My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

19.12.11

நாயர் கடை டீயும், முல்லைப் பெரியாறு அல்வாவும்.

புதிய முறையில் கட்டப்பட்ட அணை திறக்கப்படுகிறது. (எங்களை மன்னித்துவிடு, மிஸ்டர். பென்னி குயிக்) 




ப்படியாவது பஜார்ல இருக்கிற அந்த கிருஷ்னன் நாயர் டீக்கடைமேல ஒரு கல்ல விட்டு எறியணும். அவன் பாய்லர உடைக்கணும். என் 'தல' மீது ஆணை. இது என்னோட ரொம்ப நாள் தீராத ஆசை. இதோ., இப்ப கிடைச்ச இந்த வாய்ப்பை விட்டுடக் கூடாது.

'தல'யோட பில்லா ரிலீஸ் ஆனப்போ, 'தல'யின் தலைமீது பீர் அபிஷேகம் செய்யறதுக்காக, போய் டொனேஷன் கேட்டு நிக்கறோம். எங்களை மதிச்சு ஒரு பத்து பைசா போட்டானா அந்த நாயர். மூஞ்சில அடிச்சாப்ல, 'போடே, போ... போய் வேற வேலை இருந்தாப் பாரு,' அப்படீன்னு சொல்றான்.

இதே அனுபவம்தான் 'நல்லவன் ரஜினி' ராஜேந்திரனுக்கும், 'ஒஸ்தி' ஒலகநாதனுக்கும், 'கஜினி' காஜாமொய்தீனுக்கும், 'குருவி' குரியகோசுக்கும், 'கொலவெறி' கோவிந்தனுக்கும் கெடைச்சது.

நாங்க எல்லாரும் மைதானத்து மூலையில உக்காந்து பெரிய பிளான் போட்டோம். கொஞ்ச நேரத்துலயே 'நாயகன்' நல்லகண்ணுவும் வந்து சேர்ந்தான்.

நல்லவன் ரஜினிதான் பேச்சை ஆரம்பிச்சான்.

"தல தர்மா, ஒஸ்தி, குருவி, கஜினி, கொலவெறி, நாயகன், எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க. இந்த முல்லைப் பெரியாறு அணைய காரணமா வச்சி, மொத்தபேரும் கும்பலா, 'தமிழன் வாழ்க, மலையாளி ஒழிக, முல்லைப் பெரியார் வாழ்க,' அப்படீன்னு கோஷம் போட்டுக்கிட்டே கடைக்குள்ள நுழையணும். போலீஸ்காரனால ஒண்ணும் பண்ணமுடியாது. ஏன்னு கேளேன்? இப்ப நடக்குறது தமிழர்ங்களுக்கும் மலையாளிக்களுக்குமான பிரச்சினை. இப்ப கடையை ஒடைச்சாத்தான், கேஸ் போட மாட்டானுங்க. தைரியமா கடையை நொறுக்கலாம். நமக்கும் ஜெனங்ககிட்ட இருந்து நல்லபேரு கிடைக்கும். கோஷம் போடாம போய் கடைல கை வைச்சீங்கன்னா, போய் களி திங்கவேண்டியதுதான். டென்ஷன்ல மறந்துடக்கூடாது, சரியா?"

"ஆனா, நாம எதுக்கு அடிக்கிறோம்னு அந்த கிருஷ்னன் நாயருக்கு தெரியணும், ரஜினி. நாம டொனேஷன் குடுக்கலன்னுதானே அடிக்கிறோம்? நாயர், உண்மையிலேயே முல்லைப் பெரியாருக்குத்தான் இவனுங்க அடிக்கிறான்னு நெனைச்சிகிட்டான்னா, நமக்கு திரும்பவும் டொனேஷன் கிடக்காமப் போய்டும். புரியுதா?" நான்தான் சொன்னேன். என் 'தல'யோட மூளையில பாதியாவது எனக்கு இல்லைன்னா, நான் 'தல'க்கு வாலா இருக்கிறதுல அர்த்தமே இல்லையே?

"டேய், தல தர்மா சொல்றதுதாண்டா கரெக்ட்டு. ஆனா, டொனேஷன் குடுக்கலன்னு சொல்லியடிச்சாக்கா, போலீசு நமக்கு நிச்சயமா லாடம் கட்டிடுவாங்க," குருவி சொன்னான்.

"சரி, ஒரு ஐடியா தோணுது. பாதிப்பேர் 'தமிழன் வாழ்க, மலையாளி ஒழிக, முல்லைப் பெரியார் வாழ்க,' அப்படீன்னு கோஷம் போட்டு, கடையை ஒடைப்போம். மீதிப் பேர் நாயர் காதுல கேக்கறாப்புல, 'டேய் நாயர், டொனேஷன் கேட்டா தொறத்தியாவிடுற? இப்பப் பாத்தியா? ஒழுங்கா நடந்துக்க...' அப்படீன்னு விஷயத்தைப் போட்டு ஒடைச்சிடுவோம்." கொலவெறி சொன்னான்.

"டேய், ஆனா நாயர்மேல கை வச்சிடாதீங்கடா. வைசான ஆளு. பொட்டுன்னு பூட்டான்னு வச்சிக்க, அப்புறம் பெர்மனென்ட் களிதான்." இது கஜினியின் அறிவுறுத்தல்.

சரியா சாயுங்காலம் ஆறு மணிக்கு, நாயர் கடை முன்னால கூட்டம் ஜெஜென்னு வடையும் பஜ்ஜியுமா முழுங்கிட்டு, டீக்குடிக்கும்போது, திபுதிபுன்னு கடைக்குள்ள பூந்துடனும்னு பிளான்.

அதுக்கும் முன்னால, தகிரியம் வர்றதுக்கு பை-பாஸ் ரோடு வைன் ஷாப்புல ஆளுக்கு ஒரு குவார்ட்டர் அடிச்சிக்கிறதாவும் பிளான்.

***

குவார்டர் குடுத்த உற்சாகத்தோட, பான் பராக்கும் கூட சேர்ந்துக்கிட்டு, அந்த உற்சாகத்தை டபுள் ஆக்கிடுச்சு. பல்சர்களும், யமகாவும், சுசுகியும், 'புர்... புர்'ன்னு சவுண்டு உட்டு, பின் சக்கரங்களால தரையை சீய்ச்சு, புகையும் மண்ணுமா வாரியடிச்சுது.

"ரெடி, ஜூட்" அப்படீன்னு யாரோ சொல்லவும் வண்டிங்க எல்லாம் நாயர் கடையக் காலி செய்ய சிட்டாப் பறந்தது.

நாயர் கடை வந்ததும் வண்டிய நல்லா உறுமவிட்டு, சைடு ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டினோம். கொலவெறி நல்லா வீலிங் பண்ணுவான். சரக்குன்னு முன் சக்கரத்தைத் தூக்கி நிப்பாட்டி, ஒத்த சக்கரத்துலயே பத்து ரவுண்டு அடிச்சான். சும்மா தவுசன்வாலா வெடி உட்டாமாதிரி, கடை முன்னால ஒரே புகை மண்டலம்.

"தமிழன் வாழ்க, மலையாளி ஒழிக, முல்லைப் பெரியார் வாழ்க," அப்படீன்னு எல்லாரும் கோஷம் போட்டுக்கிட்டே, கடைக்குள்ளாற புகுந்தோம்.
ஜனங்க எல்லாம் செதறி ஓடினாங்க. பாய்லர், பால் குண்டான், எண்ணைக் கடாய், எல்லாத்தியும் தூக்கியாந்து நடு ரோட்டுல போட்டு ஒடைச்சோம். நான் படக்குன்னு நாயரோட கல்லாவுல கையவுட்டு துழாவுனா, ஒத்த நயாபைசா காணும். நாயர் எல்லாத்தையும் அள்ளி அண்டர்வேர்ல போட்டுக்கிட்டான்போல.

"டேய் நாயர், டொனேஷன் கேட்டா, இன்னா இன்னா டகால்டி பேச்சு பேசற? இப்ப தெரியுதா நாங்க யாருன்னு," என்று சொல்லி கல்லா மேஜையை அப்படியே தலைககீழாக் கவுத்துப் போட்டேன். கிருஷ்னன் நாயர் அப்படியே சிலை மாதிரி நின்னாரு.

எல்லாம் ஒரு மூணு நிமிஷத்துல முடிஞ்சிபோச்சு. சத்தமா கோஷம்போட்டுக்கிட்டே, தயாரா நிப்பாட்டிவச்சிருந்த வண்டியக் கிளப்பிக்கிட்டு போய்ட்டோம்.

திரும்பவும் நேரா பை-பாஸ் வைன் ஷாப்புதான். என்ன குடிச்சோம், என்ன பேசினோம், எப்படிப் பிரிஞ்சோம்னு தெரியலை. மறுநாள், காலம்பர பதினோரு மணிக்கு எழுந்தா தலை வின்னு வின்னுன்னு வலிக்குது.

அந்த நேரம்பார்த்து, கொலவெறி ஓட்டமா ஓடியாந்தான். கையில இருந்த பேப்பரைக் காட்டி, "டேய் தல, நேத்து நாம அடிச்சு ஒடைச்சமே நாயர் கடை, அதை போட்டா புடிச்சி பேப்பர்ல போட்டிருக்கான் பாருடா," என்று குதூகலமாய் சொன்னான்.

பேப்பரில் இருந்த படத்தைப் பார்த்தா, நாயர் கடை அலங்ககோலமா கிடந்துச்சி. 

திரும்பவும் சாயுங்காலம் ஆறு மணிக்கு கும்பலா நாயர் கடைய பாக்கறதுக்கு, எல்லாரும் சும்மா ஹீரோ கணக்கா நடந்து போனோம். ரெண்டு போலீஸ்காரங்க தேமேன்னு ஸ்டூல்மேல குந்திக்கிட்டு இருந்தாங்க. ஜன நடமாட்டம் கம்மியா இருந்துச்சி. டீக்கடை ஷட்டரை இழுத்து மூடி பூட்டுபோட்டிருந்தாரு நாயர். எங்களுக்கு பரம திருப்தி.

***
இந்த 'நாயர் கடை உடைப்பு' ப்ராஜக்டை நடத்தி முடிக்கிறதுக்கு ஆன செலவு சுமார் ஆயிரத்து ஐனூறு ரூபாய். ரஜினிதான் செலவு செய்திருந்தான்.

"டேய் ராஜேந்திரா, கரண்ட்டு பில் கட்டிட்டு, அப்படியே ரேஷன் கடைக்கு போய்ட்டு வந்துடு, இந்தா ஆயிரத்து ஐனூறு. ரஜினி படத்துக்குப் போயி, செலவு கிலவு பண்ணித் தொலைச்சுடாத. பக்கத்து வீட்டு பாரிஜாதம்கிட்ட கடன் வாங்கி குடுத்திருக்கேன். கரண்ட்டு பில் கட்ட இன்னைக்குதான் கடேசி தேதி," என்று காசை எட்டு தடவை எண்ணி எண்ணிக் கொடுத்த அம்மாவை நினக்கும்போதே ரஜினிக்கு பகீர் என்றது.

செல்போனில் செய்தி சொல்லிக்கொண்டு, மைதானத்தில் அவசரகதியில் கூடியது சபை. எப்படியெல்லாமோ மண்டையை ஒடைச்சி ஐடியா செய்ஞ்சோம். கடேசியா கொலவெறியோட பல்சரின் ஒரிஜினல் டாக்குமெண்டை சேட்டு கடையில அடமானம் வைக்கிறதா முடிவு எடுத்தாங்க. ஒரு வாரத்துக்குள்ள எப்பாடு பட்டாவது, எல்லாரும் முயற்சி செய்ஞ்சி, கண்டிப்பா வண்டிய மூட்டுக்குடுத்துடனும்.

எங்க குரூப் அப்படியே கரம்சந்த் சேட்டுக்கடைக்கு முன்னால போய் நின்னுது. சேட்டு வாயிலேர்ந்து எப்பவுமே 'இல்லைன்ற' வார்த்தையே வராது. கதவைத் தொறந்து நாங்க உள்ளாற போனா, அங்க கிருஷ்னன் நாயர் இருந்தாரு. எங்களுக்கு முதுகை காட்டினாப்புல உட்கார்ந்துக்கிட்டு, சேட்டுகிட்ட பேசிக்கிட்டிருந்தாரு.

"சேட்டு, எனக்கு எண்டே கடை போனதைப் பத்தி கொஞ்சம்கூடக் கவலையில்லை கேட்டோ. ஏன்னா, எண்ட கடைய ஞான் இன்சூர் செய்திருக்கேனாக்கும். பத்திரிக்கை போட்டோ ஆதாரத்தை கொண்டுபோயி காட்டினேன். இன்னும் ஒரு மாசத்துல நஷ்ட ஈடு கொடுக்கறேன்னு சொல்லிட்டான்."

எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. நாயரா கொக்கா? கடைய நாங்க ஒடைக்க ஒடைக்க, நாயர் குய்யோ முறையோன்னு கத்தாம, சும்மா அசால்ட்டா நிக்கும்போதே எனக்கு சந்தேகம் தட்டுச்சி. ப்ச்... விஷயம் இப்படி ஒண்ணுமில்லாமப் போச்சே?!

சேட்டு எங்களைப் பார்த்து "தம்பிங்ளா, ஒரு அஞ்சீ நிம்சம் வெயிட் பண்றாங்கோ.. நம்பள் நாயர் போனப்புறம் உங்கள் பாக்கறான்." என்று சொன்னாரு.

அப்போதான் நாயர் பின்னால திரும்பிப் பார்த்து நாங்க வந்திருக்கிறத தெரிஞ்சிக்கிட்டாரு. என்ன நெனைச்சாருன்னு தெரியலை... இன்னும் குரல உயர்த்தி எங்களுக்கு கேக்கராப்ல, ஒரக்கப் பேசினாரு.

"ஞான் இதைப்பத்தியெல்லாம் கவலைப் படறதில்லை கேட்டோ. இதையெல்லாம் எதிர்பார்த்துத்தானே பொழைப்பு நடத்த ஞாங்கள் இவிடே வந்திருக்கோம்? ஆனா இந்த பயலுங்க எங்களப்போல சின்னக் கடைகளத்தான ஒடைக்க முடியும். இதோ ஒடைச்சுட்டு, வெளியதானே சுத்திக்கிட்டிருகானுங்க. இதே பெரிய கடையில கைய வச்சிருந்தா தெரியும் சேதி.... இன்னேரத்துக்கு உள்ளார இருப்பானுங்க கேட்டியோ.

"இவனுங்க இங்க செய்யறதைத்தான் எங்க மலையாள நாட்டிலே செய்ய்யறாங்க. தமிழர்களோட கடைகள ஒடைக்கிறானுங்க. அது தெரியுமா இந்தப் பயலுங்களுக்கு? ஐய்யப்பசாமிகள அடிச்சி ஒதைச்சி திருப்பி அனுப்புறது யாரு? மலையாளிங்கதானே? அதுக்காக இந்தத் தமிழங்க சபரிமலைக்கு போகாமலா இருக்காங்க?

"நீங்க வேணும்னா பாருங்க சேட்டு, இன்னும் தொள்ளாயிரத்து தொண்ணுத்தொன்பது வருஷத்துக்கு, இந்த முல்லை பெரியார் பிரச்சினை தீரப்போறதில்லை, கேட்டோ. அதை நல்லபடியா தீர்க்கணும்னா அதுக்கான தீர்வு நம்மைப்போல ஜனங்கள்டே கையிலதான் இருக்கு. அரசியல்வாதிகளால அதை தீர்த்துவைக்க முடியாது. அவனுங்க இந்தப் பிரச்சினையை ஊதி ஊதி, பெரிசாக்கத்தான் பார்ப்பானுங்க. அப்படி செய்ஞ்சாத்தான் அவனுங்களுக்கு லாபம். ஒரே கட்சிக்காரனுக்கு கேரளத்துல ஒரு கொள்கை, தமிழ் நாட்டுல ஒரு கொள்கை. த்தூ... கேவலமா இல்லை? இதே போலத்தானே கர்னாடகாவிலும் நடக்குது? எப்படி இந்த விஷயம் முடிவுக்கு வரும்? 

"நாடகமாடுற அரசியல்வாதிங்க வீடுகள மக்கள் அடிச்சி நொறுக்கணும். அவங்க வீட்டு முன்னால 'எங்களுக்கு பிரச்சினையை தீர்த்து வை' அப்படீன்னு கேரோ செய்யனும். வட்டம், மாடவட்டம் அப்படீன்னு எந்த போஸ்டுல இருந்தாலும், எல்லார் வீட்டு முன்னாலயும் உட்காரணும். அது தமிழ் நாடோ, அல்லங்கில் கேரளாவோ, எல்லா இடத்திலயும் பொதுமக்கள் ஒன்னாச் சேர்ந்து கட்சிக்காரங்களை இங்க அங்க போகவிடாம முடக்கிடனும். இப்படிச் செய்தாச்சுன்னா, இருபத்து நாலு மணி நேரத்துல பிரச்சினை தீர்ந்து போயிடும்! அதுவரையிலும் நாமல்லாம் அண்ணன் தம்பி மாதிரி பழகினாலும், இந்தக் குள்ளநரிங்க உள்ளாரப் புகுந்து, பகைய வளர்ந்துக்கிட்டுதான் இருக்கும், கேட்டோ.

"என் கடையை ஒடைச்ச இந்தப் பயலுகளுக்குக்கு வயசு அப்படி சேட்டு. இவனுங்க பிற்காலத்துல இதையெல்லாம் தப்புன்னு தெரிஞ்சிக்குவானுங்க. இதையெல்லாம் கிளறி விடறது அரசியல்வாதிங்கதான்னு தெரிஞ்சிக்குவானுங்க. அரசியல்வாதிங்க பொறுக்கித் திங்கிறதுக்கு இந்தமாதிரி கலவரத்தையெல்லாம் பிரச்சாரம் செய்யுறானுங்கன்னு தெரிஞ்சுக்குவாங்க. போதாததுக்கு டிவிக்காரனும் பேப்பர்க்காரனும் கூட சேர்ந்து ஒத்து ஊதறானுங்க. இப்படில்லாம் புகைய போட்டு நெருப்பா எறியவிட்டாத்தான், அந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு லாபம்னு இவனுங்க தெரிஞ்சிக்க ரொம்பக் காலம் ஆவாது. இந்தப் பயலுங்கமேல தப்பு இல்லை கேட்டோ." கிருஷ்னன் நாயர் பேசி முடித்தாரு. "சேட்டு, எனக்கு ஐம்பதாயிரம் பணம் வேணும். மூணு மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன்."


"உன்க்கு இல்லாததா நாயர், இந்தாங்க," என்று ஐனூறு ரூபாய் கட்டுகளை எடுத்துவைத்தாரு சேட்டு.

காசை எண்ணி சரிபார்த்துட்டு "சரி, ஞான் வர்றேன் சேட்டு," என்று திரும்பி, எங்களை நோக்கி வந்தாரு.

"எடோ, என்னங்கடா, நேத்து நீங்க அடிச்ச கூத்துக்கு, எதையாவது அடமானம் வச்சி காசை தேத்தனும்! அதுக்குத்தானே வந்திருக்கீங்க?," என்று எங்களைப் பார்த்து நாயர் கேட்டாரு.

நாயரைப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் எழுந்து நிக்கத் தோணிச்சி. எழுந்து நின்னோம்.

"ஆமா நாயர். வண்டிய அடமானம் வைக்கலாம்னு வந்தோம்." குருவி சொன்னான்.

"எவ்வளவுக்குடே வைக்கப்போறீங்க?"

"ஆயிரத்து ஐனூறு. ரேஷன் கடை காசு. அம்மா திட்டுவாங்க."

"இந்தாடே..." அப்படீண்ணு மூணு ஐனூறு ரூபாய் நோட்டுங்கள கட்டுல இருந்து உருவி எடுத்து, குருவியோட சட்டை பாக்கெட்டுக்குள்ளாற போட்டாரு.

"எடோ தம்பிகளா, ஞான் இந்தக் காசை கொடுக்குறது, உங்க நாறிப்போன ரசிகர் மன்றத்துக்கு கொடுக்குற டொனேஷன் இல்லை கேட்டோ," என்று சொல்லியவாறு தன் சைக்கிளை ஓட்டிக்கிட்டு போய்க்கிட்டேயிருந்தாரு.

எங்க கண்ணுல இருந்து நாயர் மறையறவரைக்கும் அந்தப்பக்கமாவே பார்த்துக்கிட்டிருந்தோம்.

8 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுதான் யதார்த்த உண்மை
அதை மிக அருமையான கதையாக்கிக் கொடுத்துளீர்கள்
மிக அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

Bala Ganesan said...

nice story telling! but when nayar gives that long speech, story disappears! only the politics came in our mind! anyway good attempt!!

Sankar Gurusamy said...

மிக சிறப்பாக சொல்லப்பட்ட நிதர்சனம்...

பகிர்வுக்கு மிக்க நன்றி...

நீச்சல்காரன் said...

நல்ல கதை ஆனால் 'பெரியார்' ஏன் முல்லைப் பெரியாறு கதையில் வந்தாருனுதான் தெரியல!

புதிய பாமரன் said...

தவறைச் சுட்டியமைக்கு நன்றி நீச்சல்காரர் அவர்களே! பேச்சு நடை எழுத்தில் வந்தது தவறுதான். சுயவிமர்சனம் ஏற்கிறேன். 'பெரியார்' என்பது பெரியாறு என்று இருந்திருக்கவேண்டும்.

Anonymous said...

emaarukiravan irukkum varai- emaatrubavan irunthu konde iruppan>
pl c message:
ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாயுள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை.
தமிழகத்தில்,அதேநிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல.
வாய்ப்புக்கு நன்றி.

Anonymous said...

தமிழர்கள் அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை கொஞ்சம் கற்று கொடுங்களேன்.???

தமிழகப் பிரச்னைகளுக்காக மீண்டும் போராட்டம்: விஜயகாந்த்

தமிழர்கள் நலன் காக்கும் இந்த விஷயத்தில் -உங்களுக்கு என்ன வேலை???

ஹி… ஹி….ஹி… என்னங்க அண்டைமாநிலங்களில் நூற்றாண்டுகளாக வாழும் தமிழர்கள் தனது ஏழு அறிவை பயன்படுத்தி அரசியலில் சம பங்கும், மலையாளி/தெலுங்கர்/கன்னடர் என இனத்தகுதி அடையும், இரட்டை கலையை தமிழர்களுக்கு கொஞ்சம் கற்று கொடுங்களேன். வாழ்க தேசியம்.

Anonymous said...

தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா?

அண்டைமாநிலங்களி ல் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்களை சீண்டிவிட்டது யார்? /சிந்திக்க வைத்தது எது???

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
வாழ்க அறம் வளர்த்த தமிழகம்!
வாழ்க இன உணர்வு!

ஹி… ஹி…ஹி…
என் அருமை திராவிடத் தமிழா!!!

நாங்க உங்க வீட்டிற்கு வரும் போது எனக்கு என்ன கொடுப்பாய் என கேட்பதும் ;

நீ எங்கள் வீட்டிற்கு வரும்போது என்ன கொண்டு வந்தாய் என்பதும் எப்போதும் திராவிடர்களாகிய நாங்கள் கடை பிடிப்பது தானே??? இப்பொழுது
ஏன் நீ சிந்திக்க ஆரம்பித்து விட்டாய்???

Post a Comment