My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.2.11

வேரின்றி மரமில்லை

முன்னோரிரவில் உள்வாங்கி
முன்னூற்றாம்நாள் வெளித் தள்ள
அன்றோரிரவில் அம் மனையாள்
ஆர்ப்பரித்து வலித் துடித்தாள்.


காலால் உதை யுதைத்தும்,
தலைகீழாய்ப் புரண்டு வந்தும்,
தண்ணீர்க் குட முடைத்தும்,
தரை வீழ்ந்ததோர் குழவி.


ஏக்கமுற 'மகள்' என்ற செவிலி.
எதிர்பார்ப்பில் காத்திருந்த சுற்றம்.
மகளா வென முணுமுணுத்து
மருகி நின்ற பெற்றோர்.


சாம்பல் நிறம்பூசி - சிறு மகள்
செவ் விரல்களை மடக்கி
குருதிக் கறையோடே
குறுகிப் படுத்திருந்தாள்.
சிறு செவ்வாய்த் திறந்து,
சென்னிறக் கையசைத்து,
கீச்சுக் குரலெடுத்து - முதன்முறை
கேவி அவள் அழுதாள்.
முலைப்பா லுண்ணும் போது
தாயின் முகம் பார்க்கில்,
மூச்சுக் காற்றில் முகங்கருக
முகத்தை மூடிக்கொண்டாள்.


'நீயுமா பெண்ணானாய்,
நான் பெற்ற மகவே - தெரியுமா?
காய்க்கும் மரங்க ளிங்கே
கால்தூசிக்குச் சமானம்'


'நீயேன் மகளானாய், இங்கே
நான் பெற்ற மகவே - புரியுமா?
கிளைகளுக்கிருக்கும் மதிப்பு
கீழிருக்கும் வேருக்கில்லை'


மூச்சுக் காற்றில் முகந்திணற,
முனகும் வார்த்தை நெஞ்சு சுட,
கையறு நிலையிலேயே - அவள்
கண்ணயர்ந்து போனாள்.


'மகள்' எனும் குற்றத்தால்
சுற்றத்தால் கிள்ளப்பட்டு,
தூக்கத்திலும் கேவியழுதே,
திரும்பவும் கண்ணயர்ந்தாள்.


***


'அம்பாரத்து ஆனைப் பொம்மை,
அழகான கரடிப் பொம்மை'
கேட்டு ஏங்கிய மகளுக்கு
கிடைத்ததோ ஒரு கிலுகிலுப்பை.


தெருவிலோடி விளையாடித்
திரிந்த 'மகன்' கூட்டம், அங்கே.
புறக்கடைத் தனிமையிலே சுதந்திரமாய்
புலம்பி விளையாடும் மகள் - இங்கே.


***


'ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;
இனி 'மகன்' என்போன் கல்வி கற்க;
பிறிதொரு வீடுபோகும் பெண் நீ - இனி
பெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.'


'சிறுமியெனில் சிந்தனை எதற்கு?
சிறு மதங்களில் முடங்கிப் போ;
முசுலீமில் முக்காடைத் துவங்கு;
முகங்கவிழ் - இந்துவெனில்.'
'கன்னியெனில் பேச்சைக் குறை.
காதல் வந்தால் கட்டுப் படுத்து.
காதல் சொன்னால் கட்டுப்படு.
காதலனின் திராவகத்தை கவனம் கொள்.'


'ஆணின் அடிமையென்றுன்னை
அடையாளப் படுத்திக் காட்டு;
புன்னகை களைந்து, தாலி அணி;
புது மெட்டியணி அல்லது மோதிரமிடு.'


***


'காலையெழுந்து ஏவல் செய் - பின்
காற்றைப் பிடித்து பணிக்குப் போ.
மணாளன் வருமுன் வீடுதிரும்பி
மல்லிகை சூடிக் காத்திரு.'


'காமுற்றால் மட்டும் காமுறு.
கணவனின் பிள்ளை வரம் வாங்கு.
'மகன்' வேண்டி விதை விதைத்த
மணாளனின் கனவையே காண்.'


*** *** *** *** *** *** ***


ஆனால் ஈன்றது மகளென்றால்...
ஈன்றது மகளென்றால்...
மகளென்றால்...
...


ஆனால் ஈன்றது மகளென்றால்
ஆர்ப்பரித்து அறற்றாதே.
பட்டதெல்லம் போதும்; இனி
பாய்ந்திடப் பழகு.


'மகளா' என்று ஏக்கமுறும் 
மண்ணாங்கட்டிகளை ஏசு.
முணுமுணுக்கும் சுற்றத்துக்கு
முறந்துடைப்பம் காட்டு.


தன்மானங்கலந்து முலைப்பாலூட்டு;
தன்னம்பிக்கை வெறியேற்று.
எல்லோர் செவியிலும் விழும்படி இந்த 
இரகசியத்தை மகளுக்குச் சொல்:


"என் புத்தம் புது மகளே - 
நீ இன்றிலிருந்து...


விளையாடி மகிழ்.
பாடம் படித்து -
சுயமாய்ச் சிந்தி.
அடிமை வெறு.
அடங்க மறு.
அத்து மீறு.
சாதி சிதை.
மத மிகழ்.
தெய்வத்தை நிந்தி.
தாலி மறு.
காதல் செய்.
பெண்ணியம் போற்று.
பெரியார் பேண்.
பொது நலம் பேசு.
அரசியல் பழகு.
அறிவியல் அறி.
உழைத்தபின் உண்;
அதையும் பகிர்ந்துண்
எனத் தத்துவம் பேசு. 


என்றுமே இடித்துரை -
வேரின்றி மரமில்லை என்று!
யாம் இனி யாருக்கும்
அடிமையில்லை என்று!!"


- புதிய பாமரன்...

5.2.11

சரிகா ஷாவின் மரணமும், திவ்யாவின் தூக்கும் : பரிதாபத்தின் பரிமாணங்கள்!

திருக்குவளைக் கருணா நிதி, சாப்பாடு தேடி, திருட்டு ரயில் ஏறி வந்தார் - சென்னைக்கு.
அன்று அவர் 'பத்தோடு பதினொன்று'.
யாரும் அவருக்கு எந்தவிதத்திலும் பரிதாபப் பட்டிருக்க மாட்டார்கள்.
மாறாக அவரது வறுமையை சாடியிருப்பார்கள்.

ஒரு உதாரணத்துக்காகவோ, அல்லது,  தனது நகைச்சுவை உணர்வை தன் சக மந்திரிகளிடம் காட்டுவதர்காகவோ,
இன்று அதே கருணா நிதி (இன்றைய சூழலில் பல்லாயிரம் கோடிகளில் ஒருவர்) ஒரு 'மஞ்சப் பையை' கக்கத்தில் அடக்கிக் கொண்டு, ஏழையோடு ஏழையாக, ஒரு ரூபாய் அரிசி வாங்க
ரேஷன் கடை வரிசையில் நின்று, இந்த முறையும் அரசாங்கத்தை ஏமாற்றாமல், உண்மையிலேயே ஒரு ரூபாய் கொடுத்து
அரிசி வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்? :

தமிழகம் கண்ணீரில் தத்தளிக்கும். தூர்தர்ஷனில் மூன்று நாட்களுக்கு துக்கப் பாட்டு. உணர்ச்சிவயப்படும் தொண்டர்கள்
தீக்குளிப்பார்கள். தாய்மார்கள் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதறுவார்கள். விதியையும் கடவுளையும் மண் வாரித் தூற்றி
சாபமிடுவார்கள்.

ஏனிந்த முரண்பாடு?

திருக்குவளைக் கருணா நிதி தலை காய்ந்து போய், உடல் வாடி, உழைத்த வியர்வையின் வாசத்தோடு, தமிழகத்தின் மெஜாரிட்டி மக்களில் ஒருவராக, டிக்கெட்டு வாங்க காலணாயில்லாமல், ரயிலில் அமர்ந்திருந்தார்.
இவருக்காக கண்ணீர் விட வேண்டிய மக்கள் கண் மூடி மௌனமாய் இருந்தார்கள். விதியையும் கடவுளையும் மண் வாரித் தூற்ற வேண்டிய மக்கள், இவரை ஏளனப் பார்வை பார்த்தார்கள்.
ஏனென்றால் அந்த மக்களைச் சுற்றியிருந்தவர்கள் இப்படித் தலை காய்ந்து போனவர்களின் நடுவிலேயே, பிறந்து, வாழ்ந்து,மடிந்துபோயிருந்தார்கள். இந்த ஊரே கோவணம் கட்டிக் கொண்டிருந்தபோது, இன்னொரு கோவணாண்டியைப் பார்த்து எவ்வாறு பரிதாபப் பட முடியும்?

இன்று, காட்சி மாறி, அவர் அந்தஸ்தில் உயர்ந்து, மிக மிகக் குறைந்த மைனாரிட்டி (எங்கோ கேட்டது போல இருக்கிறது) மக்களில் ஒருவராக, ராஜ ராஜ சோழ பரம்பரை போலவும் சித்தரிக்கப் படுகிறார். இவர் அரிசி வாங்கினால் ஏன் மக்கள் கலங்குகிறார்கள்? நம்மில் ஒருவராகத்தானே அன்று இருந்தார் என்று யாராலும் அதை சாதராணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லையே, ஏன்? ஏனென்றால் அவர் இன்று ஆண்ட பரம்பரை / வாழ்ந்த பரம்பரை / தின்று தீர்த்த பரம்பரை. இந்த இறக்க மனோபாவம்தான் மக்களைக் குழப்புகிறது. இறக்கப்பட வைக்கிறது.

இன்னும் சில உதாரணங்களைக் கூட எடுத்து வைக்கலாம் :

1. செல்வி ஜெயலலிதா காது, மூக்கு, கழுத்திலெல்லாம் ஜொலித்த தங்க நகைக் கடையை கழற்றி வைத்துவிட்டு, மக்களோடு மக்களாக பரதேசிக் கோலத்தில் நின்றபோது அல்லது அவருக்கு 'சிறைத் தண்டனை' என்று தீர்ப்பு வந்தபோது...

2. புரட்சிப் புயல் ராகுல் காந்தி திடுமென ஒரு குடிசையில் புகுந்து சட்டியிலிருக்கும் சப்பாத்தியை சாப்பிடும்போது...

3. காந்தி அண்ணல் அரையாடையுடுத்தி அல்லல் பட்ட போது...

4. எம்ஜியாருக்கு சாப்பிடும்போது புரைஏறினால்...

5. நேரு மாமாவின் சட்டையிலிருக்கும் ரோஜா கீழே விழும்போது...

***

அன்று, சரிகா ஷாவின் மரணத்தால், மீடியாக்கள் கொதித்தெழுந்து, தமிழக மக்கள் புரண்டு புரண்டு அழுது, போலிசார் உடனடி நடவடிக்கையெடுத்து, நீதி மன்றம் உடனடித் தீர்ப்பு எழுதி, எல்லாம் சரியாகத்தானே நடந்தது?

ஆனால், அதே கொத்தெழுதலும், கண்ணீரும், நடவடிக்கையும், நீதியும், இன்று - இந்த திவ்யா மரணத்தில், மறுக்கப்படுவது ஏன்?

ஏனென்றால் திவ்யா தலை காய்ந்து, ஏழ்மையில் வீழ்ந்து, தமிழகத்து மெஜாரிட்டியில் ஒருவராகக் கிடந்தாள்!

***


திவ்யா வறியவள்.
பசியின் வடு முகத்தில்.
“அதனால் அவள் திருடியோ”
ஆண்டைகள் அடிமைகளைத்தான்
சந்தேகிக்கிறார்கள்.
சொல்லித்தரும்
பள்ளிகள் திருடுகின்றன –
நிர்வாண சோதனை
இதுவரை நடந்ததில்லை.
சுடுகாட்டுக் கொட்டகையிலும்
ஸ்பெக்ற்றம் ஊழலிலும்
அரசு நிலத் திருட்டிலும்
திருடியவர்களை
யாரும் நிர்வாணப்படுத்தியதில்லை.
திருடாத குற்றத்துக்கு
திவ்யாவின் நிர்வாணம்
மரணத்தைக் கொடுத்தது –
அது திவ்யாவின் தன்மானத் தீர்ப்பு.
பகல் வெளிச்சத்தில்
பலகோடி மக்களுக்கு மத்தியில்
கூச்சல் போட்டுத் திருடிய
திருட்டுக் கும்பல் முகத்தில்
புன் முறுவல் – ஏனென்றால்
சி பி ஐ விசாரணையும்
காவிக் கட்டிட கோர்ட்டுத் தீர்ப்பும்
இவர்களை நிர்வாணப் படுத்தாது என்பது
அவர்களுக்கு
திருடுவதற்கு முன்பே தெரியும்.
இதுதான் ஆளும் வர்கத்தின்
மனசாட்சித் தீர்ப்பு..
மக்கள் தீர்ப்பு மட்டுமே
உண்மையான திருடர்களை
நிர்வாணமாக்கும்!