சுற்றி வளைத்துப் பேசாமல், எடுத்தவுடனேயே நான் விஷயத்துக்கு வந்துவிட விரும்புகிறேன். ஏனெனில் நான் உங்களுக்கு சொல்லப்போகும் இந்த செய்தி என்னைப் பொருத்தவரை அதி முக்கியமானது. இந்தச் செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையவும் கூடும்.
அந்தச் செய்தி இதுதான் :
நான் கடவுளைப் பார்த்தேன். உலகத்திலேயே முதன் முறையாக, அதுவும் நேரடியாக. நேருக்கு நேர் நின்று பேசினேன். நான் மட்டுமல்ல. சாட்சிகளாக என்னுடன் இன்னும் இரண்டுபேர். இது நடந்தது சென்ற வாரம் வியாழக்கிழமை, காலை ஆறு பத்துக்கு. அண்ணாச்சி மளிகைக் கடையில் வைத்து கடவுளை நேருக்கு நேராக நாங்கள் பார்த்தோம்.
நான் ஏதோ கதை புனைவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இட்டுக்கட்டி சொல்வதாகவும் கருதவேண்டாம். அல்லது இந்த ஆள் எப்பவும் நாத்திகம் பேசுகிற ஆள்தானே, சும்மா புருடா விட்டு கலாட்டா செய்கிறான் என்றும் நினைக்கவேண்டாம். ஏனெனில் இந்தச் செய்தி உங்களுக்கு அண்டப்புளுகாகத் தெரியலாம். ஆனால் பார்த்ததற்கான சாட்சிகள் இருப்பதால், மற்ற கடவுளைப் பார்த்த 'கதைகள்' போல, இதை நீங்கள் ஒரேயொரு சதவிகிதம் கூட மறுக்க முடியாது. நான் கடவுளை நேரில் பார்த்தேன் என்பதனால் சிரிக்கவோ, கோபப்படவோ, அல்லது நிதானம் தவறிவிடவோ வேண்டாம். நம்புங்கள்.
பொதுவாக, தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் எனக்கான சாபக்கேடு ஒன்றை நான் நிவர்த்தி செய்தாகவேண்டும். காலை ஆறு மணிக்கெல்லாம் இரண்டு ரூபாய்க்கு பச்சை மிளகாய் கேட்டு, அண்ணாச்சிக்கடை வாசலில் நிற்பது! இதுதான் அந்தச் சாபக்கேடு. ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல... அனேகமாக, தினந்தோறும்.
என் மனைவி பத்து நாளைக்கு ஒரு முறை இறுனூறு ரூபாய்க்கு ஒரு பை நிறைய காய்கறிகளை வாங்கிவந்து பிரிட்ஜில் அடைத்துவிடுவாள். பச்சை மிளகாயைத் தவிர்த்து. வேண்டுமென்றல்ல. மறதிதான் காரணம். காலையில் இட்டிலிக்காக சட்டினி அரைக்கும்போது, கத்திக்கொண்டிருக்கும் மிக்சி, மிள்காய் கேட்டு நிற்கும். பச்சை மிளகாய். கொஞ்சம் நான் சுணக்கம் காட்டினேனென்றால், 'இட்டிலிக்கு சர்க்கரை தொட்டுக்கறீங்களா' என்கிற கோபமான கேள்வியால், அடுத்த நொடி அண்ணாச்சி கடை வாசலில் நான் நிற்பேன்.
அண்ணாச்சிகூட எத்தனையோ முறை கிண்டலடித்திருக்கிறார் "என்னையா, காடு, மேடு, மலையெல்லாம் சுத்தி மார்கெட்டிங் செய்யுதீரு... எங்கனயாவது ஒரு எடத்துல வண்டிய நிறுத்தி ஒரு ரெண்டு ரூபாய்க்கு பச்சை மிளகாயை வாங்கி பெட்டியில வச்சிக்கப்படாதா? அந்த அளவுக்கு என்னையா மறதி உமக்கு? உலகத்து கதை மொத்தம் பேசத் தெரியுது, நியாயம் அனியாயம் பேசுதீரு, கடவுள் இல்லை, கருமாந்திரம் இல்லை அப்படீன்றீரு, ஆனா, இந்த மறதியப் போக்கறதுக்கு இன்னும் நீர் வழி கண்டுபிடிக்கலையாக்கும்?! வேற." எது பேசினாலும் 'வேற' என்றுதான் முடிப்பார். மளிகை வியாபாரத்தில் அது அவ்வாறு அவருக்கு பழக்கமாகிப்போனது.
"அட அத விடுங்க அண்ணாச்சி. ஜாப் டென்ஷன். எனக்கும் மறதி. என் மனைவிக்கும் மறதி. பச்சை மிளகாய்க்கும் எங்களுக்கும் அப்படியொரு ராசி. நீங்க ரெண்டு ரூபாய்க்கு பச்ச மிளகாய் கொடுங்க. அப்புறம் லேட் ஆகிடும்" என்று நான் அவரை விரைவுபடுத்துவேன்.
பல நாட்கணக்கான போராட்டம் இந்த பச்சை மிளகாய் விவகாரம். ஆனால் இந்த சோகக் கதைக்குள்ளே என் சிறிய சொந்தக் கதையும் சொருகிக்கிடக்கிறது.
இரண்டு வருடத்துக்கு முன்னாடி, பாழாய்ப்போன எங்கள் ஃபேமிலி டாக்டர் என் மனைவியிடம் தீர்மானமாக சொல்லிவிட்டார்.
"இங்க பாருங்கம்மா. இந்த மெடிகல் ரிபோர்ட்படி, உன் புருஷங்காரன் தண்ணி, சிகரெட்டு இதெல்லாம் இன்னையிலேருந்தே விட்டுடனும். கொலஸ்ட் ரால் ஹை ரிஸ்க்குல இருக்கு. எனி டைம் ஹார்ட் அட்டாக் வரலாம். கவனமாப் பார்த்துக்குங்க..."
அன்றிலிருந்து கண்கொத்திப் பாம்பானாள் என் மனைவி. கண்டிப்பான கண்டிப்பில் எல்லாத்தையும் விட்டாச்சு; இந்த கருமம் பிடித்த சிகரெட்டைத் தவிர்த்து.
காலையில் பச்சை மிளகாய் வாங்குவது என்பது என்னைப் பொருத்தவரையில் ஒரு சாக்கு. அண்ணாச்சிக் கடையில் வந்து ஒரு திருட்டு தம் அடிக்க இது ஒரு குருட்டு அல்லது திருட்டு வழி. வீட்டுக்குத் தெரியாமல், அண்ணாச்சிக் கடையில் சிகரெட்டுக்கு மட்டும் தனி அக்கவுண்டு. ஆனா அண்ணாச்சி அடிக்கடி 'போட்டுக்கொடுத்துட்றேன்' என்று சொல்லிக்கொண்டிருப்பாரே தவிர, இது வரை அது நடக்கவில்லை.
"உன் உடம்பைவிட புகைதான் முக்கியமாய்யா? விட்டுத் தொலைக்கணும்னு நெனைச்சா, விட்டுரலாம். ஆனா பாத்துக்க. ஒரு நாளைக்கு இல்லைன்னா ஒரு நாள் நான் அம்மாகிட்ட விஷயத்தை ஒப்பிச்சுடுவேன். வேற," சலிப்புக் கலந்த குரலோடு, குறி தவராமல் சிகரெட்டு ஒன்றை எடுத்து அந்த அழுக்கு மரப்பலகையின்மீது வீசி எறிவார். அந்த வீசலில் அவரது கோபமும், கண்டிப்பும், எச்சரிக்கையும் எனக்கு தெரிவிக்கப்படும். தினந்தோறும்!
இந்த முன்னுரையின்படிதான், போன வியாழக்கிழமை, கடவுளை நான் நேரில் பார்க்க நேரிட்டது!
என்றைக்கும்போல அன்றும் அண்ணாச்சி கடையில் பச்சை மிளகாய் கேட்டு நிற்கிறேன். எனது பக்கத்தில் இரண்டு பேர். ஒரு பையன் பால் பாக்கெட், நூடுல்ஸ் வாங்கவும், இன்னொருவர் வெங்காயம், கத்தரிக்காய் வாங்கவும் வந்திருந்தனர்.
இங்கேதான் முக்கியமான கட்டத்தை நெருங்குகிறோம். கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் ஒரு முறைக்கு இருமுறை பச்சை மிளகாய் கேட்டும் அவர்களும் பால், வெங்காயம் என்று கத்தியும், அண்ணாச்சி அப்படியே கற்சிலை மாதிரி நின்றிருந்தார். கண்களும் இமைக்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் அவ்வாறு இருந்திருக்கலாம். இப்போது அண்ணாச்சி கேட்டார்.
"உனக்கென்ன, பால் பாக்கெட்டா, அந்த பெட்டியிலே இருக்கு. எடுத்துக்க. பதினாலு அம்பது. வேற?"
"என்ன ஆச்சு அண்ணாச்சி உங்களுக்கு. கொஞ்ச நாழி, அப்படியே பிரமை பிடிச்சாப்ல நின்னுட்டீங்க?" என்று நான் கேட்டேன்.
அதற்கு அண்ணாச்சி, "நாந்தாண்டா கடவுள். உன்னைத்தான் பார்க்க வந்தேன்!" குரல் தீர்க்கமாகவும், கூர்மையான பார்வையுடனும் என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.
"என்ன அண்ணாச்சி, காலங்காத்தால விளையாட்டு?" என்றேன். நானும், அந்தப் பையனும் மற்றொருவரும் அண்ணாச்சி முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம்.
"எனக்கு அரைக்கிலோ வெங்காயம், அரைக்கிலோ கத்தரிக்காய் கொடுங்க அண்ணாச்சி" என்றார் மற்றவர்.
கை நிறைய வெங்காயம் அள்ளி எலக்ட்ரானிக் தராசு மீது வைத்தார். அது மிகச் சரியாக 500 கிராம் காட்டியது. அதை எடுத்து ஒரு கவரில் போட்டுவிட்டு, கை நிறைய கத்தரிக்காய் அள்ளியெடுத்தார். ஒரே அள்ளு. இந்த முறையும் எலக்ட்ரானிக் தராசு 500 கிராமை மிகச் சரியாகக் காட்டியது.
பையன் சொன்னன். "அண்ணாச்சி, உண்மையிலேயே நீங்க கடவுள்தான். ஒரே அள்ளு அள்ளினா சரியா 500 கிராம்! எப்படி அண்ணாச்சி? சரி எனக்கு நூடுல்ஸ் கொடுங்க."
அண்ணாச்சி வெறும் கையை பையனின் முகத்தருகே நீட்டினார். ஒரு பெரிய பேப்பர் கப்பில் சுடச்சுட ஆவியோடு நூடுல்ஸ்.
நாங்கள் மூவரும் சற்றே அதிர்ச்சியுற்று ஓரடி பின்னால் நகர்ந்தோம். இப்பொழுதுதான் எங்களுக்கு ஏதோ ஒன்று விளங்கியது. அண்ணாச்சி அண்ணாச்சியாயில்லாமல் வேறு யாரோவாக இருக்கிறாரென்று. எங்களுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
"அண்ணாச்சி?!" என்று குறுகிய குரலில் நான் அவரை அழைத்தேன்.
"நம்பிக்கை இல்லையா?.... இதை கையில் எடு!" என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பலகை மீது வைத்தார். கையில் எடுத்துப் பார்த்தேன். பழக்கமான கனத்தைவிட அதிக கனமாக இருந்தது. ஒரு கிலோவுக்கும் மேல் இருக்கலாம். அதை ஆட்டிப் பார்த்தபோது கலகலவென்று உலோகச் சத்தம் கேட்டது.
"பிரித்துப் பார்," என்றார் அண்ணாச்சி.
பையன் வெடுக்கென்று என் கையிலிருந்து பிடுங்கி அதைப் பிரித்தான். அந்த பிஸ்கட்டுகள் உலோகத்தால் இருந்தது. மின்னியது.
"பையா, இது தங்க பிஸ்கட்டு. வேற." என்றார் அண்ணாச்சி.
பையன் இரு கால்களும் மடங்கியவாறு மயங்கி தரையில் சொத்தென்று விழுந்துவிட்டான்.
"இப்போ பாருங்க... இந்த வழியா முதலமைச்சர் போவார்." என்றார் அண்ணாச்சி. அடுத்த வினாடி, பைலட் கார்கள் புடைசூழ முதல்வர் எங்களைக் கடந்து போனார். எங்களைப் பார்த்து கையசைத்தார்.
இப்போது வெங்காயம் கத்தரிக்காய் வாங்க வந்தவர் மெதுவாக அங்கிருந்து நழுவினார்.
"அண்ணாச்சி," என்றேன் நான் ஆச்சரியம் கலந்த குரலில். நானும் நழுவிவிடலாமா என்ற யோசிப்பில் இருந்தேன்.
"நான் அண்ணாச்சியில்லை. கடவுள். உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்."
சிறிது நேரம் மௌனம் நிலவியது.
நான் கேட்டேன். "சொல்லுங்க... ஏன் என்னைப் பார்க்க வந்தீங்க?"
"கடவுள் இல்லை என்கிற உன் வாதத்தை மறுக்கவும், என்னை உனக்கு எடுத்துக்காட்டவும், உனக்குத் தேவையான சாட்சிகள் உன் பக்கத்திலேயே இருக்க, இங்கே வந்தேன். சாட்சிகளோடு என்னை நீ பார்த்துவிட்டாய். இப்போது என்னை நம்புவாய்தானே? இருந்தாலும் உன்னால் மக்களை நம்பவைக்க முடியாது பார்க்கிறாயா?!"
"அண்ணாச்சி... நான் நம்பவில்லை. நீங்கள் கடவுள் இல்லை. அண்ணாச்சிதான்" என்று அவரிடம் சொல்லிகொண்டிருக்கும்போதே வெங்காயம் வாங்க வந்த ஆள் ஒரு பத்து இருபது பேரோடு திபுதிபுவென்று அண்ணாச்சி கடை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
நான் திரும்பவும் அண்ணாச்சியைப் பார்த்தேன். முழு உருவமாய்த் தெரிந்த அண்ணாச்சி நீருக்குள் தெரியும் உருவம்போலத் தெரிந்து பின்பு மறைந்துபோனார்.
அதற்குள் கடை முன்னால் கூட்டம் கூடிவிட்டது. "என்ன, என்ன ஆச்சு." என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டனர்.
அதே நேரம் சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து கடையை நோக்கி அண்ணாச்சி நடந்து வந்துகொண்டிருந்தார்.
"என்ன, என்ன ஆச்சு? அதோ அந்தாண்ட போயி ஒண்ணுக்கடிச்சிட்டு வர்றதுக்குள்ளாற என்ன நடந்துபோச்சி?" என்று கேட்டவாறு கடைக்குள்ளே நுழைந்து போனார். இந்தச் களேபரச் சப்தத்தில் மயக்கம் தெளிந்து பையன் எழுந்து திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தான்.
"என்ன ஆச்சின்னா கேக்கிறீங்க? அண்ணாச்சி... நடிக்காதிங்க!" என்று உரத்த குரலில் நான் அவரிடம் கேட்டேன். "பையன் மயங்கி விழுந்ததுகூட உங்களுக்குத் தெரியாதா?"
"தெரியாதே. பாலும் நூடுல்சும் வாங்கிக்கிட்டு போய்ட்டான்னுதான் நினைச்சேன். வேற."
"அட அண்ணாச்சி. இந்த ஆள் என்னமோ நீங்க கடவுளா மாறிட்டீங்கன்னு சொல்றாரு. சூடா நூடுல்ஸ் எடுத்து முகத்துக்கு நேரா காட்டினீங்களாமே. தங்க பிஸ்கட் காடினீங்களாம். உண்மைதானா?" என்று கூட்டத்திலிருந்து ஒரு ஆள் ஆச்சர்யத்தோடு கேட்டான்.
"ஆமாய்யா, நான் மளிகை யாவாரத்த விட்டுட்டு, மந்திரம் கத்துக்கிட்டு வந்திருக்கேன். அட போங்கையா. அடக்க முடியலையேன்னு, அதோ அந்தாண்ட போயி ஒண்ணுக்கடிச்சிட்டு வர்றேன். என்னயப் போயி கடவுள், புண்ணாக்குன்னு சொல்லிக்கிட்டு. யாரு... இந்தாளு எதாச்சும் பிரசங்கம் பண்ண ஆரம்பிச்சுட்டாரா?" என்று என்னைக் கோபமாக பார்த்தவாறு கேட்டார்.
எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். "நீங்க பார்த்தீங்களா சார்?"
"ஆமாம். நான் பார்த்தேன். இவுங்க ரெண்டுபேரும்கூட பார்த்தாங்க." என்று நான் சொன்னபோது பையனும் தலையை ஆட்டினான்.
"பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து தங்க பிஸ்கெட்டை நாந்தான் பிரிச்சுப் பார்த்தேன். அத்தனையும் தங்கம்." என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னான் அந்தப் பையன்.
"என்ன அண்ணாச்சி. நீங்க இல்லைன்னு சொல்றீங்க. இந்த ஆளை விடுங்க. இந்தப் பையன் ஏன் பொய் சொல்லப்போறான்?"
அண்ணாச்சி முகத்தில் கோபம் கொப்புளித்துக்கொண்டு வந்தது. "என்னையா, காலங்காத்தால விளையாட்டுக் காட்டுறீங்க? வீணா பிரச்சினை பண்ணாதீங்க. தங்கம்கிறீங்க. பிஸ்கட்டுங்கறீங்க. என்ன, நான் திருட்டுதனமா செய்யுறேன். உள்ளார வந்து பாருங்கையா." என்று உரத்த குரலில் அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கத்தினார்.
வெங்காயம் வாங்க வந்த ஆள் சடாரென்று கடைக்குள் புகுந்து இங்குமங்கும் பார்த்தான். வேகவைக்கப்பட்ட நூடுல்சோ அல்லது தங்க பிஸ்கட்டுகளோ ஏதும் அவர் கண்ணீல் படவில்லை.
"இல்லை. நாங்கள் பார்த்தோம்." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சைரன் ஒலியுடன் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து லத்தியுடன் ஒரு கான்ஸ்டபிள் கீழே இறங்கிவந்தார். "என்னைய்யா கூட்டம் இங்கே?"
ஒரிரு நிமிடம் மௌனம் நிலவியது. யார் முதலில் சொல்வதென்கிற குழப்பம். இப்பொழுது பையன் பேசினான்.
"சார். இங்கே கடவுள் வந்தார் சார். நாங்க பார்த்தோம்."
கான்ஸ்டபிள் சற்றே மிரண்டாவாறு, பையனின் தலையைக் கோதினார். "கடவுளைப் பார்த்தியா? உன் பேரு என்ன? எங்கேருந்து வர்றே?" என்று கேட்டுக்கொண்டே, ஜீப்பின் அருகில் சென்று குனிந்து இன்ஸ்பெக்டரிடம் பேசினார். "ஐய்யா, இங்க ஏதோ கடவுள் வந்தாராம். அந்தப் பையன் ஸ்டேட்மெண்ட் குடுக்கறான். கொஞ்சம் இறங்கிவந்து என்னான்னு பாருங்க."
இன்ஸ்பெக்டர் கீழே இறங்கி எங்களை நெருங்கி வந்தார். "என்னையா... என்ன பிரச்சினை இங்கே?" என்று எங்கள் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். கழுத்து நிறைய ருத்ராட்சக் கொட்டை மாலை போட்டுக்கொண்டு, சந்தனப்பொட்டும் குங்குமமும், விபூதி வாசமுமாக, ஐயப்ப பக்தராய் இருந்தார்.
அண்ணாச்சி உரத்த குரலில் சொன்னார். "வீணா பிரச்சினை செய்ய்யுறாங்க. கடவுளைப் பார்த்தாங்களாம். தங்க பிஸ்கட் பார்த்தாங்களாம். புரளி கிளப்புறாங்க சார். இதோ.. இங்க மாட்டியிருக்கிற ஏசுராஜா படத்து மேல சத்தியமாச் சொல்றேன். அப்படியெல்லாம் ஏதும் நடக்கவேயில்லீங்க."
"தங்க பிஸ்கட்டை யார் சாமி பார்த்தது?" என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
"நான்கூட பார்த்தேன். இந்தப் பையந்தான் பாக்கெட்டிலிருந்து பிரிச்சான்," என்றேன் நான்.
"நீங்க கொஞ்சம் வெளியில வாங்க சாமி..." என்று அண்ணாச்சியை வெளியேற்றிவிட்டு, இன்ஸ்பெக்டர் உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்து தீவிரமாகத் தேடினார். அந்தத் தேடுதலில் ஏட்டும் இணைந்துகொண்டார்.
ஒரு பத்து நிமிடத் தேடலில் ஏதும் கிடைக்கவில்லை என்கிற முடிவோடு இருவரும் வெளியில் வந்தனர். அண்ணாச்சி மீண்டும் கடைக்குள் போய் நுழைந்துகொண்டார்.
கூட்டத்தைப் பார்த்து உரத்த குரலில், கைகளை உயர்த்தி இன்ஸ்பெக்டர் பேசினார்.
"இங்கே பாருங்க. இப்பதான் சி.எம் இந்த வழியா திடீர்னு போனாங்க. எங்களுக்கு இன்ஃபார்மேஷன் கொடுக்கவேயில்ல. ஏற்கெனவே போட்ட ஷெட்யூல்ட் ரூட்ல டிராபிக் அதிகமா இருக்குன்னு, திடீர்ன்னு இந்த வழிய செலக்ட் செய்து, இப்பத்தான் போனாங்க. இந்த நேரத்துல, கடவுள்... தங்க பிஸ்கட் அது இதுன்னு புரளி கிளப்பி கூட்டம்போட்டிங்கன்னா, நல்லாயிருக்காது. அப்புறம் எல்லாரையும் ஸ்டேஷன் கூட்டிகிட்டுபோய் தீவிரமா விசாரிக்க வேண்டியிருக்கும். கடவுளைப் பார்த்தாங்களாம்... கடவுளை! இது கம்ப்யூட்டர் யுகம்யா! என்ன, கேக்கறவனை கேணைன்னு நெனைச்சீங்களா? நான் மாலை போட்டிட்டிருக்கேன். இல்லைன்னா வண்டை வண்டையா வார்த்தைங்க வந்து விழும். இங்கேருந்து எடத்தை உடனே காலி பண்றீங்களா, இல்ல, ஸ்டேஷனுக்கு வர்றீங்களா?"
போதாக் குறைக்கு ஏட்டு தரையில் லத்தியைத் தட்டினார். கூட்டம் பின்னோக்கிக் கலைந்தது.
பையன் பால் கவரையும் நூடுல்ஸ் பாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு காசைக் கொடுத்துவிட்டு, அண்ணாச்சியின் முகத்தை தயக்கத்துடன் பார்த்தவாறே சென்றான்.
"என்ன அநியாயம் பாருங்க," என்னைப் பார்த்துப் புலம்பியவாறு, வெங்காயம், கத்தரிக்காய் பையை எடுத்துக்கொண்டு இன்னொருவர் புறப்பட்டார்.
அண்ணாச்சி சொன்னார். "வந்தமா, ஜாமான வாங்கனுமா, போனமான்னு இருக்கணும். உன் பொஞ்சாதி சொல்றாப்ல, இங்க வந்தும் பிரசங்கம் ஆரம்பிச்சுட்டியா? வரவர உன் நடவடிக்கையே சரியில்லையே? பச்சமிளகாய எடுத்துக்கிட்டு மொதல்ல இங்கேருந்து கிளம்பு. கடவுளைப் பார்த்தாராம். பேச்சு பேசறது மட்டும் வாய்க்கு ஒருதரம் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை' அப்படீங்கறது. ஊருக்கு ஒரு நியாயம்... உனக்கு ஒரு நியாயமா? கொஞ்ச நேரத்துல எவ்வளவு கலாட்டா பண்ணிப்போட்ட? மொதல்ல கெளம்புய்யா இங்கேருந்து" என்று காகிதத்தில் மடித்த பச்சைமிளகாயை என் கையில் திணித்தார். "அப்புறம்... உன் சிகரெட்டுக் கணக்கு நூத்தி எம்பது ரூவா ஆகுது. நாளைக்கு குடுத்துரு. இனிமே உன் சங்காத்தமே வேணாம். வேற." என்று முகத்தை திருப்பிக்கொண்டார்.
முகத்தில் ஈயாடாத குறையாக வீடு நோக்கி நடந்தேன்.
என்னை எதிர்பார்த்துக் காத்திருந்த என் மனைவி நான் மெல்ல, சோர்ந்து நடந்துவந்ததைப் பார்த்து உரத்துக் கத்தினாள். "ஒரு இடம் பாக்கி விட்றதில்லை. முடி வெட்டிக்கப் போனா அங்க ஒரு பிரசங்கம். ரேஷன் கடைக்குப் போனா அங்க ஒரு பிரசங்கம். மளிகைக் கடைக்குப் போனா அங்க ஒரு பிரசங்கம். பெரிய ரோதனையா போச்சிய்யா உன்னோட. போனா போன இடம், வந்தா வந்த இடம்." ஏதோ பாத்திரங்களை உருட்டிவிட்டு அவளின் கோபத்தைக் காட்டினாள். "கடவுளே, இந்தாளுக்கு நல்ல புத்தியக் குடு."
நான் ஏதும் மறு பேச்சு பேசவில்லை. என் மனம் அதீதக் குழப்பத்தில் இருந்தது. நடந்த எது ஒன்றையும் என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனென்றால் நான் என் இரு கண்களாலும் நிகழ்வுகளைப் பார்த்தவன்.
வார இறுதியில் விவாதக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், பொதுமேடைப் பேசுக்கள், நாத்திகம் அல்லது அறிவியல் விவாதங்கள், மார்க்சிய சிந்தனைகள். என்ன பிரயோசனம்? அட... இது நான் தானா? என்ன நடந்தது இன்று? இதை என் தோழர்களிடத்தில் எப்படி விவரிப்பேன்? எப்படி விவாதிப்பேன்? அவர்கள் இதை நம்புவார்களா? நகைக்கமாட்டார்கள்? ஆனால் இது நடந்ததே? எந்த விதத்தில் யோசித்தாலும் இது சாத்தியமில்லை. ஆயினும் நடந்தது!
என் மனைவியின் பல்வேறு புலம்பல்களுக்கிடையே நான் இங்குமங்கும் நடந்தவாறிருந்தேன். என் மனம் ஒரு நிலையிலில்லை. ஒரு பக்கம் அதிர்ச்சி. ஒரு பக்கம் அவமானம். என் மனைவியிடம் நடந்ததை பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை. ஏனெனில் ஏற்கெனவே 'கொஞ்சம் லூசு' என்று பேர் வாங்கி இருந்த நான் அவளிடம் இன்னும் அவமானப் பட்டுப்போவேன்.
ஆனால் எனக்கு தீர்வு வேண்டும். அதை என் தோழர்களிடத்தில் நான் கேட்கவேண்டும்.
ஒரு தோழருக்கு செல்பேசியில் அழைத்து, நிறுத்தி நிதானமாக, பதற்றமேதுமில்லாமல், அவரிடம் தலையிலிருந்து கால் வரை நடந்ததை விவரித்தேன். சிறிது நேரம் எதிர் முனையில் மௌனம் காத்தார் தோழர். பின்பு சொன்னார்.
"தோழரே, இதுவரை நீங்கள் விளக்கியவரையில், எல்லாம் உங்களின் சுயநினைவோடுதான் நடந்ததென்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"
"ஆமாம், ஆமாம். அதில் ஏதும் சந்தேகமேயில்லை. நான் நடந்த எல்லாவற்றையும் பார்த்தேன். சாட்சிகளோடு."
"சரி தோழரே. நான் உங்கள்மீது வைக்கும் நம்பிக்கையால் நடந்தது நடந்ததாகவே எடுத்துக்கொள்கிறேன். இதன் சொச்ச மிச்சங்களை நாம் வார இறுதியில் மற்றவர்களோடு கலந்து விவாதிக்கலாம். ஆனால் நான் சொல்லவருவது ஒன்றேயொன்றுதான். அந்தக் கடவுளைப் பற்றி நீங்கள் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளத் தேவையேயில்லை. ஏதோ வந்தான் அல்லது தோன்றினான்; தான் இருக்கிறேன் என்பதை ஒரு கடவுள் மறுப்பாளனுக்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு காட்சி தருகிறான். கூட்டம் வருகிறதென்று மறைந்துவிடுகிறான். அவ்வளவுதான். மூன்றே வரிகளில் இதுதான் நடந்தது.
அவனின் இந்த அவதாரம் 'தான் இருக்கிறேன்' என்பதை உறுதிசெய்வது மட்டுமே. இது மட்டும் தான் அவனின் நோக்கம். இருக்கட்டுமே. ஆனால் அதைப்பற்றியெல்லாம் நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள். இந்த உலகில் அவன் இல்லை என்பதற்கான ஆதாரங்களே அதிகம் உள்ளன. பசியும், நோயும், ஏழ்மையும், வசதியும், சாதியும், மதமும்... என உலகமே வேறுபட்டுக் கிடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்யமுடியாத ஒரு கடவுள் இருந்தால் என்ன; அல்லது இல்லாவிட்டால்தான் என்ன? ஏதோ தெரு முனையில் ஒரு குறளிவித்தைகாரன் உங்களுக்கு வித்தை காட்டியதாக நினைத்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் அவமானப்பட ஏதுமில்லை. இன்று அலுவலகம் லீவு போட்டுவிட்டு, நன்றாகப் படுத்து தூங்குங்கள். ஞாயிற்றுக்கிழமை நாம் சந்திப்போம். நன்றி." என்று தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
ஒரு இரண்டே நிமிட இடைவெளியில் அதே தோழர் திரும்பவும் என் செல்பேசியில் அழைத்து இவ்வாறு சொன்னார்.
"தோழரே, ஒரு முக்கியமான விஷயம். இன்னொரு முறையும் அத்தகைய 'கடவுள்' சந்திப்பு நேர்ந்த்தால், அடுத்த கணம் நீங்கள் யோசிக்கவே வேண்டாம். அவனின் கைகளிரண்டையும் பின்பக்கமாகத்திருப்பி, தெருக் கம்பத்தில் சேர்த்து கட்டிவைத்து, எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் வரும்வரை விட்டுவிடவேண்டாம். ஏனென்றால், அவனை தீவிரமாக விசாரிக்கவேண்டியிருக்கிறது!"
ஒரு வார இடைவெளியில் என் மனம் ஓரளவு அமைதி கொண்டது.
பால் வாங்க வந்த பையனை தினந்தோறும் அருகிலுள்ள மசூதிக்கு அழைத்துச் சென்று, அவனை இப்பொழுது பூர்ணமாக குணப்படுத்திவிட்டதாகச் சொன்னார்கள்.
வெங்காயம் வாங்க வந்தவர்கூட மனவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குணமாகிவிட்டதாக கேள்விப்பட்டேன்.
இப்பொழுதெல்லாம் பச்சை மிளகாய் வாங்க அண்ணாச்சிக் கடைக்குப் போனாலும், எனக்கு அவரிடமிருந்து பழைய நட்போடு வரவேற்பு கிடைப்பதில்லை. அதேபோல, கடனுக்கு சிகரெட்டும் கொடுப்பதில்லை. எனக்கு மரியாதை கிடைக்காத இடம்தான். ஆனாலும் நான் அங்கே போயாக வேண்டும். அது எனது கடமை.
என்றாவது ஒருநாள் 'அவன்' திரும்பி வருவான் எனும் நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன்!
அப்படி வந்தால், அன்றோடு அவன் கதை தீர்ந்தது!!