My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

26.10.11

தாயம்மாவின் தீபாவளிநினைத்துப் பார்க்கவே வயிறு கலங்கியது தாயம்மாவுக்கு. வேண்டாத கடவுளில்லை. அட, உட்கார்ந்து செல்லவேண்டாம்; நின்று செல்லவாவது இடம் இருந்தால் போதுமென்று தாயம்மாவுக்குப் பட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு ஐந்து மணி நேரம். ஊருக்குப்போய்விடலாம்.

டவுன் பேருந்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் சவுண்டும், தாயம்மாவும் இறங்கும்போதே தெரிந்துபோனது. ஊருக்குப் போவது நடக்காத காரியமென்று. பேருந்து கி
டைக்குமா என்னும் பதற்றம் அவளுக்கு வியர்வையை பொங்க வைத்தது.

கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் வெறும் தலைகளாய் நிரம்பி இருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள், மக்கள், மக்கள்தான். பெரிய மூட்டை முடிச்சுகளுடனும், பெரிய பெரிய பெட்டிகளுடனும், இரண்டு கைகளிலும் கொத்தாய்ப் பிடித்துக்கொண்டு, இங்குமங்கும் அலைந்தபடி இருந்தார்கள். சிலர் பெட்டிகளுக்கு நடுவில் அமர்ந்துகொண்டு பேருந்து வருவதை எதிர்பார்த்திருந்தனர். போலீஸ்காரர்கள் விசில் ஊதியபடி இங்குமங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். சிலரை லத்தியால் அடித்துக்கொண்டே போனார்கள். ஆங்காங்கே பெட்டிகளோடு பெட்டிகளாக குந்தியிருந்த குழந்தைகளெல்லாம் ஒன்றுபோலக் கதறியழுதுகொண்டே இருந்தன. அங்கே அமைதியான சந்தோஷமான குழந்தைகளோ அல்லது மனிதர்களோ ஒரேயொருவரைக்கூட பார்க்க முடியவில்லை. திருவிழாக் கூட்டத்தில் யானை புகுந்ததுபோல் எல்லோரும் இங்குமங்குமாக திக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டேயிருந்தார்கள். சுனாமி அடித்து ஓய்ந்தபின் நடக்கும் களேபரம் போல அந்த காட்சிகள் இருந்தன! அங்கே யாருமே சந்தோஷமாக இருப்பதாகத் தென்படவில்லை.

நின்றுகொண்டிருந்த பேருந்துகளைச் சுற்றி ஒரே நெரிசல். பேருந்தை நோக்கி ஓடிய நெரிசலால் சிக்குண்டு அந்த பேருந்துகளே நசுங்கிவிடும்போல இருந்தது. ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், சட்டையைப்பிடித்து சண்டையிடுவதும், பாய்ந்தோடி ஜனங்களின் மீதேறி பேருந்துக்குள் புகுந்துவிடுவதும், எல்லா பேருந்துகளைச் சுற்றிலும் நடந்துகொண்டேயிருந்தது.

உள்ளே வரும் பேருந்துகள் ஒலி எழுப்பியாவாறு உள்ளே நுழைந்தவுடன், சனங்கள் தத்தளித்து முண்டியிட்டன. சிலர் பேருந்து செல்லும் வழித்தடத்தைப் பார்க்க முன்பக்கம் பாய்ந்தனர். குழந்தைகளையும்ம், பெட்டிகளையும், உடன் வந்தவர்களையும் விட்டுவிட்டு, சரேலென வந்து நின்ற பேருந்தின் சன்னலுக்குள் ஆண்கள் பாய்ந்தார்கள்.

"நான் இந்தப் பக்கம் சீட்டிலே இருக்கேன். விட்டு எழுந்துவந்தா சீட்டு கெடைக்காது. எப்படியாவது நெருக்கியடிச்சி புள்ளக்குட்டிங்களை கூட்டியாந்துடுடீ. பொட்டிங்கள மறந்துடாத" என்று ஒலக் குரல் பொதுவில் கேட்டது.

திக்குத் தெரியாது விட்டதுபோல, பெண்களும் குழந்தைகளும் தடுமாறி நின்றார்கள். சூழ் நிலையைச் சாதகமாக்கி, சில பெட்டிகளும் மூட்டைகளும் திருடு போயின.

ஒரு பெண் குழந்தை எப்படியோ தவறி, "அப்பா, அப்பா..." என்று கதறிக்கொண்டேருந்தது. அதை அணுகி ஏனென்று கேட்க யாருக்கும் நேரமில்லை, அல்லது தோன்றவில்லை. பேருந்துகள் வருவதைப் பற்றியும் போவது பற்றியுமான இரைச்சலான அறிவிப்பு ஒலி அனைவருக்கும் சலிப்பைக்கொடுத்தன. நூற்றுக்கணக்கான பேர் போக்குவரத்து அலுவலகத்து அறையை சூழ்ந்துகொண்டிருந்தனர். கோபாவேசமான கேள்விகளுக்கு பதிலில்லாமல் அந்த அதிகாரிகள் தடுமாறினார்கள். கூட்டத்துக்கு நடுவிலிருந்த சிலர், அவர்களை வெளியே பிடித்து இழுத்துவருமாறு கத்திக்கொண்டிருந்தார்கள். சில இடங்களில் மக்கள் தரையில் அமர்ந்து அரசைக் கண்டித்து, கைகளையுயர்த்தி, கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக வந்து குவிந்த கூட்டத்தை ஏறிக்கொண்டு வெளியே சென்ற பேருந்துகள் ஒருபக்கமாக சாய்ந்தபடியே சென்றன. அனேக வண்டிகளில் மேற்கூரையில் காய்கறிக்கூடைகளோடு, நிறைய இளைஞர்களும் குந்தியிருந்தார்கள்.

சவுண்டும், தாயம்மாவும் திணறிப்போனார்கள். மூட்டைகள் வேறு கனத்தன. தாயம்மாவின் தோள்பட்டைகள் வலித்தன.
"தாயி... இங்கயே நில்லு. சீட்டு புடிச்சிட்டு வந்து கூட்டிகிட்டுப் போறேன். எங்கியும் போய்டாத. அப்புறம் கண்டுபிடிக்கிறது கஷ்டம்" என்று சொல்லிகொண்டே கூட்டத்தின் நடுவில் புகுந்து சென்றான் சவுண்டு.

நேரம் கடக்கக் கடக்க, மக்கள் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே போனது. கூட்டமும் மூட்டை முடிச்சுகளுமாக அந்த ஆசியாவிலேயே பெரியதான பேருந்து நிலையம் தத்தளித்துக் கிடந்தது. இப்பொழுதே மணி இரவு ஒன்பது ஆகிவிட்டது.

'க்ர்ர்ர்த்தூ...நாய்ப் பொழப்பு. ஜெனங்களுக்கு மருவாதி ஏது? ஊரவிட்டு இந்த போக்கத்த ஊருக்கு பொழைக்க வந்ததுதான் தப்பாப் போச்சி.' தாயம்மா சலித்துக்கொண்டாள். குழந்தை ஆசை ஆசையாய்க் கேட்டு, பத்து ரூபாய்க்கு பலாச்சுளை வாங்கிவரச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 'சத்தியமா வாங்கிட்டு வரணும்' என்று கண்டிப்புடன் சொல்லி இருந்தாள். இங்கே வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று பார்த்தால், அது நடக்காது போலிருக்கிறது.

முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகியும் சவுண்டு வரவில்லை.
'பாவம், அது லோல் படுது. பேசாம தீவாளிக்கு ஊருக்கு போகாமயே இருந்திருக்கலாம்,' என்று முனகிக்கொண்டாள் தாயம்மா.

ஒரு மணி நேரம் கழித்து வந்தான் சவுண்டு. அவன் தளர்ந்த நடையிலேயே தெரிந்தது, அவனுக்கு சீட்டு கிடைக்கவில்லையென்று.
'என்னாச்சு?' என்று சத்தம்போட்டுக் கேட்டாள் தாயம்மா.

"இல்ல தாயி. போற போக்கப்பாத்தா நிண்டுகிட்டுக்கூட போகமுடியாது போலிருக்கு" என்று சவுண்டு ஈனக்குரலில் சொன்னான். "இதுக்கெல்லாம் ஏதாவது செய்தாகணும்." என்று பல்லை நறநறத்தான். 'இதுக்கெல்லாம் ஏதாவது செய்யணும்' என்று சவுண்டு சொன்னால் அவன் அதீத கோபத்திலிருக்கிறான் என்று அர்த்தம். சில பல சமயங்களில் அடிதடிகளில் முடிவதுமுண்டு!

தாயம்மாள் திடீரென எழுத்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டாள். "இங்கன பாரு. இங்க வந்து சத்தம் போடறது, கோவப்படுறது, டென்ஷனாவறது, நியாயம் கேக்குறேன்னு அதிகாரிங்க கூட சண்ட போடறது, இதெல்லாம் வேணாம். அப்புடிப் பண்ணீன்னா, நான் திரும்பி வீட்டுக்குப் போய்ட்டே இருப்பேன்." என்று பதற்றத்துடன் கத்திச்சொல்லி எச்சரிக்கை செய்தாள்.

"இல்லை. போவலை." என்று இறுகிய முகத்தோடு சொன்னான் சவுண்டு. "என்ன பண்றதுன்னு தெரியலை."

அப்போது ஒரு ஆள் வந்து அவர்களை அணுகி நின்றான்.

"எங்கம்மா போவணும்?"

"நாகப்பட்னம். அங்கேருந்து வேற பஸ்ஸு புடிச்சு எங்க ஊருக்குப் போகணும்." தாயம்மா சொன்னாள்.

"நாகப்பட்டணம் போனா போதுமா, அங்கேருந்து நீங்க போஈடுவீங்கல்ல?"

"ஆமா சார். நாகப்பட்னம் போனாப் போதும்."


"எத்தினி, ரெண்டு பேரா? ஒரு ஆளுக்கு அறுனூறு. ரெண்டு பேருக்கு ஆயிரத்து இரு நூறு ஆகும். உக்காந்துக்கிட்டே போகலாம். என்ன சொல்றீங்க? வர்ரீங்களா?"

தாயம்மாள் சவுண்டைப் பார்த்தவாரே பதில் சொன்னாள். "அவ்வளவு காசா?"

"இன்னாவாம்?" சவுண்டு கேட்டான்.

தாயம்மாள் சவுண்டின் காதருகே சென்று இரைந்து சொன்னாள். "ஒரு ஆளுக்கு ஆறு நூறு குடுத்தா, குந்திக்கிட்டே போகலாமாம். என்ன சொல்றீங்கன்னு கேக்கறார்!"

சவுண்டுக்கு அந்தத் தொகை பெரும் அதிர்ச்சியைத் தந்தது. "அப்போ, ஆயிரத்து இரு நூறு ஆவுமே?!" ஏனென்றால் அவனிடத்தில் சொல்லிவைத்தற்போல மிகச் சரியாக ஆயிரத்து இரு நூத்துச் சில்லரை மட்டுமே இருந்தது.

"வேண்டாம் சார், அவ்வளவு காசு இல்ல." என்று தாயம்மா பதில் சொன்னதும் அந்த ஆள் அங்கிருந்து கிளம்பிச்சென்றான்.
போனால் போகட்டுமென்று கொடுத்துவிடலாம்தான். ஆனால் தீபாவளி செலவுக்கு பத்துபைசா மிஞ்சாது. சவுண்டு மனதுக்குள் கணக்குப் போட்டான்.
சற்று நேரத்தில் பதற்றத்தோடு சொன்னான். "இல்ல தாயி. இப்போ நூறு, ஆயிரம்னு பாத்தா வேலைகாவாது. எனக்கு மலரப் பாக்கணும்போல இருக்கு. செலவைப் பாக்காம போய்டலாம். அங்க போய் ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம்," என்று நிதானமான சன்னக் குரலில் சொன்னான்.

ஆனால் வந்த ஆள் அந்த பெருங்கும்பலுக்குள் கலந்துபோயிருந்தான். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லையோ எனப்பட்டது தாயம்மாவுக்கு.

"நீ சித்த இங்கயே இரு. நான் இதோ விசாரிச்சிட்டு வர்ரேன்," என்று சவுண்டுவிடம் உரக்கச் சொல்லிவிட்டு, கூட்டத்துக்குள் புகுந்துபோனாள் தாயம்மாள்.

ஐந்து நிமிடத்தில் திரும்பிவந்தவள் சவுண்டுவிடம் சொன்னாள் : "இங்கேருந்து கொஞ்சம் தொலைவு மேற்கால போனா, தனியாருங்க வண்டி கெடக்குதாம். அங்கன வெசாரிச்சி போகச்சொல்லுறாங்க." என்று சொல்லிவிட்டு, மூட்டைமுடிச்சுகளைத் தூக்கத் தயாரானாள்.

***
இப்பொழுது மணி இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு வழியாகத் தேடி அலைந்து இங்கே வந்துவிட்டார்கள். இந்தப் பேருந்து நிலையம் வேறு விதமாக இருந்தது. மனிதர்கள் மட்டுமல்ல, பேருந்துகளும்கூட வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்தன. அங்கிருந்த கூட்டத்துக்கு பாதி குறைவாக இருந்தது. அங்காங்கே மக்கள் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பேருந்து அருகிலும் காசு எண்ணி வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

சவுண்டு 'பாண்டி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம்' போர்டுக்காக சுற்றி சுற்றி வந்தான்.
ஒரு இடத்தில் போர்டு இருந்தது. எம்பிஎன் பஸ் சர்வீஸ். அந்தக் கூட்டத்துக்குள் நுழையும்போதே தானும் தாயம்மாவும் வித்தியாசப்பட்டிருப்பதை உணர்ந்தான். பளபள வேட்டி சட்டைகளும், பேண்ட்டு ஷர்ட்டுகளும் அணிந்த ஆண்களும், மேட்டுக்குடி ரக பெண்களும் குழுமிக்கிடந்தனர். ஒவ்வொருவரையும் கடந்தபோது விதம்விதமா செண்ட்டு வாசனை அடித்தது. இவர்களைப் பார்த்ததும் அவர்கள் சற்றே முகம் சுளித்து விலகுவது தெரிந்தது.

"நாகப்பட்டினம் ரெண்டுக்கு எவ்வளவு சார்ஜ் ஆகும்?" சவுண்டு அங்கே டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டான்.
அந்த ஆள் நிமிர்ந்து பார்த்துவிட்டு சற்று யோசனை செய்தவாறு சொன்னான். "இங்கே ரேட்டெல்லாம் ரொம்ப ஜாஸ்திய்யா. உனக்குக் கட்டுப்படியாவாது. கோயம்பேடு போறதுதானே?"

சவுண்டு, "ம். என்ன சொல்றீங்க?" என்று வினவினான். தாயம்மா சங்கோஜப்பட்டு நெளிந்தவாறு நின்றாள்.
"காது கொஞ்சம் கேக்காது. கொஞ்சம் உறத்து சொல்லுங்க," என்றாள் தாயம்மா.
"எழுனூத்து அம்பது ரூபா. ரெண்டு பேருக்கு ஆயிரத்து ஐநூறூ. அதுகூட சீட்டு இருக்கான்னு பாக்கணும்யா." என்று உரத்த குரலில் சொன்னார் டிக்கெட் புக் செய்பவர்.

இந்த விசாரணையின் தாமதங்களால் பின்னாலிருந்த கூட்டம் அவர்களை விலக்கித் தள்ளியது.

சவுண்டும் தாயம்மாவும் மிகவும் தளர்ந்து போனார்கள்.
"என்ன செய்ய்யலாம்?" என்று சவுண்டுவின் காதருகில் கத்தினாள் தாயம்மா.

சட்டென்று பதில் சொன்னான் சவுண்டு. "நீ மட்டும் போ தாயி. நான் லாரி புடிச்சி எப்புடியாவது வந்து சேர்ந்துடரேன்."

இரண்டு பேருக்கும் நடுவில் நீண்ட மௌனம் நிலவியது.

பின்பு சவுண்டு சொன்னான். "நீ இங்கயே இரு. நான் டிக்கெட் வாங்கியாரேன்."

திரும்பவும் தயங்கித் தயங்கி அந்தக் கூட்டத்தில் புகுந்தான். அங்கிருந்தவர்கள் அவனை வேண்டா விருந்தாளியாகவே பார்த்தார்கள்.
"யோவ் தள்ளிப்போய்யா, இங்க உங்களுக்கு பஸ்ஸு கிடக்காதுய்யா. திருவள்ளுவர்ல ட்ரை பண்றதுதானே? இங்க வந்துட்டான் வசதி தேடி." என்று உரக்கக் கத்தி சலித்துக்கொண்டார் ஒருவர்.

"உங்கள மாதிரி நாங்களும் ஊருக்குப் போய்தானே ஆகணும்? ஏன், நாங்கள்ளாம் இங்க வரக்கூடாதா?" சவுண்டு அந்த ஆளை நிமிர்ந்து கேட்டான்.

"அட, ரோசத்தப் பார்ர்ரா.... போ... போய் வாங்கிக்க. நானா வேண்டாம்னேன். ஏம்பா கிளார்க்கு, இந்த மாதிரி ஆளையெல்லாம் ஆம்னில ஏத்தினா எப்படி? நாங்களாம் வரணுமா வேண்டாமா? தள்ளிப்போய்யா" என்று எகிறினார் ஒரு வெள்ளைச்சட்டை ஆள்.

ஏதேதோ தள்ளுமுள்ளுவில், சவுண்டு அருகில் வந்துவிட்டான். "சார். நாகப்பட்னம் ஒரு டிக்கெட் குடுங்க."

"இப்பத்தானே சொன்னேன். ரேட் ஜாஸ்தின்னு."

"பரவாயில்ல. ஒரு டிக்கெட் கொடுங்க."

இதற்குள் உள்ளேயிருந்த கண்ணாடிக் கேபினுக்குள் இருந்து ஒரு அதட்டல் குரல் வந்தது. "டேய் ராமு, யார்ர்ரா அவன்?"

"டிக்கெட்டு கேட்டு தொந்தரவு பண்றான் அய்யா, இல்லைனாலும் போக மாட்டேங்குறான்."

"நீ இங்க வா."

"யோவ் இருய்யா, ஓனர் ஐய்யா கூப்பிட்றாங்க." என்று உள்ளே போனான், அந்தக் கிளார்க்.

"கொடுத்தா இரண்டாக் கொடு. ஒரு டிக்கெட்டாக் கொடுக்காத. அவன் பக்கத்துல கஸ்டமர் உக்காரத் தயங்குவாங்க. அப்படி வாங்கலைன்னா அவன போகச்சொல்லு. நான் சொன்னேன்னு சொல்றா."

"யோவ், வாங்கினா ரெண்டு டிக்கெட்டா வாங்கிக்க. ஒண்ணு எல்லாம் கொடுக்க முடியாதுன்னு ஓனரே சொல்லிட்டார்." என்று கத்திச் சொல்லினான் அவன்.

இப்போது தாயம்மாவுக்கு பதற்றம் அதிகமானது. சண்டைக்காரன் இந்த சவுண்டு. பட்டென்று அடித்துவிடுவான்.

"இதுக்கெல்லாம் ஏதாவது செய்தாகணும்..." என்றவாறு கூறிக்கொண்டே சடாரென்று கண்ணாடிக் கேபினுக்குள் பாய்ந்தான் சவுண்டு.

"ரெண்டு டிக்கெட்டுக்கு காசு பத்தலை. ஒரு டிக்கெட் கொடுத்துத்தான் ஆவணும் சார் நீங்க. ஏன் நான் காசு கொடுக்கலை? எனக்கு மட்டும் ஏன் இல்லைன்றீங்க? ஏழைங்கன்னா எளப்பமா? தலை காய்ஞ்சவனப் பார்த்தா உங்களுக்கு கேலியாப்படுதா? நாங்க கஷ்டப்படுற ஜாதி. எங்க ஒடம்பும் துணியும் வதங்கனாப்பலதான் இருக்கும். ஏன் உழைக்கறவங்களைக் கண்டா, உங்கள மாதிரி ஆளுங்க மரியாதை குறைவா நடத்துறீங்க? நாங்க என்ன புண்ணும் சீழுமா புடிச்சிக் கெடக்குறோம்?" என்று ஓனர் மேசைமீது கையை ஊன்றி, முஷ்டியால் குத்திக் குத்திப் பேசினான்.

தாயம்மாவுக்கு தலை கிறுகிறுத்தது. அந்த டிக்கெட் கிளார்க்கிடம் கெஞ்சினாள்.
"நாளெல்லாம் சித்தாள், பெரியாள் செய்யறவங்க நாங்க. வருசத்துக்கு ஒரு தடவதான் ஊருக்குப் போறோமுங்க. என் அஞ்சு வயசு கொழந்தையப் பாக்கணும்போல ஆசையா இருக்குங்க. கொஞ்சம் தயவு பண்ணுங்க. அவருக்கு காது மந்தம். அவரண்ட பேசி அவரை குழப்ப வேண்டாம் சார்." என்று கெஞ்சினாள்.

ஆனால் உள்ளே போன சவுண்டுக்கு பளார் என்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.
"வெளிய போடா நாயே. கூலிக்கு மாரடிக்கிர வேசிக்குப் பொறந்த சொறி நாயே. எங்கிட்டையா சவுண்டு குடுக்குற? கொண்ணுபோட்டுடுவேன். ஓடிரு. நான் யார் தெரியுமா உனக்கு?" என்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினார்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தாயம்மா, கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே சென்று, படாரென்று அந்த ஓனர் காலில் விழுந்து கெஞ்சினாள்.
"விட்டுடுங்க ஐய்யா. அடிக்காதிங்க. அது ஒரு வெகுளி."

"ஓடிப்போய்டுங்க. இந்தப்பக்கம் உங்களைப் பாக்கக்கூடாது இனிமே..."

தாயம்மா சவுண்டுவின் சொக்காயைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

"ஏன்யா, சொல்லி வச்சிருந்தும் இப்படிப் பண்ணிட்டியே... அசிங்கமாப்போச்சேய்யா, பாரு, எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க. இந்தக் கோவம்தான்யா உன்ன வாரிப்போடப்போவுது..." என்று கதறி அழுதாள்.

இருவரும் கையறு நிலையில் தங்கள் மூட்டைமுடிச்சுகளுடன் ஒட்டி நின்றார்கள்.
சவுண்டு சொன்னான். "இதுக்கெல்லாம் ஏதாவது செய்தாகணும்." அவன் வாயோரம் ரத்தம் வழிந்தது.

சிறிது நேரம் அங்கே அனைவரிடத்திலும் மௌனம் நிலவியது.
அந்த டிக்கெட் கிளார்க் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உள்ளே சென்று ஓனரிடம் சிறிது நேரம் ஏதேதோ பேசி எடுத்துச் சொன்னான். பின்பு வெளியே வந்து "சரி இங்க வா. ஒரு டிக்கெட் தர்றேன். எழுநூத்தம்பது கொடு."

தாயம்மாதான் சவுண்டுவின் சட்டை உள்பாக்கெட்டில் கைவிட்டு எடுத்து காசை எண்ணிக் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தான். "அதோ நிக்குதே அந்த பஸ்தான். கடைசீல போனீனா உன் சீட் இருக்கும். இப்ப பத்து நிமிஷத்துல கெளம்பும்."

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு திரும்பிவந்தாள்.
தாயம்மா அதிகமாக கலவரத்தில் கிடந்தாள். சவுண்டுவின் முகம் இறுகிக் கிடந்தது.

பிறகு தாயம்மா மட்டும் பேருந்துக்குள் ஏறி யாரையோ விசாரித்து அவள் சீட்டில் அமர்ந்துகொண்டாள். மூட்டைகளை சீட்டுக்கடியில் தள்ளிவிட்டுக்கொண்டாள். அவளுக்கு கதறியழ வேண்டும்போலிருந்தது.

ஜன்னல் வழியாகத் தலையை வெளியில் நீட்டி சவுண்டுவை அழைத்தாள்.
அவன் கீழேயிருந்து அவளைப் பார்த்தான்.
"எங்க போனாலும் உன்னோட ரோதனையாப் போச்சு. ஏதாவது வண்டியப் புடிச்சு பத்திரமா வந்துரு."
சவுண்டு அமைதியாக மீதப் பணத்தை அவளிடம் கொடுத்தான். "பத்திரமா வச்சுக்க."
"உனக்கு காசு வேண்டாமா. இந்தா." என்று இரு நூறு ரூபாயை அவன் கையில் திணித்தாள்.

ஒவ்வொருவராக ஏற இருக்கைகள் நிரம்பிக்கொண்டிருந்தன. சவுண்டு எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
பேருந்து கிளம்பி மெல்ல நகரும்போது தாயம்மா சொன்னாள்.
"பத்துரமா பார்த்து வந்துடு. இங்க ஏதும் பிரச்சினை பண்ணாதே."
"பார்த்துப் போ தாயி." என்று மட்டும் பதில் சொன்னான் சவுண்டு.
பிறகு அவன் பார்வையிலிருந்து பேருந்து மறைந்துபோனது.

***
சவுண்டுவின் இயற்பெயர் செல்லா. கொஞ்சமாகக் காது கேட்காது என்றாலும், பீடி, குடி, கூத்தி ஏதுமில்லையென்று தாயம்மாவுக்கு கட்டிவைத்தார்கள். சவுண்டுவின் தாய் இறந்த பிறகு தாயம்மா வீட்டிலேயே இருந்துவிட்டான். இருவரும் இளம் வயதுக்காரர்கள். அவர்களுக்கு தமிழ் மலர் பிறந்தது. பேர் வைத்தது சவுண்டுதான். பத்தாவது பாஸ் செய்திருக்கிறான். நன்றாகப் படிப்பான். நிறைய பத்திரிகைகள் படிப்பான். அரசியலும் வெளியுலகமும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவான். தமிழை அவ்வளவு சுலபமாகப் படித்துவிடுவான். அச்சுபோல எழுதுவான். காது பிரச்சினையால், அவனே தனது சொந்த முயற்சியில் அரசியலிலும், பொது விஷயங்களிலும் ஏடுபாடு காட்டுவான். கடிதம் எழுதச் சொல்லியும், மனுவெழுதச் சொல்லியும், கண்ணீர் அஞ்சலி எழுதச்சொல்லியும் தினம் யாராவது ஒருவர் வருவார்கள்.
வேலை செய்யும் நேரம் தவிர்த்து அவன் கையில் ஏதாவது செய்தித்தாள், பத்திரிக்கை அல்லது புத்தகம் இருந்துகொண்டே இருக்கும்.
யாராவது சந்தம் போட்டுப் பேச தயாராயிருந்தால் அவனும் அரசியல் பேசுவான். அவன் எல்லா அரசியல் கட்சிகளையும் குறை சொல்லிகொண்டேயிருப்பான். ஆனால் அவன் பேசுவதில் நியாம் இருப்பதாக பலபேர் புரிந்துகொண்டார்கள். பொதுப் பிரச்சினை என்றால் முன்னால் நிற்பான். வெள்ள நிவாரணம் போன்ற அரசு விவகாரங்களுக்கெல்லாம் கலெக்டர் ஆபீஸ் அடிக்கடி சென்று மனு எழுதிக் கொடுப்பான். அப்படி நிறைய காரியங்கள் சாதித்திருக்கிறான்.

நிறைய பேர் ஆச்சர்யப்படுவார்கள். கட்டிட வேலை செய்யுமிடத்தில் 'பெரியாள்' வேலை. தினம் உழைத்தால்தான் சாப்பாடு. காய்ந்துபோன தலை. உழைத்துத் தேர்ந்த இளைஞனுக்கே உரிய முறுக்கான உடம்பு. எப்போதும் சேவேறிய வேட்டி சட்டை. நல்ல குணம். அங்கிருக்கும் மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் முனுக்கென்று கோபம் வரும். இரண்டு முறை சென்று மனுக்கொடுத்தும் வேலையாகவில்லை என்றால், அது எந்த இடமாயிருந்தாலும் ரகளை பண்ணிவிடுவான். கலெக்டரையே பார்த்துக்கூட நேருக்கு நேர் விவாதித்திருக்கிறான். போலீஸ் ஸ்டேஷன் விவகாரமெல்லாம் சவுண்டுக்கு அத்துப்படி.

இப்படி 'சவுண்டு' விட்டு யாருக்கும் பயப்படாமல் பொதுச் சேவை செய்வதாலோ, அல்லது, காது சற்று மந்தம் என்பதால் அவன் அருகில் சென்று கொஞ்சம் 'சவுண்டு' போட்டுப் பேசுவதாலோ, அவனுக்கு 'சவுண்டு' என்ற பேர் நிலவிவிட்டது. செல்லா என்ற அவனின் இயற்பெயர் அனேகம்பேருக்குத் தெரியாது.

ஊரில் வேலை வாய்ப்புக் குறைந்தபோது சவுண்டுவும் தாயம்மாளும் சென்னை சென்று வேலை தேட முடிவெடுத்தார்கள். இப்போது நான்கு வருடங்களாக சென்னையில்தான். இவன் பெரியாள். அவள் சித்தாள். தினந்தோறும் வேலை கிடைத்தது. வருடம் ஒரு முறை தீபாவளிக்கு ஊருக்குப் போய், இரண்டு நாள் இருந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துவைத்ததை அங்கே கொடுத்துவிட்டு வருவார்கள்.

இப்போது தமிழ் மலருக்கு ஐந்து வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். தாயம்மா செலவுகளை இறுக்கிப் பிடித்து, ஒரு லட்சம் ரூபாயை மகள் பெயரில் பேங்கில் டெபாசிட் செய்திருக்கிறாள். ஓரளவு சந்தோஷத்துக்குக் குறைவில்லைதான். சவுண்டுவின் கோபத்தைத் தவிர்த்து!! வாரம் ஒரு முறையாவது ஏதாவதொரு பிரச்சினை. 'இதுக்கு ஏதாவது செய்யணும்,' என்று அவன் வாய் விட்டுச் சொன்னால், அன்று பிரச்சினைதான். சென்னை வந்த பிறகும் இதே கதை தொடர்ந்தது. ரேஷன் கடை, மளிகை, கட்சி அலுவலகம், நகராட்சி அலுகலகம், போலீஸ் ஸ்டேஷன், கிருஷ்ணாயில் கியூ என்று எதையும் அவன் விட்டுவைக்கவில்லை. ஒரு இடத்தில் அராஜகம் என்று கேள்விப்பட்டால் முதல் ஆள் இவன்தான். ஆனால் அனைத்து சண்டை சாட்சிகளும் பொது நலனுக்காக. தனக்கென்று கிடையாது. தன் சக கொத்தனாரை மேஸ்திரியும் கட்டிட உரிமையாளரும் அடித்துவிட்டர்கள் என்பதற்காக, அவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டான். போலீசும்கூட சவுண்டு பக்கம்தான் நியாயம் என்று அனேக முறை அனேக விஷயத்தில் சொல்லி இருக்கிறது!

முதலில் தமிழ் மலர். அப்புறம்தான் தாயம்மா. அவன் உயிர் மொத்தமும் தன் மகளிடத்தில் கிடந்தது. தாயம்மா பெருமூச்சு விட்டாள். 'ஐய்யோ கடவுளே, அந்த ஆளை சண்டை சச்சரவில்லாம இங்க கொண்டுவந்து விட்டுடேன்...".

***
நாகப்பட்டினம் இறங்கி, இன்னொரு பேருந்து பிடித்து, இதோ... காலை ஏழு மணிக்கு ஊருக்கு வந்துவிட்டாள் தாயம்மா. தமிழ் மலர் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டது. "அம்மா... அம்மா, அப்பா எங்கம்மா? அப்பா வரல்ல? எப்ப வருவாரும்மா?"

"கொஞ்சம் நேரம் கழிச்சி அப்பா வந்துடுவாரு என் செல்லக்குட்டி." என்று குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

குடிசைக்குள்ளே சென்று அனைத்தையும் எடுத்து வைத்தாள். தமிழ் மலரின் சொக்காயை எடுத்துக் காட்டினாள். வாங்கி வந்த பொம்மைகளை எடுத்துக்கொடுத்தாள்.

"என்னம்மா, மருமவன் எங்கே இன்னும் வரலை?" என்று அவள் அம்மா கேட்டாள்.
"வந்திடுவாரும்மா. எனக்கு மட்டும்தான் பஸ் கெடைச்சது. அவர் லாரி கீரி புடிச்சு வந்துடுறதா சொன்னார்."

எட்டு மணிக்கு நாலைந்து பேர் ஓட்டமும் நடையுமாக ஓடிவந்தார்கள்.

"தாயம்மா, உன் வீட்டுக்காரன் சென்னை கோயம்பேட்டுல, எம்பிஎன்  பஸ்
மொதலாளிய நடு ராத்திரில, கழுத்தறுத்துக் கொன்னுட்டானாம். சவுண்டுவ போலீஸ் அடிச்சி இழுத்துட்டுப் போறத டிவி நியூஸ்ல காட்டிக்கிட்டே இருக்காங்க. பாவம் சவுண்டு. மூஞ்சியெலாம் வீங்கிப்போய் கெடக்குது.'

தாயம்மா வயிற்றிலடித்துக்கொண்டு, டிவி பார்க்க ஓடினாள்.

தமிழ் மலர் பைக்குள் தன் சின்னஞ் சிறு கைகளை விட்டு பலாப்பழம் தேடிக்கொண்டிருந்தாள்!


2 comments:

ஊரான் said...

அதிகரித்த பேருந்துக் கட்டணத்தை சமாளிக்க முடியாமல் பலர் இப்படித்தான் அல்லல் படுகிறார்கள். இன்று அரசு பேருந்துகளிலும் இதுதான் நிலை.

Anonymous said...

aanal inru sithal periyal ellarukum nalla sambalam kidaikirathu enru kelvi patten

Post a Comment