My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

16.10.11

எருமை



இந்த இடத்தில் எருமை மாடுகள் சாலையைக் கடந்தால், மணி சரியாக எட்டரை என்று கடிகாரத்தை திருப்பி வைத்துக்கொள்ளலாம். நான் அலுவலகம் போகும் நேரமாகப் பார்த்துத்தான் ஒரு நாளும் தவறாமல் இந்த மாடுகள் சாலையைக் கடக்கும். காரின் பின் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, பல்லை நறநறத்து, முஷ்டியால் காரின் சீட்டில் ஓங்கிக் குத்தி, கோபத்தைக்காட்டுவேன்.

இன்றும் அதே மாடுகள், எத்தனை மெதுவாக போகவேண்டுமோ அத்தனை மெதுவாக, ஆடி அசைந்தாடி, அசை போட்டு, சில கழுத்துகளில் டிங் டிங் மணியொலியோடு, கன்றுக்குக் குட்டிகளின் தடுமாறும் குடிகாரனின் நடையோடு, பின்னால் 'ஹேய், தேய், ஓடு... ஓடு...' என்று கூப்பாடு போட்டபடி ஒரு கிழவன் தொடர்ந்து வர, சாலையைக் கடந்துகொண்டிருந்தன. காரின் ஹாரன் ஒலித்துக்கொண்டேயிருந்தும், ஒரு எருமை, காரின் பம்பரை உரசியபடி, அது தண்ணீராய்க் கழிந்த சாணியை அதன் வாலால் முன் கண்ணாடியில் விசிறி அடித்தது. என்னை தினந்தோறும் வந்து கூட்டிச் செல்லும் அலுவலகத்துக்கான வாடகைக் கார் அது. வண்டியிலிருந்து டிரைவர் இறங்கிப் பார்த்தபோது, ஆயுதபூஜைக்கு சந்தனம் அப்பியது போல இருந்தது.

"நேத்துதான் சார் வாட்டர் வாஷ் பண்ணினேன். வண்டியே நாசமாப் போச்சு. கொஞ்சம் இறங்கிக்கங்க சார். தொடைச்சிட்டு கொண்டுபோகலாம். அப்படியேவும் ஓட்டமுடியாது. விஷன் மறைக்கும்" என்று டென்ஷனான குரலில் என்னிடம் சொன்னான் கேசவன்.

"பத்து மணிக்கு எம்டி வர்றார்யா. சீக்கிரம் ஆகட்டும். என்னதிது...? தெனத்துக்கும் இங்க பெரும் பாடாய்ப்போகுது" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, இடது கை மணிக்கட்டில் சாப்பாட்டுத் தூக்கை மாட்டிக்கொண்டு, வலக்கையில் மூங்கில் குச்சியுடன் அந்த பெரியவர் என்னைக் கடந்து சென்றார். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் துண்டால் இறுக்கிய தலைக்கட்டு. ஒரு எழுபது வயதுக்கான உடல். ஆனால் தளர்ந்துவிடாத தசைகள் அவரின் உழைப்பால் இறுகியிருந்தது.

பின்னால் நின்ற வாகன ஓட்டிகளெல்லாம் சகட்டு மேனிக்கு அவரைத் திட்ட ஆரம்பித்தார்கள். எனக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான் அவரைக் கோபமாகக் கத்திக் கூப்பிட்டேன்.

"யோவ் பெரியவரே, என்னையா இது, தெனத்தன்னிக்கும் இதே தொந்தரவாப்போச்சு. போதாக் குறைக்கு, இன்னைக்கு உன் மாட்டை விட்டு, காருக்கு சந்தனம் பூசிட்ட?! சே...!"

"அந்த மூதி ஏதோ மைக்கா கவர தின்னுட்டு பீசுதுங்க. நாளைக்கு சரியாப் போகும்" என்று சொல்லி விட்டு மேலும் நடக்கப் பார்த்தார்.

"ஏன்யா இந்த ஆபீசு நேரத்துல கழுத்தறுக்கற? வேற நேரமாப் பார்த்து ஓட்டிக்கிட்டுப் போகவேண்டியதுதானே?"

இன்னொருத்தர் கேட்டார் : "இந்த ரோடைக் கிராஸ் பண்ணிப்போய்த்தான் மாடு மேய்க்கணுமா, உனக்கு அறிவே கிடையாதாய்யா?"

இன்னொருத்தர் : "மூஞ்சியப் பாத்தியா அந்தாளுக்கு. இவரோட இன்னோவா காரை நாசனம் பண்ணிட்டான். யோவ், மாடுங்கள வச்சிக்கிட்டு இந்த ரோடக் கிராஸ் பண்ணக்கூடாது தெரியுமா? தூக்கி உள்ளப் போட்டுருவேன்."

இப்பொழுது நின்று, அந்த ஆளை நெருங்கி வந்தார் அந்தப் பெரியவர்.

"என்ன சொன்ன? ஜெயில்ல போடுவியா? அறுபது வருஷமா இந்த வழியாத்தாண்டா மாடு போவுது; வருது. ரோடு இப்பப் போட்டது. இதுக்காக கவுருமெண்டு நெலம் எடுத்துட்டு, இன்னும் எங்க ஜெனங்களுக்கு காசுகூட கொடுக்காம ஏமாத்துது. எங்களோட நெலத்துல நின்னுக்கிட்டு, என்னத் தூக்கி உள்ளப் போடுவியா?" என்று சொல்லி பளார் என்று கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார்.

"ஓடிப்போய்டு. இதுக்குமேல பேசினா, வெட்டி பொலி போட்டுறுவேன்." என்று திரும்பி மாடுகளை அதட்டிக்கொண்டே மெல்ல நகர்ந்தார்.

"நான் வக்கீல் சார். என்னையே அடிச்சுட்டான். யாராவது கேக்கக்கூடாதா?" என்று நியாயம் கேட்கத் தொடங்கியபோது ஒவ்வொருவராய் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றார்கள்.

என்னுடைய டிரைவர் கூட சற்று பீதியடைந்தாற்போல தோன்றியது. "ஆச்சு சார், போய்டலாம் வாங்க. நமக்கேன் வம்பு? அப்புறம் உள்ளூர் பிரச்சினையாயிடும். நீங்க வேற இந்த ஊர்லதானே இருக்கீங்க? ரொம்ப பேசிக்க வேண்டாம்."

நான் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டு, காரில் ஏறப் போகும்போது, அந்த வக்கீல் என்னருகில் விரைவாக வந்தார். கன்னம் சிவந்துபோயிருந்தது.

"சார், கொஞ்சம் நில்லுங்க. என்ன சார், படிச்சவுங்க நீங்க. எல்லாத்தையும் கிட்டதிலேர்ந்து பார்த்துட்டு போய்ட்டே இருந்தா எப்படி? உங்களுக்காகத்தானே நான் இப்படிப் பேசினேன்?" என்று கலவரமான குரலில் கேட்டார். "இதுக்கு ஏதாவது செய்தாகணும். எவ்வளவு திமிரு இருந்தா, ஒரு மாடு மேய்க்கிற நாயி என்னை கை நீட்டி அடிக்கும்? உள்ளூர்க்காரன்னு நெனைப்பு. கூப்பிட்டா பத்துபேர் வந்துருவாங்கன்ற தைரியம். அதான் கை நீட்டுது. பெரியவராச்சே, பொட்டுனு போயிடுமேன்னு திருப்பியடிக்கவும் பயமா இருக்கு. ரொம்ப அசிங்கமாப் போச்சு சார்" என்று பரிதாபக் குரலில் என்னைப் பார்த்தார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் முகத்தைத் திருப்பிகொண்டு, "கேசவா, போப்பா, டைம் ஆயிடுத்து" என்று கதவை சாத்திக்கொண்டேன். சற்று தொலைவு சென்றதும் பின் பக்கம் திரும்பிப் பார்த்தபோது, அந்த வக்கீல் மட்டும் தனிமையில் விடப்பட்டு, எங்களைக் காட்டி கையை நீட்டி நீட்டி ஏதேதோ கத்திக்கொண்டிருந்தார்.

***

இந்த இடம் நகரத்து அடர்த்தி குறைந்து, கிராமாய் தொடங்கும் பகுதி. நகரத்தில் கால் கிரவுண்டு கூட விற்பனைக்கில்லை என்னும் நிலவரமான பி
றகு, வீடு கட்ட இடம் வாங்கிப்போடும் இடமாகிப்போனது இந்த ஊர். நல்ல தண்ணீீர். காற்று. கிரவுண்டு முப்பது லட்சம். சாதாரண ஆள் வாங்க முடியாது. கையில் கருப்போ வெள்ளையோ, அல்லது லோன் எலிஜிபிளிடியோ இருக்கவேண்டும்.

இங்கேயும்கூட ஓரளவுக்கு வீடுகள் நிறையவே கட்டப்பட்டு குடி வந்தாயிற்று. அதிகபட்ச வீடுகள் கட்டுமானத்தில் இருந்தன. நிறைய அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள். சிலபேர் இரண்டு கிரவுண்டுகளாக இடம் வாங்கி, ஒரே ஒரு பங்களா வீடாகக் கட்டி குடிவந்திருக்கிறார்கள். அதுமாதிரி வீடுகளை நீங்கள் அண்ணா நகரிலோ அல்லது அபிராமபுரத்திலேயோ கூட பார்க்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த ஏரியாவை கார்ப்பரேஷனில் சேர்த்திருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக 'ட்ரெய்னேஜ்' வேலை கூட நடந்துகொண்டிருக்கிறது.

நான் இந்த ஏரியாவுக்கு குடி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. ஒரு அபார்ட்மெண்டில், நாலாவது மாடியில் டபுள் பெட் ரூம் வீடு. ஒரு அக்கவுண்டன்டின் ரொம்ப நாள் கனவு. தம்பிரான் புண்ணியத்துலே சிட்டிக்குள்ளே இல்லேன்னாலும், ஏதோ நகரத்தை ஒட்டியாவது கெடைச்சுதே. நாளைக்கு இதுவும் ஒரு சிட்டி ஆகிவிடாதா என்ன?

இந்த வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு கும்பகோணத்திலிருந்து வந்த எனது தாத்தா, கண்டதையும் தின்றுவிட்டு, பீயும் மூத்திரமுமாக, இங்கேயே படுத்த படுக்கையாகிவிட்டார். நிலைமை சீரியஸ் ஆகி இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு இந்தப் புத்தம் புதிய வீட்டில் ஏதும் நடக்கக் கூடாது என்று வேண்டாத தெய்வமில்லை. இதை அந்தக் கும்பகோணத்து அண்ணன் புரிந்து கொள்ளவேயில்லை. 'புது வீடாவது மண்ணாங்கட்டியாவது? கிழவன் அங்கேயே கிடந்து சாகட்டும். எத்தனை நாள் நான் மட்டும் வைத்துக்கொண்டு மாரடிப்பது.' என்பது என் அண்ணன்காரனின் வேண்டுதல். நான் அப்போது வாடகை வீட்டில் இருந்ததால், அவன்தான் இத்தனை ஆண்டுகளாய் எங்கள் தாத்தாவைப் பார்த்துக்கொண்டான். இனிமேல் முறை வைத்துவிடுவான். இங்கு ஆறு மாதம்; அங்கு ஆறு மாதம்.

'நாராயணா, கிழவன் உயிர் இங்கே போகாமல் பார்த்துக்க' என்று வேண்டாத நாளே இல்லை. 'கும்பகோணம் பழைய வீடு; அங்கே போனால், ஊருக்கு கொண்டுபோகிற செலவும் மிச்சம்' என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, என் மனைவி ஓடிவந்தாள்.

"அவருக்கு இழுக்குதுங்க. பயமாயிருக்கு."

நான் ஓடிச் சென்று பார்த்தபோது கண்கள் குத்திட்டிருந்தன. பொக்கை வாய் மேலும் கீழுமாய் மென்றபடி இருந்தது. இதற்குள் அக்கம்பக்கதினர் வந்துவிட்டார்கள். அந்த அறையிலிருந்து வந்த நாற்றத்தால் யாரும் கிட்டத்தில் போகத் தயங்கினார்கள்.

"உயிர் போரதுக்கு முன்னாடி, யாராவது வாயிலே பால் ஊத்துங்க; இல்லைன்னா சக்கரத் தண்ணியாவது ஊத்துங்க," என்று ஒரு பெண் பதற்றப்பட்டார்.

"நீ போடி, எனக்கு பயமாயிருக்கு" என்று என் மனைவியைத் தள்ளிவிட்டேன்.

"எனக்கென்ன தலையெழுத்தா? ஏன், வாரிப் போட்டதெல்லாம் பத்தாதா? இது வேறயா?" என்று எல்லோர் முன்னாலும் இரைந்து பேசி, தன் ஆதங்கத்தைக் காட்டினாள். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்.

"நீங்க போங்க. பேரனாயிருந்துகிட்டு பயப்படறீங்க?" என்று என் காதருகே யாரோ சொன்னர்கள்.

நீண்ட தயக்கத்துக்குப் பிறது, ஒரு கிண்ணத்தில் சர்க்கரைத் தண்ணீரோடு கிட்டத்தில் போனபோது தாத்தா அசைவற்றுக் கிடந்தார். இறப்பதற்கு முன்னால் அந்தக் கட்டிலையே பீ மூத்திரத்தால் குழப்பிவிட்டிருந்தார். நாற்றம் சகிக்க முடியவில்லை.
இதற்குள்ளாக என் கையில் ஒரு தேங்காயும் கற்பூரமும் திணிக்கப்பட்டது. தேங்காய் உடைத்து தலைமாட்டில் வைப்பதற்குள் தலை கிறுகிறுத்து, வாந்தி குமட்டியது.

"மேல ஆகவேண்டியதப் பாருங்க," என்று கூட்டம் கலைய ஆரம்பித்தது.

போன் ஒலித்து எடுத்த போது சி.இ ஏகத்துக்கு எகிறினார்.

"இப்பத்தான் கேசவன் விவரம் சொன்னான். என்னைய்யா நீ, ஒரு எம்என்சி சீஃப் அக்கவுண்டன்ட் மாதிரியாப் பேசுற? முப்பத்தாறு லட்சம் டிடி எடுத்து அனுப்பினாத்தான் கன்சைன்மென்ட் யு எஸ்லேருந்து வந்து சேரும். லாஸ்ட் டேட். கீழே கேசவன் நிக்கறான். கெளம்பிவா. மதியத்துக்கு மேல வீட்டுக்குப் போய்டுய்யா..."

"சார், சாவிய வேணும்னாகூட கேசவன்கிட்ட கொடுத்தனுப்புறேன். ரெண்டே நாள்ள, இத எடுத்துப்போட்டு, ஆபீஸ் வந்துடறேன் சார்."

"இங்கப் பாருங்க. ஆபீஸ் ஃபார்மாலிடீஸ் எல்லாம் உங்களுக்குத்தான் தெரியும். ஒரு ஒருமணி நேரமாவது வந்து முடிச்சிக்கொடுத்துட்டு போயிடுங்க. அதுக்கு அப்புறம்வேணா, ஒரு நாலு நாள் கூட லீவு எடுத்துக்கங்க." என்று சொல்லிவிட்டு போன் துண்டிக்கப்பட்டது.

என் மனைவி என்னை முறைத்தாள்.

"கும்பகோணத்து ஆளுங்களுக்கெல்லாம் போன் பண்ணி சொல்லிட்டு, இத இங்கிருந்து ஊருக்கு கொண்டுபோகப் பாருங்க. குழந்தைங்க வந்தா பயப்படும். ரொம்ப நேரம் வச்சிருக்ககூடாது. ஏற்கெனவே நாறுது"

"கொஞ்சம் கோவப்படாம கேளு. எனக்கு நேரமில்ல. நீயே போன் பண்ணி எல்லாருக்கும் சொல்லிடேன். கும்பகோணம் போக ஒரு வண்டியும் ஏற்பாடு பண்ணிடு. இதோ போய் உடனே வந்துடறேன். சி.இ ரொம்ப கத்துரான்." என்று சொல்லிகொண்டே நான் கீழே இறங்கிப் போய்விட்டேன்.

***

போன வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு, நாலு நாள் லீவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மணி நான்கு ஆகிவிட்டது. வாசற்கதவை சாத்திக்கொண்டு, வெளியே வந்து என் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும், சட்டையை பிடிக்காத குறையாக என் மனைவி எழுந்து வந்தாள்.

"உள்ள இருக்க முடியலை. நாத்தம் குடலைப் பிடுங்குது. குழந்தைங்க வேற ரொம்பவும் பயப்படுதுங்க. உங்க அண்ணன், எப்படியாவது இங்க கொண்டுவந்துடுங்க என்று சொல்லிட்டு போனை வச்சுட்டார். ஆம்புலன்சுக்கு போன் செய்தா யாரும் அவ்வளவு தூரம் வரமாட்டேங்கராங்க." என்று அழுதுகொண்டே சொன்னாள்.

"கொஞ்சம் இரு." என்று சொல்லி கீழே எட்டிப் பார்த்தேன். கேசவன் திரும்பிச் செல்ல காரைத் திருப்பிக்கொண்டிருந்தான்.

"கேசவா, நில்லுப்பா. ஒரு உதவி செய்யணும். பிணத்தை இங்கிருந்து கும்பகோணம் கொண்டுபோக ஏதாவது வண்டி ஏற்பாடு செய்து தர முடியுமா?" என்று கேட்டேன்.

நீண்ட நேரம் யோசித்தான். பிறகு யாரிடமோ பேசினான்.

"சார், எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். பிணத்தை வைக்கிற பிரீசர் கடை வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டேன். ஒரு பழைய மகீந்திரா வண்டி இருக்காம். அதுல கொண்டு போகலாம்; ஆனா ஏத்த இறக்க நீங்கதான் பார்த்துக்கணும் அப்படீன்னு சொல்றார். என்ன சொல்ல?" என்று கேட்டு போனை லைனிலேயே வைத்திருந்தான்.

"பிரச்சினையே அதானேப்பா, நாலாவது மாடிலேருந்து கொண்டுவரணும். என்ன பண்றதுன்னு தெரியலை." என்று தயங்கினேன்.

"சரி. வேண்டாம்னு சொல்லிடவா?"

"இல்ல, இல்ல, வரச்சொல்லு." என்று பதற்றத்துடன் சொன்னேன்.

கேசவன் பேசிவிட்டு சொன்னான். "வேன் ஒரு மணி நேரத்துல வந்துடும். இருபதாயிரம் ரேட். குடுத்துடுங்க. வரட்டுமா?" என்று விவரம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"இறக்கி ஏத்த ஆள் கெடைக்குமா?" என்று கேட்பதற்குள் கேசவனின் கார் கிளம்பிப்போயிருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து கேசவன் சொன்ன வேன் வந்தது. வண்டி ஓட்டிவந்த டிரைவர் லேசான தள்ளாட்டத்திலிருந்தான்.
வேன் டிரைவரும் மேலே வந்து பார்த்துவிட்டு, "என்னால இறக்கமுடியாதுங்க," என்று கூறிவிட்டான்.

ஆறு மணிவரையிலும் என்னால் பிணத்தை கீழே இறக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப்பார்ட்மெண்ட் ஆட்களெல்லாம் கதவை மூடிவிட்டு உள்ளேயே கிடந்தார்கள்.

உதவிக்காக, தெருவையே வெறித்து உட்கார்ந்திருந்த நேரத்தில், தினமும் பால் ஊற்றும் பையன் சைக்கிளில் வந்தான். அவனாகவே மாடி ஏறி வேகமாக எங்களிடத்தில் வந்தான்.

"அடப்பாவமே, தாத்தா செத்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்."

"ஆமாப்பா, அவர சொந்த ஊருக்கு கொண்டுபோகணும். வண்டி வந்திருச்சி..." என்று தயங்கினேன்.

"என்ன தயங்கறீங்க? வண்டியில ஏத்தணுமா?" என்று கதவை அவனே திறந்து உள்ளே போய் பார்த்தான்.

"ரொம்ப கலீஜா இருக்கே. கொஞ்சம் இருங்க, தோ வர்றேன்" என்று சொல்லி கீழே இறங்கி சைக்கிளில் விருட்டென்று போனான்.

"சட்டுபுட்டுன்னு ஆவட்டும். இப்பக் கிளம்பினாத்தான் காலம்பிரயாவது போய்ச் சேரலாம்." வேன் டிரைவர் கத்த ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் பால்காரன் திரும்பி வந்தான்.

"இது எங்க அப்பா" என்று பின்னால் வந்த பெரியவரைக் காட்டினான்.

அவரேதான். எட்டரை மணிக்கு மாடு ஓட்டிக்கொண்டு போவாரே, அதே பெரியவர்தான்.

"ஓ... நீதானா. சரி இருக்கட்டும்." என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு, பையனோடு உள்ளே சென்றார்.

"நீங்க அப்படி கொஞ்சம் தள்ளி வெளியே நில்லுங்க. கொழந்தைகள கீழ அனுப்பிடுங்க. நான் ரெடி பண்ணிடுறேன்." என்று எங்களை வெளியில் அனுப்பிவிட்டார்.

பையன் மேலும் கீழுமாக ஓடி வைக்கோல் கம்பு ஓலைத்தட்டி என்று ஏதேதோ உள்ளே கொண்டுபோனான்.

கால் மணி நேரத்தில் நீள வாக்கில் நேர்த்தியாக ஓலைத் தட்டி வைக்கோலால் சுற்றப்பட்டு, முகம் மட்டும் வெளியில் தெரியுமாறு வைத்து, அப்பனும் மகனுமாகவே படிகள் வழியாக பிணத்தை இறக்கி, வேனுக்குள் ஏற்றிவிட்டனர்.

"வீட்டையெல்லாம் பூட்டிக்கிட்டு, கெளம்புங்க. பார்த்துப் போகணும். என்னப்பா டிரைவர்... தண்ணியா?" என்று கேட்டுக்கொண்டே பையனுடன் கிளம்பிப் போய்கொண்டேயிருந்தார்.

***

முடிந்தது. தாத்தாவை நீர் நெருப்பாக்கி, செலவுக்கணக்கையெல்லாம் தீர்த்துவிட்டு, காரிய நாள் குறித்துக்கொண்டு, கும்பகோணத்திலிருந்து வீடு திரும்பியாகிவிட்டது. வீட்டைக் கழுவி மெழுகி, நிமிர்ந்து நிற்கும்போது தாவு தீர்ந்துவிட்டது. இருந்தாலும் கிழவன் போய்ச் சேர்ந்ததில் எங்களுக்கு பெரிய நிம்மதி; விடுதலை. ஒரு விதத்தில் மகிழ்ச்சியும்கூட.

மறு நாள் பால்காரப் பையன் வந்தான். "முடிஞ்சுதா... என்ன செய்யறது? என்னைக்காவது ஒரு நாள் போய்த்தானே ஆகணும். இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க." என்று எங்களைச் சமாதானப் படுத்தினான்.

"வாப்பா தம்பி, உன் உதவிய மறக்கவே முடியாது." என்று சொன்ன என் மனைவி என்னைப் பார்த்து
"எவ்வளவு கொடுக்கணும்னு கேளுங்க," என்று சொல்லிவிட்டு, பாத்திரம் எடுத்துவர உள்ளே சென்றாள்.

"சரி தம்பி, எவ்வளவு கொடுக்கணும்?" என்று நான் கேட்டேன்.

"பால்காசுக் கணக்கா, அது அஞ்சாந்தேதிதானே கொடுக்கணும்?" என்று பால் ஊற்றிக்கொண்டே சொன்னான். "வர்றேன் சார்" என்று சொல்லி போய்விட்டான்.

"ஏங்க. இந்தமாதிரி வேலையெல்லம் யாரும் சும்மா செய்து தருவாங்களா? எதுக்கும் அந்தப் பெரியவர் வீட்டுக்குப்போய் அவரைப் பார்த்துப்பேசி, ஏதாவது கொடுத்துட்டு வந்துடுங்க. அவர் வீடு பெருமாள் கோயில் தெருவிலதான் இருக்காம்." என்று மனைவி சொன்னாள்.

"ஆமாமாம். கிழவர் வேறு ரொம்ப முன்கோபி. அப்புறம் வீட்டு வாசலில் வந்து சத்தம் போடுவார். அதனால் ஆபீஸ் போய்ட்டுவந்து ஒரு ஏழு மணிக்கு போய் பார்த்து கொடுத்துட்டு வர்றேன்." என்றேன்.

அலுவல் வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தாயிற்று. பெரியவரைப் பார்க்கப் போகவேண்டும். இன்று அவர் முகத்தில் விழிக்கவே தயக்கமாக இருந்தது.
நான் அவரை அன்று அப்படிப் பேசியிருக்கக்கூடாது. என்ன இருந்தாலும் வயதில் பெரியவர்.

ஐநூறு ரூபாய்த் தாளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, எங்கள் நகரைக் கடந்து, பெருமாள் கோயில் தெருவை விசாரித்து, அவர் இருக்கும் வீட்டை விசாரித்தேன்.

"செங்கேணி தாத்தா வீடா? அதோ ஒரு வேப்பமரம் தெரியுதுல்லே, அதான்."

அந்த வீடுக்கு இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் அப்பார்ட்மெண்டுகள். இதன் நடுவில் சுமார் ஒன்றரை கிரவுண்டு அளவில் காம்பவுண்டு இல்லாமல் பனையோலையால் ஆன தடுக்குகள் முகப்பில் இருந்தன. ஒரு மூங்கில் தட்டிக் கதவு. அதை விலக்கிக்கொண்டு உள்ளே போனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒழுங்கற்ற நிலையில் நான்கு சிறிய ஓலைக் குடிசைகள். ஒரு நாட்டு ஓடு போட்ட பழைய மண்சுவர் வைத்த வீடு. ஒரு ராட்டினம் போட்ட கிணறு. அதைச் சுற்றிலும் சேறும் சகதியும். அதன் பக்கதில் பனையோலை வேய்ந்த மாட்டுக் கொட்டகை. மிகப் பெரியது. கொட்டகை கொள்ளாத மாடுகள். இங்கும் அங்குமாய் துள்ளித்திரியும் கன்றுக்குட்டிகள். ஒரு பத்து பதினைந்து ஆடுகள். சிதறியோடிய கோழிகள். ஒரு நாலுசக்கர டயர் வண்டி. ஏர்க்கலப்பைகளும், பரம்புகளும், மண்வெட்டி கடப்பாரைகளும், எல்லா வீட்டுச் சுவர்களிலும் சாய்ந்துகிடந்தன. வேப்ப மரத்தடியில் பிரம்மாண்டமான எருதுகள் கட்டப்பட்டு, மணிகளை ஆட்டியபடியே வைக்கோலைத் மேய்ந்துகொண்டிருந்தன. அதன் பக்கத்தில் தவிடு வைக்க ஒரு பெரிய மண் தொட்டி இருந்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இங்கும் அங்கும் வேகமாக நடந்து போவதும் வருவதுமாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் விளித்து, ஏதாவதொரு வேலையை செய்துகொண்டேயிருந்தார்கள். எங்கும் இரைச்சலாய் இருந்தது.

அந்தப் பெரியவர் கிணற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்தார். யாரோ ஒரு பெண் அவருக்கு முதுகு தேய்த்து விட்டுக்கொண்டிருந்தாள். அது அவரது மகளோ அல்லது மருமகளோ தெரியவில்லை.

"பெரியவரைப் பார்க்கணும்," என்று அந்த இரைச்சலில் சத்தமிட்டு கூறினேன்.

"சித்த அந்த வண்டிமேல உட்காருங்க. மாமனார் குளிக்கிறார். வந்திடுவார்." என்று அந்த முதுகு தேய்த்துக்கொண்டிருந்த பெண் கூறினாள்.
"டேய் பசங்களா, சாருக்கு கொஞ்சம் எடம் விடுங்கடா," என்று அந்த வண்டியின் மீது குதித்து விளையாடிக்கொண்டிருந்த வாண்டுகளுக்கு கட்டளை போனது. அவர்களின் விளையாடில் நான் இடைஞ்சலாய்ப் போனாதால் எனக்கு இடம் கொடுத்துவிட்டு வேறு இடத்துக்கு விளையாட அவர்கள் போய்விட்டார்கள்.

சிறிது நேரம் கழித்து, முதுகை துண்டால் துடைத்தவாறே அந்தப் பெரியவர் வந்தார். கோவணம் காட்டியிருந்ததற்காக அவர் சங்கோஜப்பட்டதாகத் தெரியவில்லை.

"ஓ, நீதானா, இருக்கட்டும், இருக்கட்டும்" என்று அந்த ஓட்டு வீட்டின் வாசலில் விரிக்கப்பட்டிருந்த கோரைப் பாயில் உட்கார்ந்துகொண்டார்.

"என்ன, எல்லாம் ஆச்சா. என்ன பண்றது. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றார்.

"எல்லாம் முடிஞ்சுது. ஆனா,உங்களுக்குத்தான் நான் ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஊர்ல ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கிறதுதானே? நாளைக்கு நான் போய்ட்டா நீ வந்து தூக்க மாட்டியா?" வயதானவர்களுக்கே உரித்தான சன்னக்குரலில் சொன்னார். "இங்க இதெல்லாம் சகஜம்!"

"இருந்தாலும்..... அதுக்காக யாரும் சும்மா உதவி செய்வாங்களா? அதுவும் இந்தக் காலத்துல? அதான் உங்களப் பார்த்து குடுத்துட்டு போலாம்னு வந்தேன்," என்று நான் கொண்டுவந்த அந்த ஐநூறு ரூபாயை அவர் முன்னால் நீட்டினேன்.

நீண்ட நேரம் மௌனமாயிருந்தார். அவர் முகத்தில் கோபம் வரும்போலத் தெரிந்தது.

"இப்படி கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன்," என்று என்னை நிமிர்ந்து பார்த்தார். "இதெல்லாம் ஊர் வழக்கமில்லை."

நான் தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.

"வேண்டாம்யா. அதை மடிச்சு உள்ளாற வை. காப்பி குடிக்கிறயா?"

"....."

"மோரு?"

"இல்ல, வேண்டாம் பெரியவரே... நீங்க ஏதோ கோபத்துல இருக்கிறமாதிரி படுது."

"எதுக்கு?"

"ஒரு வாரத்துக்கு முன்னால, நீங்க மாடு ஓட்டிக்கிட்டு வரும்போது நடந்த சின்ன பிரச்சினைதான். நான் உங்களை அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

இதற்கிடையில் ஒரு தட்டு நிறைய சாதமும் ஒரு கிண்ணத்தில் குழம்பும் கொண்டுவந்து அவர் முன்னால் வைக்கப்பட்டது.

"சாப்பிடறியா?"

"வேண்டாம்!"

தட்டை இழுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, சாதத்தின் நடுவில் ஒரு குழி தோண்டினார். அதில் குழம்பை ஊற்றி, தன் வலது கை முழுவதையும் விட்டு பிசைந்து, கை நிறைய உருண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மென்று விழுங்கிய பின் சொன்னார் :

"நான் நடக்கத் தெரிஞ்சதிலேருந்து மாடுதான் மேய்க்கிறேன். இப்போ, ரோட்டை தாண்டி அந்தாண்ட போனா, அங்கதான் தாங்கல் இருக்கு. மாடுகள ஓட்டியாந்து மேயவிட்டு, சாயந்திரம் ஆச்சின்னா, தாங்கல் குட்டையில கழுவி அதே ரோட்டு வழியாத்தான் வீட்டுக்கு திரும்பி வர்றேன். ரோடுன்றது இப்பத்தான் வந்தது. அதுவும் இந்த பை-பாஸ் தேவையேயில்ல. அப்போல்லாம் அது ஒத்தையடிப்பாதை. ரெண்டு பக்கமும் சவுக்குத்தோப்பும், பனந்தோப்புமாத்தானிருக்கும். சாராயம்கூடக் காய்ச்சுவாங்க.

அங்க ஒரு கா காணி எங்களுக்கு சொந்தமாயிருந்தது. ஏதோ பை-பாஸ் ரோடுக்குன்னு சொல்லி புடிங்கிட்டாங்க. நெறைய பேருகிட்டேருந்து பறிச்சிக்கிட்டாங்க. ஒத்த பைசா இன்ன வரைக்கும் குடுக்கலை. அந்தப் பக்கம் ரோடு இருக்குதுன்றதுக்காக பயந்துக்கிட்டு மாடுங்களை எங்க கொண்டுபோய் மேய்க்கறது? வேற மேச்ச நெலம் இல்ல. எல்லாத்தியும் பிளாட்டு போட்டுட்டாங்க. நீங்க பாரதியார் நகரா? உங்களுக்கு இதெல்லாம் என்னத் தெரியப் போகுது? நீங்க வீடு கட்டி குடியிருக்கிற அந்த எடம் பாதி ஏரி, பாதி சுடுகாடு. மண்ணத்தள்ளி, பட்டா வாங்கி, உங்களுக்கு கட்டிக்குடுத்துட்டானுங்க.

எங்களுக்கு வெவசாயம், மாடு மேய்க்கிறதத் தவிற எதுவும் தெரியாது. நெலத்தப் பிடுங்கிட்டப்புறம், எங்களுக்கும் கொஞ்சம் கிலிதான். அதான், இப்போ எங்க பசங்க வேற வேலைக்குப் போறாங்க. அதோ அந்த வீடு பெரியவனோடது. பிளம்பிங் வேல செய்யுறான். இந்த வீடு இன்னொரு பையனோடது. லாரி கிளீனராய்ப் போய்ட்டான். அதோ அந்த வீடு இன்னொருத்தனோடது. போர் போட்டுக் கொடுக்கற வேலை. அதோ இருக்கே அந்த வீடு இன்னொருவனோடது. அவன் லோடு வண்டி ஓட்டுறான். கடைசீ பையன் பால் ஊத்தறான். என்னோடதான் இந்த ஓட்டு வீட்டிலே இருக்கிறான். இந்த வீடுதான் என் தாத்தன் பூட்டன் பொறந்து செத்த வீடு. மவளுங்க மூணு பேர கட்டிகொடுத்திருக்கேன். நல்லாத்தான் இருக்காங்க. இதோ வெளையாடுதுங்களே, இதுங்க என் பேரப் பசங்க. ஒரே சமையல், சாப்பாடு. படுக்கறதுதான் வேற வேற.

இதோ இருக்கறமே, இந்த இடம் எங்க பூர்வீக குடியிருப்பு. கிராம நத்தம். தெனத்துக்கு ஒருத்தன் வர்றான். 'பெரியவரே, இந்த எடத்தை குடுத்துடேன். இத்தினி கோடி தர்றேன், அத்தினி கோடி தர்றேன்' அப்படீன்னு தொந்தரவு பண்றானுங்க.

காசு இருந்து என்னத்தக் கிழிக்க? பணத்த வாங்கி பொட்டிலதான் பூட்டிக்கணும். இதே இப்ப சாப்பிட்டதத்தானே அப்பவும் சாப்பிடப்போறோம்? என்ன, கொஞ்சம் சொகுசா இருக்கலாம். ஆனா அந்த சொகுசு எங்க யாருக்கும் ஒத்துக்காது. எங்களுக்கு கை இருக்கு, காலிருக்கு உழைக்க. உழைக்கலைன்னா எங்க குடும்பத்துக்கு நோவு புடிச்சுக்கும். உழைச்சே பழக்கப் பட்டவங்க நாங்க. எழுவது வயசு எனக்கு. ஒரு ஊசி போட்டதில்ல. பத்து பேர அடிச்சு சாய்ச்சுடுவேன். இந்தா... என் கையப் பாரு... எப்படிக் காய்ச்சுக் கெடக்கு.

என்னை உள்ள தள்ளிடுவேன்னு சொன்னானே, அவன் ஒரு அ
றையோட தப்பிச்சான்! யாருக்குத் தம்பி நாங்க பயப்படணும்? நான் என்ன திருடிட்டேனா? ரோடுல மாட்ட ஓட்டிக்கினு போகக்கூடாது அப்படீன்னு கூட ஒரு சட்டம் போட முடியுமா? அப்பிடிப் போட்டா, நான் நேரா கோர்ட்டுக்கே போயி, ஜட்ஜோட சொக்காய புடிச்சிடமாட்டேன்?. நான் எதையும் விட்டுக்கொடுக்கறதில்லை. எங்களுக்கு நெலத்தோட நஷ்ட ஈடு சரியாக் கொடுக்கலைன்னா, ஒரு நாளைக்கு அந்த ரோடு குறுக்கால படுத்திடுவோம். அப்ப எப்படிப்போவீங்க நீங்க?"

சாப்பிட்டு முடித்து, தட்டில் கைகழுவி, பாயிலிருந்து தள்ளி வைத்தார்.

"காலம் மாறுது, தம்பி. அதுக்கேத்தாமாதிரி சட்டுன்னு, எங்களை மாத்திக்க முடியலை," என்று ஒரு அழுக்குத் தலையணையை இழுத்துவைத்து, அதன் மீது சாய்ந்துகொண்டார். விளையாடிக்கொண்டிருந்த அத்தனை பிள்ளைகளும் மொத்தமாக, கோவென்று குரலெழுப்பியவாறு, பெரியவர் மீது வந்து விழுந்தன.

"அட என் கண்ணுங்களா..." என்று குழந்தைகளை அணைத்துக் கொஞ்சினார். "இண்ணைக்கு நீங்க நல்லா விளையாடினீங்களா?"

பிரமித்துப்போய் அமர்ந்திருந்தேன் நான்.

இதற்கிடையில் யாரோ ஒரு மருமகள் சூடாக காப்பி போட்டுக் கொண்டுவந்தாள். மிகவும் திக்காக இருந்தது. புகை வாசனை அடித்தது.

"குடி தம்பி" என்றார் பெரியவர்.

"இங்க நடக்கற நல்லது கெட்டதுக்கு எல்லாம் நான் போவேன். எங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மொத ஆளா நான் நிப்பேன். வெந்தத் தின்னு செத்துப்போறதுக்கு நாம என்ன மாடுங்களாய்யா? சொரண இல்லாத வாழுறதவிட, தூக்கு மாட்டிக்கலாம். அதெல்லாம் போகட்டும். நீங்க வேல மெனக்கெட்டு காசு குடுக்க வந்த பாரு... அத வெளிய சொல்லாத. பால் ஊத்த வர்றாம்பாரு என் கடைசீ பையன், அவனுக்கு தெரியவே வேண்டாம். ரொம்ப வருத்தப்படுவான்."

"சரிங்க பெரியவரே... ஆனா அன்னைக்கு நடந்ததுக்கு நான் ரொம்பவே வருத்தப்படறேன். அதை ஏதும் மனசுல வச்சிக்காதீங்க."

"திருப்பியும் அதையே பேசுறீங்களே... போய்ட்டுவா தம்பி. எனக்கு தூக்கம் வருது." என்று சொன்னார் பெரியவர். எத்தனை திறந்த மனது?

கொடுத்த காப்பியை குடித்து முடித்துவிட்டு, நீண்ட நேரம் மௌனமாகவே அமர்ந்திருந்தேன். அந்தச் சூழலை சுற்றிலும் ஒரு கண்ணோட்டம் பார்த்தேன். இதுவல்லவா வாழ்க்கை? கவுரவமான வாழ்க்கை. பணத்துக்கு மடிந்து போகாத வாழ்க்கை. சட்டத்துக்கு பயந்து போகாத வாழ்க்கை. உரிமையை விட்டுக் கொடுக்காத வாழ்க்கை. ஒன்றோடொன்று உதவி ஒத்தாசை செய்துகொள்ளும் வாழ்க்கை. உழைத்தே உண்ண விரும்பும் வாழ்க்கை. இதோ... வாழ்வாங்கு வாழும் மனிதக் குடியிருப்பு!

கனத்த மனதுடன் விடை பெற எழுந்தேன்.

"பெரியவரே, போய்ட்டு வர்றேன்."

"....."

"பெரியவரே..., ஐயா....?"

குழந்தைகளின் அரவணைப்புகளினூடே அவரின் குரட்டை சத்தம் பலமாகக் கேட்டது!!


2 comments:

ஊரான் said...

நல்ல கதை படித்து ரொம்ப நாளாயிற்று. இது கதையல்ல. நிஐ வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள். வாழ்த்துகள்!

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன் said...

எங்க கிராமத்தின் இருந்த மனிதர்களின் பழைய கதை. நகரமயமாக்கல் எல்லாவற்றையும் தலைகீழாக்கிட்டது. இதை நான் வேறு மாதிரி பதிவு செய்துள்ளேன். பார்க்கவும்
http://keetru.com/index.php?option=com_content&view=article&id=19179:2012-03-27-05-46-41&catid=3:short-stories&Itemid=266

Post a Comment