My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

29.11.11

கோட்டு சூட்டு போட்டஅண்ணே

(ஒரே நாளிரவில், முன்னறிவிப்பேதுமின்றி, பால் விலை, பேருந்துக் கட்டணம் ஏற்றியது குறித்து, ஏதுமறியாத ஒரு பாமரனின் புலம்பல்)

கோட்டு சூட்டு போட்டஅண்ணே
கோபிக்காம எனக்கு நீங்க,
நாளொன்னுக்கு நூறு நூறா
நாலு நாளாக் குறையுறத,
கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே.
புண்ணியமாப் போகும், உனக்கு
புள்ளைங்க நாலு பொறக்கும்.

மட்டப் பலக மண்ணுவெட்டி
சோத்து மூட்டைக் கட்டுக்கு
முப்பது ரூபா டிக்கெட்டு.
அந்த சொத்துக்கள சொமந்து நிக்கும்
இந்த சோப்ளாங்கி ஒடம்புக்கு
இன்னொரு முப்பது டிக்கெட்டு.
வேலைக்குப் போக வர, இந்த
எழவெடுத்த பஸ்ஸுக்கு
அழவேணும் ஒரு அறுவது.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
கொஞ்சம் கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

ஒத்த ரூபா அரிசி அவிக்க
பத்து ரூபா வெறகுக் கட்டு.
வெந்தத வழிச்சி முழுங்கி
உள்ளே தள்ளி செமிச்சு வைக்க
உப்பு புளி மொளகா,
கத்திரிக்காக் கருவாடு.
இத்தனையும் சேத்துப் பார்த்தா
மொத்தமா ஒரு நூறு.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
எனக்கு கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

ஆனைக்குள்ளே ஆடித்தூங்க
அடம்பிடிக்கும் அழுமூஞ்சி
ஊள மூக்குக் கைக் குழந்தை
உறிஞ்சிக்குடிக்கும் பாலுக்கு
நாளன்னைக்கும் ஒரு நாப்பது.

வெயில் வதக்கும் பொழப்பு;
வேலமேல கொஞ்சம் அலுப்பு.
களைப்பு போக்க டீக்குடிக்க,
பீடிக்கட்டு புகை பிடிக்க
பாக்கு கீக்கு போட்டுத் துப்ப
ஒரு நாப்பது ரூபா.

துணி துவைக்க, குளிக்க,
சோப்பு சாம்ப்பு வாங்கிக்கவும்
வச்ச கண்ணு வாங்காம
வாசலையே பாத்து நிக்கும்
புள்ளப் பூச்சி ரெண்டுத்துக்கும்
உப்புக் கடல ஒடச்சக்கடல
வாங்கிப் பையில் போட்டுக்கவும்
இன்னொரு நாப்பது.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
கொஞ்சம் கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

வேணாம்னு ஒதுங்கினாலும்
வா வான்னு கூப்பிடுற
வெக்கங்கெட்ட மானிட்டரு.
என்னத்தச் சொல்ல அண்ணே...
ஒடம்பு வலி மனசு வலி
ஒத்தடமா ஒரு மருந்து.
கருவுமெண்டு கடையிலயே
கூவிக் கூவிக் குடுக்கறாங்க.
அதுக்கு ஒரு நூறு.

தீவாளித் துணியெடுக்க,
சொந்த ஊரு போகவர,
பள்ளிக்கோடப் பீசு கட்ட,
வட்டிக்கு வாங்கிப் போட்ட
துட்டுக்கு வட்டின்னு
தெனத்தன்னிக்கும் ஒரு நூறு.

நாள் பூரா மாரடிச்சு
நானூறு கூலி வாங்க,
'தீனிக்கி தானின்னு'
ஒத்த ரூபா மீறாம,
ஓட்டமா ஓடிப்பூடும்
ஒரு ஒரு நாளும்.

ஆனா பாருங்க
அட, படிச்ச அண்ணே,
போன வாரம் பூராவும்
போக்கிடமே தெரியாம
நாளொண்ணுக்கு எனக்கு
நூறு ரூபாக் குறையுதண்ணே...
எனக்கேதும் தெரியாம,
என் கோமணத்தில் கைய வுட்டு,
துட்டையெல்லாம் திருடுறாங்கன்னு
தெனத்தன்னிக்கும் ஒரு டவுட்டு.

கோட்டு சூட்டு போட்டஅண்ணே
கோபிக்காம எனக்கு நீங்க,
கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே
புண்ணியமாப் போகும், உனக்கு
புள்ளைங்க நாலு பொறக்கும்.

2 comments:

ADMIN said...

அருமை.. ஐயா.. !! வாழ்வின் எதார்த்தை இணக்கமான வார்த்தைகளை கோர்த்து கவிதை மாலை ஆக்கிவிட்டீர்கள்..!! இன்றைய சூழ்நிலையை எளிதாக இப்படியும் கூறமுடியுமா??.. !!! எனக்குள் ஒரு ஆனந்தம் பொங்குகிறது. உங்கள் கவிதையின் ஈர்ப்பால்..!!

cheena (சீனா) said...

அன்பின் பாமரன் - இன்றைய விலைவாசி உயர்வு அழகாகக் கவிதையாக மலர்ந்திருக்கிறது. படமும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment