My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

21.6.11

வினவு vs கனவு!


வினவு vs கனவு!

ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
விரலசைத்து என் ரஜினி
ஒரு வார்த்தை உதிர்த்துவைத்தால்
நாடே நாறிவிடும்;
நாட்டாமை மாறிவிடும்.
கேப்டன் குரல் எடுத்து
கொளுத்திப் போட்டுவிட்டால்
பாகிஸ்தான் படை நடுங்கும்;
பார் மொத்தமும் குலுங்கும்.
வெற்றி கிடைத்துவிடும்
விஜயின் மௌனத்திலும்;
வடிவேலின் கூவலிலும்
வையகம் விடிந்துவிடும்.
நடிக்கும் நடிகர்களின்
நாவன்மை பலித்திடலாம்.
என்றேனும் ஓர் நாள்
எம் வயிறும் நிறைந்திடலாம்.
ஜொலிக்கும் நடிகர் சொன்னால்
ஜனநாயகம் துளிர்க்கையிலே,
கடவுளின் தூதர் சொன்னால்
கனவுகளும் மெய்ப்படாதா?
மாமனிதர் வார்த்தைகளில்
மகத்துவம் முகிழ்க்குமென்றால்,
மாந்திரீகச் சாமியாரால்
மயிரும் உயிர்த்தெழாதா?
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
பங்காரு பாவாடைக்குள்
பாவங்கள் புழுத்துப் போகும்.
கல்கியின் பாதத்தின் கீழ்
கண்ணீரும் பொன்னாய் மாறும்.
சிரி சிரியின் சுவாசம் பட்டால்
சித்தமெல்லாம் சுத்தம் ஆகும்.
ஜக்கியின் நேர் காணல்தான்
ஜகஜ்ஜாலம் செய்து போகும்.
மாயியைக் கட்டிக்கொண்டால்
மாயையெல்லாம் விட்டுப்போகும்.
சாயியின் படுக்கை கூட
செம்பொன் வைரக் குட்டி போடும்.
சங்கரனின் சிண்டுக்குள்ளே
சிக்கல்கள் அவிழ்ந்துபடும்.
தேவநாதன் கலவி செய்தால்
தெய்வச்சிலை மறத்துப்போகும்.
மூன்றாம் நாள் உயிர்த்தெழலை
முன்னூறு தலைமுறையும்
எதிர்பார்த்து எமாந்தும்,
எம் நம்பிக்கைக்கு குறைவில்லை.
கல்லெறிந்தும் சாத்தானை
கொன்றுபோட முடியாமல்
உயிர்த்தெழும் விந்தையை
வியந்து வியந்து நம்புகிறோம்.
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
அலாவுதீனின் விளக்கொளியில்
அற்புதங்கள் தேடுகிறோம்.
சிந்துபாத்தின் கம்பளத்தில்
சோறு தேடிப் பறக்கின்றோம்.
மழித்து விழும் மயிரில்கூட
மைதாசின் கை பட்டுவிட,
திருப்பதி உண்டியலில்
தாலியறுத்துப் போடுகிறோம்.
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
உலகம் தட்டையென்று
வேதாளம் ஓதினாலும்
உருண்டை உண்மை விளங்க
ஒரு மாமாங்கம் ஆனதன்றோ?
காண்டாமணியொலியில்
காணாமற்போன கோட்பாடுகள்.
பாதிரிகளின் தூபங்களில்
பாவப்படுத்தப்பட்ட டார்வின்கள்.
வானர அனுமனுக்கு இன்று
வடைமாலை சாத்திகொண்டே,
டார்வினைக் கரைத்துக் குடித்து
டாப்ரேங்க் எடுக்கிறோமே!
நாலு வேத நம்பிக்கை
நரம்பிலெல்லாம் பிணைந்துகொள்ள
விஞ்ஞான வினையூக்கியில்
விபூதியும் கலந்துகொள்ளும்.
நீள்தொலை ஏவுகணை
நிலவுக்குப் போகும்முன்னே
விஞ்ஞான விவேகம் தவறி
உடைபடும் சிதறு தேங்காய்.
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
வறுமையுள் வீழ்ந்துபோனோம்.
வாழ்வியல் மறுக்கப்பட்டோம்.
எத்தைத் தின்றால் தெளியும்
எம் பித்தம் எனத்தெரிய,
அங்குமிங்கும் அலைந்தோம்.
ஆன்மீகத்தில் விழுந்தோம்.
தடையில்லாப் பொருள்தேடி
தாடிமயிரில் தவங்கொண்டோம்.
தெரிந்து செய்யும் தவறுதான்; எனினும்
தப்பிக்க விட்டுவிடாத வழி!
ஏனென்று ஓர்நாள் கேட்க
ஏதொன்றும் விளங்கிப்போகும்.


பால் குடித்த பிள்ளையார்
பகடி செய்தார் என்று
எள்ளி நகையாட எமக்கு
இத்தனைக் காலமானது.
உண்மை ஓர் நாள் உறைக்கும்.
உலகமெலாம் உணர்ந்துகொள்ளும்.
அதுவரை ஆன்மீகத் தாலாட்டில்
ஆத்மாக்கள் அயர்ந்துபோகும்!
***
விஞ்ஞானத்தின் தேடல்
வெறுமைகளல்ல; உண்மைகள்!
வெறுமைகளை விரட்டிச்செல்ல
வினவுகள்தான் இங்கே வேண்டும்.
இருந்தாலும் நாங்கள் இன்று
ஏழுகால பூஜையிருக்கிறோம்.
சிந்திக்க நேரமில்லாத
சோதனையிலிருக்கிறோம்.
வேலைவெட்டி யில்லாத
வினவே, வினவு எமக்காக;
பொழுது நன்றாய் விடிந்தால்
புண்ணியமாய்ப் போகும் உனக்கு!



http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

1 comment:

Anonymous said...

"""வானர அனுமனுக்கு இன்று
வடைமாலை சாத்திகொண்டே,
டார்வினைக் கரைத்துக் குடித்து
டாப்ரேங்க் எடுக்கிறோமே!"""

Excellent lines...

Post a Comment