கடவுளின் தேடுதலில்
நாம்
நம்மையே
தொலைத்துவிட்டோம்.
000
வண்ணத்துப் பூச்சிகள்
வெறும் வயிற்றோடு
திரும்பிப் போய்விட்டன.
மலர்களின் இதழ்களில்
மகரந்தத்துக்குப் பதில்
கார்பன் துகட்கள்!!
000
உருண்டைச் சோற்றை
விழுங்கிக்கொள்ள
வேப்ப மரத்து
பேயைக் காட்டினாள்
என் அம்மா.
பிற்பாடு,
வேப்ப மரம்
ஓங்கி வளர்ந்து,
வீழ்ந்து,
ஒழிந்தே போனது.
பேயல்ல!!
000
துப்பாக்கி...
செவ்விந்தியர்களின்
மார்பில் சுட்டது.
பறிக்கப்பட்டது
அமெரிக்கா .
பீரங்கி...
வளைகுடாவின்
முதுகில் சுட்டது.
பறிக்கப்பட்டன
எண்ணைக் கிணறுகள்.
ஆனால்
கத்தியின்றி ரத்தமின்றி
பறிக்கப்பட்டுவிட்டது
இந்தியா.
ஆம்.
நாம்
நல்ல அஹிம்சாவாதிகள்
என்று
நிரூபித்துவிட்டோம்!!
000
கொடுக்காப்புளி
தழை தின்று,
கொட்டாங்கச்சி
ஊஞ்சலாடி
உறங்கிக்கொண்டிருந்தது
என்
பொன்வண்டு.
வீட்டுப் பாடம்...
வாத்தியார் விளாசல்...
எல்லாம் மறந்து
நானும் உறங்கிப்போனேன்.
இன்று,
பொன்வண்டுகளே இல்லை.
என் உறக்கமும்!
1 comment:
அருமை.. அருமை..
Post a Comment