My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

21.6.11

வினவு vs கனவு!


வினவு vs கனவு!

ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
விரலசைத்து என் ரஜினி
ஒரு வார்த்தை உதிர்த்துவைத்தால்
நாடே நாறிவிடும்;
நாட்டாமை மாறிவிடும்.
கேப்டன் குரல் எடுத்து
கொளுத்திப் போட்டுவிட்டால்
பாகிஸ்தான் படை நடுங்கும்;
பார் மொத்தமும் குலுங்கும்.
வெற்றி கிடைத்துவிடும்
விஜயின் மௌனத்திலும்;
வடிவேலின் கூவலிலும்
வையகம் விடிந்துவிடும்.
நடிக்கும் நடிகர்களின்
நாவன்மை பலித்திடலாம்.
என்றேனும் ஓர் நாள்
எம் வயிறும் நிறைந்திடலாம்.
ஜொலிக்கும் நடிகர் சொன்னால்
ஜனநாயகம் துளிர்க்கையிலே,
கடவுளின் தூதர் சொன்னால்
கனவுகளும் மெய்ப்படாதா?
மாமனிதர் வார்த்தைகளில்
மகத்துவம் முகிழ்க்குமென்றால்,
மாந்திரீகச் சாமியாரால்
மயிரும் உயிர்த்தெழாதா?
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
பங்காரு பாவாடைக்குள்
பாவங்கள் புழுத்துப் போகும்.
கல்கியின் பாதத்தின் கீழ்
கண்ணீரும் பொன்னாய் மாறும்.
சிரி சிரியின் சுவாசம் பட்டால்
சித்தமெல்லாம் சுத்தம் ஆகும்.
ஜக்கியின் நேர் காணல்தான்
ஜகஜ்ஜாலம் செய்து போகும்.
மாயியைக் கட்டிக்கொண்டால்
மாயையெல்லாம் விட்டுப்போகும்.
சாயியின் படுக்கை கூட
செம்பொன் வைரக் குட்டி போடும்.
சங்கரனின் சிண்டுக்குள்ளே
சிக்கல்கள் அவிழ்ந்துபடும்.
தேவநாதன் கலவி செய்தால்
தெய்வச்சிலை மறத்துப்போகும்.
மூன்றாம் நாள் உயிர்த்தெழலை
முன்னூறு தலைமுறையும்
எதிர்பார்த்து எமாந்தும்,
எம் நம்பிக்கைக்கு குறைவில்லை.
கல்லெறிந்தும் சாத்தானை
கொன்றுபோட முடியாமல்
உயிர்த்தெழும் விந்தையை
வியந்து வியந்து நம்புகிறோம்.
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
அலாவுதீனின் விளக்கொளியில்
அற்புதங்கள் தேடுகிறோம்.
சிந்துபாத்தின் கம்பளத்தில்
சோறு தேடிப் பறக்கின்றோம்.
மழித்து விழும் மயிரில்கூட
மைதாசின் கை பட்டுவிட,
திருப்பதி உண்டியலில்
தாலியறுத்துப் போடுகிறோம்.
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
உலகம் தட்டையென்று
வேதாளம் ஓதினாலும்
உருண்டை உண்மை விளங்க
ஒரு மாமாங்கம் ஆனதன்றோ?
காண்டாமணியொலியில்
காணாமற்போன கோட்பாடுகள்.
பாதிரிகளின் தூபங்களில்
பாவப்படுத்தப்பட்ட டார்வின்கள்.
வானர அனுமனுக்கு இன்று
வடைமாலை சாத்திகொண்டே,
டார்வினைக் கரைத்துக் குடித்து
டாப்ரேங்க் எடுக்கிறோமே!
நாலு வேத நம்பிக்கை
நரம்பிலெல்லாம் பிணைந்துகொள்ள
விஞ்ஞான வினையூக்கியில்
விபூதியும் கலந்துகொள்ளும்.
நீள்தொலை ஏவுகணை
நிலவுக்குப் போகும்முன்னே
விஞ்ஞான விவேகம் தவறி
உடைபடும் சிதறு தேங்காய்.
ஒன்றும் விளங்காத வினவே…
ஒன்றை மட்டும் தெரிந்துகொள்.
நம்பிக்கை வேதமொன்றே
நலம் தரும் புரிந்துகொள்.
***
வறுமையுள் வீழ்ந்துபோனோம்.
வாழ்வியல் மறுக்கப்பட்டோம்.
எத்தைத் தின்றால் தெளியும்
எம் பித்தம் எனத்தெரிய,
அங்குமிங்கும் அலைந்தோம்.
ஆன்மீகத்தில் விழுந்தோம்.
தடையில்லாப் பொருள்தேடி
தாடிமயிரில் தவங்கொண்டோம்.
தெரிந்து செய்யும் தவறுதான்; எனினும்
தப்பிக்க விட்டுவிடாத வழி!
ஏனென்று ஓர்நாள் கேட்க
ஏதொன்றும் விளங்கிப்போகும்.


பால் குடித்த பிள்ளையார்
பகடி செய்தார் என்று
எள்ளி நகையாட எமக்கு
இத்தனைக் காலமானது.
உண்மை ஓர் நாள் உறைக்கும்.
உலகமெலாம் உணர்ந்துகொள்ளும்.
அதுவரை ஆன்மீகத் தாலாட்டில்
ஆத்மாக்கள் அயர்ந்துபோகும்!
***
விஞ்ஞானத்தின் தேடல்
வெறுமைகளல்ல; உண்மைகள்!
வெறுமைகளை விரட்டிச்செல்ல
வினவுகள்தான் இங்கே வேண்டும்.
இருந்தாலும் நாங்கள் இன்று
ஏழுகால பூஜையிருக்கிறோம்.
சிந்திக்க நேரமில்லாத
சோதனையிலிருக்கிறோம்.
வேலைவெட்டி யில்லாத
வினவே, வினவு எமக்காக;
பொழுது நன்றாய் விடிந்தால்
புண்ணியமாய்ப் போகும் உனக்கு!



http://www.vinavu.com/2011/06/20/saamiyar-company/

17.6.11

ஈழப் படுகொலை ஈன்றெடுத்த வீரம்


ஈழப் படுகொலை ஈன்றெடுத்த வீரம்

“கொல்;
கொன்றுவிடு;

கொன்றே அவனை
கூறு போடு!”
“இல்லை,
இல்லவே இல்லை;
நில்; நில்.
நில் சற்றே;
அவனைக் கொல்லாதே;
கொன்றுவிடாதே…!”
“ஏன்?
ஏ மனிதா…!
ஓ…,
உன் உள் மனம்
உறுத்துகிறதா?”
“இ…
இல்லை…
இல்லவே இல்லை.”
“சொல்.
சொல்லிவிடு.
யார்,
யாருக்காக
இந்த பயம்?”
“முள்ளி வாய்க்கால்
தென்னை மரத்தில்
கையுங்காலும் கட்டிவைத்து,
கத்தியொன்றால்
கழுத்தறுத்தும்…
அந்தத் தமிழிளைஞன்
ஆற்றியேதும் பதறவில்லை.
கண்ணீரால் கபடமிட்டு
கத்திக் கதறவில்லை.
அவன் மட்டும் -
ஆற்றாமை தாங்காமல்,
கண்ணீர் மல்கி,
கதறியழுதால்……
பின் பதம் பார்த்து
கழுத்தறுத்தே
கொலை செய்வோம்.”
“நடவாது;
நடக்கவே நடக்காது;
அவன்
அழமாட்டான்…!
அதனால் கத்தியெடு.
கழுத்தைக் கிழி.
அவனைக் கொன்று
கூறு போடு.”
***
“குறி பார்.
கொலை செய்.
பத்தடி தூரத்தில்
பனங்கொலைக் குவியல்போல்
கொத்துக் கொத்தாய்
கொய்து போட
கத்தைக் கத்தையாய்
காத்திருக்கும் தலைகள்.
கைகளையும் கண்களையும்
கட்டிபோட்ட நிலையில்;
நினைவு தப்பாமல்
நிர்வாணமாய்!
சுடு.
கூர் பார்த்து.
குறி பார்த்து.
வீரம் பழக,
சுடு.
கிட்டத்தில் சுட்டு
வீரம் பழகு.”
“இல்லை;
இவர்களுள் பயமில்லை;
பின்னந்தலையில்
படபடவென்று சுட,
அது வீரமுமில்லை.
அத்தனை கண்களிலும்
கண்ணீர்த் துளிகளில்லை;
கதறியழுதோர் யாருமில்லை.”
“நடவாது;
நடக்கவே நடக்காது;
அவர்கள்
அழவேமாட்டார்கள்…!
அதனால்
அவர்களைக் குறி பார்.
பின்னந்தலைப் பிடரிகளை
பிள.
குருதிப் பீரிட
குறுந்தூரத்துக் குறியில்
உன் வீரம் பழகு.”
***
“புணர்.
பிணமென்றாலும்
புணர்ந்துவிடு.
புதிய பிணம்.
புது அழகு.
குதறிக் குதறி
குறிபார்த்துப் புணர்ந்துவிடு.”
“இல்லை;
இந்தப் பிணத்தின்
கண்ணோரத்தில்
கண்ணீரில்லை.
அவளைப் புணர்வதில்
அர்த்தமில்லை…!”
“நடவாது;
நடக்கவே நடக்காது;
அவள்
அழமாட்டாள்…!
அவளின் கண்களில்
கண்ணீரில்லை;
அவளுடலில் உயிரில்லை.
ஆனாலும்
அதைப் புணர்.
அதனின் குறியில்
குறிபார்த்து…!”
***
“சரிதான்;
சாவைச் சந்திக்க
கையறு நிலையிலும்
கை தூக்கியவர்களை
குறி பார்த்துச் சுட்டோம்;
குறி பார்த்துப் புணர்ந்தோம்.
இருப்பினும் -
தமிழகத்து
தொப்புள்கொடிகள்
துவண்டு போகாதா?
தானைத் தமிழன்;
தன் குடிவளர்த்த
தற்குறி தமிழன்;
மூத்தப் பெருங்குடி;
முத்தமிழ் வித்தகன்;
நாம் தமிழர் அல்லது
நாம் அல்லாத தமிழர்;
விடுதலைச் சிறுத்தைகள்;
விட்டுப்போன சிங்கங்கள்;
தங்கத் தாரகையின்
தவிக்கும் இரத்தங்கள்;
இந்தியா முழுதும் காணும்
மெழுகுவர்த்திப் போர்கள்;
தும்பை விட்டுவிட்டு
வலிய வந்து வால் பிடிக்கும்
தூங்கிவழிந்த
தூரத்து ஐக்கிய நாடுகள்;
இத்தகையோர் கையுயர்ந்தால்
யாம்
இல்லாமல் போய்விடுவோம்.”
“சீச்சீ…
சற்றும் பதறாதே
மா வீரா,
நீ நம்பு.
இத்தனை வீராப்புகளையும்
கோத்தபய ராஜபக்சே
கொத்துக் கொத்தாய்
கைக்குலுக்கி
உச்சி மோந்து
வீரம் அடக்கி,
நட்சத்திர அறைகளில்
அடைத்து வைத்து
அமைதி காண்பார்.
அதையும் மீறி
அத்து மீறினால்,
தின் பண்டங்களாலும்
தே நீர்க் கோப்பைகளாலும்
திகட்டவைத்து
திருப்பியனுப்புவார்.
அதையும் மீறினால்
அவர்களின் இருப்பிடமே சென்று
அளவளாவி விட்டு,
திருப்பதி சென்று
தியானம் செய்துவிட்டு,
தடையேதுமின்றி
தடபுடலாக
தாயகம் திரும்புவார்.
ஆதலால்,
என்றோ ஓர் நாள்,
யாரோ சிலரால்,
நம் கைகள் கட்டப்பட்டு
நீதி கேட்கப்படும் வரை…
நீ
பிடரியில் சுட
இடரிலிருக்கும்
தமிழனைத் தேடு.
குறி பார்த்துச் சுடு.
பிணமாக்கு.
குறி பார்த்து
பிணத்தைப் புணர்…!”
- புதிய பாமரன்.

6.6.11

தேவை ஒரு மகாத்மா; தீர்வல்ல...

தேவை ஒரு மகாத்மா; தீர்வல்ல...

இண்டியா கேட் திறப்பினில்
ஏகாந்தம்;
புல்வெளிப் பறப்பின்
வசந்தம்;
மெழுகின்
மெல்லிய வெளிச்சம்;
குளிர்ந்த கோக் அல்லது
பீரின் போதை;
பிறந்தது காதல்.
ஜன நாயகக் காதல்!

சீறிக்கொண்டு வரும்
எங்கள் போதி மரத்து
சிந்தனையில் கல்லெறியாதே!

குளிர்ந்த கோக்கின்
குப்பியைத் திறந்து
குடிக்கவிடு.
ஏனெனில் நாங்கள்
தாகத்திலிருக்கிறோம்.
ஜன நாயகத் தாகம்.
கோக்கைக் குடித்தவாறே
காந்தியம் கதைப்போம்!

போதை மட்டென்றாலும்
பீரைப் பீறிட வை.
ஏனெனில் நாங்கள்
உற்சாகங்கொண்டு
ஊழலின் பீறிடும்
ஊற்றுக் கண்ணை
உறைய வைப்போம்.

***

ராம்லீலா மைதானத்தில்
தேசப்பற்றின் மோன நிலை.
கருப்புப் பணத்தைத்
திருப்பித் தரக்கோரி,
ராமனை வேண்டி,
பஜனை கோஷ்டிகளின்
கண்ணீரில் நனைந்த
கோரஸ் குரல்.
யோகா மூலம்
ஒரு யுகப் புரட்சி.
ஜாலியன் வாலாபாக்கில்
உயிர்ப்பலியால் ஊற்றெடுத்தது
ஓரு பாழுங்கிணறு.
ராம்லீலா மைதானத்தில்
லத்தியடிக்காக
மோன நிலை கலைந்து
விட்டு ஓடிய
ரப்பர் செருப்புக்கள்;
காவிக் கோவணங்கள்.
உயிரற்றவைதானென்றாலும்
ஊழலெதிர்ப்புக் கொள்கையின்
அச்சாரமாக
அங்கே விட்டுவரப்பட்டவை.
நாளையொரு நாள்
நாங்கள் அதே இடத்தில்
உயிரை விட்டுவரவும்
தயங்க மாட்டோம்.
ஆதலாம் இந்த
ராம்லீலா மைதானம்
ஒரு வருங்காலத்து
ஜாலியன் வாலாபாக் என்றே
தாங்கள் தயைகூர்ந்து
குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

சீறிக்கொண்டு வரும்
எங்கள் யோக நிலை,
மோன நிலை,
பஜனைப் போராட்ட
சிந்தனையில் கல்லெறியாதே!

***

மாண்டுபோன மெழுகுவர்த்தியை
மிளிரவிடு.
ஏனெனில் நாங்கள்
இருளிலிருக்கிறோம்.
ஏமாற்றத்தின் இருளில்.
மெழுகின் மெல்லிய ஒளியில்
மொக்கையாகிப்போன
ஜனநாயக இந்தியாவை
ஜொலிக்க வைக்க
தேடிக்கொண்டேயிருக்கிறோம்.
மெழுகின் உருகலால்
மெல்ல மெல்ல
மாண்டுபோனதை
மீட்டெடுக்க உறுதிகொண்டோம்.


ஒபாமாவின் தேர்வில்
ஒழிக்கப்பட்ட
வெள்ளைப் பேதம்;
மண்டேலாவின் மௌனப்புரட்சியில்
மீட்டெடுத்த விடுதலை;
கலாமின் பதவியேற்பால்
கைகோர்த்த நல்லிணக்கம்;
மன்மோகன் மௌனத்தில்
கற்பிதம் செய்துகொண்ட
அற்புதமான
அரசியல் சாணக்கியம்;
கருணாநிதியின் கண்ணீரில்
கற்றுக்கொண்ட மனிதம்;
அம்மாவின் கவுரவத்தில்
ஆர்ப்பரித்த பெண்ணியம்;
திருமாவின் தியாகத்தில்
திரும்பப்பெற்ற தலித்தியம்;
ரஜினியின் மூப்பில் பயின்ற
ரவுத்திரம்;
விஜயகாந்தின் வீர வசனத்தில்
விதைந்த நாட்டுப் பற்று;

இவர்களால் கற்றவை
ஏராளம் என்றாலும்,
ஏனோ களவு.
இத்தனை வெளிச்சமிருந்தும்
ஏனோ இருட்டு.
இத்தனை கண்ணிருந்தும்
ஏனோ திருட்டு.
ஏதோ ஒரு குறை.
எங்கோ இடிக்கிறது.
அதைத்தான் தேடி
அலைந்து கொண்டிருக்கிறோம் -
அதி தீவிரமாய்;
மெழுகின் வெளிச்சத்தில்;
அஹிம்சாவழியில்.
அன்னா அசாரேவின்
பிரார்த்தனைகளில்,
அல்லது
பாபா ராம்தேவின்
பஜனைப் பாட்டொலியில்,
அற்புதங்கள் நிகழுமென
அன்றாடம் காத்திருக்கிறோம்.
ஏனெனில் அவர்கள்
இவ்வுலகம் மேம்பட உதித்த
மெத்தச் சிந்திக்கும்
மகான்கள்.

இந்த
எங்கள் எதிர்பார்ப்புகள்
எது ஒன்றும்
நடந்தேறவில்லையென்றால்
எதிர்பார்த்துக் காத்திருப்போம் -
மீண்டுமொரு மகானுக்காக;
அல்லது
மகாத்மாவுக்காக;
இன்னொரு அசாரேவுக்காக
அல்லது
இன்னொரு பாபாவுக்காக.
ஏனென்றால்
எங்களின் தேவைஎன்பது
தீர்வல்ல...
மகான்கள்
அல்லது
மகாத்மாக்கள்...!



http://www.vinavu.com/2011/06/06/ramdev-retches/