My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

24.12.11

மரம் நெ.123


அது ஒரு ஆள் அரவமற்ற ரோடு. எப்பொழுதாவது ஒரு முறை வண்டிகள் போகும், வரும். ஆட்கள் நடமாட்டம் என்பது மிகவும் அபூர்வம்தான். ஏனென்று கேட்க ஒரு ஆள்கூட இருக்காது. தவித்த வாய்க்கு தண்ணீர் கிடக்காது. 

நேற்று நூற்றுப் பதினைந்தில் முடிந்தது. இன்று நூற்றுப் பதினாறில் துவக்கம். குடைபோல் விரிந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு புங்கை மரத்திலிருந்து துவங்க வேண்டும். அரையடிக்கு அரையடி மரப்பட்டையை செதுக்கி, அந்த சதுரத்தில் வெள்ளைப் பெயிண்ட் அடித்து, அதன் மீது கருப்பு பெயிண்டில் நெம்பர் எழுதவேண்டும். வேலை நேர்த்தியாக இருக்கவேண்டும். சதுரம் பார்வைக்குத் தெரியும்படி ரோட்டுப்பக்கமாக இருக்கவேண்டும். எண்கள் கோணல் மாணலாக இருக்கக்கூடாது. மேஸ்திரி வந்தால் திட்டித் தீர்த்துவிடுவான். நடுவில் ஏதாவது மரங்கள் தவறுதலாக விடுபட்டுப்போனால் அவ்வளவுதான். சீட்டுக்கிழித்துவிடுவார்கள். 

மரத்தின் கீழே புதர்கள் இல்லாமல் தோதாய் இருந்தால் ஒரு நாளைக்கு நாற்பது அல்லது ஐம்பது மரங்கள் செதுக்கலாம். முள்ளும் புதர்களும் மண்டிக்கிடந்தால், மரத்தின் கீழே நான் நிற்கத் தேவையான அளவுக்கு வெட்டிச் சுத்தப்படுத்தியாகவேண்டும். அப்படியிருந்தால் ஒரு நாளைக்கு தோராயமாக முப்பது மரங்கள். இந்த ரோட்டின் இரு பக்கங்களிலும் மரங்களும் அதிகம், புதர்களும் அதிகம். அந்தி சாய்வதற்குள் ஒரு முப்பதைத் தொட்டுவிடுவேனா? பார்க்கலாம்.

சைக்கிள் ஹாண்டில்பாரின் ஒரு பக்கம் மாட்டிவைத்திருந்த பெயிண்ட்டு தகர டப்பாக்களையும், இன்னொரு பக்கம் மாட்டியிருந்த சாப்பாட்டுத் தூக்கையும் கீழே இறக்கி வைத்தேன். கோணியில் சுருட்டி பின் கேரியரில் வைக்கப்பட்டிருந்த பிரஷ்களையும், வெட்டுக்கத்தி, சுத்தி, உளியையும் எடுத்து தரையில் பரப்பி வைத்தேன்.

சட்டை வேட்டியைக் கழற்றி சுற்றி வைத்துவிட்டு, அரைக்கால் காக்கி டவுசரையும், கட் பனியனையும் போட்டுக்கொண்டேன். மார்கழி மாதத்துப் பனி இன்னும்கூட தன் மெல்லிய வெண்திரையை விலக்கிக்கொள்ளவில்லை. எட்டு மணிக்கான இளவெயில் உடலுக்கு இதமாயிருந்தது. சூரியனுக்கு இன்னும் கொஞ்சம் முதுகைக் காட்டி வெயிலை வாங்கிக்கொண்டேன். வேலை துவங்குவதற்கு முன்னான சோம்பேறித்தனம் என்னை மிகவும் நிதானப்படுத்தியது. கைகளை தலைக்குமேலே உயர்த்தி 'கட்டக், கடக்' என்று நெட்டி முறித்தேன். அந்தி சாய்வதற்குள் ஒரு முப்பது மரங்களுக்காவது செதுக்கி எழுதி முடித்தால், எனக்கு இருபது ரூபாய் 'எக்ஸ்ட்ரா பேட்டா' கிடைக்கும். குழம்பு செலவுக்காவது ஆகுமே?

வெட்டுக்கத்தியை கையில் எடுத்துக்கொண்டு புங்கை மரத்தை நோக்கிச் சென்றேன். புதர்கள் மண்டியிருந்தன. கைகளால் விலக்கி, கத்தியால் புதர்ச் செடியின் தண்டில் ஒரு முதல் வெட்டு வெட்டியதுதான் தாமதம்... படபடவென அடித்துக்கொண்டு, ஒரு ஜோடிக் கவுதாரிகள் நான்கடி உயரத்தில் பறந்துசென்று, தூரத்தில் அம்புகள் போல இறங்கி, புழுதி கிளப்பியவாறு வேகமாக ஓடின. அந்த முதல் சத்தத்தில் பக்கத்துப் புதரிலிருந்த ஒரு குள்ளநரி கூட திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓட்டம் பிடித்தது.

இங்கு காடை, கவுதாரி, புறாக்கள், மற்ற காட்டுப் பறவைகள் அதிகம் வசிக்கும். புதர்களை வெட்டும்போது, முட்டைகள் அதிகம் கிடைக்கும். சிலபொழுது, நான் வெட்டும் புதர்களில் மணிப்புறாக் குஞ்சுகள், காடை, கவுதாரிக் குஞ்சுகள் அதிகம் கிடைக்கும். கூடு, குழிகள் இருக்குமிடத்தில் புதர்கள் வெட்டப்பட்ட மாற்றம் தெரிந்தால், தாய்ப் பறவை தன் குஞ்சுகளையோ முட்டைகளையோ 'போட்டது போட்டவாறே' விட்டுவிட்டு ஓடிவிடும். அதனால் அந்தக் குஞ்சுகளை அப்படியே விட்டுவிட மனம் வராமல், ஒரு பையில் போட்டுக்கொண்டு வந்து, என் கிராமத்துப் பொடியன்களிடத்தில் கொடுத்துவிடுவேன். கவன சிரத்தையாகவும் அன்பு மேலிடவும் அவைகளை வளர்த்துவிடுவார்கள். எங்கள் தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் காடையோ, கவுதாரியோ, மணிப்புறாக் குஞ்சோ வளர்ந்துகொண்டேதானிருக்கும். 

கவுதாரிகள் விட்டுச் சென்ற அந்த புதர்ச் செடியின் அடியில் இரண்டு தவிட்டு நிற முட்டைகள் இருந்தன. அதை எடுத்துவந்து, சுற்றி வைத்திருந்த என் சட்டைமீது பத்திரமாக வைத்துவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்ந்தேன். 

குளிரும் வெயிலும் கலந்த மார்கழிப் பகலில் கடின வேலை செய்தாலும் அலுப்புத் தெரியாது. பதினோறு மணிக்கு ஏழு மரங்களைச் செதுக்கி எழுதி முடித்திருந்தேன். பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்து, சற்றே இளைப்பாறிவிட்டு, அதோ அந்த ஒதிய மரத்திலிருந்து துவங்குகிறேன்.

ஒதிய மரத்தின் கீழே புதர்கள் இல்லை. பசுங்கோரைகள் மட்டும் முழங்கால் அளவுக்கு வளர்ந்திருந்தது. கோரைகளை விலக்கிவிட்டு, என் மார்பளவு உயரத்தில், மரத்தின் மீது சதுரமாக மரப்பட்டையை செதுக்கியெடுக்க, உளியை சாய்த்துவைத்து, உளியின் தலையில் சுத்தியலால் ஒருயொரு தட்டுத்தான் தட்டினேன்.

சொத்தென்று ஒரு ஆந்தைகுஞ்சு அந்தக் கோரை மீது மெத்தென்று விழுந்தது. பதறிப்போய் கையிலெடுத்துப் பார்த்தேன். கொஞ்சம்கூட அடிபடவில்லை. உடலில் இறகுகளும் சிறகுகளும் இங்கொன்றும் அங்கொன்றுமாக முளைக்கத் தொடங்கியிருந்தது. பயத்தாலோ அல்லது இளங்குளிராலோ அதன் உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் உடலுக்கு சற்றேனும் பொருந்தாத பெரிய தலையை நிமிர்த்தி, என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. 

மெல்ல அதன் தலையைத் தடவிக்கொடுத்து, இரு உள்ளங்கைகளையும் குவித்து அதை ஏந்திக்கொண்டேன். மணிப்புறாவாயிருந்தால் வீட்டுக்கொண்டுபோய் வளர்க்கலாம். வீட்டுக் குழந்தைகள், கூட விளையாடி மகிழலாம். காடைக் குஞ்சு என்றால், கட்டி வைத்து வளர்த்து, பிற்பாடு ஆக்கி உண்ணலாம். ஆனால் இது ஆந்தைக்குஞ்சு. ஒன்றுக்கும் உதவாது. 

'அட, முட்டைக்கண்ணால் முழிக்காதே...' என்று எண்ணிக்கொண்டே, மேலே நிமிர்ந்தால் என் நெற்றிக்கு நேராக, ஒரு பொந்து இருந்தது. அந்தப் பொந்துக்கு மிக அருகிலேயே இந்தக் ஆந்தைக்குஞ்சின் தாய் உட்கார்ந்திருந்தது.

என் பார்வைக்கும் அந்த பெரிய ஆந்தையின் பார்வைக்குமான இடைவெளி ஒரு அடி தூரம்தான். அவ்வளவு நெருக்கத்தில் ஒரு கொழுத்த, பெருத்த முண்டைக்கண் ஆந்தையைப் பார்க்க மிகவும் கலவரமாகத்தான் இருந்தது. இளம் பச்சையும், தங்க நிற வண்ணமும் கலந்து, சூரியக் கதிர்கள் போன்ற நெருங்கிய கோட்டு ஆரங்களால் ஆன அந்த ஆந்தைக் கண் பாப்பாக்கள், ஒளிர்ந்தன. கண்களின் சுற்றளவு அதன் வட்ட முகத்துக்கு பொருந்தாத அளவுக்கு மிகப் பெரியதாயிருந்தது. அதன் சிறிய வளைந்த மூக்கு, அந்த நேரத்தில் எனக்கு ஒரு பேராயுதம்போலப் புலப்பட்டது. காற்றில் இறகுகள் சிலுசிலுக்க, மாதுளைப் பரல் வண்ணத்தில் இருந்த கூறிய கால் நகங்களால் அழுந்தப் பிடித்து, அது கிளையில் அமர்ந்திருந்த விதம் யாரையும் பயமுறுத்திவிடும்!

அதன் முகத்தில் கோபம் கொப்புளித்துக்கிடந்ததை நான் உணர்கிறேன் என்றே நினைக்கிறேன். இப்போதைக்கு அது என்னை பார்வையாலேயே எச்சரித்துக்கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் என் கைகளையோ அல்லது என் முகத்தையோ அது கொத்திக் கிழிக்கலாம்.

'தெரியாமல் நடந்துவிட்டது. மன்னித்துக்கொள்' என்று மனதில் நினைத்துக்கொண்டே, கூண்டில் வைக்கலாமா வேண்டாமா எனும் குழப்பத்தோடு தவியாய்த் தவித்துக்கொண்டு, தயங்கித் தயங்கி நின்றுகொண்டிருந்தேன்.

"அதைத் திரும்பவும் பொந்துக்குள் விட்டுவிடுங்கள்." 

திடுமென எச்சரிக்கும் கீச்சுக்குரல் அலறியது. நான் திடுக்கிட்டேன். சுற்றும் முற்றும் யாருமில்லை. ஆந்தையின் அருகாமையும், அதன் பயங்கர உருவமைப்பும், தற்போதைய சூழலில் நாங்கள் இருவரும் பகையாளிகளாய் ஆகிப்போனதாலும், நான் அதன் தாக்குதலை எந்த நேரத்திலும் எதிர்பார்த்திருந்ததாலும், எனக்குள் பிரமை முற்றிப்போயிருக்கலாம் என எண்ணிக்கொண்டேன்.

"தயவுசெய்து, அதைத் திரும்பவும் பொந்துக்குள் விட்டுவிடுங்கள். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் தூங்கும் நேரம் இது. இப்பொழுது தூங்கினால்தான், நான் இரவு வேட்டைக்குச் செல்லமுடியும்." அதே அலறும் கீச்சுக்குரல். சந்தேகமேயில்லாமல் ஆந்தைதான் அலறுகிறது! ஆந்தை பேசியதை நான் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டதும், பேரதிர்ச்சிக்குள்ளானேன். 

"நீ பேசுவாயா?" என்று கேட்கவும்கூட திராணியற்ற நிதானத்தில் நான் இருந்தேன். அது அலறிப்பேசியதில் இருந்த ஆச்சர்யத்தைவிட, அந்த அலறலில் கலந்திருந்த கோபமும் எச்சரிக்கையும் என் மனவலிமையை வெகுவாகக் குறைத்திருந்தது.

"நமக்குள் சண்டை வேண்டாம். திரும்பவும் சொல்கிறேன். அதை பொந்துக்குள் விட்டுவிடுங்கள்."

என் கைகள் தாமதிக்கவில்லை. அனிச்சையில் அவை ஒரு இயந்திரம்போல் இயங்கின. பொந்தருகே என் குவிந்த கரங்கள் சென்று விரல்களை விரித்தன. தன் சிறு கால் நகங்களால் பொந்தின் விளிம்பைப் பற்றியேறி, அந்தப் பொந்தின் விளிம்பிலேயே திரும்பி என்னைப்பார்த்தவாறு, வாகாக அமர்ந்துகொண்டது அந்த ஆந்தைக்குஞ்சு.

"நன்றி. ஆனால் மீண்டும் எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். நாங்கள் தூங்கியாகவேண்டும்." இதற்கு அர்த்தம் நான் இந்த மரத்தை விட்டு அடுத்த மரத்துக்குப் போகவேண்டும் என்பதுதானே? சரி. இருக்கட்டும் ஆனால் ஒரேயொரு கேள்வி.

"நீ எப்படிப் பேசக் கற்றுக்கொண்டாய்?"

"திரும்பவும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள். நாங்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறோம். மரத்தைத் தட்டி ஒலியெழுப்பியது மட்டுமல்ல, என்னுடன் பேச்சைத் தொடர்வதும் தொந்தரவு செய்வதுதான். அநாகரிகமாக நடந்துகொள்ளாதீர்கள்."

எனக்கு சுருக்கென்றது. அட, எப்படித்தான் பேசக் கற்றுக்கொண்டாய் என்று தெரிந்துகொள்ளக் கேட்டால், நாகரிகம் அநாகரிகம் என்று பேச்சு அதிகமாகத்தான் போகிறதே?

இப்போது அது எப்படிப் பேசக் கற்றுக்கொண்டது என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவலைவிட, அதன் மீது ஆத்திரம்தான் வந்தது. அது எனக்குக் கட்டளையிட்ட முறையில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. 

"நான் என் வேலையைத்தானே செய்கிறேன்? மரப்பட்டையை செதுக்கி, எண்ணைக் குறிப்பது என் வேலை."

"இருக்கட்டுமே. நீங்கள் செதுக்கும் மரத்தில்தானே என் பொந்து இருக்கிறது? நீங்கள் உளியைத் தட்டியதால்தானே என் மகன் அதிர்ந்து கீழே விழுந்தான்?"

"ஆமாம் அம்மா, நான் தூங்கிக்கொண்டே இருந்தேனா...அப்போது மரம் லேசாக அதிர்ந்தது. பிறகு நான் கீழே விழுந்துவிட்டேன்." அம்மாவைப் பார்த்தவாறே, குழந்தைக் குரலில் ஒத்து ஊதியது அந்த ஆந்தைக்குஞ்சு.

"ஆனால் நான் என் கடமையைச் செய்தாகவேண்டுமே?"

"அதற்காக என் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாதே. நீங்கள் இந்த இடத்தில் வேலையைத் துவக்கும் முன்னரே, நான் இங்கு குடிவந்துவிட்டேன். இந்த மரமும், பொந்தும், இந்தச் சூழலும் எனக்குச் சொந்தமானவை. அதனால் எனக்கு இந்த இடத்தில் உரிமை அதிகம்."

"ஓ, உனக்கு இந்த இடத்தில் உரிமை அதிகமா? எந்தச் சட்டப் புத்தகம் சொல்கிறது உனக்கு உரிமை இருக்கிறது என்று?"

"இதைப் புரிந்துகொள்ள, யாரும் புத்தகமோ சட்டமோ படிக்கத் தேவையில்லை. பொது அறிவு இருந்தாலே போதுமென்று நினைக்கிறேன்."

அநாகரிகம், பொது அறிவு... வார்த்தைகளில் கொஞ்சம் வேகம் காட்டுகிறது இந்த ஆந்தை.

"கொஞ்சம் நிதானமாகப் பேசு. கோபப்பட்டுப் பேசுகிறாய் என்று நினைக்கிறேன்."

"ஆமாம். உரிமைகளைக் காத்துக்கொள்ள கோபப்படத்தான் வேண்டும். கெஞ்சிப் பேசினால் ஆகாது."

"நீ சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. இந்த மரத்தை நான் செதுக்கி எழுதவில்லையென்றால், எனக்கு பணம் கிடக்காது. பணம் இல்லையென்றால் உணவு கிடக்காது. என் பிள்ளைகளெல்லாம் பசியால் சாவார்கள். புரிந்ததா, போதுமா?" அட, நானும் கோபப்பட்டுவிட்டேன். குரலை உயர்த்தியிருக்கக்கூடாது.

"அதாவது, உன் பிள்ளைகளுக்கான உணவில் எனது உரிமையிழப்பு கலந்திருக்கவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படித்தானே?"

"விதண்டாவாதம் செய்கிறாய். உனக்குப் புரியும்படியாகவே கேட்கிறேன். நீ இரவில் இரை தேடுவதுபோல, நான் பகலில் உணவு தேடுகிறேன். அவ்வளவுதான்!"

"நீங்கள் எனக்கு விளக்கத்தேவையில்லை நண்பரே. நான் சொல்வதைப் புரிந்துகொண்டால் போதும். உங்களின் உணவுத் தேடலால் என் உரிமை பாதிக்கப்படுகிறது என்றுதான் நான் சொல்கிறேன். புரிந்ததா?"

ஆந்தை விளித்த 'நண்பரே' எனும் வார்த்தைக்குள், நக்கல் ஒளிந்துகொண்டிருப்பதை என்னால் சுலபமாக புரிந்துகொள்ளமுடிந்தது!

தரையிலிருக்கும் வெட்டுக்கத்தியை எடுத்து ஒருயொரு விசிறு விசிறினால், இந்த ஆந்தை இரண்டு துண்டுகளாய் விழுந்துவிடும். ஆனால் பக்கத்தில் குந்தியிந்த அதன் பரிதாபத்துக்குரிய ஆந்தைக்குஞ்சு அனாதையாகிவிடலாம். ஆனால் இந்த ஆந்தை துள்ளிவிழுந்து சாகும்போதுகூட, உரிமை கேட்கும் வியாக்கியானத்தை விடாது போலிருக்கிறதே?! இதன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நான் இந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டால், நான் விவாதத்தில் தோற்றவனென்று ஆகிவிடக்கூடும். ஆமாம். இந்த ஆந்தை அப்படித்தான் எடுத்துக்கொள்ளும்! அது எனக்கு அவமானம்தானே? 

"தூக்கம் வருகிறது. தூங்கட்டுமா?" ஆந்தை அலறியது. 

அதன் கேள்வி நயத்தில், அது பேச்சை முடிக்கிறதா அல்லது தொடர்கிறதா என்று புரிந்துகொள்வதில் குழப்பமிருந்தது. இல்லை. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. இரண்டிலொன்று பார்த்துவிடவேண்டியதுதான். ஏனென்றால் நான் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லையென்றே நினைக்கிறேன். எதற்காக எனது உரிமையைமட்டும் நான் அதற்கு விட்டுக்கொடுக்கவேண்டும்?

"இல்லை. நான் போகமாட்டேன். என் பணியை முடித்துவிட்டுத்தான் இங்கிருந்து செல்வேன். அப்படி என் பணியை நான் செய்கையில், சிலருக்கு தொந்தரவு இருக்கத்தான் செய்யும். ஒரு குள்ளநரிக்கும் ஒரு கவுதாரி ஜோடிக்கும் கூட நான் தொந்தரவு கொடுத்துவிட்டேன். வேறு வழியில்லை. நீதான் சொல்லேன்? யாருக்கும் தொந்தரவு தராமலா நீ வேட்டையாடுகிறாய்? ஒன்றைக் கொன்றுதானே நீ உண்கிறாய்? உன்னால் கொல்லப்படும் பொருளுக்கு அது தொந்தரவு இல்லையா? அதுவும் கொடுமையான தொந்தரவு! ஆனால் நான் பணி செய்கையில், இங்கு நான் யாரையும் கொலை செய்யவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள், நண்பரே." சொல்லி முடிக்கையில் நான் சிரித்துக்கொண்டேன். பழிக்குப் பழி! எச்சரிக்கைக்கு எச்சரிக்கை!!

"நீங்கள் பேச்சை மாற்றுகிறீர்கள். இருந்தாலும் பதில் சொல்கிறேன். யார் உண்ணுவதானாலும் கொலை செய்துதான் உண்ணவேண்டும். கத்தரிக்காயை காம்பை அறுத்துக் கொலை செய்கிறீர்கள். ஆட்டைக் கழுத்தை நெறித்து கொலை செய்கிறீர்கள். ஆனால் இரண்டுமே கொலைதான். அவை உண்ணுதலின் பொருட்டான கொலை. வயிறு என்ற ஒன்று இருப்பதனால், நாம் தினந்தோறும் யாரையாவது கொலை செய்துகொண்டுதானிருக்கிறோம். இங்கே நான் என் உரிமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கொலையைப் பற்றிப் பேசுகிறீர்கள். பயப்படமாட்டேன். என் மகன் வளரும் வரை, இந்த பொந்து எனக்கு வேண்டும். அதைக் கேட்கும் உரிமை எனக்கிருக்கிறது. அதை விட்டுத்தற மாட்டேன். நீங்கள் கத்தியெடுத்தால் நான் கொத்த முயல்வேன். இந்தப் போராட்டம் உணவுக்கானதல்ல. உரிமைக்கானது. இப்பொழுதாவது புரிந்ததா?"

ஹைய்யோடா, கொத்த முயலுமாம்! அட வீராப்பு வியாக்கியானப் பண்டிதரே.... வா, ஒரு கை பார்த்துவிடலாம்.

குனிந்து வெட்டுக்கத்தியைக் கையிலெடுக்கும்போது, தூரத்தில் ஒரு மோட்டார் சத்தம் கேட்டது. கண்ணுகெட்டிய தூரத்தில் 'பிர்ர்ர்ர்ர்ர்ர்' என்று புகை கக்கிக்கொண்டே, ஒரு பச்சைக் கலர் மொபெட் வண்டி நிதான வேகத்தில் வந்துகொண்டிருந்தது. வேறு யார்? மேஸ்திரிதான்.

இந்த தூங்குமூஞ்சி ஆந்தையிடம் வாக்குவாதம் செய்ததில் மதியம் ஆகிவிட்டிருந்தது. இதோ மேஸ்திரி சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போகிறார். நான் வெறும் ஏழு மரத்திலேயே நிற்கிறேன். இந்த மேஸ்திரி கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

வண்டி அருகில் வந்ததும் மேஸ்திரி நிறுத்தினார். "என்னைடா ஆரம்பிச்ச எடத்துலயே நிக்கற? எத்தினி மரம் முடிச்சே?"

"ஏழு மரம்தான் மேஸ்திரி. இப்ப மரம் நூத்தி இருபத்து மூணுல நிக்குது. வந்து.... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமுங்க." ஆந்தையை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு, கோரையையைக் கைகளால் விலக்கிகொண்டே, வண்டியருகில் வந்து நின்றேன்.

"என்னடா பேயறைஞ்சா மாதிரி இருக்க? உடம்பு கிடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு சொல்லு?"

"வந்து மேஸ்திரி, இங்க ஒரு ஆந்தை... இல்லை இல்லை, இங்க ஒரு ஆவி சுத்திக்கிட்டிருக்கு மேஸ்திரி. வேலை செய்ய விடமாட்டேங்குது. ஆளுமேல ஏறி மிதிக்கிறாப்ல இருக்கு. ஒரு மணி நேரமா இந்த மரத்துல எழுதறதுக்கு முயற்சி செய்யறேன். முடியலை."

"டேய், என்ன, என்னங்கடா, எனக்கே காது குத்துறியா? பொடிப்பசங்களையெல்லாம் கும்பல் சேத்துக்கிட்டு, பேய் இல்லேம்பே, பிசாசு இல்லேம்பே, கடவுள் இல்லேம்பே. மூட நம்பிக்கை அப்படீம்பே. உன்னோட பேச்சுக்கு எங்களால மல்லுகட்ட முடியாதேடா? இந்த மரத்துல ஆவி இருக்குன்னு நீயா சொல்ற? அதை நான் நம்பணும்?" நம்பிக்கையில்லாமல் என் முகத்தையே நோட்டமிட்டார் மேஸ்திரி.

"இல்லை மேஸ்திரி. சொன்னாக் கேளுங்க. இந்த மரத்துல ஏதோ ஒண்ணு இருக்கு. அது என் கையைக் கட்டிபோடுது மேஸ்திரி. இந்த ஒரு மரத்தை மட்டும் விட்டுடலாம். ஒரு மாசம் கழிச்சி, நானே இங்க திரும்ப வந்து செதுக்கி எழுதிக் கொடுக்கிறேனே? கொஞ்சம் அஜ்ஜஸ்ட் பண்ணிக்கிடுங்க."

"ம்ஹூம்... உன் நடவடிக்கையே சரியில்லை. உன்னை ஏதோ மோகினிப் பிசாசுதான் தொரத்துதுன்னு நெனைக்கிறேன். ஒரு கால்கட்டை போட்டா சரியாகிடும். போ, போ. உன் இஷ்டம். ஆனா ஒரு மாசத்துல திரும்பி இங்க வந்து நெம்பர் எழுதிடனும். சரியா?" வண்டியை காலால் மிதித்து, புகையைக் கக்கிக்கொண்டே, கிளம்பிப் போனார் மேஸ்திரி. 
"ஆனா இன்னைக்கு உனக்கு பேட்டா கிடையாது."

மேஸ்திரியின் வண்டி கண்ணிலிருந்து மறையும்வரை காத்திருந்தேன். வண்டி மறைந்தபின்பு, திரும்பவும் கோரையை விலக்கிகொண்டு ஒதிய மரத்துக்கு அருகில் சென்றேன். ஆந்தைகள் இரண்டும் கழுத்தை உடலுக்குள் சுருக்கி, தலையையும் உடலையும் ஒன்றாகிக்கொண்டு, கண்களை மூடித் தூங்கிக்கொண்டிருந்தன. நடிப்பு இல்லை. ஆழ்ந்த உறக்கம்.

'அட என் வீராப்பு  ந்தையே, உன்னால் இன்றிலிருந்து நான் ஒரு ஆத்திகன் ஆகிவிட்டேன், தெரியுமா?'

சத்தமில்லாமல், வெட்டுக்கத்தி, சுத்தி, உளி வகையறாக்களை எடுத்துக்கொண்டு, கோரையை விலக்கி மெல்ல நடந்து வெளியில் வந்துவிட்டேன். 

நான் விட்டுக்கொடுக்கவில்லை. புரிந்துகொண்டேன்!

ஹ்ம்... 
மரம் நெ.123 பாக்கி!!3 comments:

வலிப்போக்கன் said...

"ஆமாம். உரிமைகளைக் காத்துக்கொள்ள கோபப்படத்தான் வேண்டும். கெஞ்சிப் பேசினால் ஆகாது."- உரையாடல்களில் அனுபவமாய் சிரித்தேன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

கதை சொல்லும் விதத்திலேயே களம் அழைத்து செல்லும் வித்தை கதாசிரியருக்கு உள்ளது.. இயல்பாகவே.. பொருத்தமான படங்களோடு புத்தகமாகவே போடலாம்.. சிறுவர்களும் கூட புரிய முடியும்.. நல்ல வழிகாட்டியும்.. காட்டை அழித்து , இயற்கையை மாசுபடுத்து நம் சுயநலத்துக்காக எப்படி வாழ்கிறோம் என்பது நமக்குமே கொஞ்சமாவது உரைக்கும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

/'அட என் வீராப்பு ஆந்தையே, உன்னால் இன்றிலிருந்து நான் ஒரு ஆத்திகன் ஆகிவிட்டேன், தெரியுமா?'/

வலிமையற்றவர்களிடம் தோற்பதே வெற்றி.. இதான் நியாபகம் வந்தது.. //Giving up doesn't always mean you are weak; sometimes it means that you are strong enough to let go. ~Author Unknown//

Post a Comment