My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.2.11

வேரின்றி மரமில்லை





முன்னோரிரவில் உள்வாங்கி
முன்னூற்றாம்நாள் வெளித் தள்ள
அன்றோரிரவில் அம் மனையாள்
ஆர்ப்பரித்து வலித் துடித்தாள்.


காலால் உதை யுதைத்தும்,
தலைகீழாய்ப் புரண்டு வந்தும்,
தண்ணீர்க் குட முடைத்தும்,
தரை வீழ்ந்ததோர் குழவி.


ஏக்கமுற 'மகள்' என்ற செவிலி.
எதிர்பார்ப்பில் காத்திருந்த சுற்றம்.
மகளா வென முணுமுணுத்து
மருகி நின்ற பெற்றோர்.


சாம்பல் நிறம்பூசி - சிறு மகள்
செவ் விரல்களை மடக்கி
குருதிக் கறையோடே
குறுகிப் படுத்திருந்தாள்.




சிறு செவ்வாய்த் திறந்து,
சென்னிறக் கையசைத்து,
கீச்சுக் குரலெடுத்து - முதன்முறை
கேவி அவள் அழுதாள்.




முலைப்பா லுண்ணும் போது
தாயின் முகம் பார்க்கில்,
மூச்சுக் காற்றில் முகங்கருக
முகத்தை மூடிக்கொண்டாள்.


'நீயுமா பெண்ணானாய்,
நான் பெற்ற மகவே - தெரியுமா?
காய்க்கும் மரங்க ளிங்கே
கால்தூசிக்குச் சமானம்'


'நீயேன் மகளானாய், இங்கே
நான் பெற்ற மகவே - புரியுமா?
கிளைகளுக்கிருக்கும் மதிப்பு
கீழிருக்கும் வேருக்கில்லை'


மூச்சுக் காற்றில் முகந்திணற,
முனகும் வார்த்தை நெஞ்சு சுட,
கையறு நிலையிலேயே - அவள்
கண்ணயர்ந்து போனாள்.


'மகள்' எனும் குற்றத்தால்
சுற்றத்தால் கிள்ளப்பட்டு,
தூக்கத்திலும் கேவியழுதே,
திரும்பவும் கண்ணயர்ந்தாள்.


***


'அம்பாரத்து ஆனைப் பொம்மை,
அழகான கரடிப் பொம்மை'
கேட்டு ஏங்கிய மகளுக்கு
கிடைத்ததோ ஒரு கிலுகிலுப்பை.


தெருவிலோடி விளையாடித்
திரிந்த 'மகன்' கூட்டம், அங்கே.
புறக்கடைத் தனிமையிலே சுதந்திரமாய்
புலம்பி விளையாடும் மகள் - இங்கே.


***


'ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;
இனி 'மகன்' என்போன் கல்வி கற்க;
பிறிதொரு வீடுபோகும் பெண் நீ - இனி
பெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.'


'சிறுமியெனில் சிந்தனை எதற்கு?
சிறு மதங்களில் முடங்கிப் போ;
முசுலீமில் முக்காடைத் துவங்கு;
முகங்கவிழ் - இந்துவெனில்.'




'கன்னியெனில் பேச்சைக் குறை.
காதல் வந்தால் கட்டுப் படுத்து.
காதல் சொன்னால் கட்டுப்படு.
காதலனின் திராவகத்தை கவனம் கொள்.'


'ஆணின் அடிமையென்றுன்னை
அடையாளப் படுத்திக் காட்டு;
புன்னகை களைந்து, தாலி அணி;
புது மெட்டியணி அல்லது மோதிரமிடு.'


***


'காலையெழுந்து ஏவல் செய் - பின்
காற்றைப் பிடித்து பணிக்குப் போ.
மணாளன் வருமுன் வீடுதிரும்பி
மல்லிகை சூடிக் காத்திரு.'


'காமுற்றால் மட்டும் காமுறு.
கணவனின் பிள்ளை வரம் வாங்கு.
'மகன்' வேண்டி விதை விதைத்த
மணாளனின் கனவையே காண்.'


*** *** *** *** *** *** ***


ஆனால் ஈன்றது மகளென்றால்...
ஈன்றது மகளென்றால்...
மகளென்றால்...
...


ஆனால் ஈன்றது மகளென்றால்
ஆர்ப்பரித்து அறற்றாதே.
பட்டதெல்லம் போதும்; இனி
பாய்ந்திடப் பழகு.


'மகளா' என்று ஏக்கமுறும் 
மண்ணாங்கட்டிகளை ஏசு.
முணுமுணுக்கும் சுற்றத்துக்கு
முறந்துடைப்பம் காட்டு.


தன்மானங்கலந்து முலைப்பாலூட்டு;
தன்னம்பிக்கை வெறியேற்று.
எல்லோர் செவியிலும் விழும்படி இந்த 
இரகசியத்தை மகளுக்குச் சொல்:


"என் புத்தம் புது மகளே - 
நீ இன்றிலிருந்து...


விளையாடி மகிழ்.
பாடம் படித்து -
சுயமாய்ச் சிந்தி.
அடிமை வெறு.
அடங்க மறு.
அத்து மீறு.
சாதி சிதை.
மத மிகழ்.
தெய்வத்தை நிந்தி.
தாலி மறு.
காதல் செய்.
பெண்ணியம் போற்று.
பெரியார் பேண்.
பொது நலம் பேசு.
அரசியல் பழகு.
அறிவியல் அறி.
உழைத்தபின் உண்;
அதையும் பகிர்ந்துண்
எனத் தத்துவம் பேசு. 


என்றுமே இடித்துரை -
வேரின்றி மரமில்லை என்று!
யாம் இனி யாருக்கும்
அடிமையில்லை என்று!!"


- புதிய பாமரன்...

2 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரா, ஒரு பெண்ணின் உலகியல் பார்வையை, அவளின் தாய்மையாகும் தருணம் முதல், சிறு வயதிலிருந்து பெரியவளாகி வளரும் பருவம் வரை சமுதாயக் கண் கொண்டு உற்று நோக்கி கவிதையாகப் படைத்துள்ளமை அருமை. கவிதை எங்களின் சமூகத்தின் பார்வையாகவும், பெண்களின் மௌனங்களின் பின் உள்ள வலிகளையும் பேசி நிற்கிறது.

இளையோன் said...

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி புதிய பாமரன் அவர்களே!
உங்கள் கவிதையினை நான் வலைப்பதிவு துவங்கிய நாளிலிருந்து கவனித்து வருகிறேன்.

Post a Comment