My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

19.12.11

வெள்ளை


வெள்ளைக்கு மெல்லிசான உடல்வாகு. செக்கச் சிவந்த நிறம்தான் 'வெள்ளை' என்ற பேர் வந்ததற்குக் காரணமாக இருந்தது. எண்பது வயது. சோடா பாட்டில் கண்ணாடி வெள்ளையின் கண்களை அசாத்தியமாக நான்கு மடங்கு பெரிதாக்கிக்காட்டியது. அருகிலிருந்து வெள்ளையின் முகத்தை 'உற்று நோக்கும்' குழந்தைகளுக்கு அழுகை பீறிடுவது நிச்சயம். ஏனென்றால் கண்ணாடிகளினூடாகக் காணக் கிடைக்கும் அந்த பூதாகரக் கண் காட்சி, குழந்தைகளைத் திகிலூட்டிவிடும்.

அக்குளில் வெள்ளைத் துணியால் சுற்றிய சவரக்கத்தி செட்டுகளை அதக்கிக்கொண்டு, "சாமி, சவரம் பண்ணிக்கிறயா?" என்று தெருவில் எதிரில் வருவோரையெல்லாம் வெள்ளை கேட்க, வேண்டாம் என்று சொல்ல மனம் வராமல், தங்கள் காது மடல்களைத் தடவிக்கொண்டு, கூழாங்கல்லைப் போட்டபிறகு எழும் மெல்லிய நீரலைபோல விலகி, மெதுவாக வெள்ளையின் 'பார்வையிலிருந்து' தங்களை மறைத்துக்கொண்டு, தப்பித்துக்கொள்வார்கள் ஊர் மக்கள். ஒரு காலத்தில் முடி வெட்டிக்கொள்ள ஆலமரத்தடியில் வெள்ளையைத் தேடிய ஊர் மக்கள், இன்று சிதறி ஓடுகிறார்கள். வெள்ளையின் கைவண்ணம் அப்படி. ஒரு பத்து ஆண்டு காலமாகவே மீசைமீது சவரக் கத்தியை வைப்பதற்குப் பதிலாக, நுனி மூக்கின்மீது வைப்பது, காலத்தின் கோலம்தான்! இரண்டாவதாக, இந்தக்காலத்திலே யார்தான் மரத்தடியில் சவரம் பண்ணிக்கொள்ள விரும்புகிறார்கள்? பக்கத்து டவுனில் இருக்கிற சுத்து நாற்காலி சலூனில் சவரம் செய்துகொள்கிற கவுரவமும் சுகமும் இங்கு கிடைக்குமா?

எங்கள் சின்னஞ்சிறு கிராமத்து மக்களுக்கெல்லாம் ஆதிகாலந்தொட்டு, சவரம் செய்து, கிராப்பு வெட்டிவிடுவது வெள்ளைதான். ஊரைத் தாண்டி மேற்குப்புறம் போனால், கிராமத்தார் காலைக்கடன் கழிக்கும் ஒதுக்குக்கு முன்பாக, 'வேலைக்காரங்களுக்காக' ஒதுக்கப்பட்ட கிராம மானியம் இருக்கிறது. அங்கேதான் துணி வெளுக்கும் வண்ணார் குடும்பமும், அதுக்குப் பக்கத்தில் வெள்ளை குடும்பமும் இருந்தது. வண்ணார் குடும்பம், இங்கே கட்டுப்படியாகவில்லையென்று, ஒரு எட்டு வருடத்துக்கு முன்னால், நகரத்தை நோக்கி நகர்ந்துபோய்விட்டனர். இப்போது வெள்ளையும், வெள்ளையோட பெண்டாட்டியும் அந்த இடத்தில் காலம் கழிக்கிறார்கள்.

***

இன்னும்கூட பசுமையாக நினைவிலிருக்கிறது.

காலையும் ராப்போதும், பித்தளை குண்டானை தோளில் வைத்தவாறு 'எம்மா, நான் வெள்ளை வந்திருக்கேன்' என்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று குரல் கொடுக்க, ஒரு தட்டில், சோற்றை மூன்று கூறாகப் பிரித்து வைத்துக்கொண்டு வீட்டுப்பெண்கள் வெளியில் வருவார்கள். அந்த சோற்றுக் கூறுகளை பாத்திரங்களுக்குள் தள்ளிவிடுவார்கள். ஒரு கூறு வெள்ளைக்கு. இன்னொன்று வண்ணாருக்கு. இன்னொன்று வெட்டியானுக்கு. கொஞ்சம் பெரிய ஓட்டு வீடாக இருந்தால், "எம்மா, கொழம்பு கிழம்பு இருந்தா ஊத்தேன்.." என்று இந்த மூவரில் யாராவது ஒருவர் கேட்பார்கள். ஆனால் பொதுவில், இல்லை என்றுதான் பதில் வரும். அப்படியும் யாராவது ஊற்றுகிறார்களென்றால் அது நேற்றைய மிச்சமாக இருக்கும்.

அறுவடைக்காலங்களில் வீட்டுக்கு ஒரு மரக்கால் என்று நெல்லை அளந்து போடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு துணி எடுத்துக் கொடுப்பவர்களும், இனாம் கொடுப்பவர்களும் உண்டு.

"அப்பா, சவரம் பண்ணிக்கிறயான்னு கேட்டு வெள்ளை வந்து வாசல்லநிக்கறாருப்பா," என்று நான் குரல் கொடுத்து என் அப்பாவை அழைத்தால், "கொஞ்சம் அவனை நிக்கச் சொல்லு. மாட்டை அவுத்துவிட்டுட்டு வந்துட்றேன். டேய் மகனே, உனக்கு எத்தனை முறை சொல்றது? வேலைக்காரங்களையெல்லாம் அவர் இவர்னு சொல்லக்கூடாது, அவன் இவன்னுதான் சொல்லணும்னு. இதுதாண்டா ஊர் வழக்கம், கவுரத்தையா நடந்துக்க." என்று வெள்ளையை விளிப்பதைத் திருத்துவார் என் அப்பா. நண்டு, சிண்டு, பொடிசுகூட 'டேய் வெள்ளை' என்று விளிப்பது சகஜமாகி இருந்தது.

அப்பாவே 'அனுமதி' கொடுத்தபின்பு, நான் வெள்ளையை ஒருமையில் விளிப்பதை அழுத்தித்தான் சொல்வேன். அதற்கு ஒரு மாபாதகக் காரணமும் இருந்தது. என் அரைக்கால் காக்கி டவுசர் காலக்கட்டங்களில், வெள்ளை எனக்கு மட்டும் 'சதுரவட்டை' ஸ்டைலில் முடிவெட்டிவிடுவது வழக்கம். அதற்கான காரணம் என்னவென்று இது நாள்வரை எனக்கு பிடிபடவில்லை. அடிக்கடி வெட்டவேண்டாமே என்று என் அப்பா வெள்ளையின் காதைக் கடித்திருக்கலாம். என் வயதின் ஒரு பத்து வருடங்களில் நான் ஒரு சட்டித்தலை வாசனாகவே இருந்தேன். அதனால் எனக்கு 'சட்டித் தலை' என்ற நாமகரணம் இன்று வரை நிலைத்துவிட்டது. எனது ஊரில் எனது சொந்தப் பெயர் தெரியாமல் அனேகம் பேர் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில்கூட, பொது ஜனங்களுக்கிடையில் என்னை 'சட்டி' என்று விளிப்பது சர்வ சகஜமாகிப்போனது. அந்த சர்வ சகஜம், என் மனைவி குழந்தைகள் முன்னால்கூட 'என்னப்பா சட்டி, வெளியில கிளம்பிட்டியா' என்று கேட்டு, அனிச்சையாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் இந்த வெள்ளைதான்!

இரண்டாவது காரணம், வெள்ளையின் ஒரே பையன் தமிழரசன். ஊரே சேர்ந்து என்னை 'டேய் சட்டி' என்று அழைக்கும்போது, அவனை 'டேய் தமிழரசா' என்று முழுப்பேர் சொல்லி அழைப்பார்கள். அவன் படிப்பில் படு சுட்டி. கன கச்சிதமாகப் புரிந்துகொள்வான்.திருக்குறள், ஏலாதி, இன்னா நாற்பது இனியவை நாற்பது மனப்பாடச் செய்யுள்களை நாங்களெல்லாம் பள்ளியின் வராண்டாவில் நடந்து, தேய்த்து, விழுந்து விழுந்து படித்தாலும், நொச்சிக்கொம்பு, தடித்தமேனிக்கு எங்கள் உள்ளங்கைகளை பதம்பார்த்துவிடும். ஆனால் தமிழரசன் 'ஒரே கிளான்சில்' அச்சு பிசிறாமல் ஒப்பிப்பான். கணக்கு, பூகோளம், அறிவியல், சரித்திரம்... எல்லாம் அவனுக்கு அல்வா சாப்பிடுகிறமாதிரி. வாத்தியார் லீவு போட்டுவிட்டால், இவன் எங்களுக்கு பாடம் நடத்தும் அளவுக்கு பள்ளிக்கூடம்கூட அவனுக்கு அனுமதி கொடுத்திருந்தது.

"ஊர் சோத்தத் தின்றவனுக்கெல்லாம் படிப்பு எப்படி வருது பாருடா," என்று நிறைய பயல்கள் தமிழரசனின் முகத்துக்கு நேராகவே சொல்வார்கள்.

தமிழரசனுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வருவதற்க்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்.
"நீங்க என்ன வேணும்னாலும் என்னை ஏசுங்க, திட்டுங்க. ஆனா எங்க அப்பாவை வாடா போடான்னு கூப்பிடாதீங்க." என்று கோபத்தோடு கூறுவான். ஆனால் அவன் சொன்ன மரியாதைக்காகக்கூட இதுநாள்வரை, 'டேய் வெள்ளை' என்று கூப்பிடுவதை நாங்கள் நிறுத்தியபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், இவன் இவ்வாறு சொல்லச் சொல்ல, இன்னும் அதிகமாகவே, வெள்ளையை ஒருமையில் விளித்தோம்.

இன்றைய தேதிக்கு, எங்கள் குரூப் படித்துக் கிழித்ததில், இந்தியாவுக்கு நிறைய பிட்டர்களும் வெல்டர்களும் கிடைத்திருந்தனர். நான் ஒரு வெல்டர். டிராக்டர் பட்டரையில் வாரத்துக்கு இரண்டாயிரம் கூலி. பக்கத்து டவுனில் ஜோலி.

ஆனால் தமிழரசன்? தேனி மாவட்டத்துக் கலக்டர்! ஆமாம். கலக்டர்தான்!! எட்டாம் வகுப்பு வரை கிராமத்தில் படித்தவன், பிற்பாடு, அரசு விடுதிகளில் தங்கி அனைத்து படிப்புகளையும் முடித்தான். நாங்களெல்லாம் ஐடிஐ படித்து முடித்தபோது, அவன் ஐஏஎஸ் எழுதி பாஸ் செய்திருந்தான். அன்றிலிருந்து இன்றைய நாள் வரை பல தமிழகத்து மாவட்டங்களில் கலெக்டர் வேலை.

வருடத்துக்கு ஒரு முறை வெள்ளையைப் பார்க்க வருவான். நிறைய பந்தா எல்லாம் கிடையாது. கூட ஒரு போலீஸ் ஜீப்பு வரும். பெத்த அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டு, பண்டு பழம் கொடுத்துவிட்டு, பணம் கொடுத்துவிட்டு போவான். வெள்ளையை எத்தனையோ முறை, பட்டணம் வந்துவிட கூப்பிட்டும், வெள்ளை மறுத்துவிட்டான். வெள்ளை இருந்த பழைய குடிசை வீட்டை இடித்துவிட்டு, சிறிய அளவில் ஓடு போட்ட வீடு கட்டிக்கொடுத்திருக்கிறான், தமிழரசன். வெள்ளையைப் பார்த்துக்கொள்ள, மருந்து மாத்திரை கொடுக்க, தன் சொந்த செலவில் ஒரு நர்சை வேலைக்கு போட்டிருக்கிறான். அந்த நர்ஸ், தினந்தோறும் சாயுங்காலம் வந்து மருந்து மாதிரைகளை கொடுத்துவிட்டுப்போகும்.

தமிழரசன் சொத்து ஏதும் சேர்த்துக்கொள்ளவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். வெள்ளை இருக்கிற இந்த ஓட்டு வீடுதான் அவனுடைய ஒரே சொத்தாம். ஆனாலும் எங்க ஊர் மக்கள் அதை நம்மவில்லை. ஊரிலிருந்து, ஏதாவது வேலை வெட்டிக்கு 'ரெகமண்டேசன்' கேட்டு போனால்கூட, அதை மறுத்துவிடுவான் தமிழரசன். ஒரு காப்பி வாங்கி கொடுத்து, கொஞ்ச நேரம் பேசிவிட்டு அனுப்பிவிடுவான். வேலையில்கூட ரொம்ப 'ஸ்ட்ரிக்ட்' என்று நிறையபேர் பேசிக்கொள்கிறார்கள்.

ஒருமுறை ஊருக்கு வந்தபோது, "என்ன கலக்டர் சார், எப்படி இருக்கிற, நம்ம ஊரு ஐய்யனாரு கோயிலுக்கு ஏதாச்சும் காசு பணம் டொனேசன் கொடுக்கக்கூடாதா? நம்ம ஊரு ஐய்யனாராலதானே இந்த அளவுக்குப் படிச்சி கலக்டெர் ஆகியிருக்க?!" என்று கேட்டபோது, தமிழரசன் பதில் சொன்னான். "சார் மோர் அப்படீன்னு என்னைக் கூப்பிடவேண்டாம். எப்பவும்போல வாடா போடான்னே கூப்பிடலாம். அப்புறம், இந்த கோயில் டொனேசன் எல்லாம் எனக்கு கொடுக்க விருப்பமில்லை. யாருக்காவது படிப்புத் தேவையோ, ஆசுபத்திரி செலவோ இருந்துச்சின்னா சொல்லுங்க, தர்றேன். இல்லே, கால்வாய் வெட்டணுமா, மதகு கட்டணூமா சொல்லு, செய்து தரச் சொல்றேன். உரிமையைக் கேளுங்க. பிச்சை கேட்காதீங்க," என்று வெடுக்கென்று பதில் சொன்னான்.

ஆனால் எங்கள் ஊர் மக்கள் உதவிகேட்டு தமிழரசனிடம் கை நீட்ட தயங்கினார்கள். "கொடுத்தா கோயிலுக்கு டொனேசனா கொடு. இல்லைன்னா தேவையே இல்லை," என்று இவர்களும் பதிலுக்கு முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டார்கள்.

வேலையில் காட்டிய நேர்மையால் தமிழரசனை அரசாங்கம் இங்கும் அங்குமாகப் பந்தாடுவதாக பேசிக்கொண்டார்கள். அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் அவனால் நல்ல பேர் எடுக்கமுடியவில்லை. அதைக் கேட்பதற்கு எங்கள் ஊர்க்காரர்களுக்கு உள்ளுக்குள் சந்தோஷமாகத்தானிருந்தது. வெள்ளையோட பிள்ளை கலக்டர் என்பதில் நிறையபேருக்கு வயிறு அடுப்பாய் எரிந்துகொண்டிருந்தது. போதாக்குறைக்கு, பத்திரிகைகளும் பேப்பர்க்காரர்களும் வாராவாரம் தமிழரனைப் பற்றி எழுதிக்கொண்டே இருந்தார்கள். வெள்ளையோட பிள்ளை என்ற ஒரே காரணத்துக்காக, எங்கள் ஊர் மட்டும் புழுங்கிச் செத்துக்கொண்டிருந்தது.

ஒரு மாதத்துக்கு முன்னால்கூட, கும்பகோணத்து கலக்டராக இருந்தபோது ஒரு உத்தரவு போட்டானாம் தமிழரசன். அதாவது, கலக்டர் அலுவலகத்தின் உள்ளே அனைத்து மதக் கடவுள் படமும் இருக்கவேண்டும்; இல்லையென்றால் கடவுள் படமே இருக்கக்கூடாது என்று. அது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி, தமிழரசனைத் தூக்கி இப்போது தேனி மாவட்டதுக்கு மாற்றலாக்கிவிட்டார்கள்.

இதற்கு இடையில், வெள்ளைக்கு குண மாறாட்டம் சற்று அதிகமாய்ப் போயிற்று. யாரைப் பார்த்தாலும் "சவரம் பண்ணிக்க சாமி," என்று துறத்துவது அதிகமாகிப் போனது. யாரையாவது வலுக்கட்டாயமாகப்பிடித்து, கழுத்தை அறுத்துவிடுவானோ என்று ஊர் மக்கள் திகில் அடைந்தார்கள். ஒரு நாள் கிராமசபை கூட்டம் போட்டு, இது விஷயமாகப் பேசினார்கள். தமிழரசனுக்குப் போன் போட்டு, விஷயத்தைச் சொல்லி, வெள்ளையை தன்னுடன் அழைத்துப் போகவோ, அல்லது ஏதாவது பைத்தியக்கார ஆசுபத்திரியில் சேர்க்க ஏற்பாடு செய்யவோ சொல்லவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தமிழரசனிடம் பேச என்னைத்தான் தேர்வு செய்தார்கள். பேசும்போதே கராராகப் பேசும்படியும், கோபமாகப் பேசும்படியும் எனக்குச் சொல்லப்பட்டது. அவ்வாறு பேசினால்தான், தமிழரசன் வெள்ளையை தன்னோடு அழைத்துச் செல்ல உடனடியாக ஏற்பாடு செய்வான் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. ஏனென்றால் வெள்ளையைப் பார்த்துக்கொள்ளும் நர்ஸ் அம்மாகூட, இதுவிஷயமாக தமிழரசனிடம் பேசியபோது, 'வேலை நிமித்தமாக இருக்கிறேன், சீக்கிரம் வந்துவிடுகிறேன், பார்த்துக்கொள்,' என்றுதான் பதில் வருகிறதாம்.

தமிழரசனின் தனிப்பட்ட செல் நம்பர் என்னிடம் இருந்தது.

"யாரு, தமிழரசனா? நான்தாம்பா சட்டி பேசறேன்..."

"ஊர்ல எல்லாரும் நலமா?"

"ஆமா, நால்லாத்தான் இருக்கோம். ஆனா பாரு தமிழு, வெள்ளைக்கு கிறுக்கு முத்திப்போச்சு. யாரைப் பார்த்தாலும் 'சவரம் பண்ணிக்கிறயான்னு' கேட்டு தொறத்திக்கிட்டு வர்றான். அவனை..."

"சட்டி, உனக்கு எத்தனையோ முறை சொல்லியிருக்கேன். என் அப்பாவை அவன் இவன்னு பேசாதேன்னு. என்னை எப்படி வேணும்னாலும் கூப்பிடு. என் அப்பாவுக்கு மரியாதை கொடு."

"இல்லை தமிழு. அது வந்து... பழகிப்போச்சு, மாத்திக்க முடியலை."

"இல்லையில்லை. மரியாதையாப் பேசக் கத்துக்க. என் அப்பா உன் அப்பாவை விட வயசில் மூத்தவர். உன் அப்பாவை அவன் இவன்னு பேசுவியா?"

"சரி, நான் சொல்லவந்ததை சொல்லிடறேன். வெள்ளையை வந்து அழைச்சிக்கிட்டு போய்டு; இல்லைன்னா ஏதாவது பைத்தியக்கார ஆசுபத்திரியில சேர்த்துடு. உடனடியா செய். எல்லாரும் பயப்படுறாங்க."

"பத்திரமா பார்த்துக்கச் சொல்லி நான் என் நர்ஸ் கிட்ட சொல்லி வைக்கிறேன். ஒரு வாரம் பொறுத்துக்கங்க. நானே வேலையை ராஜினாமா செய்துட்டு, நம்ம ஊருக்கே வந்துடலாம்னு இருக்கேன். இங்கெல்லாம் நேர்மையா இருந்து வேலை செய்ய முடியலை. அதனால, நம்ம ஊருக்கே திரும்பி வந்து, நம்ம குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் படிப்பு சொல்லிகொடுக்கலாமுன்னு யோசனையிலிருக்கேன். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க."

"சரி," என்று சொல்லிவிட்டு, விஷயத்தை ஊர் சபையில் சொன்னேன். ஊர் ஜனங்கள் சலசலத்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். தமிழரசன் கலக்டர் வேலையை ராஜினாமா செய்வதில் எங்கள் ஊர் மக்களுக்கு எல்லையற்ற சந்தோஷம்.

கிராம சபையில் குந்தியிருந்த ஒருத்தர் சத்தம் போட்டார். "அவன் என்ன மயிரு படிப்பு சொல்லிக் கொடுக்குறது? அவன் அப்பன் தொழிலைச் செய்யச் சொல்லுங்கடா. வெள்ளைக்கு கண்ணு தெரியலைன்னுதானே நாம வெளியூர் போய் சவரம் பண்ணிக்கிறோம். குலத் தொழில்தானேய்யா... செய்யட்டுமே. இதுக்கு ஒத்துக்கலைன்னா, அவன் அப்பனைக் கூட்டிக்கிட்டு வேற எங்கையாவது போய்த் தொலையட்டும்!"

ஒரு வாரம் பொருத்துப் பார்த்தோம். தமிழரசனிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. திரும்பவும் கிராமசபை கூடி, என்னை தமிழரசனிடம் போன் போட்டுப் பேசச்சொன்னார்கள். "டேய் சட்டி, பேசுடா, பேசு. வர்றானா இல்லையான்னு கேளு. இல்லைன்னா கிராமம் பூராவும் சேர்ந்து, போலீசுக்கு கம்ப்ளைண்ட் எழுதிருவோம்னு சொல்லு. என்ன நினைச்சிக்கிட்டிருக்கிறான் அந்த சிரைக்கிற பையன்? அவனுக்கு பெரிய ராயல்னு நெனைப்பு."

நான் போன் போட்டேன். மணி ஒலித்துக்கொண்டிருந்தது. மறுமுனையிலிருந்து பதிலேதுமில்லை.

மறு நாள் செய்தித்தாளை எடுத்துக்கொண்டு ஐந்தாறு பேர் வேகமாக ஓடிவந்தார்கள்.

"டேய், சட்டி. இந்த செய்தியைப் படிடா."

'தேனீ மாவட்ட கலக்டர் துப்பாக்கி சூட்டில் மரணம்.

கம்பம் பகுதியில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க நேரில் சென்ற தேனி மாவட்டக் கலக்டர் தமிழரசன், போராட்டக்காரர்களை எச்சரித்துக் கலைப்பதற்குப் பதிலாக, தானே மனமுவந்து, திடீரென அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி, போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தினார். காலையில் தொடர்ந்த போராட்டம் மாலை வரை தொடர்ந்தது. கலக்டரே போராட்டத்தில் கலந்துகொண்டதால், மக்களும் பல லட்சக் கணக்கில் திரண்டு வந்து அவருடன் போராட்டத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

இவ்வாறு போராட்டம் நடந்துகொண்டிருக்கையில், முகமூடியணிந்த மூன்று இளைஞர்கள் துப்பாக்கியால் கலக்டர் தமிழரனைச் சுட்டுவீழ்த்திவிட்டு, தப்பியோடிவிட்டனர். தமிழரசன் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார்.'

எங்களுக்குள் நீண்ட மௌனம் நிலவியது.
ஏதோ திடுமென எங்கள் ஊர் முழுதும் பெரிய சோகம் அப்பிக்கொண்டது.
நான் புலம்பிக்கொண்டேன்.
"டேய் தமிழு. நீ இருந்தவரை உன் அருமை தெரியாமல் இருந்துட்டோம். இப்போ நல்லா புரியுதுடா... நீதான் எங்களைவிட எல்லாத்துலயும் உயர்ந்தவன். நல்லாவே புரிஞ்சிக்கிட்டோம்." என் கண்களில் நீர் முட்டியது.

தன் மகன் இறந்ததைக்கூட புரிந்துகொள்ளாமல், தூரத்தில் "சாமி, சவரம் பண்ணிக்கிறயா," என்று யாரையோ வெள்ளை கேட்டுக்கொண்டிருந்தான்.

இல்லையில்லை. வெள்ளை கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆமாம். 'ர்' தான்!

3 comments:

Ramani said...

இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
மிக அருமையான பதிவுகளாக உள்ளன
வெள்ளை என் உள்ளம் கொள்ளை கொண்டது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Sankar Gurusamy said...

சிறப்பான உருக்கமான சிறுகதை.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

அசிஸ்டன்ட் டைரக்டர் said...

உங்கள் ஊரில் வெள்ளை. எங்கள் ஊரில் மூக்கன். பெயர் தவிர பெரிதாக வித்தியாசம் இல்லை. நல்ல பதிவு நண்பா.. வாழ்த்துக்கள்.

Post a Comment