My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

1.8.13

முச்சந்தியின் வரலாறு


"சலாசலா சலசலா, சல்லாசா சலசலா; மல்லிகா..."

அந்தி சாயும் நேரத்தில் ஒரு 'ஹாட்டான' ரெகார்டு டேன்ஸ். கிராமத்து திருவிழாவில் இல்லை. ஒரு நகரத்தில். நெருக்கடியோ நெருக்கடியில், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் ஒரு அவசரமான முச்சந்தியில் ஒரு படு ஆபாசமான ரெக்கார்டு டேன்ஸ். 

'அய்யோ அய்யய்யோ' என்று அலறும் ஒரு அவசர ஆம்புலன்ஸ் வருவதற்குக்கூட வழியில்லை,. ஏன், சக்கிளை உருட்டிக்கொண்டுவந்த எனக்கும்கூட வழி கிடைக்கவில்லை.

"லெப்ட்ல போயி, ரைட்டுல திரும்பி, திரும்பவும் லெப்டுல திரும்பினா..." கவன சிரத்தையான டிராபிக் போலீசின் வார்த்தகளையும் மீறி நான் சொன்னேன். " மீட்டிங்கு நடக்குற ஸ்டேஜுக்கு பக்கத்து சந்துலதான் என்னோட வீடு. நான் போய்ட்றேன் சார்.விட்டுடுங்க."

"இல்ல. வழி இல்ல. ஒண்ணு, சைக்கிளை திருப்பு. இல்லைனா கூட்டத்துல போயி உக்காந்துக்க." என்று என் பிடரியைத் தள்ளி, ஒரு ஒரு சவுக்குக் கொம்பைத் தூக்கியவாறு வழிவிட்டார்.

இப்போது கூட்டத்தில் நானும்.

"ஜர்தா பீடாக்கூட மெல்லுவா..." என்று பாட்டு காதைப் பிளந்தது.

கூட்டத்துத் தலைகளினூடே கொஞ்சமாக எட்டிப் பார்த்தபோது ரோட்டையே அடைத்துக்கொண்டு, வெறும் தலைகளாகவே தெரிந்தது. ஏதோ கட்சி மீட்டிங்காம். வட்டம், மாவட்டம், தொகுதி எம்எல்யே, அப்புறம், அந்தக் கட்சியின் பிரச்சார பீரங்கி. இதுங்களெல்லாம் பேச வருவதற்கு முன்னால், கூட்டம் சேர்ப்பதற்காக இம்மாம்பெரிய ரெகார்டு டேன்ஸ். கூட்டம் நடக்கும் மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாலேயே டிராபிக்குகள் திருப்பிவிடப்பட்டன. ஏனென்று எதிர்த்துக் கேட்டவர்களிடம் 'ஏதோ முக்கியமான மீட்டிங்காம். அதோ, அந்த லெப்டுல திரும்பி ரைட்டுல போயி, திரும்பரும் லெப்டுல திரும்பினா, மெயின் ரோடு வந்துடும். போங்க, போங்க. போங்கடா...!!" என்று அதே பல்லவியை டிராபிக் போலீசும் லோக்கல் போலீசும் படாதபாடு பட்டு, டிராபிக்கை 'ஒயுங்கு' படுத்திக்கொண்டிருந்தார்கள்!

ஜெ ஜே என கூட்டம் சேர்ந்த ஒரு மணி நேரத்துக்கும் பிற்பாடு அந்த ரெகார்டு டேன்ஸ் குரூப்பு மேடையை விட்டு இறங்கியதும், வட்ட மாவட்டங்கள் மேடையேறத் துவங்கின. சொல்லிவைத்தாற்போல, சரக்கு வாசனை முச்சந்தியைப் பிளக்க, கரைவேட்டி தொண்டரடிப்பொடிகள் கூட்டத்துக்குள்ளே நுழைந்தார்கள்.

"நான் போகணும்ணே. கொஞ்சம் அர்ஜெண்ட்டு..." என்று புலம்பிய என்னை என் தோளைப் பிடித்து ஒரு அமுக்கு அமுக்கி உட்காரவைத்தார்கள். "மீட்டிங் நடுவுல போவக்குடாது. நமக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கில்லே...?" என்று ஒரு கட்சி ஆள் என் தோளைப்பிடித்து அமுக்கி உட்காரவைத்தான்.

நான் அவனை நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.அது ஒரு தெய்வம். 'எங்கத் தெரு சொக்கத்தங்கம்' கரை வேட்டி வடிவில் எனக்கு முன்னே நின்றுகொண்டிருந்தது.

"என்னா முனியாண்டி, டேன்சு பார்க்க வந்தியா? சூப்பரா இருக்குல்லே?!"

"இல்லே. சும்மா வந்த ஆளை அள்ளிப்போட்டு கூட்டத்துக்குள்ள தள்ளிட்டாங்க. பசிக்குது நண்பா. வூட்டுக்குப் போகணும்." என்று கரை வேட்டியின் முகவாயைப் பிடித்து கெஞ்சினேன்.

"சரி. எம் பின்னலியே வா. யோவ் எஸ் ஐ, இந்த ஆளுக்கு வழி விடுய்யா. நமக்கு தெரிஞ்ச ஆளுதான். போகட்டும்." என்று மிரட்டியவுடனே ஒரு போலீஸ்காரர் எனக்கு பவ்வியமாக வழி ஏற்படுத்திக்கொடுத்தார்.

'எலக்சன் நேரம் இது. நாமதான் எக்குத்தப்பா கூட்டத்துக்குள்ள மாட்டிக்காம கவனமாப் போகணும்...' என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டே நகர்ந்துகொண்டேன்.

வீட்டுக்கு வந்து சைக்கிளை ஸ்டேண்டு போடும்போது, என்னையும் அறியாமல் நான் முணுமுணுத்தேன். 'சலாசலா சலசலா..."

என் மனவி சிரித்தாள். "என்னாங்க இவ்வளவு உற்சாகம்?"

"இல்லை; யாருமே தொடப்பக்கட்டையை எடுத்து விளாசறதுக்கு இங்கே ஆளே இல்லை." என்று முணுமுணுத்துக்கொண்டே குடிசையின் உள்ளே நுழைந்தேன்.ஏதோ விபரீதமான விலங்கைப்போல என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் என் மனவி.

No comments:

Post a Comment