ராஜாவுக்கு ஜாமின் கிடைச்சதுக்கே பட்டாசு வெடித்து கொண்டாட்டம்! - செய்தி.
யோவ், பட்டாசு இன்னா பட்டாசு; கொஞ்சம் மின்னாடியே தெரிஞ்சி இருந்துதுன்னா, ஸ்ரீஹரி கோட்டாவுல ராக்கெட்டுக்கு ஆர்டர் குடுத்து, அதையே வெடிக்க வச்சிருப்போம். வருங்கால பிரதமர் ராஜா வாழ்க!
000
'ராஜா கட்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவார்.' - நல்லவர் கருணாநிதி.
இருக்காதா பின்னே? ஜெயில், அதுவும் திகார் ஜெயில்னா, அது அரசியலுக்கு அடிஷனல் குவாலிபிகேஷன் ஆச்சே? திமுகவுல, எந்த புண்ணாக்கு திகாருக்கு போய் வந்திருக்கு?! சும்மா வெளிய சுத்திக்கிட்டே இல்ல ஓபி அடிக்கிறானுங்க?
அடுத்த திமுக தலைவர் ராஜா வாழ்க!!
000
'ஜாமீனில் வெளியில் வர, ராஜா 20 லட்சம் ரூபாயை பிணையாகச் செலுத்தவேண்டும்.' - கோர்ட்டு உத்தரவு.
ஜுஜுபி காசு இது.
20,000 கோடிய, மொத்தமா, ஹாட் கேஷா, ஸ்பாட் செட்டில்மெண்ட்டா குடுத்துடுவாரு; 'சுத்தமா' வெளியே விட்டுவிடத் தயாரா?!!
000
Small aim is a crime ....
'சிறிய குறிக்கோள் ஒரு குற்றமே' என்று கூறும் கலாமை ஒரு வன்முறையாளர் என்று ஏன் கூறக்கூடாது? இளைஞர்களில் மனதில் போட்டி, பொறாமைகளை வளர்த்துவிடும் வன்முறையாளர்.
000
"சீதாப் பிராட்டி போல வாழ ஒவ்வொரு திருமணமான பெண்ணும் முயல வேண்டும். கணவர்தான் எல்லாமே என்று வாழ்ந்தவர் சீதை. தனது கணவர் ராமரின் அடியொற்றி அவர் பின்னாலேயே சென்று காட்டில் 14 வருடங்கள் வாழ்ந்தவர். பல சோதனைகளைச் சந்தித்தபோதும் கணவரை மதித்தவர்." - பாம்பே உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எம்.மஜூம்தார் மற்றும் அனூப் மோத்தா.
பெண்களை இதை விடக் கீழ்த்தரமாக யாரும் அவமதிக்க முடியாது. ஆணாதிக்க வர்க்கம்தான் நீதிமன்றங்களை ஆட்டிப்படைக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. அல்லது, இந்துத்துவாதான் நீதிமன்றங்களின் அடிப்படை என்றும் எடுத்துக்கொள்ளலாம். நீதிமன்றத்தை மக்கள் அவமதித்தால் 'நீதிமன்ற அவமதிப்பு' கேஸ். நீதிமன்றமே மக்களை அவமதித்தால், அந்த நீதிமன்றத்தின் மீது நாம் என்ன 'கேஸ்' போடவேண்டும்?
000
" நேர்மையை சந்தேகிக்க வேண்டாம்- கத்தியால் நெஞ்சில் குத்துங்கள் " பொங்கினார் - சிதம்பரம்.
சேச்சே... கத்தி நித்தின்னு சொல்லிக்கிட்டு. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா. செருப்பால அடிச்சதுக்கு, நீ எப்பவோ திருந்தியிருக்கணுமே? இப்ப சொல்லு, நீ நல்லவனா, கெட்டவனா?!!
000
பகவத் கீதையும், பைபிளும், குர்ரானும், தங்கள் தங்கள் தாய்மொழியில் தெள்ளத் தெளிவாக மொழிபெயற்கப் படாமல், வடமொழியிலும், ஹீப்ரூவிலும், உருதுவிலும் மட்டுமே இருந்திருந்தால் மதப் பற்று இந்த அளவிற் வளர்ந்திருக்க முடியாது.
மதவாதிகளுக்கு மதப் பற்றை வளர்க்கவேண்டும் என்கிற யுக்தியில் மக்களுக்கான தாய்மொழியில் மதப் புத்தகங்கள் தெள்ளத்தெளிவாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் அறிவியலில்? மாவட்ட அளவில் தமிழில் பயின்ற மாணவன் கல்லூரிக்கு வந்து 'அறிவியல்' ஆங்கிலத்தில் இருப்பதைப் பார்த்து தற்கொலை செய்துகொள்கிறான். இந்த இருபதாம் நூற்றாண்டுவரைகூட அறிவியல் தொகுப்புக்கள் தமிழில் இல்லாதது தமிழ்ப் பற்றாளர்களின் போலித்தனத்தையே காட்டுகிறது. 'எஸ், நோ' என்று கூட ஆங்கிலத்தில் சொல்லத் தெரியாத ஜப்பானியர்களும், ஐரோப்பிய நாடுகளும் அறிவியலை தத்தம் தாய் மொழியில் மொழிபெயர்த்துக்கொண்டதால், விஞ்ஞான ஆய்வுகளிலும் கண்டுபிடிப்புகளிலும் சிறந்து விளங்குகின்றனர். நாம் நம் அடுத்த தலை முறையினருக்கு அறிவியல் சார்ந்த மொழிபெயர்ப்புகளுக்காக ஏதாவது செய்தே தீரவேண்டும். கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும், பாஞ்சாலி சபதத்தையும் பயிற்றுவித்துக்கொண்டிருப்பது நம் தமிழின் வேலையல்ல!!
000
செல்பேசி கண்டுபிடிக்கப்பட்டது என்பது, செங்கல் அடுக்கும் செங்கேணி கத்தாரிலிருந்து தன் காதல் மனைவியிடம் பேசுவதற்காக மட்டுமல்ல; நோக்கியா, ஸ்ரீபெரும்புதூரில் உழைப்பாளர்களை சுரண்டுவதற்காகவும்தான்!
000
நேற்று, விலையுயர்ந்த ஒரு ஹோண்டா கார் ஓட்ட நேர்ந்தது. இதற்கு மேலும் 'ஆட்டொமொபைல் எஞ்சினீயர்களால் கண்டுபிடிக்க ஒண்ணுமில்லை' என்று சொல்லுகிற அளவில் உயர்ந்த தொழில் நுட்பங்கள். எஞ்சின் இரைச்சல் அதிர்வுகள் இல்லாமையால் அந்த அமைதியான காருக்கு எஞ்சினே இருக்கிறதா எனச் சந்தேகம் கொள்ள வைத்தது. மொத்தத்தில் ஒரு அமைதியான அறை சாலையில் நூற்றியிருபது கிலோ மீட்டர் அதிவேகத்தில் நகர்கிறது.
அறிவியல் என்பது தேவையை அடிப்படையாக வைத்தே கருவிகளைக் கண்டுபிடிக்கிறது. முதலாளிகளின் தொப்பைக்கு பாதகம் ஏற்படாமல் இருக்கவே இத்தகைய ஆட்டோமொபைல் டெக்னாலஜி!
பின்னொரு காலத்தில் பொதுவுடமை மலர்ந்தால் இத்தகைய உயர் தொழில் நுட்பம் தேவைப்படாமல் போகலாம். அல்லது மறுக்கப்பட்டு விடலாம். இன்னும் சொல்லப்போனால், கார் என்பதே தேவையற்ற ஒரு கருவியாக அமைந்துவிடலாம். ஏனெனில் அப்போது சொகுசாக உட்கார்ந்து செல்ல ஆட்கள் இருக்க மாட்டார்கள்! தொப்பைகளும் இருக்காது!!
000
கிருஷ்ணகிரி சங்கர மடத்துக்கு வருகை தந்த காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நந்தன ஆண்டு பஞ்சாங்கத்தை வெளியிட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
தேரு இஸ்துகுனு போன கவுந்து போவுது; இல்லன்னா நகர மாட்டேங்குது; அப்படியும் இல்லன்னா தேரை இசுக்கிறவங்களையே சாவடிச்சிடுது. அப்பாலிக்கி, சாமிய தூக்கிக்கினு ஊர்வலம் போனா கரண்டு சாக்கடிச்சி சாவு வியுது. போற போக்க பாத்தா, எவனுமே கோயில் குளம்னு எட்டிப்பாக்க மாட்டானுங்க போலிருக்கு. உங்க பஞ்சாங்கத்துல இதுக்கு பரிகாரம் எதுனா இருக்குதா பாத்து சொல்லு சாமி!
000
நித்தியானந்தா மொட்டை போட்டால்தான் சாமியாராக இருப்பதற்கு லாயக்கு - ஜெயேந்திரர் கண்டனம்.
மொட்டை போடலைன்னாலும் பரவாயில்லை. ஒரு ஆளையாவது 'போட்டு' இருக்கணும். அப்பத்தான் மடத்துல இருக்கறதுக்கே லாயக்கு!!
000
ராவணன் விடுதலையாகும் போது ராஜா விடுதலையாக கூடாதா? - கருணாநிதி.
நம்மோட கால் சுண்டுவிரல் அடிக்கடி மேசையோட கால்ல இடிச்சிக்கும். ரத்தம் வரும். வலிக்கும். இதை மட்டும்தான் அந்த கால் சுண்டு விரலுக்கு செய்யத் தெரியும். வலியைப் பொருத்துக்கோங்க தமிழர்களே!!
000
மத்திய அமைச்சர்கள் மற்றும் வி.வி.ஐ.பி.,க்களின் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் நடத்திய சுற்றுப்பயண செலவு, 2011ம் ஆண்டு, 56 கோடியே 16 லட்ச ரூபாயாக இருந்தது. இவ்வாண்டு பத்து மடங்காக, அதாவது, 678 கோடியே 52 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது.
பாவம். அவங்க என்ன பண்ணுவாங்க? 'சரக்கு' வெல, ஸ்டார் ஓட்டல் ரேட்டு, ஏரோப்பிளான் எலிகாப்டர் டிக்கிட்டு எல்லாம் வெல ஏறிப்போச்சுல்ல? போக்கத்தப் பயலுவ, எதையாச்சும் பெணாத்திக்கிட்டே இருப்பானுவ. நீங்க நல்லா ஊரச் சுத்துங்க ராசா!!
000
"ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், எங்கு தங்குவேன் என, கேட்கப்படுகிறது. அதுகுறித்து, நான் இன்னும் முடிவு செய்யவில்லை." - ஜனாதிபதி பிரதிபா பாட்டில்
சென்னைல, கூவம் நதிக்கரையோரமா நெரைய குடிசைங்க இருக்கு. அதுல தங்கிக்குங்க பாட்டிமா. நல்லா குளுகுளுன்னு காத்தாடும். 'டயட்' சாப்பாடு கெடைக்கும். தலைவருங்க, அரசியல்வாதிங்க யாரும் எட்டிக்கூட பாக்கமாட்டாங்க. அதனால எந்தத் தொந்தரவும் இல்லாம நிம்மதியா இருக்கலாம். பாவம். இந்தியாவுக்காக ஒலகம் பூரா சுத்தி, ஒழைச்சிக் களைச்சிட்டீங்க. கடேசிக் காலத்துலயாவது, இந்தியாவோட இன்னொரு பக்கத்துல நிம்மதியா ஓய்வெடுங்க பாட்டிமா! டேய், கபாலி, ஒரு குடிசைய ஒடனே காலிபண்ணி ரெடியா வையுங்கடா!
000
இந்திய கிடங்கில்
இரைந்து கிடக்கும்
நெல்லும் கோதுமையும்.
உண்மையான காரணம்...
சாக்குப் பைகள்
'ஸ்டாக்கில்'இல்லை!
கல்யாணப் பந்தியில்
கலாச்சார விருந்து.
விரல் நுனியில் தொட்டு
நக்கிப் பார்க்கும்
நாகரிகம்!
வயிறு நிரம்பியதோ
கல்யாண மண்டபத்து
குப்பைத் தொட்டிதான்.
காஃபி டே,
கெ எஃப் சி,
பெப்சி, கோக்கு,
பிஸ்ஸா கார்னரு...
உண்டு கொழுக்க வைக்கும்
உணவகங்கள்.
பணத்தால் ரெக்கை கட்டி
பொரித்தெடுத்த கோழிகளை
பதம் பார்க்கும்
பருந்துகள்.
தின்பதற்கே பிறப்பெடுத்த
மிருகங்கள்.
தின்று தின்றே
மாண்டுபோன பிணங்கள்.
ஒரு நாள் மட்டும்
உயிர் வாழ்ந்து கொள்ள
ஒரு சோறு தேடும்
மனிதன்.
அவனை
வேடிக்கை பார்ப்பவர்கள்
யாவருமே
வெறும் பிணங்கள்தான்.
உண்டு கொழுத்த
பிணங்கள்!
000
1. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கடந்த 5 ஆண்டுகளில், இதுவரை எந்த ஜனாதிபதியும் மேற்கொள்ளாத அளவுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவானதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வந்தது.
2. அரசு கிடங்கில் நெல், கோதுமை போதிய சணல் சாக்குப் பைகள் இல்லாமையால் பல லட்சம் டன் தானியங்கள் வீணாகின்றன - பன்னாடை பிரணாப்.
நீங்கள் கணக்கில் 'புளி' என்றால், இந்தக் கணக்குக்கு விடை தேடுங்கள்.
கேள்வி : 200 கோடி ரூபாய்க்கு எத்தனை சாக்குப் பைகள் வாங்கலாம்?! (மதிப்பெண் : 100)
000
அண்ணா, காந்தி போன்றவர்களின் வழியில் அறப்போராட்டம் நடத்தி, ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழத்தை உருவாக்கிவிட்டுத்தான் நான் உயிர் துறப்பேன் - கருணாநிதி.
அதாவது, தாத்தாவுக்கு செத்துப்போக விருப்பமில்லை அப்படீங்கறத எவ்வளவு நாசூக்கா சொல்றாரு பாருங்க!! கருணாநிதியா கொக்கா?!!
000
லக்ஷ்மி மிட்டல் இங்கிலாந்தின் முதல் செல்வந்தராக உள்ளார். சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிடும் வருடாந்திர பட்டியலில் அவர் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார்.
லக்ஷ்மி மிட்டலும் அவரது குடும்பமும் சேர்த்து ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 659 லட்சம் கோடிக்கு சொத்து மதிப்பு வைத்துள்ளனர் - செய்தி.
லட்சுமி மிட்டல் படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சடித்து வெளியிட்டு, அவரின் சாதனைகளுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும் அவரை 'unopposed' இந்திய ஜனாதிபதியாக ஆக்கி, அழகு பார்க்கலாம்.
இவ்வாறு செய்தால், கலாம் சொன்னபடி கனவில் இருக்கும் நம் இளைஞர்கள், நாளை இந்த லட்சுமி மிட்டலையும் மிஞ்சி, மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகிவிட வாய்ப்பு உண்டு.
000
அப்பாடா, சீஷெல்ஸ் நாடு ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டது. பிரதிபா வருவார் வருவார் என வழி மேல் விழிவைத்து ஆண்டுக் கணக்கில் காத்திருந்த சீஷேல்ஸ் நாட்டுக் காரர்களுக்கு அடித்தது லக்கி பிரைஸ். பாட்டிமா காலடியை மண்ணை 'சொரண்டி' எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள் சீஷெல்ஸ் மக்களே!!!
000
ஓமனில் ஆறு நாட்களுக்கு ஒரு இந்தியத் தொழிலாளி தற்கொலை. ஓமனின் அதிகாரபூர்வ ஆய்வறிக்கைத் தகவல்.
ஓமனில் இந்தியத் தூதரகம் தூங்குவதாக நீங்கள் நினைப்பது தவறு. 'உண்மையான இந்தியர்கள்' யாராவது சொகுசுக் கப்பலில் ஊர் சுற்றும்போது, கவிழ்ந்துபோனால் மட்டும்தான் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். தொழிலாளிகளுக்கெல்லாம் தூதரகம் நடவடிக்கை எடுத்தால், இந்தியாவின் கவுரவம் என்னாவது?
000
அடுத்த குடியரசுத்தலைவருக்கான போட்டியில் தன் பெயர் பரிசீலனையில் உள்ளதை தவிர்க்கவில்லை: அப்துல் கலாம்.
நீங்க சாகும் வரை ஜனாதிபதியாகவே இருக்கணும் அப்படீங்கறதுதான் எங்களோட ஆசை! செத்த பிறகும் உங்க 'போட்டோவே' ஜனாதிபதியா இருக்கணும் அப்படீங்கறதும் எங்களோட தீராத ஆசை!! ஏன்னா நீங்க ரெம்ப ரெம்ப நல்லவருன்னு ஒலகத்துக்கே தெரியும்.
000
ஓய்வு பெற்ற பிறகு சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல்.
பிரதீபா ஓய்வுக்கு பிறகு புதிய வீடு கட்ட மத்திய அரசிடம் ரூ.85 லட்சம் பணம் கேட்டது... மேலும் ஜனாதிபதி பதவி வகித்தவர்களில் அரசு பணத்தை தண்ணீராக செலவழித்தது... இவரது வெளிநாட்டு பயணத்துக்கு மட்டும் மத்திய அரசு ரூ.100 கோடிக்கு மேல் செலவழித்திருப்பது... புனேவில் ராணுவ நிலத்தை அபகரித்தது... கோல்மால் செய்ய்யும் பிளைகளை ஈன்றெடுத்தது... அடேங்கப்பா, எவ்வ்ளோ சாதனைகள்?!
இப்பவே பொஸ்தகக் கடைல எல்லாரும் ஒழுங்கா வரிசை கட்டி நில்லுங்க. ஒருத்தரோட ஒருத்தர் அடிச்சிக்கக் கூடாது! எப்படி நம்ம குழந்தைங்கள வளக்கக்கூடாது அப்படீன்றது இந்த பொஸ்தகம் ரொம்ப ஒதவியா இருக்கும்!!
000
காங்கிரசால் அறிவிக்கப்படும் எந்த ஜனாதிபதி வேட்பாளரையும் பாரதீய ஜனதா ஏற்றுக்கொள்ளாது - பா.ஜ தலைவர் சுஷ்மா சுவராஜ்.
ஜனாதிபதின்னா, சும்மா சுலோவா நடக்கணும். அல்லாத்துக்கும் தலையாட்டணும். இஸ்த்துகுனு இஸ்துக்குனு நடந்து ராணுவ மரியாதை ஏத்துக்கணும். அவ்வளவுதானே? உங்களோட வாஜ்பாயீ சும்மாதானே படுத்துக்குனு கிடக்கிறாரு? அவரை ஜனாதிபதி ஆக்கிடுங்களேற்ன்?!!
000
தமிழ்நாட்டை முதல் மாநிலமாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஜெயலலிதா 'மே' தின வாழ்த்து.
நல்லா புரியுதுங்க. போர்டு, பென்சு, நோக்கியா, வகையறாவுக்கு நாங்க ஒத்துழைக்கணும். அவ்வளவுதானே?! நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க. வயித்தக் கட்டி, வாயக் கட்டியாவது தமிழ் நாட்ட முதல் மானிநிலமா மாத்திடறோமுங்க. நீங்க கொட நாடு போயி நல்லா ரெஸ்ட்டு எடுங்க!! மேடத்துக்கும் மே (ஆடு குரலில்) தின வாழ்த்துக்கள்!!