My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

6.6.11

தேவை ஒரு மகாத்மா; தீர்வல்ல...

தேவை ஒரு மகாத்மா; தீர்வல்ல...

இண்டியா கேட் திறப்பினில்
ஏகாந்தம்;
புல்வெளிப் பறப்பின்
வசந்தம்;
மெழுகின்
மெல்லிய வெளிச்சம்;
குளிர்ந்த கோக் அல்லது
பீரின் போதை;
பிறந்தது காதல்.
ஜன நாயகக் காதல்!

சீறிக்கொண்டு வரும்
எங்கள் போதி மரத்து
சிந்தனையில் கல்லெறியாதே!

குளிர்ந்த கோக்கின்
குப்பியைத் திறந்து
குடிக்கவிடு.
ஏனெனில் நாங்கள்
தாகத்திலிருக்கிறோம்.
ஜன நாயகத் தாகம்.
கோக்கைக் குடித்தவாறே
காந்தியம் கதைப்போம்!

போதை மட்டென்றாலும்
பீரைப் பீறிட வை.
ஏனெனில் நாங்கள்
உற்சாகங்கொண்டு
ஊழலின் பீறிடும்
ஊற்றுக் கண்ணை
உறைய வைப்போம்.

***

ராம்லீலா மைதானத்தில்
தேசப்பற்றின் மோன நிலை.
கருப்புப் பணத்தைத்
திருப்பித் தரக்கோரி,
ராமனை வேண்டி,
பஜனை கோஷ்டிகளின்
கண்ணீரில் நனைந்த
கோரஸ் குரல்.
யோகா மூலம்
ஒரு யுகப் புரட்சி.
ஜாலியன் வாலாபாக்கில்
உயிர்ப்பலியால் ஊற்றெடுத்தது
ஓரு பாழுங்கிணறு.
ராம்லீலா மைதானத்தில்
லத்தியடிக்காக
மோன நிலை கலைந்து
விட்டு ஓடிய
ரப்பர் செருப்புக்கள்;
காவிக் கோவணங்கள்.
உயிரற்றவைதானென்றாலும்
ஊழலெதிர்ப்புக் கொள்கையின்
அச்சாரமாக
அங்கே விட்டுவரப்பட்டவை.
நாளையொரு நாள்
நாங்கள் அதே இடத்தில்
உயிரை விட்டுவரவும்
தயங்க மாட்டோம்.
ஆதலாம் இந்த
ராம்லீலா மைதானம்
ஒரு வருங்காலத்து
ஜாலியன் வாலாபாக் என்றே
தாங்கள் தயைகூர்ந்து
குறிப்பெடுத்துக் கொள்ளவும்.

சீறிக்கொண்டு வரும்
எங்கள் யோக நிலை,
மோன நிலை,
பஜனைப் போராட்ட
சிந்தனையில் கல்லெறியாதே!

***

மாண்டுபோன மெழுகுவர்த்தியை
மிளிரவிடு.
ஏனெனில் நாங்கள்
இருளிலிருக்கிறோம்.
ஏமாற்றத்தின் இருளில்.
மெழுகின் மெல்லிய ஒளியில்
மொக்கையாகிப்போன
ஜனநாயக இந்தியாவை
ஜொலிக்க வைக்க
தேடிக்கொண்டேயிருக்கிறோம்.
மெழுகின் உருகலால்
மெல்ல மெல்ல
மாண்டுபோனதை
மீட்டெடுக்க உறுதிகொண்டோம்.


ஒபாமாவின் தேர்வில்
ஒழிக்கப்பட்ட
வெள்ளைப் பேதம்;
மண்டேலாவின் மௌனப்புரட்சியில்
மீட்டெடுத்த விடுதலை;
கலாமின் பதவியேற்பால்
கைகோர்த்த நல்லிணக்கம்;
மன்மோகன் மௌனத்தில்
கற்பிதம் செய்துகொண்ட
அற்புதமான
அரசியல் சாணக்கியம்;
கருணாநிதியின் கண்ணீரில்
கற்றுக்கொண்ட மனிதம்;
அம்மாவின் கவுரவத்தில்
ஆர்ப்பரித்த பெண்ணியம்;
திருமாவின் தியாகத்தில்
திரும்பப்பெற்ற தலித்தியம்;
ரஜினியின் மூப்பில் பயின்ற
ரவுத்திரம்;
விஜயகாந்தின் வீர வசனத்தில்
விதைந்த நாட்டுப் பற்று;

இவர்களால் கற்றவை
ஏராளம் என்றாலும்,
ஏனோ களவு.
இத்தனை வெளிச்சமிருந்தும்
ஏனோ இருட்டு.
இத்தனை கண்ணிருந்தும்
ஏனோ திருட்டு.
ஏதோ ஒரு குறை.
எங்கோ இடிக்கிறது.
அதைத்தான் தேடி
அலைந்து கொண்டிருக்கிறோம் -
அதி தீவிரமாய்;
மெழுகின் வெளிச்சத்தில்;
அஹிம்சாவழியில்.
அன்னா அசாரேவின்
பிரார்த்தனைகளில்,
அல்லது
பாபா ராம்தேவின்
பஜனைப் பாட்டொலியில்,
அற்புதங்கள் நிகழுமென
அன்றாடம் காத்திருக்கிறோம்.
ஏனெனில் அவர்கள்
இவ்வுலகம் மேம்பட உதித்த
மெத்தச் சிந்திக்கும்
மகான்கள்.

இந்த
எங்கள் எதிர்பார்ப்புகள்
எது ஒன்றும்
நடந்தேறவில்லையென்றால்
எதிர்பார்த்துக் காத்திருப்போம் -
மீண்டுமொரு மகானுக்காக;
அல்லது
மகாத்மாவுக்காக;
இன்னொரு அசாரேவுக்காக
அல்லது
இன்னொரு பாபாவுக்காக.
ஏனென்றால்
எங்களின் தேவைஎன்பது
தீர்வல்ல...
மகான்கள்
அல்லது
மகாத்மாக்கள்...!



http://www.vinavu.com/2011/06/06/ramdev-retches/

No comments:

Post a Comment