My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

23.12.12

அண்ணா நகர் அவென்யூ


அண்ணா நகர் 
அவென்யூக்களில்
வயிற்றுப் பசி
சவுக்கால் அடிக்க,
ஜவ்வு மிட்டாய் 
சிலுவையை
தோளில் சாய்த்து
சுமந்தபடி
சுற்றித் திரிகிறான்
அந்த
அழுக்குப் பிடித்த
ஜவ்வு மிட்டாக்காரன்.

உயிருள்ள
கட்டுமானங்கள்.
கார்கள் மட்டுமே
உலா வரும்
ஆட்களே இல்லாத
அந்த அரண்மனை
அவென்யூக்களில்,
அவன் மட்டும்
ஒரு நடைப் பிணமாய்.
தன்னந்தனியனாய்.

எண்பத்தாறு இன்ச்
சோனிக்களில்
ஆங்கிரி பேர்டு -
திரி டி பறவையோடு
ஆக்ரோஷித்து
ஒன்றிப்போன
அரண்மனைக் குழந்தைகள்.
விளையாட்டு வினையில்
பன்றிகளாய்
தின்றுபோட்ட கழிவுகள்.
அவைகளின் காலடியில்
காட்பரீஸ் சாக்லெட்டுகள்,
பிஸ்ஸாத் துண்டுகள்,
ஜரிகையில் சுற்றிய
கே எஃப் சி கால்கள்!
வேலைகாரி வந்தவுடன்
எல்லாமும் அள்ளி
பச்சைக் கலர்
பிளாஸ்டிக் பையில்
அழுந்தத் திணிக்கப்பட்டு,
சென்று சேர்ந்துவிடும்
குப்பைத் தொட்டிக்கு.
சுற்றுச் சூழலுக்கு
சற்றேனும் மாசில்லா
மக்கும் குப்பை!

மூக்கு
முட்ட முட்ட
அசைபோட்டுத் தீர்த்ததில்
ஜவ்வுமிட்டாய்க்கு
அங்கே
இடமில்லை.
அர்த்தமுமில்லை.

ம், பாவம் அவன்.
வியாபாரம் தெரியாத
'யாவாரி.'
பார்பி பொம்மைகளுக்கிடையே
அவன்
மரப்பாச்சி விற்கிறான்.

ம், பாவம் அவன்.
ஷாப்பிங் மால் முன்னால்
பொம்மலாட்டம்
காட்டுகிறான்.

ம், பாவம் அவன்.
சித்திரான்னாம்
விற்கவேண்டிய
மியூசிக் அகாடமி
கேண்டீனில்
பரோட்டா குருமா
விற்கிறான்.

ம், பாவம் அவன்.
வானளாவிய
வால் மார்ட்
தின்பண்டகளுக்கிடையே
தேன் மிட்டாய் விற்கிறான்.

குறைந்த பட்சம்
இந்த
யாவாரி
'எகனாமிக் டைம்ஸ்'
படித்திருக்கவேண்டும்.
இல்லையென்றால்
கொருக்குப் பேட்டை
சேரிப் பயல்களுக்கு
விற்கவேண்டிய
பண்டத்தை
அண்ணா நகர்
அவென்யூவுக்கு
விற்க வருவானா?

ம், பாவம் அவன்.
வயிற்றுப் பசி
சவுக்கால் அடிக்க,
ஜவ்வு மிட்டாய்
சிலுவையை
தோளில் சாய்த்து
சுமந்தபடி
சுற்றித் திரிகிறான்.

No comments:

Post a Comment