My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

26.11.11

செல்லக்குட்டி



விடியல் நான்கு மணி. பயாலஜி டெஸ்ட் என்று என் மகள் அலாரம் வைத்து, எழுந்து சப்தமிட்டு படித்துக்கொண்டிருந்தாள். வேத பாராயணம் பண்ணும் பாலகன் மாதிரி, சம்மணமிட்டு, தன் உடலை முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டிருந்தாள். தரையிலிருந்த புத்தகத்து வரிகளை கண்களால் ஓட்டமிட்டு, அண்ணாந்து பார்த்து ஒப்புவித்துக்கொண்டிருந்தாள். ஒரு காக்கை தண்ணீர் குடிப்பதுபோல அந்தக் காட்சி இருந்தது.

"செல்லக்குட்டீ... டீ போட்டுத் தரவா?" என்று கேட்ட மறு நொடியில் எனக்கு பதில் வந்தது.

"அப்பா... கொஞ்சம் பேசாம கம்முன்னு இரு. நான் நெறைய படிக்கவேண்டியிருக்கு."

நான் கதவை மெல்லத் திறந்தேன். சில்லென்ற ஊதைக் காற்று முகத்தில் வீசியடித்தது.
விடியலின் வெளிச்சமும் மேகக்கருக்கலும் கலந்த ஒரு மங்கிய விடியல் அது. அப்போதுதான் மழைவிட்டு, தாழ்வாரத்து ஓட்டு முனைகள் வரிசைக்கிரமமாய் நீரைத் தாரைத்தாரையாய் வார்த்துக்கொண்டிருந்தன. தெருவில் மணலை அறித்து ஓடிய தெளிந்த நீரோட்டத்தில் விடியல் வானம் பிரதிபலித்து, சிக்கல் நிறைந்த ஒரு ஓவியத்தை எனக்கு வரைந்து காட்டிக்கொண்டிருந்தது.

குளிரின் தாக்கத்தால், நான் கதவைத் திறந்து உள்ளே திரும்புகையில், எனக்கு விசும்பியழும் சத்தம் கேட்டது.

"என்ன செல்லக்குட்டி, என்னவாச்சு?" என்று தலையக் கோதியவாறு கேட்டேன்.

"அப்பா, ஒண்ணுமே புரியலைப்பா. நெறைய புதுசு புதுசா வார்த்தைங்க பக்கம் பக்கமா வந்துகிட்டே இருக்குப்பா. எதையுமே என்னால மனப்பாடம் செய்ய முடியலை... பாடத்தையும் புரிஞ்சு படிக்க முடியலை," என்று என் விரலைப் பற்றித் தேம்பியழுதாள் என் குழந்தை.

"விடும்மா. படிக்கக் கஷ்டமாயிருந்தா, இன்னைக்கு லீவு போட்டுடேன்?" என்று சொன்னவுடன் எனக்கு ஒரு கராரான பதில் கிடைத்தது.

"நல்லாப் படின்னு சொல்வீங்களா, அதவிட்டுட்டு, லீவுபோடு அது இதுன்றீங்களே" என்று தூக்கத்திலிருந்த என் மனைவி பாயைச் சுருட்டி எழுந்தவாறு, என்னைக் கடிந்துகொண்டாள். "நல்லாப் படிக்கணும்னுதானே கவுருமெண்டு ஸ்கூல்ல இருந்து கான்வெண்டுக்கு மாத்தினது?"

"ஆமா. கான்வெண்டுக்கு மாத்தினதுதான் தப்பு." என்று எனக்குள் நான் முணுமுணுத்துக்கொண்டேன்.

வெளியில் மழை வெளுத்து வாங்கியது. கூரை ஓடுகள் தடதடவென்று சப்தமிட்டன.

"அப்பா, அந்த கரீமா மிஸ்ஸை நெனைச்சாலே பயமா இருக்குப்பா. சரியா மார்க்கு எடுக்கலைன்னா, கிளாசுக்கு வெளியில நிக்கவைச்சுடுவாங்க. ரொம்ப கேவலமா திட்டுவாங்கப்பா... எல்லார் முன்னாலயும் முட்டி போடச் சொல்றாங்கப்பா. ரொம்ப அவமானமா இருக்கும்," என்று கதறியழ ஆரம்பித்தாள் என் மகள். "இந்த முறை நம்ம ஸ்கூலுக்கு 'சென் பெர்சென்ட்' ரிசல்ட் வரணும்னு பிரின்சிபால் சொல்லியிருக்கார், பார்த்துக்குங்க. ஒருத்தர்கூட ஃபெயில் ஆகக்கூடாது... அப்படீன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க, அப்பா."

"இதப் பாரு செல்லக்குட்டீ, நான் கண்டிப்பா சொல்றேன். இன்னைக்கு லீவுதான். கவலையேப் படாத. வெளியில பாரு, சும்மா பேய்மழை அடிக்குது. நீ வேணும்னா பாரேன், கண்டிப்பா லீவு அறிவிச்சுடுவாங்க."

"ஆஹா... கொழந்தைக்கு நல்ல புத்தி சொல்ற அப்பனை இந்த வீட்டிலதான் எல்லாரும் பார்க்கணும். அட, எழுந்து போங்க. கொழந்தை படிக்கட்டும். ஆயிரம் ஆயிரமா பணத்தக் கொட்டி கான்வென்டுல சேத்துருக்கோம். நல்லா படின்னு சொல்றத விட்டுபுட்டு..." என்று அடுப்பங்கரைக்கு போனாள் என் மனைவி.

"அப்பா, ஏம்ப்பா என்னை கான்வெண்டுல சேர்த்தீங்க..." என்று என்னை நிமிர்ந்து பார்த்து என் குழந்தை கேட்டாள்.

"நான் என்னம்மா செய்யறது? இந்த விஷயத்துல யாரோ சொன்னதைக் கேட்டு, அம்மாதான் அடம் பிடிச்சுட்டா. உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பார்த்துப் படிம்மா."

"இல்லைப்பா... ஒம்பதாவது வரையிலும் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு, இப்ப இங்கிலீசுல படிக்கிறது, ரொம்பவும் கஷ்டமா இருக்குப்பா. ஒன்னுமே புரிஞ்சுக்க முடியலை. இந்த கரீமா மிஸ் வேற புஸ்தகத்துல இருக்குறத அப்படியே படிச்சுட்டு போய்ட்றாங்க. 'புரியலை மிஸ்' அப்படீன்னு கேட்டா, 'உன் மர மண்டைக்கு புரியாது' அப்படீனு தலையில ஓங்கி கொட்றாங்க."

டீயை ஆற்றிக்கொண்டே என் மனைவி வந்தாள். "இங்கப்பாரு செல்லம்மா. எல்லாம் உன் நல்லதுக்குத்தான் செய்யுறோம். இந்த ஊருல படிக்கிறவுங்க எல்லாருமே இப்ப புதுசா வந்த உங்க கான்வென்டு ஸ்கூல்ல சேர்ந்துட்டாங்க. நாம மட்டும் சும்மா இருக்க முடியுமா? எவ்வளோ கஷ்டப்பட்டு, பீஸ் கட்டி அந்த பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டுருக்கோம்? நல்லா படி தாயீ. படிச்சு ஒரு டாக்டரோ எஞ்சினீயரோ ஆனாத்தான், என்னய மாதிரி, எவனையாவது கட்டிக்கிட்டு லோல் படத் தேவையில்ல."

எனக்குக் டீக்கிளாசு சுரீரெனச் சுட்டது. "நீங்க அமைதியா இருங்க. அவ படிக்கட்டும்."

மீண்டும் பயாலஜி பாடங்களை படித்து மனப்பாடம் செய்யத் துவங்கினாள் என் செல்லக்குட்டி.

நான் சுவற்றில் தலையணை கொடுத்து சாய்ந்துகொண்டேன். என் மகளின் முகத்தைப் பார்க்க எனக்கு ரொம்பவும் பரிதாபமாகப் பட்டது. அவள் மனமுவந்து படிக்கவில்லை. அந்த விளக்கு வெளிச்சத்தில், அவளின் உள்மன வலி அவளின் முகத்தில் தெரிந்தது.

நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன். 'ஏய் செல்லக் குட்டி, நீ கவலைப் படாத. இந்தப் பேய் மழைக்கு கண்டிப்பா லீவுதான்."

ஆறு மணிவரை படித்துவிட்டு புத்தகத்தை மூடினாள் செல்லக்குட்டி. பூனை மாதிரி நடந்து அடுத்த அரையிலிருக்கும் டிவியை திருகினாள். நானும் கூடவே எழுந்து சென்றேன்.

"என்னடீ இப்ப டிவி கேக்குது உனக்கு? வென்னி வெச்சிருக்கேன். குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கெளம்புற வழியப் பாரு" என்று என் மனவி இறைந்து கத்திக்கொண்டிருந்தாள்.

நான் மட்டும் ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டே வந்தேன். யாரோ சொன்னார்கள். ஆளுங்கட்சி சேனலில் தான் 'பள்ளி விடுமுறையை' உடனடியா தெரிவிச்சுடுவாங்களாம். அவர்கள் சொன்னதுபோல அந்த ஆளும் கட்சி சேனலின் கீழே 'ஃப்ளாஸ் நியூஸ்' வந்து, தொடரோட்டமாய் ஓடிக்கொண்டிருந்தது.

'பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு : மழை காரணமாக, நாகை, கடலூர் மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.'

"ஏய் செல்லக்குட்டி... உனக்கு கண்டிப்பா லீவுதான். ஒவ்வொரு மாவட்டமா சொல்லிக்கிட்டு வர்றான்." என்று உற்சாகத்தில் நான் கத்தினேன்.

"என்னங்க இது. சின்னப் பயங்க மாதிரி பேசுறீங்க? நீங்களே உங்க பொண்ணை ஸ்கூலுக்கு போகவேண்டாம்னு சொல்றீங்களே, கொஞ்சமாவது கேக்க நல்லாவா இருக்கு." என்று கடிந்துகொண்டாள் என் மனைவி.

எனக்குத் தேவை செல்லக்குட்டி பள்ளிக்குச் செல்லக்கூடாது. அவ்வளவுதான். இன்றைய தேதிக்கு பயாலஜி டெஸ்ட் தள்ளிப்போனால், ஓரளவுக்கு இன்னும் நன்றாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

தலை வாரி, பள்ளிச் சீருடை அணிந்து, முதுகில் சுமையை மாட்டிக்கொண்டு, முகம் நிறைய சோகத்தை அப்பிக்கொண்டு, என் முதுகுக்குப் பின்னால் வந்து நின்றாள் செல்லக்குட்டி. "என்னப்பா, லீவு விடமாட்டங்களா?"

நானும் வைத்த கண் வாங்காமல் டிவிப் பெட்டியை பார்த்துக்கொண்டேயிருந்தேன். நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை... ம்ஹூம், இன்னும் திருவள்ளூர் மாவட்டம் அறிவிக்கப் படவில்லை.

பள்ளி செல்லும் வாகனத்தின் ஒலி வீட்டு வாசலில் கேட்டது. அதன் ஒலியிலேயே அதன் அவசரம் தெரிந்தது.

என் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லக்குட்டி கேட்டாள்.

"அப்பா, நானே லீவு போட்டுவிடட்டுமா. சரியாவேப் படிக்கலைப்பா. பயமா இருக்கு...." என்று சொல்லி முடிப்பதற்குள் என் மனவி, செல்லக்குட்டியை வலிய இழுத்தாள்.

"நல்லா இருக்கு கதை. ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியா இருக்கீங்களே. அடி செல்லக்குட்டி, வேன் நிக்குது வாடி," என்று தரதரவென இழுத்துக்கொண்டு, கொட்டும் மழையில் நனைந்தவாறே வாசலைக் கடந்து சென்றார்கள். செல்லக்குட்டி என்னையே திரும்பித் திரும்பி பார்த்தவாறு வேனில் ஏறிச் சென்றுவிட்டாள்.

நான் கையசைத்து விடை கொடுத்துவிட்டு, திரும்பவும் டிவியைப் பார்த்தேன்.

'நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர்....'

நான் தெருவையே வெறித்துப் பார்த்துக்கொடிருந்தேன். தெருவில் மெல்லியதாய்ப் பரந்து ஓடிக்கொண்டிருந்த மழை நீரில், பள்ளி வேன் தன் சக்கரங்களைப் பதித்து கலக்கிவிட்டுப் போயிருந்தது.

No comments:

Post a Comment