My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...
Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

13.2.13

வினோதினி...

(ஒரு சாதிச்சங்க / கட்சித் தலைவரின் கூற்றைப்போல இங்கே எழுதப் பட்டுள்ளது. உதாரணமாக, நாயக்கன் கொட்டாயில் சாதிக்கலவரத்தைத் தூண்டிய தலைவர்களும், அத்தகையோருக்கு அடிபணிந்துபோன பாதிக்கப்பட்ட சாதித் தலைவர்களும் கூட்டகச் சேர்ந்து இங்கே எடுத்துச் சொல்வதுபோல, அவர்களின் பார்வையில் பொருத்திப் படிக்கவும்.)


வினோதினி...
அவள் முகத்தில்
வீசப்பட்ட அமிலத்தில்
நம் சாதிக்காரனின்
வாசனை வீசினால்
விட்டுவிடு.
தப்பு இல்லை!

கீழ்ச் சாதிக்கார
கழிசடையாயிருந்தால்
சுட்டுவிடு.
குற்றமில்லை!

வினோதினி...
மேல்சாதிக்காரனுக்கு
மகளாய் இருந்தால்
கொட்டாய்களை
கொளுத்திவிடு.
அச்சமில்லை!

வினோதினி...
கீழ்ச் சாதிக்காரரின்
மகள்தான் என்றால்,
ஜீன்ஸ் பேண்ட்டு
ஜாக்கி ஜட்டியை
பல்சர் பைக்கு
இவைகளைப் பார்த்து
மதி மயங்கிய
ஓடுகாலி என்று
ஒற்றை வரியில்
குற்றம் சாட்டு.
பாவமில்லை!

நம் ஜாதிக்காரன்
தோட்டத்தில் பூத்த
ரோஜாவை மட்டும்
வாங்கிக்கொண்டு
உனக்கான
காதலிகளைத் தேடி
காமத்தோடு
தெருத் தெருவாய்
அலை.
தவறு இல்லை!

கண்ணில் பட்ட
எந்தப் பெண்ணும்
உன்னைக்
காதலிக்க
மறுத்தாளென்றால்
இரக்கப்பட்டு
விட்டுவிடாதே.
இப்போது,
நீ ஒரு ஆண்மகன்
என்பதை
இங்கே நிரூபி.
உன் வீரத்தை
இந்த உலகுக்கு
எடுத்துக் காட்டும்
தருணமிது.

ஒரு ஆணின் காதலை
மறுக்கும் பெண்;
அடங்காப் பிடாரி.
இருப்பதை விட
அணு அணுவாய்
அனுபவித்து
செத்து மடியட்டும்.
கவலை இல்லை!

அவளின்
சாதி மதம்...
பார்க்காதே.
குலம் கோத்திரம்...
பார்க்காதே.
எடு.
அந்தப் பெண்ணின்
முதுகுக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு
அமிலத்தை எடுத்து
அவள் முகத்தில்
பாய்ச்சு.
கோபம் வந்தால்
கொடுமை செய்.
பாவமில்லை!

மிச்சம்
மீதத்தை
மேல்சாதி...
கீழ்ச்சாதி என்று
எல்லாமாக
சங்கமித்த
சாதிக்காரத் தலைவர்கள்
நாங்கள் பார்த்துகொள்கிறோம்.
வெட்டிக் கொள்வதும்
விட்டுக்கொடுப்பதும்
எங்களின் கடமை.
எங்களின் கண்ணியம்.
எங்களின் கட்டுப்பாடு.
இதில்தான்
எங்கள்
பிழைப்பு.
கொன்றால் பாவம்...
தின்றால் போச்சு!

ஆளும் கட்சியா,
எதிர்க்கட்சியா,
பாராளுமன்றமா,
போலீசா, செய்தி ஊடகங்களா?
அத்தனையும்
எங்கள்
சட்டைப் பையில்.
நீ பயப்படாதே.
நீ இங்கே
ஒரு
ஆண்மகன் என்பதை
நிரூபி.
நீ இங்கே
ஒரு
சாதிக்காரன் என்பதை
நிரூபி.

டேய், டேய்
தம்பீ...
ஆண்பிள்ளை
சிங்கமே...
குலக் கொழுந்தே...
போகும்போது
அந்த
அமிலக் குப்பியை
எடுத்துச் செல்ல
மறக்காதே!

7.1.13

யமுனை நதிக்கரையில் யாதுமற்றதாய் ...


வா
என் காதலியே...
யமுனை நதிக்கரையில்
யாதுமற்றதாய் 
இருமாந்து நிற்கும்
அந்த
காதல் சின்னத்தை 
யாம் கண்டு வருவோம்.
இருபத்து மூன்று
ஆண்டுகளில்
இருபத்து இரண்டாயிரம்
ஏழைத் தொழிலாளரின்
கடுமையான உழைப்பும்
வியர்வையும்
வீணடிக்கப்பட்ட
வரலாற்றை
சுமந்து நிற்கிறதாம்
ஒரு ஊதாரியின்
காதல் சின்னம்.
வா.
நாம் இருவரும்
ஒரு கரித்துண்டால்
அதன் வாசலில்
ஒரு கரும் புள்ளியிட்டு
நம்
மறுப்பை பதிந்து
வருவோம்!

23.12.12

அண்ணா நகர் அவென்யூ


அண்ணா நகர் 
அவென்யூக்களில்
வயிற்றுப் பசி
சவுக்கால் அடிக்க,
ஜவ்வு மிட்டாய் 
சிலுவையை
தோளில் சாய்த்து
சுமந்தபடி
சுற்றித் திரிகிறான்
அந்த
அழுக்குப் பிடித்த
ஜவ்வு மிட்டாக்காரன்.

உயிருள்ள
கட்டுமானங்கள்.
கார்கள் மட்டுமே
உலா வரும்
ஆட்களே இல்லாத
அந்த அரண்மனை
அவென்யூக்களில்,
அவன் மட்டும்
ஒரு நடைப் பிணமாய்.
தன்னந்தனியனாய்.

எண்பத்தாறு இன்ச்
சோனிக்களில்
ஆங்கிரி பேர்டு -
திரி டி பறவையோடு
ஆக்ரோஷித்து
ஒன்றிப்போன
அரண்மனைக் குழந்தைகள்.
விளையாட்டு வினையில்
பன்றிகளாய்
தின்றுபோட்ட கழிவுகள்.
அவைகளின் காலடியில்
காட்பரீஸ் சாக்லெட்டுகள்,
பிஸ்ஸாத் துண்டுகள்,
ஜரிகையில் சுற்றிய
கே எஃப் சி கால்கள்!
வேலைகாரி வந்தவுடன்
எல்லாமும் அள்ளி
பச்சைக் கலர்
பிளாஸ்டிக் பையில்
அழுந்தத் திணிக்கப்பட்டு,
சென்று சேர்ந்துவிடும்
குப்பைத் தொட்டிக்கு.
சுற்றுச் சூழலுக்கு
சற்றேனும் மாசில்லா
மக்கும் குப்பை!

மூக்கு
முட்ட முட்ட
அசைபோட்டுத் தீர்த்ததில்
ஜவ்வுமிட்டாய்க்கு
அங்கே
இடமில்லை.
அர்த்தமுமில்லை.

ம், பாவம் அவன்.
வியாபாரம் தெரியாத
'யாவாரி.'
பார்பி பொம்மைகளுக்கிடையே
அவன்
மரப்பாச்சி விற்கிறான்.

ம், பாவம் அவன்.
ஷாப்பிங் மால் முன்னால்
பொம்மலாட்டம்
காட்டுகிறான்.

ம், பாவம் அவன்.
சித்திரான்னாம்
விற்கவேண்டிய
மியூசிக் அகாடமி
கேண்டீனில்
பரோட்டா குருமா
விற்கிறான்.

ம், பாவம் அவன்.
வானளாவிய
வால் மார்ட்
தின்பண்டகளுக்கிடையே
தேன் மிட்டாய் விற்கிறான்.

குறைந்த பட்சம்
இந்த
யாவாரி
'எகனாமிக் டைம்ஸ்'
படித்திருக்கவேண்டும்.
இல்லையென்றால்
கொருக்குப் பேட்டை
சேரிப் பயல்களுக்கு
விற்கவேண்டிய
பண்டத்தை
அண்ணா நகர்
அவென்யூவுக்கு
விற்க வருவானா?

ம், பாவம் அவன்.
வயிற்றுப் பசி
சவுக்கால் அடிக்க,
ஜவ்வு மிட்டாய்
சிலுவையை
தோளில் சாய்த்து
சுமந்தபடி
சுற்றித் திரிகிறான்.

6.12.12

அடையாளம்...





இனிமேலும்
தண்ணீர் திறந்துவிட
மறுக்கப்பட்டால்...

இனி
எலிக்கறிதான்
சோறுடைத்த சோழ நாட்டின்
வரலாற்று அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
வக்கில்லாமல்
சோடைபோன நம்
கழங்கங்களின்
சூடுபட்ட அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
கர்நாடக அரசு
கயமைத் தனத்தின்
கறைபடிந்த அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
நீதி மன்ற உத்தரவு
நீர்த்துப் போனதன் அடையாளம்.

இனி
எலிக்கறிதான்
ஒன்றிணைந்த இந்தியாவின்
ஓர் உன்னத அடையாளம்...

இனி
எலிக்கறி மட்டும்தான்
காவிரி என ஒன்று
இருந்ததற்கான
உண்மையான அடையாளம்!!

29.9.12

தாரைத் தப்பட்டை டகரடகர டான்ஸாடி...


சம்பங்கி மாலையிட்டு,
சரஞ்சரமா வெடி வெடிச்சி,
சில்லரைய தெருவெல்லாம்
சிதறடிச்சி எறைச்சிவுட்டு,
ஊரு ஒலகமெல்லாம் அதிரதிர
வெடி போட்டு,
தாரைத் தப்பட்டை
டகரடகர டான்ஸாடி,
செலவெல்லாம் செய்ஞ்சி
சாவெடுக்கும் நேரத்திலே,
கல்லறைக்குப் போயி
கொள்ளி வைக்கும் வேளையிலே...

(கோர்ட்டு ஆர்டருக்கு நம்ம நாராய்ஞ்சாமி ஒப்பாரி...)

24.9.12

தாமரைக் கனியின் மோதிரக் காவியங்கள்...


தாமரைக் கனியின்
மோதிரக் கா(வி)யங்கள்,
தினந்தோறும் வீசும்
தண்ணி வாசம்,
வேட்டி சேலை உருவி
விபரீதக் காட்சிகள்,
பட்டாபட்டி மட்டும் போட்டு
மைக் செட்டு விளையாட்டு,
வெளி நடப்பு செய்தே
வெளியில் காலம் தள்ளும்
எலும்பில்லா எதிர்க் கட்சி,
இருமினாலும் தும்மினாலும்
பெஞ்சு முரசு கொட்டும்
வெக்கங்கெட்ட வெள்ளை வேட்டி,
கார் டயரைத் தொட்டு வணங்க
காத்திருக்கும் மந்திரிகள்...

அட,
அறுபதாண்டைத் தொட்டுவிட்ட
அருமைச் சட்டசபையே...
உன்னிடமிருந்து
இன்னும்...
இன்னும் நிறைய
எதிர்பார்க்கிறோம்!!

22.7.12

ஏழு தலைமுறைக்கும் சோறு!!



ஏழு தலைமுறையா,
உழுது பாத்தாச்சு.
வெதைச்சுப் பாத்தாச்சு.
வெட்டியா இருக்காம,
வேலைக்கும் போயாச்சு.
ம்ஹூம்.
ஒத்த பைசா
ப்ரயோஜனமில்ல!

கழுத,
கிடக்கட்டும்மின்னு...
கதராடை உடுத்தி,
கட்ட பஞ்சாயத்து பண்ணினேன்.
ஏழு தலைமுறைக்கும்
சோறு!!
காந்தியிசம்!!!



###


நல்ல வேளை!

பக்கிங்ஹாம் பரதேசியும்,
பிளாட்பாரத்து ராஜாவும்,
இன்னும் தெளிவா
சொல்லப்போனா,
இந்திய ஜனநாயகத்து
ஜனாதிபதியும்கூட,
'அவங்க அவங்க
குண்டிகள
அவிய்ங்க அவிய்ங்களே
கழுவிக்கிறாங்க'
அப்படீங்கற வகையில,
கடவுள் இருக்கிறாருங்கறத
கண்டிப்பா ஒத்துக்கோணும்!!






16.7.12

காமராஜ் vs கலாம்...



மிஸ்டர் காமராஜ்...
உங்கள்
மதிய உணவுத் திட்டத்தால்
என் புத்தகப்பையில் 
புகுந்துகொண்டது
ஒரு அலுமினியத் தட்டு...
இன்று அது
என் மகனுக்கு.
இது ஒரு சாபக்கேடு!

கான்வென்ட்டு மாளிகையில்
கலாமின் வாரிசுகள்
வறுத்த கோழிக்கான
கனவில் இருக்கும்போது...
கார்ப்பரேஷன் பள்ளிகளில்
தினந்தோறும் எங்களுக்கு
உண்மையான கோழி முட்டை!!

மிஸ்டர் காமராஜ்...!
கறிக் கோழிக்கான
கலாமின் கனவு
பலிக்குமா தெரியாது.
ஆனால்
நீங்கள் கண்ட கனவு
கடைசியில்
பலித்தேவிட்டது.
கல்விக்குப் பதிலாக...
கோழிமுட்டை!!!

23.6.12

காரிருள் கருப்பி



கரும் புள்ளி 
இருளிலிருந்து
பெரு வெடிப்பு.

பெரு வெடிப்புச் சிதறலில்
பேரண்டம்.

பேரண்டத்துள்
ஒரு புவி.
புவிக்குள் உயிர்.

எனில்
இருளில் பிறந்தது ஒளி.
நெருப்பில் துளிர்த்தது நீர்.

நீருள் நெளிந்த உயிர்.

என் மூத்த தாய்
ஒரு நெருப்பு.
இல்லை.
பெரும் வெடிப்பு.
இல்லை இல்லை...
இருள்.
காரிருள் கருப்பி.

நானும்
கருப்பன் என்பதில்
கர்வம் கொள்கிறேன்!

13.6.12

பேசின் ப்ரிட்ஜ்



அது 
என் மூதாதை 
என்றேன்.
'முடியாது' என்றார்கள்.

பட்சிகள் 
பழம் தின்று
எச்சமிடும் இடமென்றேன்.
'முடியாது' என்றார்கள்.

விழுதுகளில் தொங்கி
விளையாடிய இடம்
என்றேன்.
முடியவே முடியாதென்றார்கள்.

ஏரோட்டும் விவசாயி
இளைப்பாறு மிடமென்றேன்.
'ம்ஹூம்
முடியாது' என்றார்கள்.

இது...
'எக்ஸ்ப்ரெஸ் வேக்கு'
இடைஞ்சலென்று
வேறோடு பிடுங்கி
வெட்டிச் சாய்த்துவிட்டார்கள்.

ஆனாலும் நாம்
மரம் நடுவோம்.
மண்வளம் காப்போம்.



000



பொதிக்குள்
புதைந்துபோன
டயர் வண்டி.

சுளீரென்ற
சாட்டையடி வலித்தும்,
செய்வதறியாது திகைத்து
தொடைகள் நடுநடுங்கி
நின்றேபோயின
என் இளங்காளைகள்.

அதன்
நுகத்தடி வலியில்
நுரைதப்பிய வாய்கள்.

இன்னும் கொஞ்சம்
நகர்ந்துவிட்டால்
கிடைக்கும் கூலிக்கான
கணக்கில் இருந்தேன்
நான்.

வலி தாளாமல்
கொம்பால் குத்தி
எஜமானனை
கொலை செய்துவிடும்
கணக்கில் இருந்தன
என் காளைகள்.

இன்னுமொரு சாட்டையடியில்,
இந்த 'பேசின் ப்ரிட்ஜ்'
ஏற்றதில்,
கூலியா அல்லது
கொலையா
என்பது தெரிந்துவிடும்!

கார்பன் துகட்கள்...



கடவுளின் தேடுதலில்
நாம்
நம்மையே
தொலைத்துவிட்டோம்.


000


வண்ணத்துப் பூச்சிகள்
வெறும் வயிற்றோடு
திரும்பிப் போய்விட்டன.
மலர்களின் இதழ்களில்
மகரந்தத்துக்குப் பதில்
கார்பன் துகட்கள்!!


000


உருண்டைச் சோற்றை
விழுங்கிக்கொள்ள
வேப்ப மரத்து
பேயைக் காட்டினாள்
என் அம்மா.
பிற்பாடு,
வேப்ப மரம்
ஓங்கி வளர்ந்து,
வீழ்ந்து,
ஒழிந்தே போனது.
பேயல்ல!!



000


துப்பாக்கி...
செவ்விந்தியர்களின்
மார்பில் சுட்டது.
பறிக்கப்பட்டது
அமெரிக்கா .

பீரங்கி...
வளைகுடாவின்
முதுகில் சுட்டது.
பறிக்கப்பட்டன
எண்ணைக் கிணறுகள்.

ஆனால்
கத்தியின்றி ரத்தமின்றி
பறிக்கப்பட்டுவிட்டது
இந்தியா.
ஆம்.
நாம்
நல்ல அஹிம்சாவாதிகள்
என்று
நிரூபித்துவிட்டோம்!!



000


கொடுக்காப்புளி
தழை தின்று,
கொட்டாங்கச்சி
ஊஞ்சலாடி
உறங்கிக்கொண்டிருந்தது
என்
பொன்வண்டு.
வீட்டுப் பாடம்...
வாத்தியார் விளாசல்...
எல்லாம் மறந்து
நானும் உறங்கிப்போனேன்.

இன்று,
பொன்வண்டுகளே இல்லை.
என் உறக்கமும்!

9.5.12

சாக்குப் பைகள்



இந்திய கிடங்கில்
இரைந்து கிடக்கும்
நெல்லும் கோதுமையும்.
உண்மையான காரணம்...
சாக்குப் பைகள் 
'ஸ்டாக்கில்'இல்லை!

கல்யாணப் பந்தியில்
கலாச்சார விருந்து.
விரல் நுனியில் தொட்டு
நக்கிப் பார்க்கும்
நாகரிகம்!
வயிறு நிரம்பியதோ
கல்யாண மண்டபத்து
குப்பைத் தொட்டிதான்.

காஃபி டே,
கெ எஃப் சி,
பெப்சி, கோக்கு,
பிஸ்ஸா கார்னரு...
உண்டு கொழுக்க வைக்கும்
உணவகங்கள்.
பணத்தால் ரெக்கை கட்டி
பொரித்தெடுத்த கோழிகளை
பதம் பார்க்கும்
பருந்துகள்.

தின்பதற்கே பிறப்பெடுத்த
மிருகங்கள்.
தின்று தின்றே
மாண்டுபோன பிணங்கள்.

ஒரு நாள் மட்டும்
உயிர் வாழ்ந்து கொள்ள
ஒரு சோறு தேடும்
மனிதன்.
அவனை
வேடிக்கை பார்ப்பவர்கள்
யாவருமே
வெறும் பிணங்கள்தான்.
உண்டு கொழுத்த
பிணங்கள்!








17.4.12

நான், நல்லவனில்லை...



ஒபாமாவின் தேர்வில்
ஒழிக்கப்பட்டதாம்
வெள்ளைப் பேதம்!

மண்டேலாவின் மௌனப்புரட்சியில்
மீண்டுவிட்டதாம் கருப்பர் விடுதலை!

கலாமின் பதவியேற்பால்
கைகோர்த்ததாம் நல்லிணக்கம்!

மன்மோகன் மௌனத்தில்
கற்பிதம் செய்துகொண்டது
அற்புதமான
அரசியல் சாணக்கியமாம்!

கனிமொழிக்கான
கருணாநிதியின் கண்ணீரில்
மிதந்து வந்ததாம்
மனிதம்!

அம்மாவின் கவுரவத்தில்
ஆர்ப்பரித்ததாம் பெண்ணியம்!

திருமாவின் தியாகத்தில்
துறத்தப்பட்டதாம் தலித்தியம்!

ரஜினியின் மூப்பில் பயின்றது
ரவுத்திரமாம்!

விஜயகாந்தின் வீர வசனத்தில்
விதைந்ததே நாட்டுப் பற்றாம்!

எனக்காக இவ்வுலகில்
எல்லாமும் இருக்கிறதாம்.
என் உணவைத் தவிர்த்து!!!

இப்போதைக்கு எனக்கு
உண்ண உணவு
மறுக்கப்படுமென்றால்...
மேலே கூறிய
புண்ணியவான்களின் குணங்களை
என்னிடமிருந்து
எதிர்பார்க்காதீர்கள்!!

2.4.12

தத்தத் தரிகிடோம்!



ஆற்று நீரைக் குப்பிக்குள்ளே
அடைத்துவிடும் மந்திரம் - அதை
சோற்றுக்கில்லா சேரிக்குள்ளே
விற்றுவிடும் சுதந்திரம்.

காடு மலை மணல் கடத்தி
காசு பார்க்கும் தந்திரம் - எதிர்
கேள்வி கேட்கும் ஆதிகளை
சூடுபோடும் சுதந்திரம்.

சந்தைப் பங்கு விந்தை காட்டும்
சூதாட்டச் சுதந்திரம் - வெறும்
வெத்துப் பொருளாதாரம்
விலையுயர்வு நிரந்தரம்.

நாள்தோறும் விலையேற்றி
நாமமிடும் பெட்ரோலியம் - ஏற்றி
சொன்னால் கொடுத்துவிடும்
சுரணையற்ற சுதந்திரம்.

சூட்சுமத்தைக் கண்டு கொண்ட
சோனியா, சிங், சிதம்பரம் - இவர்
ஆளும் அதிகாரத்துக்கு
அமெரிக்காதான் வரம் தரும்.

காவிரியின் நீரைக் கேட்டு
சோரம் போன இயந்திரம் - அது
மூத்திரம் பேயும் ஸ்டைல் பார்த்து
சூப்பர் ஸ்டாரு பட்டயம்.

சிறுவாடைத் திருடிக்கொண்டு
திரைக்குச் செல்லும் தீவிரம் - தன்
தலைவனுக்கு கரகமாடி
தெருவில் நிற்கும் சுதந்திரம்.

தருத்திரத்தைத் தொலைத்துவிட
திருப்பதிமேல் தரிசனம் - கழுத்தில்
இருப்பதையும் அறுத்தெடுக்கும்
உண்டியலின் நிதர்சனம்.

நித்தம் ஒரு சாயிபாபா,
நித்தியானந்தம், சங்கரம் - அந்த
பத்மநாபன் பாதாளத்தில்
பணம் பதுக்கும் சுதந்திரம்.

நாற்று நட்டு நடவு செய்து
காற்றைத் தின்ற தத்துவம் - பின்
ஊரைவிட்டுத் தெறித்துவந்து
நகர வாழ்வில் நிரந்தரம்.

நேற்றுவரை கோவணத்தில்
நாகரிக மானுடம் - இன்று
கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு
கும்பி காயும் சுதந்திரம்.

ஓடியோடி உழைத்தபோதும்
போடு ததிங்கிணோம் - இப்படியும்
சுதந்திரம் கிடைத்ததென்று
கூவு - தத்தத் தரிகிடோம்!

- புதிய பாமரன்...

1.4.12

வீட்டுக்கே டாஸ்மாக் டெலிவெரி வந்துடுச்சு டோய்...



நாள் முழுக்க நாம் உழைத்து
நானூறு கூலி வாங்கி,
அதிலிருந்து நூறெடுத்து
நாட்டுக்கே அர்ப்பணிப்போம்.
போதையும் ஏறும்;
பொருளாதாரமும் ஏறும்.
போதை தந்த
பொருளாதாரத் தத்துவம்.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.

ஒரு ரூபாய் அரிசி
வேண்டும்.
ஒரு கிரைண்டர் மிக்சி
வேண்டும்.
நாள்முழுக்க நாடகங்கள்
நாம் கண்டு,
தொல்லை மறந்திட
தொலைக்காட்சியும் வேண்டும்.
இத்தனையும் கொடுத்தது
என் தாய்த்திரு நாடு.
நானென்ன செய்தேன்
அதற்கு?
நாட்டுக்கு அற்பணிப்போம்
நம் உயிரை.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.

கதறியழுது
காரி மூஞ்சியில் துப்பி
துடைப்பக் கட்டையால்
துவைத்தெடுக்கும்
பொருளாதாரம் தெரியாத
போக்கற்ற மனைவி மக்கள்.
அவர்களிடமிருந்து நமைக்காக்க
அரசு வழங்கும் திட்டம்
மருத்துவக் காப்பீடு.
அதையும் தாண்டி
கை மீறிப் போனால்
நூத்திஎட்டு.



விழுந்தால் வீட்டுக்கு.
விழாவிட்டால் நாட்டுக்கு.
எங்கேயோ கேட்ட குரல்.
லாட்டரிக்குப் பொருந்தும்போது
பாட்டிலுக்குப் பொருந்தாதா?
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.
வீட்டுக் கடனுக்கே
வருமானம் கேட்கும்போது,
நாட்டுக் கடன் வாங்க
நாம் காட்டும் வருமானம்.
‘Liquidity’ பேலன்ஸ் ஷீட்…
லிக்கர் அடிக்கும் வருமானத்தில்.
போதையிலிருந்தாலும்
புரிந்து கொள்வோம்.

காது குத்தினால்
போதை வேண்டும்.
கருமாந்திரம் செய்தாலும்
போதை வேண்டும்.
இன்பத்திலும்
போதை வேண்டும்.
துன்பத்திலும்
போதை வேண்டும்.
குடித்துக் கிடக்க வேண்டும்.
அதற்கொரு காரணம்
வேண்டும்; வேண்டும்.
‘குவாட்டர்’ மூடியைத் திருகினால்
நாம் மந்தமாகி விடலாம்.
நாட்டின் பொருளாதாரம்
மந்தமாக வாய்ப்பில்லை.
நம் ஈரல் வீங்குவதால்
நம் நாட்டின்
பண வீக்கம்
பறந்து போகும்.
காரணம் கிடைத்துவிட்டது…
இனி
குடித்தே கிடப்போம்.

27.3.12

நாடுபூரா நக்சலைட்டு



நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
அணு உலை வேண்டாம்னு
அட்டையில எழுதிவச்சா
அவன்தாண்டா நக்சலைட்டு.
கூடங்குளம் ஆபத்துன்னு
கூடிநின்னு பேசினாக்கா
கும்பலோட நக்சலைட்டு.
'ஙே'ன்னு நீ முழிச்சாலும்
கொய்யால நீ நக்சலைட்டு.
திருதிருன்னு முழிச்சாலும்
தவறாம நக்சலைட்டு.

கடைய மூடச் சொல்லலையே.
கண்ணாடிய ஒடைக்கலையே.
கத்தியில்ல ரத்தமில்ல...
அட, ஆயுதமும் ஏதுமில்ல...
ஆனாலும் நக்சலைட்டு.
இடிந்தகரையில் வீடிருந்தா
இப்போது நீ நக்சலைட்டு.
உண்ணாவிரதப் பந்தலிலே
உண்ணாம நீ இருந்தா
உடனடியா நக்சலைட்டு.
பால்குடிக்கும் பாப்பாவும்
பள்ளிக்கூடப் பிள்ளையும்
பயங்கரமான நக்சலைட்டு.
நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.

அரசாங்கம் சொல்லுறத
அப்படியே ஏத்துக்கிட்டா
உலகமகா உத்தமன் நீ.
உண்மையான இந்தியன் நீ.
தரமான தமிழன் நீ.
தலை நிமிர்ந்த மனிதன் நீ.
எதிர்த்து நின்னு ஒருவார்த்தை
ஏனென்று கேட்டாலும்
நீதாண்டா நக்சலைட்டு.
நாலு பேரு காறித்துப்பும்
நாதியத்த நக்சலைட்டு.

நல்லவனா இருக்கப்பாரு.
நாலு பேர மதிக்கப்பாரு.
கோஷமெல்லாம் போட்டுக்கிட்டு
கொடியெல்லாம் தூக்கிக்கிட்டு
போலீசில் அடிவாங்கி
பொறுக்கியாகிப் போகாதே.
நாட்டை நீயும் மதிக்கணும்.
நாமும் நல்லா இருக்கணும்.
கவருமெண்டு சொல்லுறத
காதுகொடுத்துக் கேக்கணும்.

புழுத்துப்போன அரிசியத்தான்
ரேஷனிலே வீசினாலும்
பொங்கித் திங்கப் பழகிக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
தெரு லைட்டு இல்லைன்னா
தடவி நடக்கப் பழகிக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
குடிக்கத் தண்ணி இல்லைன்னா
கொஞ்ச நாளு பொருத்துக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
கொசுத்தொல்லை இருந்தாக்கா
கொசு அடிக்கக் கத்துக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!

கவலையெல்லாம் மறக்கணும்னா
கிரிக்கெட் பார்க்கக் கத்துக்க.
சிந்தனையும் சிக்கலானா
சீரியல் பார்க்கக் கத்துக்க.
சினிமா ரசிக்கக் கத்துக்க.
தினமலரை நீ படிச்சி
தினம் அறிவை வளத்துக்க.
வாழத்தானே பொறந்திருக்க?
வாழ்ந்துபாக்கக் கத்துக்க.
நாடு போற போக்கோட
நைசா போகப் பழகிக்க.
ஏன், எதுக்கு, எப்படின்னு
எடக்குமொடக்கா கேட்டுப்புட்டு
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு
பொழப்பையே நீ கெடுத்துக்காத.
பொறுக்கி பேரும் எடுத்துக்காத.

எவ்வளவு உரைச்சாலும்
எட்டி ஒதைச்சிக் கொன்னாலும்
நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
நாடே கெட்டுப் போகுது
நக்சலைட்டா ஆகுது!!
நல்லவனா நக்சலைட்டா?
நீயே முடிவு பண்ணிக்க.
புலம்பாம அலும்பாம
போத்திக்கிட்டு படுத்துக்க!!

7.3.12

குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்! நாள்: 8.3.2012



முன்னோரிரவில் உள்வாங்கி
முன்னூற்றாம்நாள் வெளித் தள்ள
அன்றோரிரவில் அம் மனையாள்
ஆர்ப்பரித்து வலித் துடித்தாள்.

காலால் உதை யுதைத்தும்,
தலைகீழாய்ப் புரண்டு வந்தும்,
தண்ணீர்க் குட முடைத்தும்,
தரை வீழ்ந்ததோர் குழவி.

ஏக்கமுற 'மகள்' என்ற செவிலி.
எதிர்பார்ப்பில் காத்திருந்த சுற்றம்.
மகளா வென முணுமுணுத்து
மருகி நின்ற பெற்றோர்.

சாம்பல் நிறம்பூசி - சிறு மகள்
செவ் விரல்களை மடக்கி
குருதிக் கறையோடே
குறுகிப் படுத்திருந்தாள்.

சிறு செவ்வாய்த் திறந்து,
சென்னிறக் கையசைத்து,
கீச்சுக் குரலெடுத்து - முதன்முறை
கேவி அவள் அழுதாள்.

முலைப்பா லுண்ணும் போது
தாயின் முகம் பார்க்கில்,
மூச்சுக் காற்றில் முகங்கருக
முகத்தை மூடிக்கொண்டாள்.

'நீயுமா பெண்ணானாய்,
நான் பெற்ற மகவே - தெரியுமா?
காய்க்கும் மரங்க ளிங்கே
கால்தூசிக்குச் சமானம்'

'நீயேன் மகளானாய், இங்கே
நான் பெற்ற மகவே - புரியுமா?
கிளைகளுக்கிருக்கும் மதிப்பு
கீழிருக்கும் வேருக்கில்லை'

மூச்சுக் காற்றில் முகந்திணற,
முனகும் வார்த்தை நெஞ்சு சுட,
கையறு நிலையிலேயே - அவள்
கண்ணயர்ந்து போனாள்.

'மகள்' எனும் குற்றத்தால்
சுற்றத்தால் கிள்ளப்பட்டு,
தூக்கத்திலும் கேவியழுதே,
திரும்பவும் கண்ணயர்ந்தாள்.

***
'அம்பாரத்து ஆனைப் பொம்மை,
அழகான கரடிப் பொம்மை'
கேட்டு ஏங்கிய மகளுக்கு
கிடைத்ததோ ஒரு கிலுகிலுப்பை.

தெருவிலோடி விளையாடித்
திரிந்த 'மகன்' கூட்டம், அங்கே.
புறக்கடைத் தனிமையிலே சுதந்திரமாய்
புலம்பி விளையாடும் மகள் - இங்கே.

***

'ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;
இனி 'மகன்' என்போன் கல்வி கற்க;
பிறிதொரு வீடுபோகும் பெண் நீ - இனி
பெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.'

'சிறுமியெனில் சிந்தனை எதற்கு?
சிறு மதங்களில் முடங்கிப் போ;
முசுலீமில் முக்காடைத் துவங்கு;
முகங்கவிழ் - இந்துவெனில்.'

'கன்னியெனில் பேச்சைக் குறை.
காதல் வந்தால் கட்டுப் படுத்து.
காதல் சொன்னால் கட்டுப்படு.
காதலனின் திராவகத்தை கவனம் கொள்.'

'ஆணின் அடிமையென்றுன்னை
அடையாளப் படுத்திக் காட்டு;
புன்னகை களைந்து, தாலி அணி;
புது மெட்டியணி அல்லது மோதிரமிடு.'

***

'காலையெழுந்து ஏவல் செய் - பின்
காற்றைப் பிடித்து பணிக்குப் போ.
மணாளன் வருமுன் வீடுதிரும்பி
மல்லிகை சூடிக் காத்திரு.'

'காமுற்றால் மட்டும் காமுறு.
கணவனின் பிள்ளை வரம் வாங்கு.
'மகன்' வேண்டி விதை விதைத்த
மணாளனின் கனவையே காண்.'

*** *** *** *** *** *** ***

ஆனால் ஈன்றது மகளென்றால்...
ஈன்றது மகளென்றால்...

ஆனால் ஈன்றது மகளென்றால்
ஆர்ப்பரித்து அறற்றாதே.
பட்டதெல்லம் போதும்; இனி
பாய்ந்திடப் பழகு.

'மகளா' என்று ஏக்கமுறும்
மண்ணாங்கட்டிகளை ஏசு.
முணுமுணுக்கும் சுற்றத்துக்கு
முறந்துடைப்பம் காட்டு.

தன்மானங்கலந்து முலைப்பாலூட்டு;
தன்னம்பிக்கை வெறியேற்று.
எல்லோர் செவியிலும் விழும்படி இந்த
இரகசியத்தை மகளுக்குச் சொல்:

"என் புத்தம் புது மகளே -
நீ இன்றிலிருந்து...

விளையாடி மகிழ்.
பாடம் படித்து -
சுயமாய்ச் சிந்தி.
அடிமை வெறு.
அடங்க மறு.
அத்து மீறு.
சாதி சிதை.
மத மிகழ்.
தெய்வத்தை நிந்தி.
தாலி மறு.
காதல் செய்.
பெண்ணியம் போற்று.
பெரியார் பேண்.
பொது நலம் பேசு.
அரசியல் பழகு.
அறிவியல் அறி.
உழைத்தபின் உண்;
அதையும் பகிர்ந்துண்
எனத் தத்துவம் பேசு.

என்றுமே இடித்துரை -
வேரின்றி மரமில்லை என்று!
யாம் இனி யாருக்கும்
அடிமையில்லை என்று!!"

4.3.12

ஜனநாயகத் திருடர்கள்



காதலுக்காக வருந்திய
கிழவயதுக் கலாம்
ராஷ்டிர பவனத்து
ரோஜா இதழ்களை 
வருடிக்கொண்டிருந்தபோது,
கடனால் தத்தளித்து
கதறிய உழவர்கள்
தூலத்தில் தூக்கிட்டுச் சாக
கயிற்றைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
கலாமின் காதல்
ஜெயித்ததோ இல்லையோ...
கயிறு ஜெயித்தது!

குடியரசுத் தினத்தில்
ஏழு முறை குண்டொலிக்க
இந்திய ராணுவம்
துப்பாக்கிகளில் தூசியை
துடைத்துக்கொண்டிருந்தபோது,
இலங்கை ராணுவம்
தமிழர்களைத் தேடிக்கொண்டிருந்தது.
இந்திய ராணும்
ஏழுமுறை சுட்டதோ இல்லையோ...
இலங்கை ராணுவம்
மீனவர்களைச் சுட்டுவிட்டது!

கனிமொழி கிறுக்கிவைத்த
கவிதை வரிகளுக்கு
கலைஞர் கருணாநிதி 
'  கரக்சன்  ' பார்த்துக்கொண்டிருந்தபோது
ராஜாவின் மந்திரிசபை
ராவோடு ராவாக
அலைக்கற்றையை ஏலம்போட்டுவிட்டது.
கனிமொழியின் கவிதை
அச்சேறியதோ இல்லையோ...
ஏலம்போட்டு 'கரப்ஷன்' செய்ததில் 
இந்தியாவின் மானம்
கப்பலேறிவிட்டது!

தோழியோடு தோழியாக
ஆறுமாத காலத்துக்கு
கொட நாட்டுத் தோட்டத்தில்
கும்பகர்ணத் தூக்கம்.
ஜெயலலிதா தூங்கினாரா தெரியாது...
பொதுமக்கள் சொத்துக்களை
திருடிக்கொண்டே இருந்தார்
விழித்துக்கொண்டிருந்த தோழி!

கூடங்குளத்து மீன்காரன்
கடலுக்குப் போனபோது,
அணு உலை ஒப்பந்தம்
அவனுக்கே தெரியாமல் 
கையெழுத்தாகிப்போனது.
அவன் மீன்பிடித்தானா தெரியாது...
ஆனால் அணுஉலை கட்டிடம்
திறப்புவிழா வைபவத்துக்கு
தயாராகிவிட்டது!

கூழுக்கும் வக்கில்லாமல்
இந்தியக் கும்பிகள்
காய்ந்துகொண்டிருந்தபோது
நிலவைத் தொட்டுவிட
சந்திராயன் நட்டுவைக்கப்பட்டது.
இந்தியனுக்கு கூழ் 
கிடைத்ததோ இல்லையோ...
ஆனால் சந்திராயன் 
நிலவைத் தொட்டுவிட்டது!

இலவசங்களை அள்ளிக்கொள்ள
தள்ளு முள்ளு வரிசையில்
பாமரன் சிக்கிக்கொண்டபோது
இரவோடிரவாக
பஸ் கட்டணமும் பால்விலையும்
இரண்டு மடங்காக 
உயர்த்திவிட உத்தேசிக்கப்பட்டது.
வரிசையில் காத்திருந்தவனுக்கு 
இலவசங்கள் கிடைத்ததோ இல்லையோ...
விலை உயர்வு 
இலவசமாகவே கிடைத்தது!


"ஓட்டுப்போடும் உரிமை கேள்
ஜனநாயகக் கடமை செய்"
தெருவுக்குத் தெரு
ஜனநாயகத் திருடர்கள்
உரக்கக் கூவினார்கள்.
மக்களெல்லாம் இந்திய நாட்டு
மன்னர்களோ இல்லையோ...
உலகமகா பணக்காரர்கள்
இந்த ஓட்டுத் திருடர்கள்!!