My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

29.12.11

நேத்திருந்தான் இன்னைக்குச் செத்தான்


சுரைக்காய் கொடியேறி
கூரையெல்லம் சுற்றிவர
வெள்ளைச்சுரைப் பூவெல்லாம்
வெண்பனியில் மினுக்கமிட
குடிசை மண்ணடுப்பில்
கைநீட்டிக் குளிர்காய்ந்து
காத்திருந்தேன் ஆண்டைக்கு.
வெள்ளி முளைத்த பின்னே
விடிந்து தொலைக்குமுன்னே
மண்வெட்டி தோளேற்றி
மடைமாறப் போகவேணும்.
ஆண்டையின் கனைப்புக்கு
அமைதியாய்க் காத்திருந்தேன்.
வெடிப்பு மண் சுவரில்
வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
வெறித்தே எனைப் பார்க்கும்
எனது பறை.

மார்கழிப் பனிக்குளிரால்
மார்பிலே சளிபிடித்து
அன்றாடம் இழுத்திருக்கும்
அழகுநாய்க்கன் செத்துவிட்டால்
அடிவாங்கத் துடிக்கும்
எனது பறை.

குந்தவும் நேரம் வேண்டாம்
குடிக்கவும் கஞ்சி வேண்டாம்.
நாளெல்லாம் சாராயம்
நாலுகட்டுச் சுருட்டுபோதும்.
'நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்
நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்'
தாளமேதும் தவறாமல்
தனித்தொலிக்கும்
எனது பறை.

சேரியெல்லாம் சேர்ந்திருந்து
சேர்த்துவைத்த மொத்தச் சொத்து.
ஏழிலே நாலு பறை
மீதம் மூன்றும் தப்பட்டை.
அத்தனையும் சேர்ந்துவிட்டால்
அதகளம் தான் பறக்கும்.
'நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்
நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்.'
தாளமேதும் தவறாமல்
தனித்தொலிக்கும்
எனது பறை.

பன்றியொன்று பதறியோட
பாதை பார்த்து நடந்துவந்த
ஆண்டை கனைத்துச் சொன்னான்:
"அழகுநாய்க்கன் செத்துவிட்டான்
மண்வெட்டி எடுத்து நீயும்
மடை மாறப் போகவேண்டாம்
பத்துபேரைக் கூட்டிக்கொண்டு
பறையடிக்க வந்துவிடு.
நாளெல்லாம் சாராயம்
நாலுகட்டுச் சுருட்டு
ஆளுக்குப் படியரிசி
அளந்துதான் நான் தருவேன்.
சுடுகாடு போகும்வரை
சுணங்காமல் அடிக்கவேணும்."

'நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்
நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்.'
காய்ச்சிப் பறையடிக்க
கைகள் தினவெடுக்க,
வெடிப்பு மண் சுவரில்
வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
வெறித்தே எனைப் பார்க்கும்
எனது பறை.

உள்ளிருந்து கோபத்தோடு
வெளியில் வந்தான் எனது மகன்,
ஆண்டையும் அதிர்ந்துபோக
அள்ளித் தெளித்த வார்த்தை :
"சேரியெல்லாம் சேர்ந்திருந்து
சேர்த்துவைத்த மொத்தச் சொத்து.
ஏழிலே நாலு பறை
மீதம் மூன்றும் தப்பட்டை.
சீச்சீ இனி எங்கள் பறை
சாவுக்கேதும் அடிக்காது.

ஒட்டிப்போன வயிறுக்காக
ஒண்ட ஒரு குடிசைக்காக
ஊருக்குள் நுழைந்து போக
உட்கார்ந்து சமமாய்ப் பேச
தோல்செருப்பை கால் அணிந்து
தெருவிலெல்லாம் நடந்துபோக
தனிக்குவளை தீயிலிட்டு
தேனீரைக் கூடிப் பருக
எங்கள் பறை இனி ஒலிக்கும்
எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்.
எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்.
எங்கள் பறை இனி ஒலிக்கும்."

அதிரும் பேச்சு கேட்டு
ஆண்டையும் ஓடிப்போனான்.
காய்ச்சிப் பறையடிக்க
கைகள் தினவெடுக்க,
வெடிப்பு மண் சுவரில்
வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
வெறித்தே எனைப் பார்க்கும்
எனது பறை
புதிய பறை!!

28.12.11

கதைகளுக்குள் மறைந்துகொண்ட கண்ணீர்த்துளிகள்"ப்ளீஸ், ப்ளீஸ், கடவுளே
கொஞ்சம் கருணை காட்டேன்.
ராமனின் காலடி பட்டுத்தான்
அகலிகை எழுந்திருக்கவேணுமுன்னா
அவ கல்லாகவே கெடக்கட்டும், சாமீ!"
பொருமிக்கொண்டாள்
பாவப்பட்ட சீத்தாதேவி.

000

வள்ளுவன் குரலுக்கு
வாசுகி ஓடிவந்தாள்.
அந்தரத்தில் ஆடியது
தண்ணீர்க் குடமும்
பெண் சுதந்திரமும்.

000

அஞ்சு பேருக்கும் சம்மதமுன்னா
அத்தனை பேருக்கும் பொண்டாட்டி.
தொட்டுக் கும்பிட்டுக்க…
அவதான் பாஞ்சாலி.

அஞ்சுக்குள்ள ஒருத்தனைத்தான்
அணைத்துக்கொள்ள பிடிக்குமுன்னு
அவளாவே புலம்பியிருந்தாலும்
அவ மாபாதகி பாஞ்சாலி.
மத்த நாலு பேருக்கும் வப்பாட்டி.

நல்ல வேளை.
நாசூக்காக் கூட
அந்தப் பாஞ்சாலி
அப்படியேதும் சொல்லிக்கலை.
மென்னு முழுங்கிக்கிட்டதால
மகாபாரதப் பொஸ்தகத்துல
கருணைக்கொலை ஏதும் இல்ல.

25.12.11

விடுகதைகள் விடைபெறலாம்வானென்றும் பார்;
வெகுண்ட வளியென்றும் பார்;
நன் நிலவென்றும் பார்;
நீள் நதியென்றும் பார்;
சேர் முகிலென்றும் பார்;
சின்னஞ் சிறு பறவையும் பார்;


அண்ட வெளியென்றும் பார்;
அகண்ட அகிலென்றும் பார்;
பூக்கும் புவியென்றும் பார்;
புத்தம் புதுவண்டம் பார்;
காக்கும் கானென்றும் பார்;
காட்டாற்று வெள்ளமும் பார்.


ஏதில்லையோ ஏய் மனிதா?
ஈதில் ஏதுங்குறை கண்டாய்?
யாதும் பொது; யாவர்க்கு மெப்போதும்;
எக்காலும் இவை நமக்கே!
தீதாகா இவை நமக்கு
தீர்ந்திதைப் பகுத்தால்.


ஆய்; அனைத்தும்;
ஆங்கொன்றையும் விடாமல்.
ஏவி மேய், எவ்வுலகும்.
அறிவினப்பாலுள்ளதை அறி.
அறிதலின் தெரிதலால்
அண்டம் விளக்கு.

இறை யாதென் றியம்பு.
இலையென்றால் தெளி.
இயற்கையில் புரள்.
ஏதொன்றையும் பயில்.
தீதையும் நன்மையும்
தீர்த்துப் பகுத்துவிடு.
ஈவு இருப்பின் தயங்காது
இன்னு மறி; இன்னு மறி!


பசி ஏன்; பணம் ஏன்;
பாராளும் ஆதிக்க மேன்;
கூனும் பாமரம் ஏன்;
கூர்பார்க்கும் ஆயுதமேன்;
வானிலும் வாணிக மேன்;
வர்க்கம் பேதம் ஏன்;
மதம் ஏன்; மார்க்கம் ஏன்;
மனிதத்தில் மிருகமேன்...


ஏன், ஏன், ஏனென்று,
எப்பொழுதிலும் வினவு.
வினவெனும் ஆயுதத்தால்
விடுகதைகள் விடைபெறலாம்.
தொடர்கதைகள் தடைபடலாம்.
தோட்டாக்கள் புறமிடலாம்!

24.12.11

பெரியார் நினைவேதியர் தீயவர்.
தூயவர் ஆகிலர்.
வடவழிச் சந்திலே
வந்தவர் ஆரியர்.
தீயவர் தீண்டினர்
திராவிடம் கருகவே.

வாதிடச் சோதிடம்
சாதகம் பெருகிட
சாதிமை தோன்றிட
பேதமை மலிந்தன.
ஆதலின் ஆதலின்

வேதியர் தீயவர்.
தூயவர் ஆகிலர்.

தீயினால் வேள்விகள்
தெய்வங்கள் நீண்டன.
வேதமும் வருணமும்
புணர்தலில் பிறந்தன
சாதியும் பேதமும்.
தீண்டத் தகாரென
திராவிடர் ஆகினர்.
திரிந்தனர் பிரிந்தனர்.
ஆதலால் தீயவர்
ஆரிய வேதியர்.
தூயவர் ஆகிலர்.

தீண்டவும் தகாதவர்
ஆரியர் எனக்குறி.
பார்ப்பனம் பழிக்கவும்
ஆரியம் 
அகலவும்
திராவிடம் தழைக்கவும்
தினவுசேர் தோள்கொடு.
சிந்தைசேர் அறிவொடு
பெரியார் பேணுவம்!
 
பெரியார் போற்றுவம்!!
பெரியார் போற்றுவம்!!!

மரம் நெ.123


அது ஒரு ஆள் அரவமற்ற ரோடு. எப்பொழுதாவது ஒரு முறை வண்டிகள் போகும், வரும். ஆட்கள் நடமாட்டம் என்பது மிகவும் அபூர்வம்தான். ஏனென்று கேட்க ஒரு ஆள்கூட இருக்காது. தவித்த வாய்க்கு தண்ணீர் கிடக்காது. 

நேற்று நூற்றுப் பதினைந்தில் முடிந்தது. இன்று நூற்றுப் பதினாறில் துவக்கம். குடைபோல் விரிந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு புங்கை மரத்திலிருந்து துவங்க வேண்டும். அரையடிக்கு அரையடி மரப்பட்டையை செதுக்கி, அந்த சதுரத்தில் வெள்ளைப் பெயிண்ட் அடித்து, அதன் மீது கருப்பு பெயிண்டில் நெம்பர் எழுதவேண்டும். வேலை நேர்த்தியாக இருக்கவேண்டும். சதுரம் பார்வைக்குத் தெரியும்படி ரோட்டுப்பக்கமாக இருக்கவேண்டும். எண்கள் கோணல் மாணலாக இருக்கக்கூடாது. மேஸ்திரி வந்தால் திட்டித் தீர்த்துவிடுவான். நடுவில் ஏதாவது மரங்கள் தவறுதலாக விடுபட்டுப்போனால் அவ்வளவுதான். சீட்டுக்கிழித்துவிடுவார்கள். 

மரத்தின் கீழே புதர்கள் இல்லாமல் தோதாய் இருந்தால் ஒரு நாளைக்கு நாற்பது அல்லது ஐம்பது மரங்கள் செதுக்கலாம். முள்ளும் புதர்களும் மண்டிக்கிடந்தால், மரத்தின் கீழே நான் நிற்கத் தேவையான அளவுக்கு வெட்டிச் சுத்தப்படுத்தியாகவேண்டும். அப்படியிருந்தால் ஒரு நாளைக்கு தோராயமாக முப்பது மரங்கள். இந்த ரோட்டின் இரு பக்கங்களிலும் மரங்களும் அதிகம், புதர்களும் அதிகம். அந்தி சாய்வதற்குள் ஒரு முப்பதைத் தொட்டுவிடுவேனா? பார்க்கலாம்.

சைக்கிள் ஹாண்டில்பாரின் ஒரு பக்கம் மாட்டிவைத்திருந்த பெயிண்ட்டு தகர டப்பாக்களையும், இன்னொரு பக்கம் மாட்டியிருந்த சாப்பாட்டுத் தூக்கையும் கீழே இறக்கி வைத்தேன். கோணியில் சுருட்டி பின் கேரியரில் வைக்கப்பட்டிருந்த பிரஷ்களையும், வெட்டுக்கத்தி, சுத்தி, உளியையும் எடுத்து தரையில் பரப்பி வைத்தேன்.

சட்டை வேட்டியைக் கழற்றி சுற்றி வைத்துவிட்டு, அரைக்கால் காக்கி டவுசரையும், கட் பனியனையும் போட்டுக்கொண்டேன். மார்கழி மாதத்துப் பனி இன்னும்கூட தன் மெல்லிய வெண்திரையை விலக்கிக்கொள்ளவில்லை. எட்டு மணிக்கான இளவெயில் உடலுக்கு இதமாயிருந்தது. சூரியனுக்கு இன்னும் கொஞ்சம் முதுகைக் காட்டி வெயிலை வாங்கிக்கொண்டேன். வேலை துவங்குவதற்கு முன்னான சோம்பேறித்தனம் என்னை மிகவும் நிதானப்படுத்தியது. கைகளை தலைக்குமேலே உயர்த்தி 'கட்டக், கடக்' என்று நெட்டி முறித்தேன். அந்தி சாய்வதற்குள் ஒரு முப்பது மரங்களுக்காவது செதுக்கி எழுதி முடித்தால், எனக்கு இருபது ரூபாய் 'எக்ஸ்ட்ரா பேட்டா' கிடைக்கும். குழம்பு செலவுக்காவது ஆகுமே?

வெட்டுக்கத்தியை கையில் எடுத்துக்கொண்டு புங்கை மரத்தை நோக்கிச் சென்றேன். புதர்கள் மண்டியிருந்தன. கைகளால் விலக்கி, கத்தியால் புதர்ச் செடியின் தண்டில் ஒரு முதல் வெட்டு வெட்டியதுதான் தாமதம்... படபடவென அடித்துக்கொண்டு, ஒரு ஜோடிக் கவுதாரிகள் நான்கடி உயரத்தில் பறந்துசென்று, தூரத்தில் அம்புகள் போல இறங்கி, புழுதி கிளப்பியவாறு வேகமாக ஓடின. அந்த முதல் சத்தத்தில் பக்கத்துப் புதரிலிருந்த ஒரு குள்ளநரி கூட திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓட்டம் பிடித்தது.

இங்கு காடை, கவுதாரி, புறாக்கள், மற்ற காட்டுப் பறவைகள் அதிகம் வசிக்கும். புதர்களை வெட்டும்போது, முட்டைகள் அதிகம் கிடைக்கும். சிலபொழுது, நான் வெட்டும் புதர்களில் மணிப்புறாக் குஞ்சுகள், காடை, கவுதாரிக் குஞ்சுகள் அதிகம் கிடைக்கும். கூடு, குழிகள் இருக்குமிடத்தில் புதர்கள் வெட்டப்பட்ட மாற்றம் தெரிந்தால், தாய்ப் பறவை தன் குஞ்சுகளையோ முட்டைகளையோ 'போட்டது போட்டவாறே' விட்டுவிட்டு ஓடிவிடும். அதனால் அந்தக் குஞ்சுகளை அப்படியே விட்டுவிட மனம் வராமல், ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்து, என் கிராமத்துப் பொடியன்களிடத்தில் கொடுத்துவிடுவேன். கவன சிரத்தையாகவும் அன்பு மேலிடவும் அவைகளை வளர்த்துவிடுவார்கள். எங்கள் தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் காடையோ, கவுதாரியோ, மணிப்புறாக் குஞ்சோ வளர்ந்துகொண்டேதானிருக்கும். 

கவுதாரிகள் விட்டுச் சென்ற அந்த புதர்ச் செடியின் அடியில் இரண்டு தவிட்டு நிற முட்டைகள் இருந்தன. அதை எடுத்துவந்து, சுற்றி வைத்திருந்த என் சட்டைமீது பத்திரமாக வைத்துவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்ந்தேன். 

குளிரும் வெயிலும் கலந்த மார்கழிப் பகலில் கடின வேலை செய்தாலும் அலுப்புத் தெரியாது. பதினோறு மணிக்கு ஏழு மரங்களைச் செதுக்கி எழுதி முடித்திருந்தேன். பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்து, சற்றே இளைப்பாறிவிட்டு, அதோ அந்த ஒதிய மரத்திலிருந்து துவங்குகிறேன்.

ஒதிய மரத்தின் கீழே புதர்கள் இல்லை. பசுங்கோரைகள் மட்டும் முழங்கால் அளவுக்கு வளர்ந்திருந்தது. கோரைகளை விலக்கிவிட்டு, என் மார்பளவு உயரத்தில், மரத்தின் மீது சதுரமாக மரப்பட்டையை செதுக்கியெடுக்க, உளியை சாய்த்துவைத்து, உளியின் தலையில் சுத்தியலால் ஒருயொரு தட்டுத்தான் தட்டினேன்.

சொத்தென்று ஒரு ஆந்தைகுஞ்சு அந்தக் கோரை மீது மெத்தென்று விழுந்தது. பதறிப்போய் கையிலெடுத்துப் பார்த்தேன். கொஞ்சம்கூட அடிபடவில்லை. உடலில் இறகுகளும் சிறகுகளும் இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைக்கத் தொடங்கியிருந்தது. பயத்தாலோ அல்லது இளங்குளிராலோ அதன் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் உடலுக்கு சற்றேனும் பொருந்தாத பெரிய தலையை நிமிர்த்தி, என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. 

மெல்ல அதன் தலையைத் தடவிக்கொடுத்து, இரு உள்ளங்கைகளையும் குவித்து அதை ஏந்திக்கொண்டேன். மணிப்புறாவாயிருந்தால் வீட்டுக்கொண்டுபோய் வளர்க்கலாம். வீட்டுக் குழந்தைகள், கூட விளையாடி மகிழலாம். காடைக் குஞ்சு என்றால், கட்டி வைத்து வளர்த்து, பிற்பாடு ஆக்கி உண்ணலாம். ஆனால் இது ஆந்தைக்குஞ்சு. ஒன்றுக்கும் உதவாது. 

'அட, முட்டைக்கண்ணால் முழிக்காதே...' என்று எண்ணிக்கொண்டே, மேலே நிமிர்ந்தால் என் நெற்றிக்கு நேராக, ஒரு பொந்து இருந்தது. அந்தப் பொந்துக்கு மிக அருகிலேயே இந்தக் ஆந்தைக்குஞ்சின் தாய் உட்கார்ந்திருந்தது.

என் பார்வைக்கும் அந்த பெரிய ஆந்தையின் பார்வைக்குமான இடைவெளி ஒரு அடி தூரம்தான். அவ்வளவு நெருக்கத்தில் ஒரு கொழுத்த, பெருத்த முண்டைக்கண் ஆந்தையைப் பார்க்க மிகவும் கலவரமாகத்தான் இருந்தது. இளம் பச்சையும், தங்க நிற வண்ணமும் கலந்து, சூரியக் கதிர்கள் போன்ற நெருங்கிய கோட்டு ஆரங்களால் ஆன அந்த ஆந்தைக் கண் பாப்பாக்கள், ஒளிர்ந்தன. கண்களின் சுற்றளவு அதன் வட்ட முகத்துக்கு பொருந்தாத அளவுக்கு மிகப் பெரியதாயிருந்தது. அதன் சிறிய வளைந்த மூக்கு, அந்த நேரத்தில் எனக்கு ஒரு பேராயுதம்போலப் புலப்பட்டது. காற்றில் இறகுகள் சிலுசிலுக்க, மாதுளைப் பரல் வண்ணத்தில் இருந்த கூறிய கால் நகங்களால் அழுந்தப் பிடித்து, அது கிளையில் அமர்ந்திருந்த விதம் யாரையும் பயமுறுத்திவிடும்!

அதன் முகத்தில் கோபம் கொப்புளித்துக்கிடந்ததை நான் உணர்கிறேன் என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு அது என்னை பார்வையாலேயே எச்சரித்துக்கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் என் கைகளையோ அல்லது என் முகத்தையோ அது கொத்திக் கிழிக்கலாம்.

'தெரியாமல் நடந்துவிட்டது. மன்னித்துக்கொள்' என்று மனதில் நினைத்துக்கொண்டே, கூண்டில் வைக்கலாமா வேண்டாமா எனும் குழப்பத்தோடு தவியாய்த் தவித்துக்கொண்டு, தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருந்தேன்.

"அதைத் திரும்பவும் பொந்துக்குள் விட்டுவிடுங்கள்." 

திடுமென எச்சரிக்கும் கீச்சுக்குரல் அலறியது. நான் திடுக்கிட்டேன். சுற்றும் முற்றும் யாருமில்லை. ஆந்தையின் அருகாமையும், அதன் பயங்கர உருவமைப்பும், தற்போதைய சூழலில் நாங்கள் இருவரும் பகையாளிகளாய் ஆகிப்போனதாலும், நான் அதன் தாக்குதலை எந்த நேரத்திலும் எதிர்பார்த்திருந்ததாலும், எனக்குள் பிரமை முற்றிப்போயிருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.

"தயவுசெய்து, அதைத் திரும்பவும் பொந்துக்குள் விட்டுவிடுங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் தூங்கும் நேரம் இது. இப்பொழுது தூங்கினால்தான், நான் இரவு வேட்டைக்குச் செல்லமுடியும்." அதே அலறும் கீச்சுக்குரல். சந்தேகமேயில்லாமல் ஆந்தைதான் அலறுகிறது! ஆந்தை பேசியதை நான் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டதும், பேரதிர்ச்சிக்குள்ளானேன். 

"நீ பேசுவாயா?" என்று கேட்கவும்கூட திராணியற்ற நிதானத்தில் நான் இருந்தேன். அது அலறிப்பேசியதில் இருந்த ஆச்சர்யத்தைவிட, அந்த அலறலில் கலந்திருந்த கோபமும் எச்சரிக்கையும் என் மனவலிமையை வெகுவாகக் குறைத்திருந்தது.

"நமக்குள் சண்டை வேண்டாம். திரும்பவும் சொல்கிறேன். அதை பொந்துக்குள் விட்டுவிடுங்கள்."

என் கைகள் தாமதிக்கவில்லை. அனிச்சையில் அவை ஒரு இயந்திரம்போல் இயங்கின. பொந்தருகே என் குவிந்த கரங்கள் சென்று விரல்களை விரித்தன. தன் சிறு கால் நகங்களால் பொந்தின் விளிம்பைப் பற்றியேறி, அந்தப் பொந்தின் விளிம்பிலேயே திரும்பி என்னைப்பார்த்தவாறு, வாகாக அமர்ந்துகொண்டது அந்த ஆந்தைக்குஞ்சு.

"நன்றி. ஆனால் மீண்டும் எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் தூங்கியாகவேண்டும்." இதற்கு அர்த்தம் நான் இந்த மரத்தை விட்டு அடுத்த மரத்துக்குப் போகவேண்டும் என்பதுதானே? சரி. இருக்கட்டும் ஆனால் ஒரேயொரு கேள்வி.

"நீ எப்படிப் பேசக் கற்றுக்கொண்டாய்?"

"திரும்பவும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள். நாங்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறோம். மரத்தைத் தட்டி ஒலியெழுப்பியது மட்டுமல்ல, என்னுடன் பேச்சைத் தொடர்வதும் தொந்தரவு செய்வதுதான். அநாகரிகமாக நடந்துகொள்ளாதீர்கள்."

எனக்கு சுருக்கென்றது. அட, எப்படித்தான் பேசக் கற்றுக்கொண்டாய் என்று தெரிந்துகொள்ளக் கேட்டால், நாகரிகம் அநாகரிகம் என்று பேச்சு அதிகமாகத்தான் போகிறதே?

இப்போது அது எப்படிப் பேசக் கற்றுக்கொண்டது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவலைவிட, அதன் மீது ஆத்திரம்தான் வந்தது. அது எனக்குக் கட்டளையிட்ட முறையில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. 

"நான் என் வேலையைத்தானே செய்கிறேன்? மரப்பட்டையை செதுக்கி, எண்ணைக் குறிப்பது என் வேலை."

"இருக்கட்டுமே. நீங்கள் செதுக்கும் மரத்தில்தானே என் பொந்து இருக்கிறது? நீங்கள் உளியைத் தட்டியதால்தானே என் மகன் அதிர்ந்து கீழே விழுந்தான்?"

"ஆமாம் அம்மா, நான் தூங்கிக்கொண்டே இருந்தேனா...அப்போது மரம் லேசாக அதிர்ந்தது. பிறகு நான் கீழே விழுந்துவிட்டேன்." அம்மாவைப் பார்த்தவாறே, குழந்தைக் குரலில் ஒத்து ஊதியது அந்த ஆந்தைக்குஞ்சு.

"ஆனால் நான் என் கடமையைச் செய்தாகவேண்டுமே?"

"அதற்காக என் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதே. நீங்கள் இந்த இடத்தில் வேலையைத் துவக்கும் முன்னரே, நான் இங்கு குடிவந்துவிட்டேன். இந்த மரமும், பொந்தும், இந்தச் சூழலும் எனக்குச் சொந்தமானவை. அதனால் எனக்கு இந்த இடத்தில் உரிமை அதிகம்."

"ஓ, உனக்கு இந்த இடத்தில் உரிமை அதிகமா? எந்தச் சட்டப் புத்தகம் சொல்கிறது உனக்கு உரிமை இருக்கிறது என்று?"

"இதைப் புரிந்துகொள்ள, யாரும் புத்தகமோ சட்டமோ படிக்கத் தேவையில்லை. பொது அறிவு இருந்தாலே போதுமென்று நினைக்கிறேன்."

அநாகரிகம், பொது அறிவு... வார்த்தைகளில் கொஞ்சம் வேகம் காட்டுகிறது இந்த ஆந்தை.

"கொஞ்சம் நிதானமாகப் பேசு. கோபப்பட்டுப் பேசுகிறாய் என்று நினைக்கிறேன்."

"ஆமாம். உரிமைகளைக் காத்துக்கொள்ள கோபப்படத்தான் வேண்டும். கெஞ்சிப் பேசினால் ஆகாது."

"நீ சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. இந்த மரத்தை நான் செதுக்கி எழுதவில்லையென்றால், எனக்கு பணம் கிடக்காது. பணம் இல்லையென்றால் உணவு கிடக்காது. என் பிள்ளைகளெல்லாம் பசியால் சாவார்கள். புரிந்ததா, போதுமா?" அட, நானும் கோபப்பட்டுவிட்டேன். குரலை உயர்த்தியிருக்கக்கூடாது.

"அதாவது, உன் பிள்ளைகளுக்கான உணவில் எனது உரிமையிழப்பு கலந்திருக்கவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படித்தானே?"

"விதண்டாவாதம் செய்கிறாய். உனக்குப் புரியும்படியாகவே கேட்கிறேன். நீ இரவில் இரை தேடுவதுபோல, நான் பகலில் உணவு தேடுகிறேன். அவ்வளவுதான்!"

"நீங்கள் எனக்கு விளக்கத்தேவையில்லை நண்பரே. நான் சொல்வதைப் புரிந்துகொண்டால் போதும். உங்களின் உணவுத் தேடலால் என் உரிமை பாதிக்கப்படுகிறது என்றுதான் நான் சொல்கிறேன். புரிந்ததா?"

ஆந்தை விளித்த 'நண்பரே' எனும் வார்த்தைக்குள், நக்கல் ஒளிந்துகொண்டிருப்பதை என்னால் சுலபமாக புரிந்துகொள்ளமுடிந்தது!

தரையிலிருக்கும் வெட்டுக்கத்தியை எடுத்து ஒருயொரு விசிறு விசிறினால், இந்த ஆந்தை இரண்டு துண்டுகளாய் விழுந்துவிடும். ஆனால் பக்கத்தில் குந்தியிந்த அதன் பரிதாபத்துக்குரிய ஆந்தைக்குஞ்சு அனாதையாகிவிடலாம். ஆனால் இந்த ஆந்தை துள்ளிவிழுந்து சாகும்போதுகூட, உரிமை கேட்கும் வியாக்கியானத்தை விடாது போலிருக்கிறதே?! இதன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நான் இந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டால், நான் விவாதத்தில் தோற்றவனென்று ஆகிவிடக்கூடும். ஆமாம். இந்த ஆந்தை அப்படித்தான் எடுத்துக்கொள்ளும்! அது எனக்கு அவமானம்தானே? 

"தூக்கம் வருகிறது. தூங்கட்டுமா?" ஆந்தை அலறியது. 

அதன் கேள்வி நயத்தில், அது பேச்சை முடிக்கிறதா அல்லது தொடர்கிறதா என்று புரிந்துகொள்வதில் குழப்பமிருந்தது. இல்லை. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. இரண்டிலொன்று பார்த்துவிடவேண்டியதுதான். ஏனென்றால் நான் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லையென்றே நினைக்கிறேன். எதற்காக எனது உரிமையைமட்டும் நான் அதற்கு விட்டுக்கொடுக்கவேண்டும்?

"இல்லை. நான் போகமாட்டேன். என் பணியை முடித்துவிட்டுத்தான் இங்கிருந்து செல்வேன். அப்படி என் பணியை நான் செய்கையில், சிலருக்கு தொந்தரவு இருக்கத்தான் செய்யும். ஒரு குள்ளநரிக்கும் ஒரு கவுதாரி ஜோடிக்கும் கூட நான் தொந்தரவு கொடுத்துவிட்டேன். வேறு வழியில்லை. நீதான் சொல்லேன்? யாருக்கும் தொந்தரவு தராமலா நீ வேட்டையாடுகிறாய்? ஒன்றைக் கொன்றுதானே நீ உண்கிறாய்? உன்னால் கொல்லப்படும் பொருளுக்கு அது தொந்தரவு இல்லையா? அதுவும் கொடுமையான தொந்தரவு! ஆனால் நான் பணி செய்கையில், இங்கு நான் யாரையும் கொலை செய்யவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள், நண்பரே." சொல்லி முடிக்கையில் நான் சிரித்துக்கொண்டேன். பழிக்குப் பழி! எச்சரிக்கைக்கு எச்சரிக்கை!!

"நீங்கள் பேச்சை மாற்றுகிறீர்கள். இருந்தாலும் பதில் சொல்கிறேன். யார் உண்ணுவதானாலும் கொலை செய்துதான் உண்ணவேண்டும். கத்தரிக்காயை காம்பை அறுத்துக் கொலை செய்கிறீர்கள். ஆட்டைக் கழுத்தை நெறித்து கொலை செய்கிறீர்கள். ஆனால் இரண்டுமே கொலைதான். அவை உண்ணுதலின் பொருட்டான கொலை. வயிறு என்ற ஒன்று இருப்பதனால், நாம் தினந்தோறும் யாரையாவது கொலை செய்துகொண்டுதானிருக்கிறோம். இங்கே நான் என் உரிமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கொலையைப் பற்றிப் பேசுகிறீர்கள். பயப்படமாட்டேன். என் மகன் வளரும் வரை, இந்த பொந்து எனக்கு வேண்டும். அதைக் கேட்கும் உரிமை எனக்கிருக்கிறது. அதை விட்டுத்தற மாட்டேன். நீங்கள் கத்தியெடுத்தால் நான் கொத்த முயல்வேன். இந்தப் போராட்டம் உணவுக்கானதல்ல. உரிமைக்கானது. இப்பொழுதாவது புரிந்ததா?"

ஹைய்யோடா, கொத்த முயலுமாம்! அட வீராப்பு வியாக்கியானப் பண்டிதரே.... வா, ஒரு கை பார்த்துவிடலாம்.

குனிந்து வெட்டுக்கத்தியைக் கையிலெடுக்கும்போது, தூரத்தில் ஒரு மோட்டார் சத்தம் கேட்டது. கண்ணுகெட்டிய தூரத்தில் 'பிர்ர்ர்ர்ர்ர்ர்' என்று புகை கக்கிக்கொண்டே, ஒரு பச்சைக் கலர் மொபெட் வண்டி நிதான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. வேறு யார்? மேஸ்திரிதான்.

இந்த தூங்குமூஞ்சி ஆந்தையிடம் வாக்குவாதம் செய்ததில் மதியம் ஆகிவிட்டிருந்தது. இதோ மேஸ்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகிறார். நான் வெறும் ஏழு மரத்திலேயே நிற்கிறேன். இந்த மேஸ்திரி கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

வண்டி அருகில் வந்ததும் மேஸ்திரி நிறுத்தினார். "என்னைடா ஆரம்பிச்ச எடத்துலயே நிக்கற? எத்தினி மரம் முடிச்சே?"

"ஏழு மரம்தான் மேஸ்திரி. இப்ப மரம் நூத்தி இருபத்து மூணுல நிக்குது. வந்து.... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமுங்க." ஆந்தையை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு, கோரையையைக் கைகளால் விலக்கிகொண்டே, வண்டியருகில் வந்து நின்றேன்.

"என்னடா பேயறைஞ்சா மாதிரி இருக்க? உடம்பு கிடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு சொல்லு?"

"வந்து மேஸ்திரி, இங்க ஒரு ஆந்தை... இல்லை இல்லை, இங்க ஒரு ஆவி சுத்திக்கிட்டிருக்கு மேஸ்திரி. வேலை செய்ய விடமாட்டேங்குது. ஆளுமேல ஏறி மிதிக்கிறாப்ல இருக்கு. ஒரு மணி நேரமா இந்த மரத்துல எழுதறதுக்கு முயற்சி செய்யறேன். முடியலை."

"டேய், என்ன, என்னங்கடா, எனக்கே காது குத்துறியா? பொடிப்பசங்களையெல்லாம் கும்பல் சேத்துக்கிட்டு, பேய் இல்லேம்பே, பிசாசு இல்லேம்பே, கடவுள் இல்லேம்பே. மூட நம்பிக்கை அப்படீம்பே. உன்னோட பேச்சுக்கு எங்களால மல்லுகட்ட முடியாதேடா? இந்த மரத்துல ஆவி இருக்குன்னு நீயா சொல்ற? அதை நான் நம்பணும்?" நம்பிக்கையில்லாமல் என் முகத்தையே நோட்டமிட்டார் மேஸ்திரி.

"இல்லை மேஸ்திரி. சொன்னாக் கேளுங்க. இந்த மரத்துல ஏதோ ஒண்ணு இருக்கு. அது என் கையைக் கட்டிபோடுது மேஸ்திரி. இந்த ஒரு மரத்தை மட்டும் விட்டுடலாம். ஒரு மாசம் கழிச்சி, நானே இங்க திரும்ப வந்து செதுக்கி எழுதிக் கொடுக்கிறேனே? கொஞ்சம் அஜ்ஜஸ்ட் பண்ணிக்கிடுங்க."

"ம்ஹூம்... உன் நடவடிக்கையே சரியில்லை. உன்னை ஏதோ மோகினிப் பிசாசுதான் தொரத்துதுன்னு நெனைக்கிறேன். ஒரு கால்கட்டை போட்டா சரியாகிடும். போ, போ. உன் இஷ்டம். ஆனா ஒரு மாசத்துல திரும்பி இங்க வந்து நெம்பர் எழுதிடனும். சரியா?" வண்டியை காலால் மிதித்து, புகையைக் கக்கிக்கொண்டே, கிளம்பிப் போனார் மேஸ்திரி. 
"ஆனா இன்னைக்கு உனக்கு பேட்டா கிடையாது."

மேஸ்திரியின் வண்டி கண்ணிலிருந்து மறையும்வரை காத்திருந்தேன். வண்டி மறைந்தபின்பு, திரும்பவும் கோரையை விலக்கிகொண்டு ஒதிய மரத்துக்கு அருகில் சென்றேன். ஆந்தைகள் இரண்டும் கழுத்தை உடலுக்குள் சுருக்கி, தலையையும் உடலையும் ஒன்றாகிக்கொண்டு, கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருந்தன. நடிப்பு இல்லை. ஆழ்ந்த உறக்கம்.

'அட என் வீராப்பு  ந்தையே, உன்னால் இன்றிலிருந்து நான் ஒரு ஆத்திகன் ஆகிவிட்டேன், தெரியுமா?'

சத்தமில்லாமல், வெட்டுக்கத்தி, சுத்தி, உளி வகையறாக்களை எடுத்துக்கொண்டு, கோரையை விலக்கி மெல்ல நடந்து வெளியில் வந்துவிட்டேன். 

நான் விட்டுக்கொடுக்கவில்லை. புரிந்துகொண்டேன்!

ஹ்ம்... 
மரம் நெ.123 பாக்கி!!23.12.11

அம்பாரத்து ஆனைப் பொம்மைமுன்னோரிரவில் உள்வாங்கி
முன்னூற்றாம்நாள் வெளித் தள்ள
அன்றோரிரவில் அம் மனையாள்
ஆர்ப்பரித்து வலித் துடித்தாள்.

காலால் உதை யுதைத்தும்,
தலைகீழாய்ப் புரண்டு வந்தும்,
தண்ணீர்க் குட முடைத்தும்,
தரை வீழ்ந்ததோர் குழவி.

ஏக்கமுற 'மகள்' என்ற செவிலி.
எதிர்பார்ப்பில் காத்திருந்த சுற்றம்.
மகளா வென முணுமுணுத்து
மருகி நின்ற பெற்றோர்.

சாம்பல் நிறம்பூசி - சிறு மகள்
செவ் விரல்களை மடக்கி
குருதிக் கறையோடே
குறுகிப் படுத்திருந்தாள்.

சிறு செவ்வாய்த் திறந்து,
சென்னிறக் கையசைத்து,
கீச்சுக் குரலெடுத்து - முதன்முறை
கேவி அவள் அழுதாள்.

முலைப்பா லுண்ணும் போது
தாயின் முகம் பார்க்கில்,
மூச்சுக் காற்றில் முகங்கருக
முகத்தை மூடிக்கொண்டாள்.

'நீயுமா பெண்ணானாய்,
நான் பெற்ற மகவே - தெரியுமா?
காய்க்கும் மரங்க ளிங்கே
கால்தூசிக்குச் சமானம்'

'நீயேன் மகளானாய், இங்கே
நான் பெற்ற மகவே - புரியுமா?
கிளைகளுக்கிருக்கும் மதிப்பு
கீழிருக்கும் வேருக்கில்லை'

மூச்சுக் காற்றில் முகந்திணற,
முனகும் வார்த்தை நெஞ்சு சுட,
கையறு நிலையிலேயே - அவள்
கண்ணயர்ந்து போனாள்.

'மகள்' எனும் குற்றத்தால்
சுற்றத்தால் கிள்ளப்பட்டு,
தூக்கத்திலும் கேவியழுதே,
திரும்பவும் கண்ணயர்ந்தாள்.

***
'அம்பாரத்து ஆனைப் பொம்மை,
அழகான கரடிப் பொம்மை'
கேட்டு ஏங்கிய மகளுக்கு
கிடைத்ததோ ஒரு கிலுகிலுப்பை.

தெருவிலோடி விளையாடித்
திரிந்த 'மகன்' கூட்டம், அங்கே.
புறக்கடைத் தனிமையிலே சுதந்திரமாய்
புலம்பி விளையாடும் மகள் - இங்கே.

***

'ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;
இனி 'மகன்' என்போன் கல்வி கற்க;
பிறிதொரு வீடுபோகும் பெண் நீ - இனி
பெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.'

'சிறுமியெனில் சிந்தனை எதற்கு?
சிறு மதங்களில் முடங்கிப் போ;
முசுலீமில் முக்காடைத் துவங்கு;
முகங்கவிழ் - இந்துவெனில்.'

'கன்னியெனில் பேச்சைக் குறை.
காதல் வந்தால் கட்டுப் படுத்து.
காதல் சொன்னால் கட்டுப்படு.
காதலனின் திராவகத்தை கவனம் கொள்.'

'ஆணின் அடிமையென்றுன்னை
அடையாளப் படுத்திக் காட்டு;
புன்னகை களைந்து, தாலி அணி;
புது மெட்டியணி அல்லது மோதிரமிடு.'

***

'காலையெழுந்து ஏவல் செய் - பின்
காற்றைப் பிடித்து பணிக்குப் போ.
மணாளன் வருமுன் வீடுதிரும்பி
மல்லிகை சூடிக் காத்திரு.'

'காமுற்றால் மட்டும் காமுறு.
கணவனின் பிள்ளை வரம் வாங்கு.
'மகன்' வேண்டி விதை விதைத்த
மணாளனின் கனவையே காண்.'

*** *** *** *** *** *** ***

ஆனால் ஈன்றது மகளென்றால்...
ஈன்றது மகளென்றால்...

ஆனால் ஈன்றது மகளென்றால்
ஆர்ப்பரித்து அறற்றாதே.
பட்டதெல்லம் போதும்; இனி
பாய்ந்திடப் பழகு.

'மகளா' என்று ஏக்கமுறும் 
மண்ணாங்கட்டிகளை ஏசு.
முணுமுணுக்கும் சுற்றத்துக்கு
முறந்துடைப்பம் காட்டு.

தன்மானங்கலந்து முலைப்பாலூட்டு;
தன்னம்பிக்கை வெறியேற்று.
எல்லோர் செவியிலும் விழும்படி இந்த 
இரகசியத்தை மகளுக்குச் சொல்:

"என் புத்தம் புது மகளே - 
நீ இன்றிலிருந்து...

விளையாடி மகிழ்.
பாடம் படித்து -
சுயமாய்ச் சிந்தி.
அடிமை வெறு.
அடங்க மறு.
அத்து மீறு.
சாதி சிதை.
மத மிகழ்.
தெய்வத்தை நிந்தி.
தாலி மறு.
காதல் செய்.
பெண்ணியம் போற்று.
பெரியார் பேண்.
பொது நலம் பேசு.
அரசியல் பழகு.
அறிவியல் அறி.
உழைத்தபின் உண்;
அதையும் பகிர்ந்துண்
எனத் தத்துவம் பேசு. 

என்றுமே இடித்துரை -
வேரின்றி மரமில்லை என்று!
யாம் இனி யாருக்கும்
அடிமையில்லை என்று!!"

22.12.11

கடவுள் பிராண்டு (டிரேட் மார்க்)யாருக்கு தெய்வம்?


"யாவருக்கும்.
அது,
பொது."

யாது தெய்வம்?"யாதிலும்!"


கற்பனை வேண்டாம்;
குறிப்பிடு.

"கோவிலில்."செல்பேசி படம்பிடிக்க
கருவரைக் கற்பழிப்பு.
குருதிப் பீரிட
பலிப்பீடத்தருகிலேயே பலி.
தாய்மொழியில் தவமிருக்க
திருத்தல மறுப்பு.
கோயில் புகுந்த
நந்தனுக்கு நெருப்பு.
எனில், இருக்காது!

"சரி, காற்றில்?"தேடினேன்.
ஸ். யு. வி காரின்
மோனாக்சைடும்;
ஏதுமறியாது திகைத்து,
ஏழை வெளியிட்ட
கார்பன்-டை-ஆக்சைடும்;
2 ஜி அலைக் கற்றையில்
பறந்த பணக்கட்டும்;
போபாலின் காற்றில்
பலியான பிணங்களும்;
ம்ஹூம்...,
காற்று சுத்தமில்லை.
அதனால் -
காற்றிலில்லை!

"நீரில்!"அது மறுக்கப்பட்டதால்
தஞ்சை தின்ற எலிக்கறி;
அது உறிஞ்சப்பட்டதால்
ரிசாகிப்போன பிளாச்சிமடா;
அது அணைக்கப்பட்டதால்
குடியிருக்கத் தவிக்கும்
நர்மதைப் பழங்குடி;
அது கோடிடப்பட்டதால்
கொலையுண்ணும் மீனவன்;
பானையிலிருந்தது
பாட்டிலுக்குள் போனபின்
கடவுளாய் இருக்...


"சரி, சரி, நிறுத்து!
நிலத்தில்?"தேடினேன்.
டெண்டர் எடுத்து,
தண்டகாரண்ய தாதுக்களில்
துழாவிய வேதாந்திகளுக்கு

டாலர்கள் கிடைக்கப்பெற்றது.
பசி நோயினால்
பரிதவித்த மக்களுக்கு 
கிடைக்கப்பெற்றது
'ஆப்பரேஷன் கிரீ
ன் ஹண்ட்.'  
எல்லைச் சண்டைக்காக
கொல்லப்பட்ட காஷ்மீரிகள்;
எண்ணெய்ச் சண்டைக்காக
ஈவாகிப்போன ஈராக்கியர்கள்.
வாழ வழியற்று
வயிறுருகிபோன
சோமாலியச் சோனிகள்.
நிலத்தில் பணம்பறித்தும்,
நிலவில் பணம்விதைக்கும்
அமெரிக்கச் சோமாரிகள்.
நிலம் கொள்ளைபோனதால் -
நிலத்திலுமில்லை!

அடுத்து "வளி" எனாதே.
வளியும், அதிலுலாவு
அலாவுதீன் கோள்களும்,
அவை பின்னும் 'ஈ காமர்சும்'
விற்பனைக்கன்றி வேறென்ன?

"நெருப்பு" எனவுஞ் சுட்டாதே.
அது சாதி மதம் வளர
இடப்படும் எரு.
வரதட்சணைக்காக 'வரன்'கள்
எடுக்கும் கடைசியாயுதம்.
நாடுபிடிக் கூட்டத்தின்
துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும்
அடைபட்டிருக்கும் அடிமை.
நெருப்பும் சுடுகிறதே!

சொல், யாது தெய்வம்?

"................."

மௌனமா?
மௌனமெனில்,
மௌனத்திலும் தேடினேன்.

காற்றும், வானும், வளியும்,
நீரும், நெருப்பும்,
ஊனும், உயிரும்
கடவுளெனும் காகிதத்தில்,
சாதியெனும் 'வர்ணம்' பூசி,
மதமெனும் 'பார்கோடு' இட்டு,       
'பாக்கெட்' செய்யப்பட்டிருந்தது!
பொட்டலம் கிழிக்கப்பட்டு
கசக்கி எறியப்பட்டால் -
இதுவரை தேடியும்
கிடைக்காத கடவுள்
குப்பைத் தொட்டியில்
கிடப்பார் / கிடைப்பார்!


பொட்டலம் கிழிக்கப்பட்டால்...
காட்டாற்றைப் போல
சிதறிப்பாயும் நீர் -
யாவருக்கும்!
செஞ்சூரியனைப் போல
சுட்டு, ஒளிவீசி
குழம்பாயோடும் நெருப்பு -
யாவருக்கும்!
கொடியும் செடியும்
மரங்களும் விதைகளும்,
பூக்களும், பழங்களும் ;
இவை யாவருக்கும் -
மண்ணில் நெளியும் புழுவிலிருந்து
மானுடத்தில் வாழும் நமக்கு வரை!
வியர்வை விதைத்தால்
சோற்றையூட்டும் நிலம்.
நமையீன்ற தாய் -
நம் யாவருக்கும்!

இருப்பினும்
ஒரு நப்பாசையில்,
கடவுளைத் தெளிய
கட்டெறும்பில் தேடினேன்.
'கடவுளைப் பற்றிய அறிவேயில்லாமல்'
அதன் அன்றாட வாழ்க்கை
இப்படி
யாயிருந்தது :
உழை, பகிர்,
உண், உறை.
பிரமையோ...?
இல்லை.
முற்றும் உண்மை.
இதுதான் இயற்கையின்
வலிய விதி...!


பிரமையோ...?
ஒரேயொரு எறும்பு மட்டும்
முன்னங்கால்களைத் தூக்கி
தலையை மேலும் கீழுமாய்
அசைத்து அசைத்து,
முகத்தைத் துடைத்தவாறே,
என்னை நிமிர்ந்து பார்த்து
இறுமார்ந்து இப்படி
சொல்லிவிட்டுப் போனது
போல இருந்தது :
"Life is just like that..."

21.12.11

வெள்றேய்ப் பிஞ்சேய்...


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெட்டியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பொதுவாக அனைவருக்கும் இருக்கை கிடைத்திருந்தது. பாதிப்பேரின் கழுத்துக்குமேல் செய்தித் தாட்கள் தொத்திக்கொண்டிருந்தன. செய்தித்தாளையும், அதை வாசித்துக்கொண்டிருந்தவர்கள் உடம்பையும் இணைத்துவைத்து 'கிராஃபிக்ஸ்' செய்து பார்த்தபோது, அவர்கள் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போலத் தெரிந்தார்கள்.

எங்கள் சன்னலோரத்து இருக்கையில் காற்று சிலுசிலுத்து உற்சாகம் கொடுத்தது. இரயில் நகரை விட்டு வெளியில் வந்துவிட்டதை பச்சைப் பசுங்கழனிகளும், நெற்கதிர் வாசனையும் தெரியப்படுத்தின.

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், இருக்கைகளின் நடுவாந்திரத்தில் இருந்த நடைபாதை வழியாக தொந்தரவு செய்யும் பிச்சைக்காரர்கள், 'இன்றைக்கு ஒன்றும் தேராது' என்பதற்காக லீவு எடுத்துக்கொண்டார்கள் போலும். ஆயினும் கூவி விற்கும் வியாபாரிகள் வந்து போய்க்கொண்டுதான் இருந்தார்கள். விதவிதமான வியாபாரிகள் விதவிதமான கூவல்களில் கூவி விற்றார்கள். ஆனால் நிறைய கூவல்கள் 'அவர்கள் என்ன விற்கிறார்கள்' என்பதையே புரிந்துகொள்ள முடியாதபடிக்கு தடுமாற்றத்தைக் கொடுத்தன. விற்கப்படும் பொருளை நேரில் பார்த்தபின்புதான் அவர்கள் இன்னதை விற்கிறார்கள் என்பது புரிந்தது. ஒவ்வொரு கூவலிலும் ஏற்ற இறக்கங்களும், குரல் மாடுலேஷனும், இன்னும் சொல்லப்போனால், ஏதோ ஒரு விதத்தில் சிறிய இசைத் துணுக்கும்கூட அதில் கலந்து இருந்தன.

"நெய் பட்டேர் பிஸ்கீட்டேய்... சூடான நெய் பட்டேர் பிஸ்கீட்டேய்...."

"இஞ்சி மொர்றேப்பா, சளி பித்தம் கபம் குறைக்கும் இஞ்சி மொர்றேப்பா..."

"சம்சேய்ய்யா... சம்சே சம்சேய்ய்ய்யா..."

ஒரு வியாபாரி போன பின்பு, சொல்லி வைத்தார்போல இன்னொரு வியாபாரி வருவார்.

இப்போது தலையில் மூங்கிற்கூடை சுமந்த ஒரு பெண்.

"வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய்.... வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய்...."

உயர்ந்த கீச்சுக்குரலில் ஒரு பெண் வெள்ளரிப்பிஞ்சுகளை விற்றுக்கொண்டிருந்தாள். நேர்த்தியாய் நறுக்கி, நாலாய்ப் பிளக்கபட்ட வெள்ளை வெளேர் வெள்ளரியில் மிளகாய்த்தூள் தூவல் கலர் காம்பினேஷனை ரசிக்கத்தான் வேண்டும். என் வாயில் லேசாக எச்சில் ஊறியதை என்னால் உணர முடிந்தது.

"அப்பா, வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய் வாங்கிக் குடுப்பா, ப்ளீஸ் அப்பா..." என்று விக்கி கேட்டபோது, நாங்கள் உட்பட எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களும் கொல்லென்று சிரித்தனர்.

"டேய் விக்கி, அது வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய் இல்லடா... வெள்ளரிப் பிஞ்சு. எங்கே சொல்லு?"

"சரி, வெள்ளரிப் பிஞ்சு. வாங்கிக் குடுப்பா."

வால்மார்ட் வியாபார நுணுக்கக் கணக்காக, வெள்ளரித் தட்டுக் கூடையை விக்கியின் மூக்கு நுனியருகில் ஒட்டியபடியே நீட்டிப் பிடித்திருந்தாள் அந்த வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பெண். வேறு வழியில்லை. வாங்கிவிட வேண்டியதுதான்.

பத்து ரூபாய்க்கு, ஹிண்டுவின் கால் பக்க 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்' வண்ண விளம்பரத்தை மறைக்கும் அளவிற்கு, பேப்பரில் மடித்துக் கொடுத்துவிட்டு, அவள் குரலெடுத்துக் கூவிக்கொண்டே சென்றாள். "வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய்...."

வைசாலி கேட்டாள். "அப்பா, தம்பி கேட்டா மட்டும் வாங்கித் தர்றிங்க. நான் கேட்டா கண்டுக்காம இருக்கீங்களே? போன ஸ்டேஷன்ல ஒருத்தர் வித்துக்கிட்டுவந்த அழகான ரப்பார் பேண்டை வாங்கிக்கொடுங்கன்னு கேட்டா, காது கேக்காதது மாதிரி அம்மாவப் பார்த்து, 'ரேஷன் கடையில கோதுமை போட்டானான்னு' கேக்கறிங்க? ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு நீதி, பொம்பளைப் பசங்களுக்கு ஒரு நீதியா?"

திரும்பவும் கொல்லென்ற சிரிப்பொலி அந்த பெட்டி முழுதும் கேட்டது.

மீண்டும் ஒரு வியாபாரியின் கணீரென்ற கட்டைக்குரல் பெட்டியின் கடைசீ முனையிலிருந்தே கேட்டது. அவன் கையில் ஒரு எவர்சில்வர் தூக்கு இருந்தது. ஆனால் என்ன விற்கிறான் என்று புரியவில்லை. ஆனால் வாசனை மூக்கைத் துளைத்தது. என் மூக்கின் கணிப்பு சரியாயிருக்குமானால், அங்கே விற்கப்படும் பொருள் என்பது, எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், பச்சைக் கருவேப்பிலை போட்டு தாளிக்கப்பட்ட கருப்பு மூக்குக் கடலை சுண்டலாகத்தான் இருக்கவேண்டும். கண்டிப்பாக அதன் மேலே கொத்துமல்லித் தழை தூவப்பட்டிருக்கவேண்டும். அருகில் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

"டைம் பாஸ், சூட்ட்ட்ட்ட்ட்டான சுண்டேய்ல்ஸ்... சூட்ட்ட்ட்ட்ட்டான மஸ்ஸ்ஸ்ஸாலா சுண்டேய்ல்ஸ்.... சுண்ட... சுண்டேய்ல்ஸ்..." இதோ விற்பவன் அருகில் வந்துவிட்டான். தூக்கை என் அருகில் கீழே இறக்கி வைத்துவிட்டு மீண்டும் ஒரு எட்டுக்கட்டைக் குரலில் கூவினான்.

"டைம் பாஸ், சூட்ட்ட்ட்ட்ட்டான சுண்டேய்ல்ஸ்... சூட்ட்ட்ட்ட்ட்டான மஸ்ஸ்ஸ்ஸாலா சுண்டேய்ல்ஸ்.... சுண்ட... சுண்டேய்ல்ஸ்..."

நான் தூக்குக்குள்ளே எட்டிப் பார்த்தவாறு, பார்வையால் சோதனை செய்தேன். நான் நினைத்ததுதான் சரி. அச்சு அசலாக, நான் நினைத்த அத்தனை பொருட்களின் கலப்பும், தாளிப்பும் அதில் இருந்தது. இதில் என்னையே நான் மெச்சிப் பாராட்டிக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், அது வெள்ளைச் சுண்டலாக இல்லாமல், நான் கணித்தபடியே கருப்பு மூக்குக் கடலை சுண்டலாய் இருந்தது. வாங்கவேண்டும் போலிருந்தாலும், பக்கத்தில் அமர்ந்துகொண்டிருக்கிற பெண்டாட்டிக்கு பயந்துதான் ஆகவேண்டியிருந்தது. 'சின்னப்பசங்க மாதிரி, திங்கறதுக்கு எப்படி அலையுது பாரு...? கொலட்ராலை ஒடம்பு பூரா சேத்து வச்சிக்கிட்டு, எண்ணை வடியுற சுண்டல் கேக்குதா?' என்று பாட்டுப் பாடுவாள். தேவையா?!

அனேகம்பேர் வாங்கினார்கள். மார்கழி மாதத்துப் பெருமாள் கோவிலில் சுண்டலுக்காக கையேந்தி நிற்கும் நினைவைக் கொண்டுவந்தது அந்தச் சூழலும், வாசனையும். படிக்கப்பட்டுக்கொண்டிருந்த பேப்பர்களெல்லாம் அவசரமாக மடித்து வைக்கப்பட்டன. சூடான செய்திகளெல்லாம்கூட சூடான சுண்டலுக்கு முன்னால் எம்மாத்திரம்?! பெட்டியிலிருந்த முக்கால்வாசி வாய்கள் சுண்டலை மென்று அசைபோட்டுக்கொண்டிருந்தன.

சுண்டல் விற்பவனுக்கு பரம திருப்தி. அவனது சட்டை மேல் பாக்கெட்டில், பத்தும், இருபதும், ஐம்பதும், நூறுமாக, ஒழுங்காக மடித்து வைக்கப்படாத நோட்டுக்கள் அவசரகதியில் செருகிவைக்கப்பட்டு, கீழே விழுந்துவிடும்போல், துருத்திக்கொண்டிருந்தன. தூக்கைக் தூக்கிக்கொண்டு கிளம்பும் முன்னதாக, சற்றே நின்று, நிதானித்து, என்னையே ஒரு முறை முறைத்துப் பார்த்த்துக்கொண்டிருந்தான் அந்த சுண்டல் வியாபாரி.

எல்லோரும் வாங்கி மொசுக்கும்போது, குடும்ப சமேதமாய் சும்மா குந்தியிருந்து நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது, அவனுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும். சுண்டல் தூக்கையே, விக்கியும் வைசாலியும் ஆசையோடு பார்த்துக்கொண்டேயிருக்க, நான் எனது பார்வையை சன்னல் பக்கமாகத் திருப்பிப் பார்த்து அவனைத் தவிர்த்துக்கொண்டேன்.

ஓரிரு நிமிடத் தவிர்த்தலுக்குப் பிறகு, திரும்பிப் பார்த்தால், அந்த சுண்டல்காரன் இன்னும்கூட என் முகத்தைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான். சடாரென என்னைப் பார்த்துக் கேட்டான்.

"நீ போண்டா மணிதானே?," என்று அவனுடைய வியாபர உச்சஸ்தாயிக் குரலிலேயே கேட்டான் அந்தப் படுபாவி.

அனைவரின் கவனமும் திசை திரும்பி, எங்களையே வெடுக்கெனத் திரும்பி வெறித்துப் பார்த்தார்கள். நிறைய பேர்களின் சுண்டல்-அசைபோடும் தாடை அசைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

நான் தடுமாறினேன். "ஏய்... யார் நீ? யார்ரா நீ?"

"டேய், டபாய்க்காதே, நீ போண்டா மணிதானே?" அதே கரடிக்குரலில் உச்சஸ்தாயியில் திரும்பவும் கேட்டான்.

இந்தமுறை, பாதிக்கும் மேலான ரயில் பெட்டி எங்களையே திரும்பிப் பார்த்தது.

"என்னடா, பிரச்சினை பண்ணுறியா, யார்ரா நீ?"

"நான் கேட்க்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீ போண்டா மணிதானே?" என்று, என் அனுமதி ஏதும் இல்லாமலேயே, இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த என்னை அவன் இடுப்பால் நெக்கித் தள்ளி என் பக்கத்தில் அமர்ந்து, மூன்று பேராய் அமர்ந்திருந்த எங்களோடு, நான்காவது ஆளாய் தன்னை அந்த வரிசையில் செருகிக்கொண்டான்.

"இப்ப சொல்லு. நீ போண்டா மணிதானே?"

எல்லோரும் என் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதை என் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டிருந்தது.

நான் குரலைத் தாழ்த்திச் சொன்னேன். "ஆமாம், நான் மணிதான். மணிவண்ணன். நீ யாரு?"

"ஹாஹ்ஹாஹ்ஹா..., ஹைய்யோ ஹையோ, எப்படிக் கண்டுபிடிச்சோம்ல?! டேய் போண்டா, எப்படிடா இருக்க?" என்று என் தோளைப் பிடித்திழுத்து, குனியவைத்து, முதுகில் 'படார்' என்று ஒரு அடி போட்டான். "எவ்வளவு வருஷமானாலும், உன் நீட்டுக் கிளி மூக்கு காட்டிக் குடுத்துடுமேடா."

என் மனைவியும், மகனும், மகளும் சற்றே கலவரமானார்கள். இங்கே ஏதோ விபரீதம் நடக்கப்போவதாய் உணர்ந்தார்கள். அந்த சுண்டல்காரன் ஒரு அரைக்கிறுக்கனோ என்று சந்தேகப் பட்டார்கள். நான்கூட, ஒரு நிதானத்துக்கு வருவதற்குள் அவன் சொன்னான்.

"டேய் போண்டா, நாந்தாண்டா பாம்பாட்டி... பாம்பாட்டி பட்டாபிடா!" என்று ஆச்சர்யங்களைக் கலந்து, என் முதுகில் இன்னொரு அடி போட்டான்.

எனக்குக்கூட ஆச்சர்யம் ஆச்சர்யமாகப் பிடுங்கிக்கொண்டு வந்தது. பாம்பாட்டி பட்டாபி. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை என்னோடு குப்பை கொட்டியவன். அட்ப்பாவி, இவனா சுண்டல் விற்கிறான்? ஆச்சர்யங்கள் என் முகத்தின் வழியாய் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

"ம்.... இப்ப என்னைக் கண்டுபிடிச்சிருப்பியே? சும்மா நடிக்காதே. உன் மூஞ்சியே சொல்லுதே, நீ என்னை கண்டு பிடிச்சுட்டேன்னு. டேய் போண்டா மணி, எப்படிடா இருக்கே? நல்லா இருக்கியா? யாருடா இவுங்கள்ளாம்? இவுங்க உன் பொஞ்சாதியா? வணக்கம்மா... நானும் இவனும் ஒண்ணா படிச்சவனுங்க. இந்தக் குட்டிப் பையன் யாரு? உன் பையனா? டேய் டேய்... வாடா வா. இங்க வாடா செல்லம். பக்கத்துல வந்து உட்காந்துக்க. இந்தாடா ஐய்யா... எல்லாரும் சுண்டல் சாப்பிடுங்க..." என்று ஆளுக்கு ஒரு பொட்டலமாக பேப்பரில் மடித்து எங்கள் கையில் திணித்தான்.

"உன் பையனைப் பார்த்தா, உன்ன மூணாவது படிக்கும்போது பாத்தமாதிரியே இருக்குடா. டேய், எப்படிடா இருக்கே?" என்று என் தலையை கோதினான். என் தோளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். இப்போது அவன் குரல் தழுதழுத்து இருந்தது. கண்களின் அடிவாரத்தில் லேசான ஈரக்கசிவை என்னால் பார்க்க முடிந்தது.

"அடக் கடவுளே..., எப்படியெல்லாம் இருந்தோம்டா. எங்க எங்கியோ பிரிஞ்சிப்போய்ட்டோம். உன்னைப் பார்த்ததுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமாடா? ஒரே தட்டுல உண்டு, ஒறங்கி, விளையாடி, அடிச்சி, கடிச்சி...." கோர்த்துக்கொண்டிருந்த கண்ணீர் கரை உடைந்தது. அவன் திடுமென ஒரு சிறு பிள்ளை போல குலுங்கி அழுதான்.

இருந்தாலும் அவனைத் தேற்றிவிட என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. காரணங்கள் நிறைய இருந்தன. முதலில் அவன் என்னை இத்தனை பேர்களுக்கு மத்தியில், அதுவும் மனைவி மக்களுக்கு மத்தியில், 'போண்டா மணி' என்று அழைத்தது. அது எனக்கு மெத்த அவமானத்தைக் கொடுத்தது. என் முகம் இப்போது இஞ்சி தின்ற குரங்கு போல ஆகியிருந்தது. இரண்டாவது காரணம் அவன் சுண்டல் விற்கிறான். அநாயாசமாகக் கேள்விகள் கேட்டு, முதுகில் அடித்து.... நட்புதான். அதற்காகப் பிராண்டுவானா? ஒரு நாகரிகம் இல்லை?

பட்டாபியே பேச்சை என் மனைவியிடம் தொடர்ந்தான். மற்றவர்களெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள்.

"இங்க பாருங்கம்மா. உங்க வீட்டுக்காரரும் நானும் எட்டாவது வரையிலும் செவ்வாய்ப்பேட்டை பள்ளிகோடத்துல ஒண்ணாப் படிச்சவனுங்க. ரெண்டு பேரும் படிப்புல சுமார் ரகம்தான். படிப்பு முடிஞ்சி பிரிஞ்சிப் போனவங்க, இப்பத்தான் ஒருதரை ஒருத்தர் பார்த்துக்கறோம். சந்தோஷமா இருக்கும்மா."

வைசாலி கேட்டாள். "ஆனா அப்பா சொல்லியிருக்காரே, பள்ளிக்கூடத்திலயே அவர்தான் எப்பவும் ஃபஸ்ட்டு வருவாருன்னு?"

"அப்படியா?" என்று திரும்பவும் என் முதுகில் ஒரு அரை கொடுத்தான்.

"மணிக்கு அப்பத்திலிருந்தே வாயத் தொறந்தாப் பொய்யாத்தான் கொட்டுவான். பேனை பெருமாளாக்கி, அண்ட ஆகாசத்துக்கும் புருடா வுடுவான் பாருங்க. அப்படியே மரத்துல முட்டிக்கிட்டு சாகலாம்னு இருக்கும். இன்னும் திருந்தலையாடா நீ. கொழந்தைகளை எப்படி ஏமாத்தி இருக்கான் பாரு?" என்று அவன் சொல்லி முடிக்கவும், பெட்டி சிரிப்பலையால் அதிர்ந்தது.

"அப்பாவுக்கு போண்டா மணின்னு ஏன் பேர் வந்துது?" என்று விக்கி விலாவரி கேட்கவும், எனக்கு தரை இரண்டாகப் பிளந்து, நான் தண்டவாளங்களுக்கிடையிலே விழுந்துவிடுவதுபோல உணர்ந்தேன். போச்சு. என் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்போகிறது.

"அதுவா குட்டிப் பையா? உங்க அப்பனுக்கு எப்பவுமே மோப்ப சக்தி ஜாஸ்தி. பத்து கிலோ மீட்டருக்கு அந்தண்டகூட யாராவது போண்டா வடை சுட்டாலும், கருக்கா கண்டுபிடிச்சி இன்னார் வீட்டுல இது இது சுடுறாங்கன்னு கச்சிதமா சொல்லிடுவான். அதுமட்டுமில்லாம போண்டான்னா, அந்தக் காலத்துல இவன் உயிர விட்டுடுவான். ஒரு தடவ டீக்கடையில கைய வுட்டு, போண்டா திருடிட்டான். அன்னையிலிருந்து இவுரு பேரு போண்டா மணி." என்று சொல்லியவாறு தன் புஜங்களால் என்னை இடித்து நக்கலடித்தான்.

"ஹே ஹேய்.... எங்கப்பா பேரு போண்டா மணி, எங்கப்பா பேரு போண்டா மணி," என்று உரக்கக் கூவியவாறு, விக்கியும் வைசாலியும் ஒருவர் கையை ஒருவர் தலைக்குமேலே தூக்கித் தட்டிக்கொண்டு, உற்சாகமடைந்தார்கள். திரும்பவும் சிரிப்பொலியால் பெட்டி அதிர்ந்தது.

அந்தக் காற்றோட்டத்திலும், என் வழுக்கை மண்டையிலிருந்து வியர்வை கசியத் துவங்கியது. நான் அதிகமான அளவில் அவமானப்படுத்தப் படுவதாக உணர்ந்தேன். கோபமும் வெட்கமும் என் முகத்தில் கலந்துகிடந்தது. இந்த பட்டாபிக் காட்டான் இங்கிருந்து எப்படா ஒழிவான் என்றிருந்தது.

"எம் பேரு என்ன தெரியுமா? பாம்பாட்டி பட்டாபி. ஏப்பிடி இந்தப் பேரு வந்தது தெரியுமா? ஆறாவது படிக்கும்போது, மரத்தடியில பூகோள வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டிருந்தாரு. ஒரு பக்கம் பொண்ணுங்க, ஒரு பக்கம் பையனுங்க... சப்பளாங்கோல் போட்டமேனிக்கு தரையில உட்கார்ந்திருந்தோம். ஹி ஹி, நானு, உங்க அப்பனெல்லாம் எப்பவும்போல கடைசி வரிசை. எங்களுக்கு பின்னால ஈச்சம் புதரு. பாடம் நடந்துகிட்டே இருந்துச்சா... அந்தப் பாடத்தைக் கேக்கறதுகோ என்னாத்துக்கோ, வாயப் பொளந்தமேனிக்கு இருந்த என் காக்கி டவுசர் சைடு பாக்கெட்டுக்குள்ளாற ஒரு குட்டியூண்டு நல்லப்பாம்பு நைசா பூந்து சுருண்டுக்கிச்சி. நானு தற்செயலா என் தொடைமேல கைய வெச்சா, பாம்பு இப்புடியும் அப்புடியுமா நெளியுது. பயத்துல நான் உட்கார்ந்தமேனிக்கு மூத்திரம் போய்ட்டேன். பே பேன்னு நானு கத்தினப்புறம், யாரோ சடக்குன்னு டவுசருல கையவுட்டு பாம்பைப்புடிச்சி தூக்கி தூற அடிச்சாங்க. அன்னையிலேருந்து எம்பேரு பாம்பாட்டி."

எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். என் மனைவியோ தரையில் விழுந்து புரளாத குறையாக எக்காளமிட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். அவளைக் கரம் பிடித்த நாளிலிருந்து, இதுநாள் வரை அவள் அப்படிச் சிரித்துப் பார்த்ததேயில்லை. எனக்கும்கூட ஒரு சிறு புன்னகை என் முகத்தோடு ஒட்டிக்கொண்டது.

ஒரேயொரு நிமிட இடைவேளை கொடுத்து, இந்தப் பாதகப் படுபாவி, இன்னொரு விஷயத்தைப் படாரென்று போட்டு உடைத்தான்.

"டேய் மணி, நீ எட்டாவது படிக்கும்போது, உன்ன செருப்பாலயே வைச்சு விளாசினாளே ஒரு சிறுக்கி, அதாண்டா அணில் பல்லு அலமேலு... அவ அரக்கோணத்துல வாக்கப்பட்டு, ஆத்தமாட்டாம, ஆறு பெத்துவச்சிருக்காடா."

மீண்டும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நானோ புழு நெளிவதுபோல நெளிந்துகொண்டிருந்தேன்.

படுபாவி. எனக்கென்றே இந்த எமகண்டம் ரயிலேறிவந்து, என் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டிருக்கிறது. நான் ஓரக்கண்ணால் என் மனைவியை பார்த்தேன். ஒரு சிறு குழந்தைபோன்று, இதற்கும் கைதட்டி ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

"உங்களோட பேரு என்ன?" என்று பட்டாபி என் குழந்தைகளைப் பார்த்துக் கேட்டான்.

"இவ வைசாலி. எட்டாவது படிக்கிறாள். இவன் விக்கி. மூணாவது படிக்கிறான்." என்றாள் என் மனவி.

"என்னம்மா பேரு இது... வைசாலி? அவளுக்கு என்ன வைசா ஆகிப்போச்சி? ஏதோ நோயாளின்னு சொல்றாப்புல என் காதுல விழுகுது. உன் பேரு என்ன விக்கியா? ஏண்டா மணி... அவனுக்கு கொக்கின்னு பேர் வைக்கறதுதானே? விக்கியாம் விக்கி. விக்கி, எப்பல்லாம்டா உனக்கு விக்கும்?" என்று கிண்டலடித்து, நிறுத்தி, பின்பு சொன்னான். "இதே போண்டா மணிதான் தமிழ் தமிழ்னு அடிச்சிக்குவான். தமிழ்தான் உயிர் அப்படீம்பான். தனக்குப் பிறக்கப்போற குழந்தைகளுக்கு சுத்த நெய்யிலே செய்ஞ்ச தமிழ் பேருதான் வைப்பேன்னு பீத்திக்கிடுவான். இப்போ இவனே மாறிட்டான். வட மொழியில பேரு வச்சிருக்கான். ஆனா நான் அப்படி இல்லை. என் நண்பன் சொன்னன் அப்படீன்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தைங்க அத்தனை பேருக்கும் தமிழ் பேருதான். பெரியவ தமிழ்ச் செல்வி. வயசுக்கு வந்துட்டா. அப்புறம் தமிழரசன். எட்டாவது படிக்கிறான். பிறகு தமிழ் மணி... ஆமாண்டா, உன் ஞாபகமாத்தான் வச்சிருக்கேன். அஞ்சாவது படிக்கிறான். அதுக்கப்புறமா கடைக்குட்டி தமிழ் இசை. மூணாவது படிக்கிறா. அடேய் போண்டா, ஏண்டா நீ சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணா இருக்கு? எப்பத்தாண்டா மாறுவ?"

பெட்டிக்குள் உற்சாகம் கரைபுரண்டோடியது. என்னைத் தவிர்த்து அனைவருக்கும் சந்தோஷம் பொங்கிக் கொப்பளித்தது. இன்னும்கூட என் மனைவி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டேயிருந்தாள். நிறைய பேர் இடைவேளைவிட்டு, நினைத்து நினைத்து சிரித்தார்கள்.

கடந்து சென்ற வரலாற்று உண்மைகளை சிரிப்பு வெடியாய்க் கொளுத்திப் போட்டுக்கொண்டிருந்த பட்டாபியின் முகம் இப்போது சற்றே வாட்டம் கண்டது.

"நீ சென்னையில எதோ லாரி டிரான்ஸ்போர்ட்டு கம்பெனியில குமாஸ்தாவா இருக்கிறேன்னு முண்டக்கண்ணு மாரிச்சாமி எப்பவோ சொன்னதா ஞாபகம். நல்ல வேளையா நீ தப்பிச்சடா மணி. நல்லா இருடா. நல்லபடியா கொழந்தைகளை வளர்த்து, படிக்க வச்சி பெரியாளாக்கு. ஊருப்பக்கமெல்லாம் வராத. அங்க ஒண்ணுமே இல்லை. எல்லாம் சுடுகாடாப் போடுச்சி. இப்பல்லாம் விவசாயத்துல ஒண்ணுமே தேறலை. பயிரு வெதைச்சா பத்துப் பைசா கெடைக்கமாட்டேங்குது. உரம் வெலை ஏறுது, வெதை வெலை ஏறுது. நல்லாத்தான் வெளையுது. ஆனா பத்துபைசா வீட்டுக்கு வரமாட்டேங்குது. அதான் எப்படின்னு புரியலை! பத்து வருஷமாப் பட்டுப் பட்டு, சீ போன்னு விவசாயத்தையே வுட்டுட்டேன். ஆனா வயிருன்னு ஒன்னு இருக்குதே? என்னை நம்பி எட்டு ஜீவன். அதான் இந்த ரயில் ரூட்டுல சுண்டல் விக்கறேன். ஏதோ, கைக்கும் வாய்க்கும் சரியா இருக்குடா. எந்தக் கடவுளும் எனக்கு கை குடுக்குறதில்லை. விவசாயின்னா தெய்வம்கூட கண்ணை மூடிக்கிடுது. நான் என் உழைப்பைத்தான் நம்பறேன்," என்று தன் சுண்டல் தூக்கைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே சொன்னான்.

"ஆனா விவசாயத்துல பட்ட கடன் அம்பதாயிரம்! குட்டிமேல குட்டியா போட்டு ஒரு லட்சத்துக்கு வந்து நிக்குது. தெனத்தன்னைக்கும் கடங்காரன் வீட்டண்டை வந்து நிக்கறான். அதை நெனைச்சாத்தான் எனக்கு பயமா இருக்குடா... ராவுல தூக்கமே வரமாட்டேங்குது," என்று குரல் நடுங்கி, தரையைப் பார்த்தவாறு தலையைக் கவிழ்த்துக்கொண்டான். எல்லோரும் அவனையே இறக்கத்தோடு பார்த்தார்கள். இருந்தாலும் அவனுக்கு ஆதரவாக, என் கையை நீட்டி அவன் முதுகைத் தடவிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.

நான், என் இடப்பக்கமாக இருந்த சட்டை மேல் ஜேபியை கைகளை வைத்து, மூடி மறைத்துக் கொண்டேன். அதில் இருந்த எட்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டு, பட்டாபியின் கண்ணை உறுத்தியிருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் தட்டியது!

இதோ நாங்கள் திருத்தணிக்குப்போய், நான்கு பேரும் மொட்டை அடித்து, முருகனுக்கு வேண்டிக்கொண்டபடி எட்டாயிரத்தை உண்டியலில் போட்டுவிடவேண்டும். வைசாலிக்குப் பிறகு ஆண்பிள்ளை வரம் வேண்ட, ஐந்து வருடம் இடைவெளியில் விக்கி பிறந்தான். அதனால் நாங்கள் திருத்தணி வருவாதாக வேண்டிக்கொண்டிருந்தோம். ஏதோ எங்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி, ஆறு மாதமாய்ச் சேர்த்துப் பிடித்த பணம். இதிலிருந்து ஏதாவது கொஞ்சம் எடுத்து பட்டாபிக்கு தானம் செய்ய என் மனம் ஏனோ ஒத்துக்கொள்ளவில்லை. கடவுள் குற்றத்துக்கு நாங்கள் ஏன் பலியாகவேண்டும் என்பதுகூட காரணமாயிருக்கலாம்.

குனிந்திருந்த பட்டாபி மெல்ல நிமிர்ந்து எழுந்தான். அவன் சிறிது நேரம் அழுததற்கான அறிகுறியாக அவன் கண்களிரண்டும் சிவந்திருந்தன.

"சரிடா மணி... நான் கெளம்பறேன். அடுத்த ஸ்டேஷன் வருது. என் பொழப்பைப் பார்க்கணும்." என்று சொல்லியவாறே, பட்டாபியின் சட்டை ஜேபியில் செருகி வைக்கப்பட்டிருந்த அத்தனை நோட்டுக்களையும் ஒன்று விடாமல் ஒரே அள்ளாக அள்ளி எடுத்தான். அதை இரண்டு கைகளிலும் தோராயமாக இரு பங்காகப் பிரித்து, என் மகன் கைகளிலும், என் மகள் கைகளிலும் அழுத்தித் திணித்தான்.

அடுத்த நிறுத்தத்தில் நிற்பதற்காக, ரயில் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டது.

"கோபிச்சுக்காதீங்க செல்லக்குட்டிகளா... திடீர்னு பார்த்ததுல, உங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியல. டேய் மணி, நீ இறங்கினவுடனே, இந்தக் கொழந்தைங்க சாப்பிடறதுக்கு, முட்டாயி, பன்னு, பிஸ்கோத்துன்னு வாங்கிக் கொடுடா. எல்லாருக்கும் போய்ட்டு வர்றேன். குட்டிப் பசங்களா... நல்லாப் படிக்கணும். நான் போய்ட்டு வரட்டுமா?" என்று சொன்னபடி தன் சுண்டல் தூக்கை தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்தான்.

"ஏய், ஏய் பட்டாபி. என்னதிது? காசு கொடுக்கிற பழக்கம்? ஹும்? இதெல்லாம் வேண்டாம். இந்தா திருப்பி எடுத்துக்க..." என்று நான் கத்திக்கொண்டிருக்க, அவன் பெட்டி வாசல் வழியாக இரயில் நின்றதும் இறங்கிவிட்டான்.

வெளியிலிருந்து சன்னலில் குனிந்து பார்த்தவாறு பட்டாபி உரக்கச் சொன்னான் :

"டேய், நீ எனக்கு காக்கா நீச்சல் கத்துக் குடுத்ததுக்கும், பீடி பிடிக்கக் கத்துக்கொடுத்ததுக்கும், எனக்காக, எட்டாங்கிளாஸ்ல எனக்கு எதிரியா இருந்த குண்டு பூசணி கொமாரசாமி பல்லு ரெண்டையும் ஒடைச்சதுக்கும், எனக்காக எதிர்வீட்டு ஈஸ்வரிக்கு ரிஸ்க்கு எடுத்து லவ்வு லெட்டர் கொடுத்ததுக்கும், ஈடாவுமாடா நான் உன் குழந்தைகளுக்கு குடுத்த காசு? சும்மா வச்சுக்கோடா," என்று சொல்லிக்கொண்டே, எதிரில் வந்து நின்ற ரயில் பெட்டிக்குள் தாவி ஏறிக்கொண்டான்.

ஆனால் ஏனோ, இதற்குமட்டும் பெட்டியில் அமர்ந்திருந்த யாரும் சிரிக்காமல் உம்மென்று மௌனமாகவேயிருந்தார்கள்

"டைம் பாஸ், சூட்ட்ட்ட்ட்ட்டான சுண்டேய்ல்ஸ்... சூட்ட்ட்ட்ட்ட்டான மஸ்ஸ்ஸ்ஸாலா சுண்டேய்ல்ஸ்.... சுண்ட... சுண்டேய்ல்ஸ்..." பட்டாபியின் கட்டைக்குரல், அந்த ஸ்டேஷன் முழுதும் எதிரொலித்தது.

குழந்தைகளின் கையிலிருந்த சுருண்டுபோன நோட்டுகளை வாங்கி, அடுக்கி, எண்ணிப் பார்த்தேன். இரண்டாயிரத்து நூறு ரூபாய் இருந்தது.

'ஊவ்வ்' என்று எதற்காகவோ ஒலியெழுப்பியவாறு எங்கள் இரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

ஆனால் எங்கள் பெட்டிக்குள் மட்டும் அனைவருமே மௌனமாய்க் கிடந்தார்கள்!

20.12.11

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூதாகர சுவாமிகள் துணை


பக்கத்து வீட்டு கருத்தாயிப் பாட்டி ஒரு நாள் வருத்தத்தோடு சொன்னாள்.

"நட்ராஜி தம்பி... செண்பகம் வரவர சாப்பாட்டைக்கூட ஒருவேளை குறைச்சிக்கிட்டாடா. ஒரேயொரு பொண்ணை வெச்சிக்கிட்டு ஏண்டா இப்படி ரொம்ப கவலைப்பட்டு உடம்ப வருத்தி சேத்துப் பிடிக்குது? இந்த ஊரு உலகமே டிவி நாடகத்த பார்த்து கண்ணக் கசக்கிட்டிருக்கும்போது, இந்த செண்பகம் தைய்ய மிஷினே கதின்னு கெடக்குறாளே? பாக்கவே பாவமா இருக்குடா. வர வர துரும்பா எளைச்சுட்டா."

"செண்பகம், ஏம்மா உன்னயே இப்படி வருத்திக்கிறே? உன் ஒடம்பையும் நீ பார்த்துக்கணுமில்லே?" என்று கேட்டால், செண்பகம் சொல்லுவாள் :

"இல்லப்பா. நீ நல்லவனா இருக்கப்போய்தான் நம்ம வாழ்க்கை பிரச்சினை இல்லாமப்போகுது. ஆனா அக்கம் பக்கம் பார்த்தா ரொம்ப பயமா இருக்கு. எக்ஸ்போர்ட்டு கம்பெனிக்குப் போற அந்த சாந்திப் பொண்ணு அடி வாங்காத நாளே இல்லை. குடிகார நாயி தண்ணியப்போட்டு வந்து கொலை குத்து குத்துறான். அவளுக்கு ஒரு நாள் போறது ஒரு யுகமாப் போகுது. பொண்ணுகளுக்கு குடுத்துவைச்சதெல்லாம்கூட, தற்செலாத்தான் அமைஞ்சுபோகுது. சாவோ வாழ்வோ, எதுவும் அவ அவ கையிலயா இருக்கு? ஒருத்தியோட தலவிதியே அவ கட்டிகிட்ட புருஷங்கிட்டதானேய்யா இருக்கு? நீங்க ஆம்பளைகளா இருக்கறதனால கஷ்டம் ஏதும் தெரியல. ஆனா பொண்ணாப் பொறந்த எங்களுக்கு இந்த ஜனங்ககிட்ட என்ன மரியாதை கிடைக்குது? அடியும், ஒதையும், கிண்டலும், கேலியும்.... அடத்தூ... இன்னொருதடவை நாங்கள்ளாம் பொம்பளைகளா பொறக்கவேகூடாது."

எங்கள் மகள் செங்கொடி பன்னிரண்டாம் வகுப்பு படித்தாலும் படிக்கிறாள். செங்கொடி வளர்ந்துகொண்டேயிருப்பதால், செண்பகத்துக்கு டென்ஷன் இன்னும் அதிகமாகத்தான் போனது. அவள் கவலையெல்லாம் அவளுக்கு ஓரளவுக்கு படிப்பறிவு கொடுத்து, ஒரு நல்ல வேலையில் சேர்த்துவிடவேண்டும். சொந்தக் காலில் நிற்க வைக்கவேண்டும். கூடவே அவள் பெயரில் ஒரு ஒண்டு வீடாவது இருக்கவேண்டும். சொந்தமாக! அப்படியிருந்தால்தான், நாளையொரு நாள், கட்டிக்கொண்டவன் பிரச்சினை செய்தால்கூட, அல்லது அவன் விட்டுவிட்டு ஓடித்தொலைந்தால்கூட, நம்பிக்கையாக, சொந்தக்காலில் கவுரவமாக நிற்கலாம் என்பது செண்பகத்தின் கருத்து. அக்கம்பக்கத்து காட்சிகள் அவளுக்குள் பயத்தையும், அருவருப்பையும், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையையும் உருவாக்கியிருந்தது.

நான் மாநகரப் போக்குவரத்து பேருந்து டிரைவர். இந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்து டிரைவரை, போன மாதம் மிகுந்த மரியாதை செய்து, நண்பர்கள் புடை சூழ, தாரை தப்பட்டை அடித்து, மாலை போட்டு... வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்! வயதாகிப்போய்விட்டதாம்.

ஆக்சிலேட்டரில் கால் மிதித்து மிதித்தே, எனது கால் கட்டை விரல் லேசாக வலப்பக்கம் நெளிந்துபோயிருந்தது. டப்பா பஸ்ஸாக இருந்தாலும், இதுவரையிலும் என்னால் ஒரு நூல் அளவுகூட எந்தப் பேருந்துக்கும் கீறல் ஏற்பட்டதில்லை. நல்லமுறையில் வண்டியோட்டியதற்காகவும், டீசல் மிச்சம் செய்ததற்காகவும் இரண்டு கோப்பைகள் வீட்டு பரணையில் பாதுகாப்பாகக் கிடக்கின்றன. ரிடையர் ஆன இரண்டே நாளில் எனக்கு ஒரு பெரிய ரிலாக்சேஷன் தெரிந்தது. ஆகாசத்தில் பறக்கிறமாதிரி. ஆமாம் ஐயா. நீங்கள் நினைக்கிறாற்போல நகரத்தில் பஸ் ஓட்டுவது சுளுவான வேலையில்லை. பஸ் ஓட்டுகிற அந்த எட்டு மணி நேரம் என்பது ஒரு பைத்தியக்கார ஆசுபத்திரியில் இருக்கிறதுபோலத்தான். டென்ஷன் அதிகம். இருந்தாலும் மக்களிடத்தில் எங்களுக்கு பொதுவில் கெட்ட பேர்தான்.

குறுக்கே பாயும் ஆட்டோவும், முறுக்கு சுட்டுக்கொண்டே போகும் பல்சரும், காதலியின் அணைப்பில் மெய்ம்ம்ம்ம்மறந்து பஸ்சின் பின் சக்கரத்தில் விழுந்துவிடத் தவிக்கும் காதலனும், செல்போனில் சிலாகித்துக்கொண்டே தற்கொலைக்கு தன்னையறியாமலே முன் சக்கரத்தில் பாயத் துடிக்கும் யுவதியும், எனக்கு 'எந்த நேரத்திலும் டென்ஷனே ஆகக்கூடாது' என்று போதித்த போதிமரத்து புத்தர்கள். அதனால்தான் இந்த வயதிலும் எனக்கு இரத்த அழுத்தம் இல்லை. இருந்தாலும் எனக்கு வயதாகிவிட்டதென சட்டம் சொல்கிறது! இன்றுகூட நான் தெருவில் நடந்தால், மாநகரப்பேருந்துகள் என்னைப் பார்த்து ஒரு நட்புப் புன்னகை செய்வதாகவே எனக்குத் தோன்றும். நான் என் தொழிலை நேசித்தேன்.

என் வாழ்வில் நான் உய்த்துக்கிடக்க எனக்கு உதவியை என் அருமைப் பேருந்துகள், எதற்கும் சளைக்காத என் மனைவி, எனக்கு உபவாசம் செய்யும் என் மகள். ஆஹா.. நான் வாழ்ந்தேன். சலிப்பிருந்தாலும் சந்தோஷமும் இருந்தது. குறைகளுக்கிடையே என் வாழ்வில் சந்தோஷத் தருணங்கள்தான் அதிகம். எங்கள் சங்கத்துப் பழக்கவழக்கங்களின் காரணமாகவும், சக தோழர்களின் குடும்ப உறுப்பினர்களின் பழக்கவழக்கத்தாலும், என் மனைவி செண்பகமும், என் மகள் செங்கொடியும்கூட வாழ்க்கை என்பது போராட்டம்தான் என்பதை சுளுவாகக் கற்றுக்கொண்டார்கள். மார்க்சும் பெரியாரும் எங்கள் விவாதங்களின் ஊடாக வந்து போவதால் எங்கள் சிந்தனையில், தூணிலிம் துரும்பிலும் இருக்கிற கடவுளர்கள் என் வீட்டிற்குள் காணாமல் போயிருந்தனர். எங்கள் உழைப்பின்மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்ததால், நாங்கள் கடவுள் அனுக்கிரகத்துக்காக தவமிருந்ததுமில்லை.

ரிடையர் ஆகி வெளியில் வரும்போது என் வரும்படியில் கிடைக்கிற பணத்தைவிட, என் மனைவியாள் குருவி சேர்ப்பதுபோல ஓரளவுக்கு கட்டிப்பிடித்து சேமித்து வைத்திருதாள். என்னைக் கரம் பிடித்த நாளிலிருந்து தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகில் ஒரு ஒண்டிக்குடித்தனம். முப்பத்து மூன்று வடமாக எனது கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுதவள். வாயை வயிற்றைக்கட்டி தியாகம் செய்து, சீட்டு கட்டி, தையல் மெஷின் ஓட்டி, செண்பகமும் என்னோடு தன் உழைப்பைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.

***

வெற்றிலைப் பாக்குக் கடைக்குப் பக்கதில், சுண்ணாம்பை அப்பிக்கொண்டிருந்த தெருக்கம்பத்தில் ஒட்டிக்கொண்டிருந்த அந்த நோட்டீஸ் எனக்கு பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

"அறிய வாய்ப்பு. நழுவ விடாதீர்கள். கல்மண்டபம் அருகில் உள்ள சிரஞ்சீவி ரெட்டி தெருவில் வீடு விற்பனைக்கு. கட்டி மூன்று வருடங்களே ஆன காங்கிரீட் வீடு. வராண்டா, ஹால், கிச்சன், ஒரு படுக்கை அறை, பாத்ரூம். 450 சதுர அடி. உடனடி விற்பனைக்கு. விலை ரூ.எட்டு லட்சம் மட்டும். தொடர்பு கொள்க : கோவிந்தன் போன்..."

அக்கம்பக்கம் விசாரித்தபோது இது ஏதாவது 'டுபாக்கூர்' விளம்பரமாக இருக்கலாம் என்று கூறினார்கள். இன்றைய மார்கெட்டு விலையிலே அந்த இடம் பதினைந்து லட்சத்துக்குக் குறையாது என்றார்கள்.

செண்பகத்திடம் விஷயத்தைச் சொன்னபோது, "உடனே கிளம்புங்க. போய் அந்த வீட்டைப் போய்ப் பார்த்தே ஆகணும்," என்றாள்.

***

கோவிந்தனுக்கு போன் போட்டு விவரம் கேட்டோம். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவுதான். நேரில்வந்து பார்த்து, விவரம் கேட்டுக்கொள்ளச் சொன்னார். சிரஞ்சீவி ரெட்டி தெரு முனையில் உள்ள பாண்டியன் ஓட்டல் வாசலில் அரை மணி நேரத்தில் வந்து நிற்கச் சொன்னார்.

நானும் செண்மகமும் சைக்கிளில் போனோம். அரை மணி நேரத்துக்குள்ளாகவே பாண்டியன் ஓட்டல் வாசலில் இருந்தோம். சிவப்பு கலர் சொக்காயும் சிவப்பு கலர் வேட்டியும் கட்டியிருப்பதாக அடையாளம் சொன்னார் கோவிந்தன். மேல்மருவத்தூர் பக்தராம்.

பீடியை பிடித்துக்கொண்டு நின்றிருந்த கோவிந்தன் செவ்வாடையில், கண்ணில் பளீரெனப் பட்டார்.

"வணக்கம் கோவிந்தன் சார். வீடு விஷயமா போன் செய்திருந்தேன்."

"வாங்க வாங்க. உங்களுக்கு அம்மா அருள் கொடுப்பா. அருமையான வீடு. ரேட்டு கம்மி. இந்த ரேட்டுல நீங்க வேற எங்கையாவது வீடு பார்த்தீங்கன்னா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சத்தியமாச் சொல்றேன். நான் தூக்கு மாட்டிக்கிறேன். நான் ஒண்ணும் விளையாட்டுக்குச் சொல்லலை. வாங்க போகலாம்." என்று அவர் நடந்துகொண்டே எங்களை அழைத்துப்போனார். "எனக்கு ரெண்டு பெர்சண்ட் கமிஷன்."

சிரஞ்சீவி ரெட்டி தெரு ஓரளவுக்கு சுத்தமாக இருந்தது. தெருவும் விஸ்தாரமாக இருந்தது. ஒரு குழாயடிக்குப் பக்கத்தில் நின்று, "இதோ, இந்த வீடுதான். வாங்க," என்று தன் சட்டையிலிருந்த சாவிக்கொத்தை எடுத்து வீட்டைத் திறந்தார்.

பச்சைக் கலரில் பெயிண்ட் அடித்த இரட்டைக் கதவு. இரண்டு கதவின் கீழ்ப்பகுதியிலும் பெயிண்டால் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்திருந்தார்கள். கதவைத் திறந்து உள்ளே போனவுடன் ஒரு சிறிய வராண்டா.

"நம்ம சைக்கிளை இங்கே விட்டுக்கலாம்," என்று செண்பகம் சொன்னாள். அவள் குரலில் உற்சாகம் தெரிந்தது.

"ஷ்.. ஷ்... தே செண்பகம், பிடிச்சாமாதிரி காட்டிக்காதே... அப்புறம் ரேட்டை ஏத்திருவாங்க," என்று அவள் காதில் கிசுகிசுத்தேன்.

"அதெல்லாம் ஒண்ணும் ஏத்தமாட்டோம் சார். சொன்னது சொன்னதுதான்," என்று உரத்த குரலில் சிரித்துக்கொண்டே சொன்னார் கோவிந்தன்.

அடுத்து ஒரு சிறிய ஹால். ரெட் ஆக்சைட் போட்ட தரை. ஹாலின் தென் கிழக்கு மூலையில் ஒரு சிறிய கிச்சன். அதையொட்டி ஒரு படுக்கை அறை. ஹாலின் கிழக்குப்புறம் இருந்த ஒரு ஒற்றைக் கதவைத் திறந்தால் பின்பக்கம் ஒரு பாத்ரூம். தண்ணீர் மோட்டார். துணிதுவைக்கும் கல்.

செண்பகம் என் கையை அழுத்திப் பிடித்தாள். அவளுக்குப் பிடித்திருந்தது.

"வீடு பிடிச்சிருந்தா, பத்தாயிரம் அட்வான்ஸ் கொடுங்க. டாக்குமெண்ட்ஸ் வாங்கித் தர்றேன். வக்கீலைப் பார்த்து ஒப்பீனியன் வாங்கிட்டிங்கன்னா, கண்டிப்பா பத்து நாள்ள ரெஜிஸ்ட்ரேஷன் வச்சிக்கணும். சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்."

"சாயுங்காலம் ஐந்து மணிக்கு உங்க போன்ல பேசி விவரம் சொல்றேன்," என்று கோவிந்தனிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம்.

சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு வந்த செண்பகம் கறாராகச் சொன்னாள். "செங்கொடியப்பா, நீ என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது. நாம் இந்த வீட்டை வாங்குறோம், அவ்வளவுதான்!"

"இல்லை செண்பகம். கொஞ்சம் பொறு. அந்த வீட்டைப் பத்தி வெளியில விசாரிக்கணும். யாரு, எவருன்னு விசாரிக்கணும். ஏன் இவ்வளவு கம்மியாக் கொடுக்குறாங்கன்னு விசாரிக்கணும். அந்த வீட்டுல ஏதாவது அசம்பாவிதம் நடந்துதா இல்லைன்னா கோர்ட்டு கேசுன்னு ஏதாவது வில்லங்கம் இருக்கான்னு பார்க்கணும். எடுத்தோம் கவிழ்த்தோம்னு அட்வான்சை கொடுக்கக்கூடாது."

மறு நாள் மதியவாக்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு அந்த வீட்டைப் பற்றி விசாரிக்கச் சென்றேன். நான் அந்த வீடு அருகில் போவதற்கும் கோவிந்தன் எதிரில் வருவதற்கும் சரியாக இருந்தது.

"என்ன சார்... விசாரிக்க வந்துட்டீங்களாக்கும்? நல்லா விசாரிங்க சார். வாங்க... அதோ அந்தக் கோயில் வராண்டாவுல முக்கியஸ்தர் இருக்காரு. அவரை வேணும்னாலும் விசாரிங்க. விசாரிச்சுட்டே அட்வான்சைக் குடுங்க." என்று சொல்லிகொண்டே கோவில் அருகில் அழைத்துக்கொண்டு போனார்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூதாகர சுவாமிகள் திருக்கோயில். பிரம்மாண்டமான மஞ்சள் போர்டு. மதியான வேளையாதலால் கோயிலில் கூட்டமே இல்லை. ஒருவர் மட்டும் பெருத்த தொந்தியைத் துருத்திக்கொண்டு, சக்தி, சக்தி, சக்தி என்று முழுவதும் எழுதிய சிவப்பு வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டிருந்தார்.

"இவுருதான் பூதாகர சாமிகள். சாமி... இவுரு அந்த மூணாவது வீட்டைப் பத்தி விசாரிக்க வந்திருக்கார் சாமி," என்று கோவிந்தன் அறிமுகப்படுத்தினார்.

"தாரளமா வாங்கலாம். எந்த வில்லங்கமும் இல்லை. அவுங்க ஏதோ வெளி நாட்டுக்குப் போறாங்களாம். உடனே பணம் வேணும்னுட்டுதான் இந்த மட்ட ரேட்டுல விக்கறாங்க. எங்கிட்ட பணம் இருந்தா இந்தக் கோவிலுக்காவே அந்த வீட்டை வாங்கிப்போட்டுடுவேன். அம்மாவுக்கு குடுப்பினை இல்லை." என்று அந்த சுவாமிகள் சொன்னார்.

"சரி. காலையில வந்து அட்வான்ஸ் கொடுக்கிறேன். டாகுமெண்ட் காப்பி கொடுத்துடுங்க," என்றதும்,
கோவிந்தன் சொன்னார். "நானே காலம்பற உங்க வீட்டுக்கே வர்றேன். காசை வாங்கிகிட்டு டாக்குமெண்ட்டை கொடுக்கறேன். ஒரே விலை. ஞாபகம் வச்சிக்குங்க. எட்டு லட்சம். பத்தே நாள்ள ரெஜிஸ்ட்ரேஷன். எனக்கு ரெண்டு பெர்சென்ட் கமிஷன். புரிஞ்சுதா? உங்க வீட்டு அட்ரசைக் கொடுங்க."

எழுதிக்கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து செண்பகத்திடம் விஷயத்தைச் சொன்னேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டாள்.

மறுநாள் கோவிந்தன் டாக்குமெண்ட் பேப்பர்களைக் கொடுத்துவிட்டு அட்வான்சை வாங்கிச் சென்றார். அதை அப்படியே கொண்டுபோய் எனக்குத் தெரிந்த வக்கீலிடம் கொடுத்தேன். கால்மணி நேரமாக, துழாவிப் பார்த்த அவர், "ஒரு பிரச்சினையும் இல்லை. பேஷா வாங்கலாம். அப் டு டேட் ஈசிகூட இதோட குடுத்திருக்காங்க. நம்பி வாங்குங்க." என்று பச்சை சிக்னல் கொடுத்தார்.

மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. எங்களின் சேமிப்புகளைக் கூட்டிக்கழித்துப் பார்த்ததில் கொஞ்சம் உதைத்தது. நண்பர்களிடம் சொன்னபோது உடனே கடன் கொடுத்து உதவினார்கள். ஒரே வாரத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து, வீட்டைக் கழுவி மெழுகி, இதோ பொங்கல் பொங்கி, குடித்தனமும் வந்தாகிவிட்டது.

வந்தவர்கள் எல்லாருக்கும் வீடு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. நண்பர்கள்கூட "உனக்கு அடிச்சுதுய்யா லக்கி பிரைஸ்," என்று சொல்லி சொல்லி சிலாகித்துக்கொண்டார்கள். வந்தவர்களையெல்லாம் வழியனுப்பி, ஒருவழியாய் வீட்டுப் பொருட்களையெல்லாம் அடுக்கிவைத்து, களைப்பு மேலிட, நிம்மதியாய் தரையில் கையை மடக்கி வைத்து செண்பகம் உறங்கிப்போனாள்.

இதோ செங்கொடி... அடுத்த மாதம் வரப்போகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக பின் பக்கத்து துணி துவைக்கும் கல்லின்மீது உட்கார்ந்து படிக்கத் துவங்கிவிட்டாள்.

***

இரண்டு நாட்கள் கடந்தன. மூன்றாம் நாள் அந்த வீடே அதிர்ந்தது. கதவுகளும் சன்னல்களும் 'டர்ர்ரம்... டர்ர்ரம்' என்று அதிர்ந்தன. வீட்டுக்கு வெளியில் உள்ள நடைபாதையில் பதினைந்து அடி உயர ஸ்பீக்கர் பெட்டிகளை கட்டுக் கட்டாக அடுக்கி வைத்திருந்தனர். அதிலிருந்து வந்த மாரியம்மன் பாடல்கள் எல் ஆர் ஈஸ்வரி குரலில் காதுகளைப் பிய்த்து எடுத்தது.

வீட்டுக்குள் ஒருவருக்கொருவர் இரண்டடி தூரத்தில் இருந்தால்கூட ஒருவருக்கொருவர் பேசுவது காதில் விழவில்லை. அந்த எமகாதக ஸ்பீக்கர்களுக்குப் போட்டியாக நாங்களும் உரக்கக்கத்தி, இரைந்து பேசவேண்டியிருந்தது.

விடியல் ஐந்து மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை பக்திப் பாடல்கள். டி எம் சுந்தர்ராஜனும், எல் ஆர் ஈஸ்வரியும், எஸ்.பி பாலசுப்ரமணியமும், எங்கள் காதுகளைக் குடைந்தெடுத்தார்கள். ஒரு ஐந்து நிமிட இடைவெளிகூட இல்லாமல் குதறி எடுத்தார்கள்.

மாலை ஆறு மணிக்குமேல் பம்பை உடுக்கை. கோயிலில் பூதாகரச் சாமிகள் எழுந்து நின்று ஆட ஆட, கூட்டம் குமிந்துகொண்டிருந்தது. எங்களுடைய காதுக்கு அரை அடி அருகாமையிலேயே ஓங்கி ஓங்கி பம்பையும் உடுக்கையும் அடிப்பதுமாதிரி இருந்தது. போதாக்குறைக்கு பூதாகரச் சாமிகளின் ஓங்காரம் வேறு. இது தொடர்ந்து ஒரு மாதத்துக்கு ஒலிக்குமாம். நிறையபேர் மருவத்தூர் கோயிலுக்கு மாலை போட்டிருப்பதாகவும், தினந்தோறும் மாலை நேரங்களில் பூஜை நடப்பதாகவும் அது இரவு ஒரு மணிவரை நடக்குமென்றும் அக்கம்பக்கத்தினர் சொன்னார்கள். எங்களுக்கு மண்டைக்குடைச்சல் அதிகமானது.

திரும்பவும் மறுநாள் காலை ஐந்து மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை டி எம் சுந்தர்ராஜனும், எல் ஆர் ஈஸ்வரியும், எஸ்.பி பாலசுப்ரமணியமும்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக இந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும், அன்றிலிருந்து இந்தத் தெருவாசிகளுக்கு நிம்மதி போனதென்றும் நிறையபேர் பேசிக்கொண்டார்கள்.

ஒரே வாரத்தில் என் மனைவி சோர்ந்துபோய்விட்டாள். என் மகளும் படிக்க வழியின்றி பேதலித்ததுபோல் காணப்பட்டாள். நாங்கள் மூவரும் ஒருவாரகாலமாக, ஒரு பொட்டு நேரம் கூட கண் தூங்கவில்லை.

என் நண்பர்களிடம் சென்று நடந்துகொண்டிருக்கும் அராஜகங்களை எடுத்துக் கூறினேன். ரொம்பவும் வருத்தப்பட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு பெட்டிஷன் எழுதிக்கொடுக்கும்படி ஆலோசனை கூறினார்கள்.

பெட்டிஷன் கொடுத்துவிட்டு,  நின்றிருந்தபோது எஸ் ஐ பதில் சொன்னார். "இதெல்லாம் சகஜம்தானேய்யா. இதுக்குப்போய் கம்ப்ளைண்ட் கொடுக்க வந்துட்ட? தெருவுக்குத் தெரு இப்பத்தான் கோயில்ல ரேடியா போடுறது வழக்கமாகிப்போச்சே? கார்த்திகைல ஐயப்பமார்கள் பூஜை, மார்கழில பெருமாள் கோயில், ஆடி மாசத்துல மாரியம்மன் கோயில்... ஏன்... இந்துக்கள் மட்டுமா ரேடியா போடுறாங்க? முசுலீம்க மசூதில ஓதுராங்க. கிரிஸ்தவங்க சர்ச்சுல பிரச்சாரம் பண்றாங்க. இதுக்கு நடுவுல கல்யாணம், கச்சேரி. போதாக்குறைக்கு, வாரத்துக்கு ஒரு கட்சி மீட்டிங் எல்லாம் இருக்கு. அப்புறம் எம்ஜிஆர் பிறந்த நாள், ரஜினி பிறந்த நாள், புதுவருஷக் கொண்டாட்டம், ஆட்டம் பாட்டம்... இதெல்லாம்தான் மத நல்லிணக்கம், சுதந்திரம்னு சொல்றாங்க! இதையெல்லாம் சகிச்சிக்கிடணும். சகிச்சிக்கிடறதுதான் வாழ்க்கை. இதுக்கே சலிச்சிக்குற? இதுக்குபோய் ஒரு கம்ப்ளைன்ட். சரி. நான் என்ன செய்யணும், சொல்லு?"

"வந்து விசாரிங்க சார். என் மக பிளஸ் டு பரீட்சைக்குப் படிக்கிறா சார். காதெல்லாம் சும்மா பிய்ச்சிகிட்டு போகுது, ஜன்னல் கதவெல்லாம் அதிறுது. பைத்தியமே பிடிக்கும்போல இருக்கு சார். கொஞ்சம் தயவு பண்ணுங்க."

"நான் இவ்வளவு தூரம் சூதகமா சொல்லியும் விளக்கிக்காமப் பேசுற. அந்தக் கோயில் பூசாரிக்கு லோகல் சப்போர்ட்டு இருக்குய்யா. அவுனுங்களை நீ சமாளிப்பியா? என்னவோ போ, உன் தலைவிதி. சரி நீ போய்யா. பின்னாடி நாங்க வர்றோம்." என்று சொல்லியனுப்பினார். தயக்கத்துடன் நான் கிளம்பிப்போனேன்.

நான் வீட்டை நெருங்க நெருங்க, ஸ்பீக்கர் பாட்டுச் சத்தம் பேயாய் அலறியது. ஒரு நரகத்துக்குள் நுழைவதுபோலவே கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தேன். என் மனைவி விட்டத்தைப் பார்த்தவாறு குத்துக்காலிட்டு ஹாலில் உட்கார்ந்துகொண்டிருந்தாள். அந்த ரேடியோ அலரலில் நான் சொன்னதை ஏதோ ஒன்றும் பாதியுமாகப் புரிந்துகொண்டாள்.

அரைமணி நேரம் கழித்து ஒரு பையன் உள்ளே வந்தான். "கோயில்கிட்ட போலீஸ் வந்திருக்கு. உங்களை எஸ். ஐ கூப்பிடராரு."

கலவரத்துடன் பார்த்த என் மகளை உள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டு, நானும் செண்பகமும் கோயிலை நோக்கி நடந்தோம். ஒரு பத்து பதினைந்துபேர் எங்கள் வருகையை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கோவிந்தனும் தெரிந்தார். எங்களைப் பார்த்ததும் பம்மிக்கொண்டு, கூட்டத்தின் பின்னால் மறைந்தாற்போன்று நின்றுகொண்டார். ரேடியோ அலறல் நிறுத்தப்பட்டது.

எஸ் ஐ ஆரம்பித்தார். "இந்த ஆளு கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார். நீங்க என்ன செய்யப்போறீங்க?"

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பூதாகர சுவாமிகள் என் பக்கத்தில் வந்தார். "யோவ், அந்த வீட்டை வாங்கலாம்னு உனக்கு எடுத்துச் சொல்லி நல்லது செய்தா, என் பேர்லயே கம்ப்ளைண்ட் தர்றியா? நல்லா இருப்பியா நீ? இந்த அம்பாள்தான் உன்னை சும்மா விட்டுடுவாளா? உன் குடும்பமே நாசமாய்ப் போய்டும். நீ அழிஞ்சுபோய்டுவ. வெளங்காமப் போய்டுவ..." என்று உள்ளங்கையில் மடித்திருந்த விபூதியை எடுத்து திடுமென எங்கள் மூகத்தில் வீசினார். செண்பகம் ஒரு கணம் திக்குமுக்கடிப்போனாள். எதிர்க் காற்று பட்ட கைக்குழந்தை மூச்சுத் திணறுவதுபோல செண்பகம் திணறினாள். அவள் கண்களில் நீர் கோர்த்து நின்றது.

"இந்தியாவுல, எங்களுக்கு ரேடியா போட்றதுக்குக்கூட சுதந்திரம் கிடையாதா? நாங்க சாமியே கும்பிடக்கூடாதா?" என்று இன்னொரு செவ்வாடை கேட்டது.

"சரி சுவாமி, நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. அங்க வச்சு பேசிக்கலாம். நீயும்தான்யா. உடனே வந்துடுங்க." ஜீப் கிளம்பிச் சென்றது.

செண்பகத்தை கைத்தாங்கலாக நடத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றேன். சுற்றி நின்றவர்கள் காட்சிபொருளாக எங்களையே வேடிக்கை பார்த்தார்கள். என் வீட்டின் அருகில் வசித்த ஒரு பெரியவர் சன்னக்குரலில் சொன்னார்.
"நாங்கள்ளாம் எவ்வளவோ முயற்சி செய்துட்டோம். எதுவும் நடக்கலையே தம்பி. இந்த பூசாரி அராஜகம் செய்யுறான். போதாக்குறைக்கு எதிர் முக்குல கட்சி மீட்டிங் அடிக்கடி போடுரானுங்க. என்ன செய்யுறதுன்னே தெரியலை. எத்தனையோ கம்ப்ளைண்ட் கொடுத்தும் பிரயோஜனமில்லை. நாங்களும் வீட்டை வித்துட்டு வேற எங்காவது போகவேண்டியதுதான். ஆனா திடீர்ன்னு நீங்க இங்க வந்து மாட்டிக்கிட்டீங்களே தம்பி! அக்கம் பக்கம் விசாரிச்சு வீடு வாங்க வேண்டாமா?"

எனக்கு சுரீர் என்றது. கோவிந்தன் எங்களை ஏமாற்றிவிட்டான்!! இந்த வீட்டை விட்டு ஒழிந்தோடினால்தான் நிம்மதியாக இருக்கும் என்று நினைத்துத்தான் மட்டமான விலைக்கு இந்த வீட்டை விற்றுவிட்டார்கள் என்று எங்களுக்கு இப்போது உரைத்தது.

திரும்பவும் ரேடியோ அலற ஆரம்பித்துவிட்டது. செண்பகத்தை படுக்கை அறைக்கு கூட்டிச் சென்று அசுவாசப்படுத்தி படுக்கவைத்தோம். கதவை சாத்திவிட்டு நான் செங்கொடியிடம் கத்திச் சொன்னேன். "செங்கொடி, அம்மாவை பத்திரமா பார்த்துக்க. அரைமணி நேரத்துல வந்துடறேன்."

சரி என்று சொன்னாள் செங்கொடி. பாவம், அந்தக் காட்டுக் கத்தலிலும் கணிதப் புத்தகத்தை பிரித்துவைத்து படிக்கத் தயாரானாள்.

***

போலீஸ் ஸ்டேஷனில் அந்த பூசாரி ஒரு இருபதுபேர் புடைசூழ நின்றிருந்தான். அதில் ஒருவர் அந்த ஏரியா கவுன்சிலராம். அந்த கவுன்சிலர் என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அங்கு போவதற்குள் அந்த கும்பலிலிருந்த பத்துபேர் ஒன்றாக ஒரு பதில் மனு எழுதிக் கொடுத்திருந்தனர்.

எஸ் ஐ அதை என்னிடம் கொடுத்தார். அதில், அவர்களும் அந்தக் கோவிலைச் சுற்றியே வசிப்பதாகவும், அவர்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் அந்த ஸ்பீக்கரால் இல்லை என்றும், மேலும் இதன் மீது நடவடிக்கை எடுத்தால் அங்கு வசிக்கும் இந்துக்களின் மனம் புண்படும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எஸ் ஐ சொன்னார். "இங்க பாருங்க நடராஜ். இதுல ஆக்ஷன் எடுத்தா பிரச்சினை பெரிதாகிக்கொண்டே போகும். இதுல முக்கியமா குறிக்கவேண்டியது மதம். அப்புறம் தள்ளுமுள்ளு ஆகி, கலவரமாகிடுச்சுன்னா, எங்க டிபார்ட்மெண்டுக்கே அசிங்கமாகிடும். மேலிடத்துக்கு விஷயம் போகும். அதனால கொஞ்சம் அனுசரிச்சிப் போய்டுங்க. சுவாமி... நீங்களும் ஸ்பீக்கர் சவுண்டை கொஞ்சம் கம்மிபண்ணி வையுங்களேன். அவரோட பொண்ணு பரீட்சைக்குப் படிக்குதாம்."

ஏதேதோ பேசி, இரு தரப்பினரையும் சமாதனப் படுத்தி, நாங்கள் சமாதானமாகப் போய்விடுவதாக எழுதி வாங்கிக்கொண்டார் எஸ் ஐ. "சவுண்டைக் கொஞ்சம் குறைச்சுவையுங்கப்பா. பாவம். அவுங்கமட்டும் என்ன செய்வாங்க?" என்று பரிதாபப்பட்டு அவர்களிடம் சொன்னார்.

எல்லோரும் என்னையே முறைத்துப் பார்த்தவாறு புன்முறுவலுடன் கிளம்பிப் போனார்கள். நான் எனது சைக்கிளை மிதிக்கக்கூட திராணி இல்லாமல் தள்ளிக்கொண்டே வீடு நோக்கி ஒரு நடைப்பிணமாய் நடந்துபோனேன்.

சைக்கிளை நிறுத்தி தயங்கி நின்றேன். ரேடியோ சவுண்டு முன்பு இருந்ததைவிட இன்னும் படுமோசமாக அலறிக்கொண்டிருந்தது. என் மீதிருந்த கோபத்தை ஸ்பீக்கரில் காட்டிக்கொண்டிருந்தார்கள். நான் கதவை பலம் கொண்டமட்டும் தட்டினேன். செங்கொடி கதவைத் திறந்தாள்.

ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ஓவென கேவிக் கேவி அழுதாள். "ஏன், என்ன," என்று பதறிப்போய் கேட்டேன்.

"அப்பா, அப்பா, அம்மாவைப் பாருங்கப்பா, என் அம்மாவைப் பாருங்கப்பா..." என்று பெட் ரூம் கதவை திறந்து காட்டினாள்.

அங்கே என் செண்பகம், 'மாரியம்மா மாரியம்மா, நீலியம்மா திரிசூலியம்மா' என்கிற எல் ஆர் ஈஸ்வரி பாட்டுக்கு, தலையை விரித்துப்போட்டுக்கொண்டு, நாக்கை வெளியே தள்ளிக்கொண்டு, கண்களை உருட்டி உருட்டி, மேலும் கீழுமாகக் குதித்து, மெட்டுத் தவறாமல், சாமியாடிக்கொண்டிருந்தாள்.

"டேய்,, அடேய்...நடராஜா, வாடா.. ஹ்ம்ம்... வா...வா. இந்த ஆத்தாளுக்கு என்னடா கொண்டுவந்த?" என்று தலையால் தலைமுடியை சக்கரம்போல சுழற்றிக்கொண்டு, அவள் கத்தியது, ஸ்பீக்கர் சவுண்டைவிட அகோரமாகக் கேட்டது. ஒரு கணம் என் ரோமங்கள் குத்திட்டு நின்றன.

என் செங்கொடி பெட் ரூமுக்குள் வரப் பயந்து வெளியிலேயே பேயறைந்ததுபோல நின்றாள். அவள் கால்கள் நிற்கவும் திராணியற்று தடதடவென்று நடுங்கிக்கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. செங்கொடி சுவற்றில் மெல்லச் சரிந்தவாறே தரையில் உட்கார்ந்துகொண்டாள்.

"அய்யோ அப்பா, இந்த வீடு வேண்டாம்பா. எனக்கு பயமா இருக்கு. அம்மாவைப் பாருங்கப்பா. அவுங்களைப் பார்க்கவே சகிக்கலையேப்பா.இங்கேயிருந்து நாம போய்டலாம்பா," என்று தன்னுடைய இரு கைகளையும் தரையில் ஓங்கி அறைந்துகொண்டே, ஆற்றாமையால் ஈனக்குரலில் அழுதாள்.

தரையில் வீழ்ந்துகிடந்த கணக்குப் புத்தகம் காற்றில் படபடவென அடித்துக்கொண்டு, தானே அதன் பக்கங்களைப் புரட்டிக்கொண்டது!

19.12.11

நாயர் கடை டீயும், முல்லைப் பெரியாறு அல்வாவும்.

புதிய முறையில் கட்டப்பட்ட அணை திறக்கப்படுகிறது. (எங்களை மன்னித்துவிடு, மிஸ்டர். பென்னி குயிக்) 
ப்படியாவது பஜார்ல இருக்கிற அந்த கிருஷ்னன் நாயர் டீக்கடைமேல ஒரு கல்ல விட்டு எறியணும். அவன் பாய்லர உடைக்கணும். என் 'தல' மீது ஆணை. இது என்னோட ரொம்ப நாள் தீராத ஆசை. இதோ., இப்ப கிடைச்ச இந்த வாய்ப்பை விட்டுடக் கூடாது.

'தல'யோட பில்லா ரிலீஸ் ஆனப்போ, 'தல'யின் தலைமீது பீர் அபிஷேகம் செய்யறதுக்காக, போய் டொனேஷன் கேட்டு நிக்கறோம். எங்களை மதிச்சு ஒரு பத்து பைசா போட்டானா அந்த நாயர். மூஞ்சில அடிச்சாப்ல, 'போடே, போ... போய் வேற வேலை இருந்தாப் பாரு,' அப்படீன்னு சொல்றான்.

இதே அனுபவம்தான் 'நல்லவன் ரஜினி' ராஜேந்திரனுக்கும், 'ஒஸ்தி' ஒலகநாதனுக்கும், 'கஜினி' காஜாமொய்தீனுக்கும், 'குருவி' குரியகோசுக்கும், 'கொலவெறி' கோவிந்தனுக்கும் கெடைச்சது.

நாங்க எல்லாரும் மைதானத்து மூலையில உக்காந்து பெரிய பிளான் போட்டோம். கொஞ்ச நேரத்துலயே 'நாயகன்' நல்லகண்ணுவும் வந்து சேர்ந்தான்.

நல்லவன் ரஜினிதான் பேச்சை ஆரம்பிச்சான்.

"தல தர்மா, ஒஸ்தி, குருவி, கஜினி, கொலவெறி, நாயகன், எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க. இந்த முல்லைப் பெரியாறு அணைய காரணமா வச்சி, மொத்தபேரும் கும்பலா, 'தமிழன் வாழ்க, மலையாளி ஒழிக, முல்லைப் பெரியார் வாழ்க,' அப்படீன்னு கோஷம் போட்டுக்கிட்டே கடைக்குள்ள நுழையணும். போலீஸ்காரனால ஒண்ணும் பண்ணமுடியாது. ஏன்னு கேளேன்? இப்ப நடக்குறது தமிழர்ங்களுக்கும் மலையாளிக்களுக்குமான பிரச்சினை. இப்ப கடையை ஒடைச்சாத்தான், கேஸ் போட மாட்டானுங்க. தைரியமா கடையை நொறுக்கலாம். நமக்கும் ஜெனங்ககிட்ட இருந்து நல்லபேரு கிடைக்கும். கோஷம் போடாம போய் கடைல கை வைச்சீங்கன்னா, போய் களி திங்கவேண்டியதுதான். டென்ஷன்ல மறந்துடக்கூடாது, சரியா?"

"ஆனா, நாம எதுக்கு அடிக்கிறோம்னு அந்த கிருஷ்னன் நாயருக்கு தெரியணும், ரஜினி. நாம டொனேஷன் குடுக்கலன்னுதானே அடிக்கிறோம்? நாயர், உண்மையிலேயே முல்லைப் பெரியாருக்குத்தான் இவனுங்க அடிக்கிறான்னு நெனைச்சிகிட்டான்னா, நமக்கு திரும்பவும் டொனேஷன் கிடக்காமப் போய்டும். புரியுதா?" நான்தான் சொன்னேன். என் 'தல'யோட மூளையில பாதியாவது எனக்கு இல்லைன்னா, நான் 'தல'க்கு வாலா இருக்கிறதுல அர்த்தமே இல்லையே?

"டேய், தல தர்மா சொல்றதுதாண்டா கரெக்ட்டு. ஆனா, டொனேஷன் குடுக்கலன்னு சொல்லியடிச்சாக்கா, போலீசு நமக்கு நிச்சயமா லாடம் கட்டிடுவாங்க," குருவி சொன்னான்.

"சரி, ஒரு ஐடியா தோணுது. பாதிப்பேர் 'தமிழன் வாழ்க, மலையாளி ஒழிக, முல்லைப் பெரியார் வாழ்க,' அப்படீன்னு கோஷம் போட்டு, கடையை ஒடைப்போம். மீதிப் பேர் நாயர் காதுல கேக்கறாப்புல, 'டேய் நாயர், டொனேஷன் கேட்டா தொறத்தியாவிடுற? இப்பப் பாத்தியா? ஒழுங்கா நடந்துக்க...' அப்படீன்னு விஷயத்தைப் போட்டு ஒடைச்சிடுவோம்." கொலவெறி சொன்னான்.

"டேய், ஆனா நாயர்மேல கை வச்சிடாதீங்கடா. வைசான ஆளு. பொட்டுன்னு பூட்டான்னு வச்சிக்க, அப்புறம் பெர்மனென்ட் களிதான்." இது கஜினியின் அறிவுறுத்தல்.

சரியா சாயுங்காலம் ஆறு மணிக்கு, நாயர் கடை முன்னால கூட்டம் ஜெஜென்னு வடையும் பஜ்ஜியுமா முழுங்கிட்டு, டீக்குடிக்கும்போது, திபுதிபுன்னு கடைக்குள்ள பூந்துடனும்னு பிளான்.

அதுக்கும் முன்னால, தகிரியம் வர்றதுக்கு பை-பாஸ் ரோடு வைன் ஷாப்புல ஆளுக்கு ஒரு குவார்ட்டர் அடிச்சிக்கிறதாவும் பிளான்.

***

குவார்டர் குடுத்த உற்சாகத்தோட, பான் பராக்கும் கூட சேர்ந்துக்கிட்டு, அந்த உற்சாகத்தை டபுள் ஆக்கிடுச்சு. பல்சர்களும், யமகாவும், சுசுகியும், 'புர்... புர்'ன்னு சவுண்டு உட்டு, பின் சக்கரங்களால தரையை சீய்ச்சு, புகையும் மண்ணுமா வாரியடிச்சுது.

"ரெடி, ஜூட்" அப்படீன்னு யாரோ சொல்லவும் வண்டிங்க எல்லாம் நாயர் கடையக் காலி செய்ய சிட்டாப் பறந்தது.

நாயர் கடை வந்ததும் வண்டிய நல்லா உறுமவிட்டு, சைடு ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டினோம். கொலவெறி நல்லா வீலிங் பண்ணுவான். சரக்குன்னு முன் சக்கரத்தைத் தூக்கி நிப்பாட்டி, ஒத்த சக்கரத்துலயே பத்து ரவுண்டு அடிச்சான். சும்மா தவுசன்வாலா வெடி உட்டாமாதிரி, கடை முன்னால ஒரே புகை மண்டலம்.

"தமிழன் வாழ்க, மலையாளி ஒழிக, முல்லைப் பெரியார் வாழ்க," அப்படீன்னு எல்லாரும் கோஷம் போட்டுக்கிட்டே, கடைக்குள்ளாற புகுந்தோம்.
ஜனங்க எல்லாம் செதறி ஓடினாங்க. பாய்லர், பால் குண்டான், எண்ணைக் கடாய், எல்லாத்தியும் தூக்கியாந்து நடு ரோட்டுல போட்டு ஒடைச்சோம். நான் படக்குன்னு நாயரோட கல்லாவுல கையவுட்டு துழாவுனா, ஒத்த நயாபைசா காணும். நாயர் எல்லாத்தையும் அள்ளி அண்டர்வேர்ல போட்டுக்கிட்டான்போல.

"டேய் நாயர், டொனேஷன் கேட்டா, இன்னா இன்னா டகால்டி பேச்சு பேசற? இப்ப தெரியுதா நாங்க யாருன்னு," என்று சொல்லி கல்லா மேஜையை அப்படியே தலைககீழாக் கவுத்துப் போட்டேன். கிருஷ்னன் நாயர் அப்படியே சிலை மாதிரி நின்னாரு.

எல்லாம் ஒரு மூணு நிமிஷத்துல முடிஞ்சிபோச்சு. சத்தமா கோஷம்போட்டுக்கிட்டே, தயாரா நிப்பாட்டிவச்சிருந்த வண்டியக் கிளப்பிக்கிட்டு போய்ட்டோம்.

திரும்பவும் நேரா பை-பாஸ் வைன் ஷாப்புதான். என்ன குடிச்சோம், என்ன பேசினோம், எப்படிப் பிரிஞ்சோம்னு தெரியலை. மறுநாள், காலம்பர பதினோரு மணிக்கு எழுந்தா தலை வின்னு வின்னுன்னு வலிக்குது.

அந்த நேரம்பார்த்து, கொலவெறி ஓட்டமா ஓடியாந்தான். கையில இருந்த பேப்பரைக் காட்டி, "டேய் தல, நேத்து நாம அடிச்சு ஒடைச்சமே நாயர் கடை, அதை போட்டா புடிச்சி பேப்பர்ல போட்டிருக்கான் பாருடா," என்று குதூகலமாய் சொன்னான்.

பேப்பரில் இருந்த படத்தைப் பார்த்தா, நாயர் கடை அலங்ககோலமா கிடந்துச்சி. 

திரும்பவும் சாயுங்காலம் ஆறு மணிக்கு கும்பலா நாயர் கடைய பாக்கறதுக்கு, எல்லாரும் சும்மா ஹீரோ கணக்கா நடந்து போனோம். ரெண்டு போலீஸ்காரங்க தேமேன்னு ஸ்டூல்மேல குந்திக்கிட்டு இருந்தாங்க. ஜன நடமாட்டம் கம்மியா இருந்துச்சி. டீக்கடை ஷட்டரை இழுத்து மூடி பூட்டுபோட்டிருந்தாரு நாயர். எங்களுக்கு பரம திருப்தி.

***
இந்த 'நாயர் கடை உடைப்பு' ப்ராஜக்டை நடத்தி முடிக்கிறதுக்கு ஆன செலவு சுமார் ஆயிரத்து ஐனூறு ரூபாய். ரஜினிதான் செலவு செய்திருந்தான்.

"டேய் ராஜேந்திரா, கரண்ட்டு பில் கட்டிட்டு, அப்படியே ரேஷன் கடைக்கு போய்ட்டு வந்துடு, இந்தா ஆயிரத்து ஐனூறு. ரஜினி படத்துக்குப் போயி, செலவு கிலவு பண்ணித் தொலைச்சுடாத. பக்கத்து வீட்டு பாரிஜாதம்கிட்ட கடன் வாங்கி குடுத்திருக்கேன். கரண்ட்டு பில் கட்ட இன்னைக்குதான் கடேசி தேதி," என்று காசை எட்டு தடவை எண்ணி எண்ணிக் கொடுத்த அம்மாவை நினக்கும்போதே ரஜினிக்கு பகீர் என்றது.

செல்போனில் செய்தி சொல்லிக்கொண்டு, மைதானத்தில் அவசரகதியில் கூடியது சபை. எப்படியெல்லாமோ மண்டையை ஒடைச்சி ஐடியா செய்ஞ்சோம். கடேசியா கொலவெறியோட பல்சரின் ஒரிஜினல் டாக்குமெண்டை சேட்டு கடையில அடமானம் வைக்கிறதா முடிவு எடுத்தாங்க. ஒரு வாரத்துக்குள்ள எப்பாடு பட்டாவது, எல்லாரும் முயற்சி செய்ஞ்சி, கண்டிப்பா வண்டிய மூட்டுக்குடுத்துடனும்.

எங்க குரூப் அப்படியே கரம்சந்த் சேட்டுக்கடைக்கு முன்னால போய் நின்னுது. சேட்டு வாயிலேர்ந்து எப்பவுமே 'இல்லைன்ற' வார்த்தையே வராது. கதவைத் தொறந்து நாங்க உள்ளாற போனா, அங்க கிருஷ்னன் நாயர் இருந்தாரு. எங்களுக்கு முதுகை காட்டினாப்புல உட்கார்ந்துக்கிட்டு, சேட்டுகிட்ட பேசிக்கிட்டிருந்தாரு.

"சேட்டு, எனக்கு எண்டே கடை போனதைப் பத்தி கொஞ்சம்கூடக் கவலையில்லை கேட்டோ. ஏன்னா, எண்ட கடைய ஞான் இன்சூர் செய்திருக்கேனாக்கும். பத்திரிக்கை போட்டோ ஆதாரத்தை கொண்டுபோயி காட்டினேன். இன்னும் ஒரு மாசத்துல நஷ்ட ஈடு கொடுக்கறேன்னு சொல்லிட்டான்."

எங்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. நாயரா கொக்கா? கடைய நாங்க ஒடைக்க ஒடைக்க, நாயர் குய்யோ முறையோன்னு கத்தாம, சும்மா அசால்ட்டா நிக்கும்போதே எனக்கு சந்தேகம் தட்டுச்சி. ப்ச்... விஷயம் இப்படி ஒண்ணுமில்லாமப் போச்சே?!

சேட்டு எங்களைப் பார்த்து "தம்பிங்ளா, ஒரு அஞ்சீ நிம்சம் வெயிட் பண்றாங்கோ.. நம்பள் நாயர் போனப்புறம் உங்கள் பாக்கறான்." என்று சொன்னாரு.

அப்போதான் நாயர் பின்னால திரும்பிப் பார்த்து நாங்க வந்திருக்கிறத தெரிஞ்சிக்கிட்டாரு. என்ன நெனைச்சாருன்னு தெரியலை... இன்னும் குரல உயர்த்தி எங்களுக்கு கேக்கராப்ல, ஒரக்கப் பேசினாரு.

"ஞான் இதைப்பத்தியெல்லாம் கவலைப் படறதில்லை கேட்டோ. இதையெல்லாம் எதிர்பார்த்துத்தானே பொழைப்பு நடத்த ஞாங்கள் இவிடே வந்திருக்கோம்? ஆனா இந்த பயலுங்க எங்களப்போல சின்னக் கடைகளத்தான ஒடைக்க முடியும். இதோ ஒடைச்சுட்டு, வெளியதானே சுத்திக்கிட்டிருகானுங்க. இதே பெரிய கடையில கைய வச்சிருந்தா தெரியும் சேதி.... இன்னேரத்துக்கு உள்ளார இருப்பானுங்க கேட்டியோ.

"இவனுங்க இங்க செய்யறதைத்தான் எங்க மலையாள நாட்டிலே செய்ய்யறாங்க. தமிழர்களோட கடைகள ஒடைக்கிறானுங்க. அது தெரியுமா இந்தப் பயலுங்களுக்கு? ஐய்யப்பசாமிகள அடிச்சி ஒதைச்சி திருப்பி அனுப்புறது யாரு? மலையாளிங்கதானே? அதுக்காக இந்தத் தமிழங்க சபரிமலைக்கு போகாமலா இருக்காங்க?

"நீங்க வேணும்னா பாருங்க சேட்டு, இன்னும் தொள்ளாயிரத்து தொண்ணுத்தொன்பது வருஷத்துக்கு, இந்த முல்லை பெரியார் பிரச்சினை தீரப்போறதில்லை, கேட்டோ. அதை நல்லபடியா தீர்க்கணும்னா அதுக்கான தீர்வு நம்மைப்போல ஜனங்கள்டே கையிலதான் இருக்கு. அரசியல்வாதிகளால அதை தீர்த்துவைக்க முடியாது. அவனுங்க இந்தப் பிரச்சினையை ஊதி ஊதி, பெரிசாக்கத்தான் பார்ப்பானுங்க. அப்படி செய்ஞ்சாத்தான் அவனுங்களுக்கு லாபம். ஒரே கட்சிக்காரனுக்கு கேரளத்துல ஒரு கொள்கை, தமிழ் நாட்டுல ஒரு கொள்கை. த்தூ... கேவலமா இல்லை? இதே போலத்தானே கர்னாடகாவிலும் நடக்குது? எப்படி இந்த விஷயம் முடிவுக்கு வரும்? 

"நாடகமாடுற அரசியல்வாதிங்க வீடுகள மக்கள் அடிச்சி நொறுக்கணும். அவங்க வீட்டு முன்னால 'எங்களுக்கு பிரச்சினையை தீர்த்து வை' அப்படீன்னு கேரோ செய்யனும். வட்டம், மாடவட்டம் அப்படீன்னு எந்த போஸ்டுல இருந்தாலும், எல்லார் வீட்டு முன்னாலயும் உட்காரணும். அது தமிழ் நாடோ, அல்லங்கில் கேரளாவோ, எல்லா இடத்திலயும் பொதுமக்கள் ஒன்னாச் சேர்ந்து கட்சிக்காரங்களை இங்க அங்க போகவிடாம முடக்கிடனும். இப்படிச் செய்தாச்சுன்னா, இருபத்து நாலு மணி நேரத்துல பிரச்சினை தீர்ந்து போயிடும்! அதுவரையிலும் நாமல்லாம் அண்ணன் தம்பி மாதிரி பழகினாலும், இந்தக் குள்ளநரிங்க உள்ளாரப் புகுந்து, பகைய வளர்ந்துக்கிட்டுதான் இருக்கும், கேட்டோ.

"என் கடையை ஒடைச்ச இந்தப் பயலுகளுக்குக்கு வயசு அப்படி சேட்டு. இவனுங்க பிற்காலத்துல இதையெல்லாம் தப்புன்னு தெரிஞ்சிக்குவானுங்க. இதையெல்லாம் கிளறி விடறது அரசியல்வாதிங்கதான்னு தெரிஞ்சிக்குவானுங்க. அரசியல்வாதிங்க பொறுக்கித் திங்கிறதுக்கு இந்தமாதிரி கலவரத்தையெல்லாம் பிரச்சாரம் செய்யுறானுங்கன்னு தெரிஞ்சுக்குவாங்க. போதாததுக்கு டிவிக்காரனும் பேப்பர்க்காரனும் கூட சேர்ந்து ஒத்து ஊதறானுங்க. இப்படில்லாம் புகைய போட்டு நெருப்பா எறியவிட்டாத்தான், அந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு லாபம்னு இவனுங்க தெரிஞ்சிக்க ரொம்பக் காலம் ஆவாது. இந்தப் பயலுங்கமேல தப்பு இல்லை கேட்டோ." கிருஷ்னன் நாயர் பேசி முடித்தாரு. "சேட்டு, எனக்கு ஐம்பதாயிரம் பணம் வேணும். மூணு மாசத்துல திருப்பிக் கொடுத்துடறேன்."


"உன்க்கு இல்லாததா நாயர், இந்தாங்க," என்று ஐனூறு ரூபாய் கட்டுகளை எடுத்துவைத்தாரு சேட்டு.

காசை எண்ணி சரிபார்த்துட்டு "சரி, ஞான் வர்றேன் சேட்டு," என்று திரும்பி, எங்களை நோக்கி வந்தாரு.

"எடோ, என்னங்கடா, நேத்து நீங்க அடிச்ச கூத்துக்கு, எதையாவது அடமானம் வச்சி காசை தேத்தனும்! அதுக்குத்தானே வந்திருக்கீங்க?," என்று எங்களைப் பார்த்து நாயர் கேட்டாரு.

நாயரைப் பார்த்ததும் எங்களுக்கெல்லாம் எழுந்து நிக்கத் தோணிச்சி. எழுந்து நின்னோம்.

"ஆமா நாயர். வண்டிய அடமானம் வைக்கலாம்னு வந்தோம்." குருவி சொன்னான்.

"எவ்வளவுக்குடே வைக்கப்போறீங்க?"

"ஆயிரத்து ஐனூறு. ரேஷன் கடை காசு. அம்மா திட்டுவாங்க."

"இந்தாடே..." அப்படீண்ணு மூணு ஐனூறு ரூபாய் நோட்டுங்கள கட்டுல இருந்து உருவி எடுத்து, குருவியோட சட்டை பாக்கெட்டுக்குள்ளாற போட்டாரு.

"எடோ தம்பிகளா, ஞான் இந்தக் காசை கொடுக்குறது, உங்க நாறிப்போன ரசிகர் மன்றத்துக்கு கொடுக்குற டொனேஷன் இல்லை கேட்டோ," என்று சொல்லியவாறு தன் சைக்கிளை ஓட்டிக்கிட்டு போய்க்கிட்டேயிருந்தாரு.

எங்க கண்ணுல இருந்து நாயர் மறையறவரைக்கும் அந்தப்பக்கமாவே பார்த்துக்கிட்டிருந்தோம்.