எருதுகளை ஓட்டிவந்து
ஏர்க்கலப்பை பூட்டிவந்து
கழனிக்காடு உழுதாலும்
கதிர்நெல்லு அறுத்தாலும்
உழக்கு நெல்லு உருப்படியாய்
வரவில்லை வீடு - அட
உடல் வளைந்தும்தான் நமக்கு
உடுக்கத் துணி ஏது?
-
விதைத்ததுதான் விளைந்தாலும்
விளைந்ததெல்லாம் அறுத்தாலும்
கழுதைபோல பிழைப்பாகிப்போச்சு
கால்வயிறே பசியாறலாச்சு
கையும்காலும் உழைத்தாலும்
கிடைக்கவில்லை சோறு - பல
காணி நிலம் விளைந்தாலும்
திருடுவது யாரு?
-
எஃகையும் இரும்படித்தோம்
இயந்திரமும் பல பிடித்தோம்
அந்தரத்தில் ஆடித் தொங்கி
ஆயிரம் பொருட்கள் செய்தும்
தருத்திரப்பேய் தினம் பிடித்து
தாக்குதடா நம்மை - புகை
தணல்தணிந்த அடுப்பினிலே
தூங்குதடா பூனை.
-
தெய்வத்தைத் தொழுதேற்றி
திருப்புகழைப் படித்தாலும்
கருவரைக்குள் நுழைந்து நின்றால்
கன்னித்தமிழ் தீட்டென்று
சாமிவந்து நம் வாழ்வில்
சபித்துவிட்ட சாபம் - அதை
கும்பிட்டுப் பார்த்தும் நமக்கு
கொடுத்ததென்ன லாபம்?
-
சொட்டும் வியர்வை கரிக்க
சூரியனும் சுட்டெரிக்க
பகலெல்லாம் உழைத்த பணம்
பசியாறப் போதவில்லை
கூலி வாங்கியும் குடும்பம்
கும்பி காயும் சோகம் - ஒரு
போக்கிடமும் தெரியாமல்
பொங்கிவரும் கோபம்
-
குருதியெல்லாம் கொப்புளிக்க
கோபத்தில் கொந்தளிக்க
காய்ந்துபோன வயிறெல்லாம்
காரணங்கள் கேட்டுவிட
தினவெடுக்கும் தோட்களெல்லாம்
தேடுதடா ஆளை - அவன்
குலையறுக்க தலையறுக்க
குறிக்குதடா நாளை!
1 comment:
ஃஃஃஃகையும்காலும் உழைத்தாலும்
கிடைக்கவில்லை சோறு - பல
காணி நிலம் விளைந்தாலும்
திருடுவது யாரு?ஃஃஃஃ
ஒவ்வொரு வரியிலும் வியர்வை ஒட்டியிருக்கிறது...
அருமை..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
Post a Comment