெட்டியில்
தங்கியிருக்கிறாள்.
இது,
மக்கள் கொடுத்த வரம்.
தருத்திர லட்சுமி
இந்திய மூலை முடுக்கெங்கும்
தவம் கிடக்கிறாள்.
இது,
மக்களே இட்டுக்கொண்ட சாபம்.
இதுதான்
இந்தியாவின் விதி.
என் ரிஷி மூலத்தோடு
என்னை நோக்கப்பட்டால்
நான்
இந்தியாவின் அவமானச் சின்னம்.
என் ரிஷிமூலம் தவிர்த்து,
என்னை நோக்கப்பட்டால்
நான்
இன்னொரு தேசியச் சின்னம்.
சின்னத்தின் மதிப்பு
உங்கள்
பார்வையில்.
உங்களை நான்
வசீகரித்திருந்தால்
நீங்கள்
கனவு காணுங்கள்.
உங்களை நான்
அவமதித்திருந்தால்
கடப்பாரை எடுங்கள்.
இப்படிக்கு…
ஆன்டிலியா.

1 comment:

Anonymous said...

poor indians...:-)

Post a Comment