My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

20.12.11

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூதாகர சுவாமிகள் துணை


பக்கத்து வீட்டு கருத்தாயிப் பாட்டி ஒரு நாள் வருத்தத்தோடு சொன்னாள்.

"நட்ராஜி தம்பி... செண்பகம் வரவர சாப்பாட்டைக்கூட ஒருவேளை குறைச்சிக்கிட்டாடா. ஒரேயொரு பொண்ணை வெச்சிக்கிட்டு ஏண்டா இப்படி ரொம்ப கவலைப்பட்டு உடம்ப வருத்தி சேத்துப் பிடிக்குது? இந்த ஊரு உலகமே டிவி நாடகத்த பார்த்து கண்ணக் கசக்கிட்டிருக்கும்போது, இந்த செண்பகம் தைய்ய மிஷினே கதின்னு கெடக்குறாளே? பாக்கவே பாவமா இருக்குடா. வர வர துரும்பா எளைச்சுட்டா."

"செண்பகம், ஏம்மா உன்னயே இப்படி வருத்திக்கிறே? உன் ஒடம்பையும் நீ பார்த்துக்கணுமில்லே?" என்று கேட்டால், செண்பகம் சொல்லுவாள் :

"இல்லப்பா. நீ நல்லவனா இருக்கப்போய்தான் நம்ம வாழ்க்கை பிரச்சினை இல்லாமப்போகுது. ஆனா அக்கம் பக்கம் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு. எக்ஸ்போர்ட்டு கம்பெனிக்குப் போற அந்த சாந்திப் பொண்ணு அடி வாங்காத நாளே இல்லை. குடிகார நாயி தண்ணியப்போட்டு வந்து கொலை குத்து குத்துறான். அவளுக்கு ஒரு நாள் போறது ஒரு யுகமாப் போகுது. பொண்ணுகளுக்கு குடுத்துவைச்சதெல்லாம்கூட, தற்செலாத்தான் அமைஞ்சுபோகுது. சாவோ வாழ்வோ, எதுவும் அவ அவ கையிலயா இருக்கு? ஒருத்தியோட தலவிதியே அவ கட்டிகிட்ட புருஷங்கிட்டதானேய்யா இருக்கு? நீங்க ஆம்பளைகளா இருக்கறதனால கஷ்டம் ஏதும் தெரியல. ஆனா பொண்ணாப் பொறந்த எங்களுக்கு இந்த ஜனங்ககிட்ட என்ன மரியாதை கிடைக்குது? அடியும், ஒதையும், கிண்டலும், கேலியும்.... அடத்தூ... இன்னொருதடவை நாங்கள்ளாம் பொம்பளைகளா பொறக்கவேகூடாது."

எங்கள் மகள் செங்கொடி பன்னிரண்டாம் வகுப்பு படித்தாலும் படிக்கிறாள். செங்கொடி வளர்ந்துகொண்டேயிருப்பதால், செண்பகத்துக்கு டென்ஷன் இன்னும் அதிகமாகத்தான் போனது. அவள் கவலையெல்லாம் அவளுக்கு ஓரளவுக்கு படிப்பறிவு கொடுத்து, ஒரு நல்ல வேலையில் சேர்த்துவிடவேண்டும். சொந்தக் காலில் நிற்க வைக்கவேண்டும். கூடவே அவள் பெயரில் ஒரு ஒண்டு வீடாவது இருக்கவேண்டும். சொந்தமாக! அப்படியிருந்தால்தான், நாளையொரு நாள், கட்டிக்கொண்டவன் பிரச்சினை செய்தால்கூட, அல்லது அவன் விட்டுவிட்டு ஓடித்தொலைந்தால்கூட, நம்பிக்கையாக, சொந்தக்காலில் கவுரவமாக நிற்கலாம் என்பது செண்பகத்தின் கருத்து. அக்கம்பக்கத்து காட்சிகள் அவளுக்குள் பயத்தையும், அருவருப்பையும், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையையும் உருவாக்கியிருந்தது.

நான் மாநகரப் போக்குவரத்து பேருந்து டிரைவர். இந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்து டிரைவரை, போன மாதம் மிகுந்த மரியாதை செய்து, நண்பர்கள் புடை சூழ, தாரை தப்பட்டை அடித்து, மாலை போட்டு... வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்! வயதாகிப்போய்விட்டதாம்.

ஆக்சிலேட்டரில் கால் மிதித்து மிதித்தே, எனது கால் கட்டை விரல் லேசாக வலப்பக்கம் நெளிந்துபோயிருந்தது. டப்பா பஸ்ஸாக இருந்தாலும், இதுவரையிலும் என்னால் ஒரு நூல் அளவுகூட எந்தப் பேருந்துக்கும் கீறல் ஏற்பட்டதில்லை. நல்லமுறையில் வண்டியோட்டியதற்காகவும், டீசல் மிச்சம் செய்ததற்காகவும் இரண்டு கோப்பைகள் வீட்டு பரணையில் பாதுகாப்பாகக் கிடக்கின்றன. ரிடையர் ஆன இரண்டே நாளில் எனக்கு ஒரு பெரிய ரிலாக்சேஷன் தெரிந்தது. ஆகாசத்தில் பறக்கிறமாதிரி. ஆமாம் ஐயா. நீங்கள் நினைக்கிறாற்போல நகரத்தில் பஸ் ஓட்டுவது சுளுவான வேலையில்லை. பஸ் ஓட்டுகிற அந்த எட்டு மணி நேரம் என்பது ஒரு பைத்தியக்கார ஆசுபத்திரியில் இருக்கிறதுபோலத்தான். டென்ஷன் அதிகம். இருந்தாலும் மக்களிடத்தில் எங்களுக்கு பொதுவில் கெட்ட பேர்தான்.

குறுக்கே பாயும் ஆட்டோவும், முறுக்கு சுட்டுக்கொண்டே போகும் பல்சரும், காதலியின் அணைப்பில் மெய்ம்ம்ம்ம்மறந்து பஸ்சின் பின் சக்கரத்தில் விழுந்துவிடத் தவிக்கும் காதலனும், செல்போனில் சிலாகித்துக்கொண்டே தற்கொலைக்கு தன்னையறியாமலே முன் சக்கரத்தில் பாயத் துடிக்கும் யுவதியும், எனக்கு 'எந்த நேரத்திலும் டென்ஷனே ஆகக்கூடாது' என்று போதித்த போதிமரத்து புத்தர்கள். அதனால்தான் இந்த வயதிலும் எனக்கு இரத்த அழுத்தம் இல்லை. இருந்தாலும் எனக்கு வயதாகிவிட்டதென சட்டம் சொல்கிறது! இன்றுகூட நான் தெருவில் நடந்தால், மாநகரப்பேருந்துகள் என்னைப் பார்த்து ஒரு நட்புப் புன்னகை செய்வதாகவே எனக்குத் தோன்றும். நான் என் தொழிலை நேசித்தேன்.

என் வாழ்வில் நான் உய்த்துக்கிடக்க எனக்கு உதவியை என் அருமைப் பேருந்துகள், எதற்கும் சளைக்காத என் மனைவி, எனக்கு உபவாசம் செய்யும் என் மகள். ஆஹா.. நான் வாழ்ந்தேன். சலிப்பிருந்தாலும் சந்தோஷமும் இருந்தது. குறைகளுக்கிடையே என் வாழ்வில் சந்தோஷத் தருணங்கள்தான் அதிகம். எங்கள் சங்கத்துப் பழக்கவழக்கங்களின் காரணமாகவும், சக தோழர்களின் குடும்ப உறுப்பினர்களின் பழக்கவழக்கத்தாலும், என் மனைவி செண்பகமும், என் மகள் செங்கொடியும்கூட வாழ்க்கை என்பது போராட்டம்தான் என்பதை சுளுவாகக் கற்றுக்கொண்டார்கள். மார்க்சும் பெரியாரும் எங்கள் விவாதங்களின் ஊடாக வந்து போவதால் எங்கள் சிந்தனையில், தூணிலிம் துரும்பிலும் இருக்கிற கடவுளர்கள் என் வீட்டிற்குள் காணாமல் போயிருந்தனர். எங்கள் உழைப்பின்மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்ததால், நாங்கள் கடவுள் அனுக்கிரகத்துக்காக தவமிருந்ததுமில்லை.

ரிடையர் ஆகி வெளியில் வரும்போது என் வரும்படியில் கிடைக்கிற பணத்தைவிட, என் மனைவியாள் குருவி சேர்ப்பதுபோல ஓரளவுக்கு கட்டிப்பிடித்து சேமித்து வைத்திருதாள். என்னைக் கரம் பிடித்த நாளிலிருந்து தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகில் ஒரு ஒண்டிக்குடித்தனம். முப்பத்து மூன்று வடமாக எனது கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுதவள். வாயை வயிற்றைக்கட்டி தியாகம் செய்து, சீட்டு கட்டி, தையல் மெஷின் ஓட்டி, செண்பகமும் என்னோடு தன் உழைப்பைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.

***

வெற்றிலைப் பாக்குக் கடைக்குப் பக்கதில், சுண்ணாம்பை அப்பிக்கொண்டிருந்த தெருக்கம்பத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த நோட்டீஸ் எனக்கு பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

"அறிய வாய்ப்பு. நழுவ விடாதீர்கள். கல்மண்டபம் அருகில் உள்ள சிரஞ்சீவி ரெட்டி தெருவில் வீடு விற்பனைக்கு. கட்டி மூன்று வருடங்களே ஆன காங்கிரீட் வீடு. வராண்டா, ஹால், கிச்சன், ஒரு படுக்கை அறை, பாத்ரூம். 450 சதுர அடி. உடனடி விற்பனைக்கு. விலை ரூ.எட்டு லட்சம் மட்டும். தொடர்பு கொள்க : கோவிந்தன் போன்..."

அக்கம்பக்கம் விசாரித்தபோது இது ஏதாவது 'டுபாக்கூர்' விளம்பரமாக இருக்கலாம் என்று கூறினார்கள். இன்றைய மார்கெட்டு விலையிலே அந்த இடம் பதினைந்து லட்சத்துக்குக் குறையாது என்றார்கள்.

செண்பகத்திடம் விஷயத்தைச் சொன்னபோது, "உடனே கிளம்புங்க. போய் அந்த வீட்டைப் போய்ப் பார்த்தே ஆகணும்," என்றாள்.

***

கோவிந்தனுக்கு போன் போட்டு விவரம் கேட்டோம். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவுதான். நேரில்வந்து பார்த்து, விவரம் கேட்டுக்கொள்ளச் சொன்னார். சிரஞ்சீவி ரெட்டி தெரு முனையில் உள்ள பாண்டியன் ஓட்டல் வாசலில் அரை மணி நேரத்தில் வந்து நிற்கச் சொன்னார்.

நானும் செண்மகமும் சைக்கிளில் போனோம். அரை மணி நேரத்துக்குள்ளாகவே பாண்டியன் ஓட்டல் வாசலில் இருந்தோம். சிவப்பு கலர் சொக்காயும் சிவப்பு கலர் வேட்டியும் கட்டியிருப்பதாக அடையாளம் சொன்னார் கோவிந்தன். மேல்மருவத்தூர் பக்தராம்.

பீடியை பிடித்துக்கொண்டு நின்றிருந்த கோவிந்தன் செவ்வாடையில், கண்ணில் பளீரெனப் பட்டார்.

"வணக்கம் கோவிந்தன் சார். வீடு விஷயமா போன் செய்திருந்தேன்."

"வாங்க வாங்க. உங்களுக்கு அம்மா அருள் கொடுப்பா. அருமையான வீடு. ரேட்டு கம்மி. இந்த ரேட்டுல நீங்க வேற எங்கையாவது வீடு பார்த்தீங்கன்னா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சத்தியமாச் சொல்றேன். நான் தூக்கு மாட்டிக்கிறேன். நான் ஒண்ணும் விளையாட்டுக்குச் சொல்லலை. வாங்க போகலாம்." என்று அவர் நடந்துகொண்டே எங்களை அழைத்துப்போனார். "எனக்கு ரெண்டு பெர்சண்ட் கமிஷன்."

சிரஞ்சீவி ரெட்டி தெரு ஓரளவுக்கு சுத்தமாக இருந்தது. தெருவும் விஸ்தாரமாக இருந்தது. ஒரு குழாயடிக்குப் பக்கத்தில் நின்று, "இதோ, இந்த வீடுதான். வாங்க," என்று தன் சட்டையிலிருந்த சாவிக்கொத்தை எடுத்து வீட்டைத் திறந்தார்.

பச்சைக் கலரில் பெயிண்ட் அடித்த இரட்டைக் கதவு. இரண்டு கதவின் கீழ்ப்பகுதியிலும் பெயிண்டால் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்திருந்தார்கள். கதவைத் திறந்து உள்ளே போனவுடன் ஒரு சிறிய வராண்டா.

"நம்ம சைக்கிளை இங்கே விட்டுக்கலாம்," என்று செண்பகம் சொன்னாள். அவள் குரலில் உற்சாகம் தெரிந்தது.

"ஷ்.. ஷ்... தே செண்பகம், பிடிச்சாமாதிரி காட்டிக்காதே... அப்புறம் ரேட்டை ஏத்திருவாங்க," என்று அவள் காதில் கிசுகிசுத்தேன்.

"அதெல்லாம் ஒண்ணும் ஏத்தமாட்டோம் சார். சொன்னது சொன்னதுதான்," என்று உரத்த குரலில் சிரித்துக்கொண்டே சொன்னார் கோவிந்தன்.

அடுத்து ஒரு சிறிய ஹால். ரெட் ஆக்சைட் போட்ட தரை. ஹாலின் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய கிச்சன். அதையொட்டி ஒரு படுக்கை அறை. ஹாலின் கிழக்குப்புறம் இருந்த ஒரு ஒற்றைக் கதவைத் திறந்தால் பின்பக்கம் ஒரு பாத்ரூம். தண்ணீர் மோட்டார். துணிதுவைக்கும் கல்.

செண்பகம் என் கையை அழுத்திப் பிடித்தாள். அவளுக்குப் பிடித்திருந்தது.

"வீடு பிடிச்சிருந்தா, பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுங்க. டாக்குமெண்ட்ஸ் வாங்கித் தர்றேன். வக்கீலைப் பார்த்து ஒப்பீனியன் வாங்கிட்டிங்கன்னா, கண்டிப்பா பத்து நாள்ள ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கணும். சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்."

"சாயுங்காலம் ஐந்து மணிக்கு உங்க போன்ல பேசி விவரம் சொல்றேன்," என்று கோவிந்தனிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம்.

சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு வந்த செண்பகம் கறாராகச் சொன்னாள். "செங்கொடியப்பா, நீ என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது. நாம் இந்த வீட்டை வாங்குறோம், அவ்வளவுதான்!"

"இல்லை செண்பகம். கொஞ்சம் பொறு. அந்த வீட்டைப் பத்தி வெளியில விசாரிக்கணும். யாரு, எவருன்னு விசாரிக்கணும். ஏன் இவ்வளவு கம்மியாக் கொடுக்குறாங்கன்னு விசாரிக்கணும். அந்த வீட்டுல ஏதாவது அசம்பாவிதம் நடந்துதா இல்லைன்னா கோர்ட்டு கேசுன்னு ஏதாவது வில்லங்கம் இருக்கான்னு பார்க்கணும். எடுத்தோம் கவிழ்த்தோம்னு அட்வான்சை கொடுக்கக்கூடாது."

மறு நாள் மதியவாக்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த வீட்டைப் பற்றி விசாரிக்கச் சென்றேன். நான் அந்த வீடு அருகில் போவதற்கும் கோவிந்தன் எதிரில் வருவதற்கும் சரியாக இருந்தது.

"என்ன சார்... விசாரிக்க வந்துட்டீங்களாக்கும்? நல்லா விசாரிங்க சார். வாங்க... அதோ அந்தக் கோயில் வராண்டாவுல முக்கியஸ்தர் இருக்காரு. அவரை வேணும்னாலும் விசாரிங்க. விசாரிச்சுட்டே அட்வான்சைக் குடுங்க." என்று சொல்லிகொண்டே கோவில் அருகில் அழைத்துக்கொண்டு போனார்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூதாகர சுவாமிகள் திருக்கோயில். பிரம்மாண்டமான மஞ்சள் போர்டு. மதியான வேளையாதலால் கோயிலில் கூட்டமே இல்லை. ஒருவர் மட்டும் பெருத்த தொந்தியைத் துருத்திக்கொண்டு, சக்தி, சக்தி, சக்தி என்று முழுவதும் எழுதிய சிவப்பு வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தார்.

"இவுருதான் பூதாகர சாமிகள். சாமி... இவுரு அந்த மூணாவது வீட்டைப் பத்தி விசாரிக்க வந்திருக்கார் சாமி," என்று கோவிந்தன் அறிமுகப்படுத்தினார்.

"தாரளமா வாங்கலாம். எந்த வில்லங்கமும் இல்லை. அவுங்க ஏதோ வெளி நாட்டுக்குப் போறாங்களாம். உடனே பணம் வேணும்னுட்டுதான் இந்த மட்ட ரேட்டுல விக்கறாங்க. எங்கிட்ட பணம் இருந்தா இந்தக் கோவிலுக்காவே அந்த வீட்டை வாங்கிப்போட்டுடுவேன். அம்மாவுக்கு குடுப்பினை இல்லை." என்று அந்த சுவாமிகள் சொன்னார்.

"சரி. காலையில வந்து அட்வான்ஸ் கொடுக்கிறேன். டாகுமெண்ட் காப்பி கொடுத்துடுங்க," என்றதும்,
கோவிந்தன் சொன்னார். "நானே காலம்பற உங்க வீட்டுக்கே வர்றேன். காசை வாங்கிகிட்டு டாக்குமெண்ட்டை கொடுக்கறேன். ஒரே விலை. ஞாபகம் வச்சிக்குங்க. எட்டு லட்சம். பத்தே நாள்ள ரெஜிஸ்ட்ரேஷன். எனக்கு ரெண்டு பெர்சென்ட் கமிஷன். புரிஞ்சுதா? உங்க வீட்டு அட்ரசைக் கொடுங்க."

எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து செண்பகத்திடம் விஷயத்தைச் சொன்னேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டாள்.

மறுநாள் கோவிந்தன் டாக்குமெண்ட் பேப்பர்களைக் கொடுத்துவிட்டு அட்வான்சை வாங்கிச் சென்றார். அதை அப்படியே கொண்டுபோய் எனக்குத் தெரிந்த வக்கீலிடம் கொடுத்தேன். கால்மணி நேரமாக, துழாவிப் பார்த்த அவர், "ஒரு பிரச்சினையும் இல்லை. பேஷா வாங்கலாம். அப் டு டேட் ஈசிகூட இதோட குடுத்திருக்காங்க. நம்பி வாங்குங்க." என்று பச்சை சிக்னல் கொடுத்தார்.

மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. எங்களின் சேமிப்புகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்ததில் கொஞ்சம் உதைத்தது. நண்பர்களிடம் சொன்னபோது உடனே கடன் கொடுத்து உதவினார்கள். ஒரே வாரத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து, வீட்டைக் கழுவி மெழுகி, இதோ பொங்கல் பொங்கி, குடித்தனமும் வந்தாகிவிட்டது.

வந்தவர்கள் எல்லாருக்கும் வீடு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. நண்பர்கள்கூட "உனக்கு அடிச்சுதுய்யா லக்கி பிரைஸ்," என்று சொல்லி சொல்லி சிலாகித்துக்கொண்டார்கள். வந்தவர்களையெல்லாம் வழியனுப்பி, ஒருவழியாய் வீட்டுப் பொருட்களையெல்லாம் அடுக்கிவைத்து, களைப்பு மேலிட, நிம்மதியாய் தரையில் கையை மடக்கி வைத்து செண்பகம் உறங்கிப்போனாள்.

இதோ செங்கொடி... அடுத்த மாதம் வரப்போகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பின் பக்கத்து துணி துவைக்கும் கல்லின்மீது உட்கார்ந்து படிக்கத் துவங்கிவிட்டாள்.

***

இரண்டு நாட்கள் கடந்தன. மூன்றாம் நாள் அந்த வீடே அதிர்ந்தது. கதவுகளும் சன்னல்களும் 'டர்ர்ரம்... டர்ர்ரம்' என்று அதிர்ந்தன. வீட்டுக்கு வெளியில் உள்ள நடைபாதையில் பதினைந்து அடி உயர ஸ்பீக்கர் பெட்டிகளை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருந்தனர். அதிலிருந்து வந்த மாரியம்மன் பாடல்கள் எல் ஆர் ஈஸ்வரி குரலில் காதுகளைப் பிய்த்து எடுத்தது.

வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் இரண்டடி தூரத்தில் இருந்தால்கூட ஒருவருக்கொருவர் பேசுவது காதில் விழவில்லை. அந்த எமகாதக ஸ்பீக்கர்களுக்குப் போட்டியாக நாங்களும் உரக்கக்கத்தி, இரைந்து பேசவேண்டியிருந்தது.

விடியல் ஐந்து மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை பக்திப் பாடல்கள். டி எம் சுந்தர்ராஜனும், எல் ஆர் ஈஸ்வரியும், எஸ்.பி பாலசுப்ரமணியமும், எங்கள் காதுகளைக் குடைந்தெடுத்தார்கள். ஒரு ஐந்து நிமிட இடைவெளிகூட இல்லாமல் குதறி எடுத்தார்கள்.

மாலை ஆறு மணிக்குமேல் பம்பை உடுக்கை. கோயிலில் பூதாகரச் சாமிகள் எழுந்து நின்று ஆட ஆட, கூட்டம் குமிந்துகொண்டிருந்தது. எங்களுடைய காதுக்கு அரை அடி அருகாமையிலேயே ஓங்கி ஓங்கி பம்பையும் உடுக்கையும் அடிப்பதுமாதிரி இருந்தது. போதாக்குறைக்கு பூதாகரச் சாமிகளின் ஓங்காரம் வேறு. இது தொடர்ந்து ஒரு மாதத்துக்கு ஒலிக்குமாம். நிறையபேர் மருவத்தூர் கோயிலுக்கு மாலை போட்டிருப்பதாகவும், தினந்தோறும் மாலை நேரங்களில் பூஜை நடப்பதாகவும் அது இரவு ஒரு மணிவரை நடக்குமென்றும் அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். எங்களுக்கு மண்டைக்குடைச்சல் அதிகமானது.

திரும்பவும் மறுநாள் காலை ஐந்து மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை டி எம் சுந்தர்ராஜனும், எல் ஆர் ஈஸ்வரியும், எஸ்.பி பாலசுப்ரமணியமும்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும், அன்றிலிருந்து இந்தத் தெருவாசிகளுக்கு நிம்மதி போனதென்றும் நிறையபேர் பேசிக்கொண்டார்கள்.

ஒரே வாரத்தில் என் மனைவி சோர்ந்துபோய்விட்டாள். என் மகளும் படிக்க வழியின்றி பேதலித்ததுபோல் காணப்பட்டாள். நாங்கள் மூவரும் ஒருவாரகாலமாக, ஒரு பொட்டு நேரம் கூட கண் தூங்கவில்லை.

என் நண்பர்களிடம் சென்று நடந்துகொண்டிருக்கும் அராஜகங்களை எடுத்துக் கூறினேன். ரொம்பவும் வருத்தப்பட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு பெட்டிஷன் எழுதிக்கொடுக்கும்படி ஆலோசனை கூறினார்கள்.

பெட்டிஷன் கொடுத்துவிட்டு,  நின்றிருந்தபோது எஸ் ஐ பதில் சொன்னார். "இதெல்லாம் சகஜம்தானேய்யா. இதுக்குப்போய் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்துட்ட? தெருவுக்குத் தெரு இப்பத்தான் கோயில்ல ரேடியா போடுறது வழக்கமாகிப்போச்சே? கார்த்திகைல ஐயப்பமார்கள் பூஜை, மார்கழில பெருமாள் கோயில், ஆடி மாசத்துல மாரியம்மன் கோயில்... ஏன்... இந்துக்கள் மட்டுமா ரேடியா போடுறாங்க? முசுலீம்க மசூதில ஓதுராங்க. கிரிஸ்தவங்க சர்ச்சுல பிரச்சாரம் பண்றாங்க. இதுக்கு நடுவுல கல்யாணம், கச்சேரி. போதாக்குறைக்கு, வாரத்துக்கு ஒரு கட்சி மீட்டிங் எல்லாம் இருக்கு. அப்புறம் எம்ஜிஆர் பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள், புதுவருஷக் கொண்டாட்டம், ஆட்டம் பாட்டம்... இதெல்லாம்தான் மத நல்லிணக்கம், சுதந்திரம்னு சொல்றாங்க! இதையெல்லாம் சகிச்சிக்கிடணும். சகிச்சிக்கிடறதுதான் வாழ்க்கை. இதுக்கே சலிச்சிக்குற? இதுக்குபோய் ஒரு கம்ப்ளைன்ட். சரி. நான் என்ன செய்யணும், சொல்லு?"

"வந்து விசாரிங்க சார். என் மக பிளஸ் டு பரீட்சைக்குப் படிக்கிறா சார். காதெல்லாம் சும்மா பிய்ச்சிகிட்டு போகுது, ஜன்னல் கதவெல்லாம் அதிறுது. பைத்தியமே பிடிக்கும்போல இருக்கு சார். கொஞ்சம் தயவு பண்ணுங்க."

"நான் இவ்வளவு தூரம் சூதகமா சொல்லியும் விளக்கிக்காமப் பேசுற. அந்தக் கோயில் பூசாரிக்கு லோகல் சப்போர்ட்டு இருக்குய்யா. அவுனுங்களை நீ சமாளிப்பியா? என்னவோ போ, உன் தலைவிதி. சரி நீ போய்யா. பின்னாடி நாங்க வர்றோம்." என்று சொல்லியனுப்பினார். தயக்கத்துடன் நான் கிளம்பிப்போனேன்.

நான் வீட்டை நெருங்க நெருங்க, ஸ்பீக்கர் பாட்டுச் சத்தம் பேயாய் அலறியது. ஒரு நரகத்துக்குள் நுழைவதுபோலவே கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தேன். என் மனைவி விட்டத்தைப் பார்த்தவாறு குத்துக்காலிட்டு ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அந்த ரேடியோ அலரலில் நான் சொன்னதை ஏதோ ஒன்றும் பாதியுமாகப் புரிந்துகொண்டாள்.

அரைமணி நேரம் கழித்து ஒரு பையன் உள்ளே வந்தான். "கோயில்கிட்ட போலீஸ் வந்திருக்கு. உங்களை எஸ். ஐ கூப்பிடராரு."

கலவரத்துடன் பார்த்த என் மகளை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு, நானும் செண்பகமும் கோயிலை நோக்கி நடந்தோம். ஒரு பத்து பதினைந்துபேர் எங்கள் வருகையை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கோவிந்தனும் தெரிந்தார். எங்களைப் பார்த்ததும் பம்மிக்கொண்டு, கூட்டத்தின் பின்னால் மறைந்தாற்போன்று நின்றுகொண்டார். ரேடியோ அலறல் நிறுத்தப்பட்டது.

எஸ் ஐ ஆரம்பித்தார். "இந்த ஆளு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார். நீங்க என்ன செய்யப்போறீங்க?"

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூதாகர சுவாமிகள் என் பக்கத்தில் வந்தார். "யோவ், அந்த வீட்டை வாங்கலாம்னு உனக்கு எடுத்துச் சொல்லி நல்லது செய்தா, என் பேர்லயே கம்ப்ளைண்ட் தர்றியா? நல்லா இருப்பியா நீ? இந்த அம்பாள்தான் உன்னை சும்மா விட்டுடுவாளா? உன் குடும்பமே நாசமாய்ப் போய்டும். நீ அழிஞ்சுபோய்டுவ. வெளங்காமப் போய்டுவ..." என்று உள்ளங்கையில் மடித்திருந்த விபூதியை எடுத்து திடுமென எங்கள் மூகத்தில் வீசினார். செண்பகம் ஒரு கணம் திக்குமுக்கடிப்போனாள். எதிர்க் காற்று பட்ட கைக்குழந்தை மூச்சுத் திணறுவதுபோல செண்பகம் திணறினாள். அவள் கண்களில் நீர் கோர்த்து நின்றது.

"இந்தியாவுல, எங்களுக்கு ரேடியா போட்றதுக்குக்கூட சுதந்திரம் கிடையாதா? நாங்க சாமியே கும்பிடக்கூடாதா?" என்று இன்னொரு செவ்வாடை கேட்டது.

"சரி சுவாமி, நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. அங்க வச்சு பேசிக்கலாம். நீயும்தான்யா. உடனே வந்துடுங்க." ஜீப் கிளம்பிச் சென்றது.

செண்பகத்தை கைத்தாங்கலாக நடத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன். சுற்றி நின்றவர்கள் காட்சிபொருளாக எங்களையே வேடிக்கை பார்த்தார்கள். என் வீட்டின் அருகில் வசித்த ஒரு பெரியவர் சன்னக்குரலில் சொன்னார்.
"நாங்கள்ளாம் எவ்வளவோ முயற்சி செய்துட்டோம். எதுவும் நடக்கலையே தம்பி. இந்த பூசாரி அராஜகம் செய்யுறான். போதாக்குறைக்கு எதிர் முக்குல கட்சி மீட்டிங் அடிக்கடி போடுரானுங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை. எத்தனையோ கம்ப்ளைண்ட் கொடுத்தும் பிரயோஜனமில்லை. நாங்களும் வீட்டை வித்துட்டு வேற எங்காவது போகவேண்டியதுதான். ஆனா திடீர்ன்னு நீங்க இங்க வந்து மாட்டிக்கிட்டீங்களே தம்பி! அக்கம் பக்கம் விசாரிச்சு வீடு வாங்க வேண்டாமா?"

எனக்கு சுரீர் என்றது. கோவிந்தன் எங்களை ஏமாற்றிவிட்டான்!! இந்த வீட்டை விட்டு ஒழிந்தோடினால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துத்தான் மட்டமான விலைக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார்கள் என்று எங்களுக்கு இப்போது உரைத்தது.

திரும்பவும் ரேடியோ அலற ஆரம்பித்துவிட்டது. செண்பகத்தை படுக்கை அறைக்கு கூட்டிச் சென்று அசுவாசப்படுத்தி படுக்கவைத்தோம். கதவை சாத்திவிட்டு நான் செங்கொடியிடம் கத்திச் சொன்னேன். "செங்கொடி, அம்மாவை பத்திரமா பார்த்துக்க. அரைமணி நேரத்துல வந்துடறேன்."

சரி என்று சொன்னாள் செங்கொடி. பாவம், அந்தக் காட்டுக் கத்தலிலும் கணிதப் புத்தகத்தை பிரித்துவைத்து படிக்கத் தயாரானாள்.

***

போலீஸ் ஸ்டேஷனில் அந்த பூசாரி ஒரு இருபதுபேர் புடைசூழ நின்றிருந்தான். அதில் ஒருவர் அந்த ஏரியா கவுன்சிலராம். அந்த கவுன்சிலர் என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அங்கு போவதற்குள் அந்த கும்பலிலிருந்த பத்துபேர் ஒன்றாக ஒரு பதில் மனு எழுதிக் கொடுத்திருந்தனர்.

எஸ் ஐ அதை என்னிடம் கொடுத்தார். அதில், அவர்களும் அந்தக் கோவிலைச் சுற்றியே வசிப்பதாகவும், அவர்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் அந்த ஸ்பீக்கரால் இல்லை என்றும், மேலும் இதன் மீது நடவடிக்கை எடுத்தால் அங்கு வசிக்கும் இந்துக்களின் மனம் புண்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எஸ் ஐ சொன்னார். "இங்க பாருங்க நடராஜ். இதுல ஆக்ஷன் எடுத்தா பிரச்சினை பெரிதாகிக்கொண்டே போகும். இதுல முக்கியமா குறிக்கவேண்டியது மதம். அப்புறம் தள்ளுமுள்ளு ஆகி, கலவரமாகிடுச்சுன்னா, எங்க டிபார்ட்மெண்டுக்கே அசிங்கமாகிடும். மேலிடத்துக்கு விஷயம் போகும். அதனால கொஞ்சம் அனுசரிச்சிப் போய்டுங்க. சுவாமி... நீங்களும் ஸ்பீக்கர் சவுண்டை கொஞ்சம் கம்மிபண்ணி வையுங்களேன். அவரோட பொண்ணு பரீட்சைக்குப் படிக்குதாம்."

ஏதேதோ பேசி, இரு தரப்பினரையும் சமாதனப் படுத்தி, நாங்கள் சமாதானமாகப் போய்விடுவதாக எழுதி வாங்கிக்கொண்டார் எஸ் ஐ. "சவுண்டைக் கொஞ்சம் குறைச்சுவையுங்கப்பா. பாவம். அவுங்கமட்டும் என்ன செய்வாங்க?" என்று பரிதாபப்பட்டு அவர்களிடம் சொன்னார்.

எல்லோரும் என்னையே முறைத்துப் பார்த்தவாறு புன்முறுவலுடன் கிளம்பிப் போனார்கள். நான் எனது சைக்கிளை மிதிக்கக்கூட திராணி இல்லாமல் தள்ளிக்கொண்டே வீடு நோக்கி ஒரு நடைப்பிணமாய் நடந்துபோனேன்.

சைக்கிளை நிறுத்தி தயங்கி நின்றேன். ரேடியோ சவுண்டு முன்பு இருந்ததைவிட இன்னும் படுமோசமாக அலறிக்கொண்டிருந்தது. என் மீதிருந்த கோபத்தை ஸ்பீக்கரில் காட்டிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை பலம் கொண்டமட்டும் தட்டினேன். செங்கொடி கதவைத் திறந்தாள்.

ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ஓவென கேவிக் கேவி அழுதாள். "ஏன், என்ன," என்று பதறிப்போய் கேட்டேன்.

"அப்பா, அப்பா, அம்மாவைப் பாருங்கப்பா, என் அம்மாவைப் பாருங்கப்பா..." என்று பெட் ரூம் கதவை திறந்து காட்டினாள்.

அங்கே என் செண்பகம், 'மாரியம்மா மாரியம்மா, நீலியம்மா திரிசூலியம்மா' என்கிற எல் ஆர் ஈஸ்வரி பாட்டுக்கு, தலையை விரித்துப்போட்டுக்கொண்டு, நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு, கண்களை உருட்டி உருட்டி, மேலும் கீழுமாகக் குதித்து, மெட்டுத் தவறாமல், சாமியாடிக்கொண்டிருந்தாள்.

"டேய்,, அடேய்...நடராஜா, வாடா.. ஹ்ம்ம்... வா...வா. இந்த ஆத்தாளுக்கு என்னடா கொண்டுவந்த?" என்று தலையால் தலைமுடியை சக்கரம்போல சுழற்றிக்கொண்டு, அவள் கத்தியது, ஸ்பீக்கர் சவுண்டைவிட அகோரமாகக் கேட்டது. ஒரு கணம் என் ரோமங்கள் குத்திட்டு நின்றன.

என் செங்கொடி பெட் ரூமுக்குள் வரப் பயந்து வெளியிலேயே பேயறைந்ததுபோல நின்றாள். அவள் கால்கள் நிற்கவும் திராணியற்று தடதடவென்று நடுங்கிக்கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. செங்கொடி சுவற்றில் மெல்லச் சரிந்தவாறே தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

"அய்யோ அப்பா, இந்த வீடு வேண்டாம்பா. எனக்கு பயமா இருக்கு. அம்மாவைப் பாருங்கப்பா. அவுங்களைப் பார்க்கவே சகிக்கலையேப்பா.இங்கேயிருந்து நாம போய்டலாம்பா," என்று தன்னுடைய இரு கைகளையும் தரையில் ஓங்கி அறைந்துகொண்டே, ஆற்றாமையால் ஈனக்குரலில் அழுதாள்.

தரையில் வீழ்ந்துகிடந்த கணக்குப் புத்தகம் காற்றில் படபடவென அடித்துக்கொண்டு, தானே அதன் பக்கங்களைப் புரட்டிக்கொண்டது!

6 comments:

Anonymous said...

யதார்த்தம் அன்றி வேறில்லை!மிக சிறந்த படைப்பு

பாசிஸ்ட் said...

கதை என்று சொல்வதை விட நடைமுறை வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும். இன்றைய நிலவரப்படி ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனை இது. அதை மிக அருமையாகசொல்லியிருக்கிறீர்கள்.

இதே நிகழ்வு கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் நடந்தது. அதாவது ஒரு கிறிஸ்தவ குடும்பம் அருகில் இருந்த இந்து கோயிலில் தினமும் மிகையான சத்தத்தில் பாடல் போடுவதை எதிர்த்து காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். இப்போது இது தொடர்பாக யாரும் புகார் செய்தால் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்தை அணுகி புகார் விடயத்தை பேசியிருக்கிறார்கள்.

அவர்கள், "பக்கத்தில் இருக்கும் கிறிஸ்தவ கோயிலில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றினால் நாங்களும் அகற்றி விடுவதாக" சொல்ல; காவல்துறையினர் கோயில் பாதிரியாரை சந்தித்து விடயத்தை சொல்லி ஒருநாள் காலக்கெடு கொடுத்தது மட்டுமல்லாமல் ஊரில் இருக்கும் இன்னபிற சாதியினரின் கோயில்களில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்றவும் கட்டளையிட்டு; ஒரே நாளில் அகற்றப்பட்டும் விட்டது. ஆனால், இந்த நல்ல விடயத்திற்கு (ஏதோ ஒரு வகையில்) காரணமான அந்த குறிப்பிட்ட குடும்பத்தை கடந்த ஒருவார காலமாக பாதிரியார் முதல் மக்கள் பலரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு திட்டி தீர்த்துக்கொண்டிருப்பதாக தகவல்!

இந்து கோயில்களில் உள்ள ஒலிபெருக்கி மட்டும் போயிருந்தால் கிறிஸ்தவர்களுக்கு மகிழ்ச்சி! கிறிஸ்தவ கோயில்களில் உள்ள ஒலிபெருக்கி மட்டும் போயிருந்தால் இந்துக்களுக்கு மகிழ்ச்சி! ஆனால் இரண்டு கோயில்களிலும் ஒலிபெருக்கி ஒழிக்கப்பட்டுவிட்டதால் இப்போது எனக்கு மட்டும் மகிழ்ச்சி :)))

புதிய பாமரன், எழுத்து மட்டுமல்ல உங்கள் கார்ட்டூன் படமும் அருமை!

Bala Ganesan said...

நல்ல முயற்சி! பாராட்டுக்கள். ஏதோ ஒன்று தவறாக இருக்கப் போகிறது என்பதை ஊகிக்க முடிந்தாலும், அந்த சஸ்பென்சை உடைத்த விதம் மிகவும் அருமை. சொல்ல வந்த விஷயமும் நன்றாக இருப்பதால் இது இச்சயம் பொறுப்புணர்வு கொண்ட கதையும் கூட. நன்றி!

சீனிவாசன் said...

பல சமயங்களில் இரத்தகொதிப்பை ஏற்படுத்தும் இம்மாதிரியான முட்டாள்த்தனங்களை ஒருபோதும் ஒழிக்கவே முடியாதா?

துளசி கோபால் said...

சத்தமாப் பாட்டு வச்சால்தான் சாமிக்கு திருப்தி வருமா?
அம்புட்டுக்கா அதுக்குக் காது சேதாரம்?
என்னமோ போங்க.

அமைதிதான் ஆண்டவனுக்கு(ம்) வேணும்.

வலிப்போக்கன் said...

மாநகராட்சி பகுதிகளில் தற்போது கூம்பு வடிவ ஒலி பெருக்கி ஒலிப்பதில்லை.அதற்கு பதிலாக ஸ்பீக்கர் பெட்டி இதுவும் என்காதை பதம் பார்த்த கதைதான்.

Post a Comment