My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

24.7.11

கூக்கூக் குருவி



வீப். வீப்.
வ். வி..... வீப்.
சன்னலோரத்துக் குருவியின்
சன்னக் குரல்.
சன்னற் கதவை
சற்றே விலக்கத் தோன்றியும்
சலசலப்புக் கஞ்சினேன்.

இன்னுமொரு முறை
இறங்கிய குரலில் :
வீப். வீப்.
விப். வ். வி.. வீ..... வீப்.

அது
காக்கையுருவொத் திருக்காது -
காக்கை கரைதலால்.

அந்த
கூவுங் குயிலின்
குரலோ நீட்சி.

கூடவே கூவிக் கூவி
குஷியேற்றிக்கொள்ளும்
குழந்தையின் குரல்;
தாமரைத் தடாகம்;
தலையாட்டுங் கோரை;
புளியமரக் கிளை;
புனலலையும் ஏரி.
இத்தனையுங் கடந்த
ஏகாந்தம்தான்
கூவுங் குயிலின்
குரல் நீட்சி.
ஆதலால்
அது குயிலில்லை.

அது
கீச்சிக் கொஞ்சும்
கிளியுமில்லை.

அது
விண்ணிற் பாய்ச்சலிடும்
ஊர்க்குருவியு மில்லை.

அது
கொண்டையிலே மஞ்சள் பூசி
கிணற்றோர நீருறிஞ்ச,
கொஞ்சமாய்த் தத்திவரும்
காட்டுக் குருவியுமில்லை.

அது
தவிட்டுக் குருவியுமில்லை.
தவழ்ந்தோடுங் காடையுமில்லை.
பூந்தேன் திருடும்
பூங் குருவியுமில்லை.

பூ நாரை,
புழுப் பொறுக்கி
பழுப்புக் கீச்சான்,
வானம்பாடி,
வீட்டு குருவி
இதிலுங் கூட
ஏதுமில்லை.

நீருள் புகுந்து
நீருள் அமிழ்ந்து
நீந்தியே வாழும்
நீர்க் குருவியுமில்லை.
நாணற் குருவியுமில்லை.
நாமக் கோழியுமில்லை.

மஞ்சள் வாலாட்டி
மணிப்புறா
மாடப்புறா
மைனா
மரங்கொத்தி
மீன்கொத்தி...
ம்ஹூம்..
இதிலும்கூட
ஏதுமில்லை.

கூக்குருவான்
கரிக்குருவி
கொண்டைக்குருவி
கானாங் கோழி
கூழைக்கிடா....

வானம்பாடி
வாலாட்டுங் குருவி
வரகுக் கோழி....

செங்கால் வாத்து
செம்போத்து
செண்பகம்
செங்கால் நாரை
சருகுக் கோழி
சோலைப்பாடி....

தையற் சிட்டு
தூக்கணாங் குருவி
ஆள்காட்டுங் குருவி
ஆறுமணிக் குருவி.........

...............
என்னவென்று
எடுத்துச் சொல்ல?
சொந்த ஊர்
சென்றபோது
இத்தனைக் குரலிலும்
இட்டுக் கட்டி
எடுத்துப் பாடி
காற்படி நெல்லுக்கு
குருவிக்காரன்
கூவிக்காட்டியது.

இத்தனை வகையிலும்கூட
இந்தக் கீச்சுக் குரல்
எடுபடவேயில்லை.

சரி.
சற்றே
சன்னலைத் திறந்து
என்னவாயிருக்குமென்று
எட்டிப் பார்த்தபோது...

அந்தோ
அது -
சின்னஞ்சிறு குழந்தை
சாவிக்கொடுத்து விளையாடும்
சைனாக் குருவி!
எட்டுவிதக் குரலெடுக்கும்
எலக்ட்ரானிக் குருவி!

என்னால்
இதைமட்டும்தான்
இன்று கேட்கமுடிந்தது.
ஏனென்றால்
நான்
காக்கைகளின்
கரைதலுக்கிடையே வாழ,
ஊரிலிருந்து வெளியேறி
உயிர்வாழத் தெறித்துவந்த
ஒரு எல
க்ட்ரானிக்
ஓட்டாண்டி.
நிஜத்திலிருந்து விலகிவிட்ட
நிழலாய்.
என் வயிற்றோடு
உயிர்வாழும்
ஒரு
கட்டுப்பெட்டிப் பட்டணத்தான்!!!




No comments:

Post a Comment