இன்று சொக்கலால் சேட்டுக்கு ஒரு சோக நாள். அவருடைய ஷேர் மார்கெட் வெள்ளாமையில கரடி வந்து உள்ளாற புகுந்து அடிச்சி, கடிச்சி, துவம்சம் செய்ஞ்சுடுச்சாம். அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலதான், சரியா காலம்பர பத்து மணிக்கு, சேட்டுக்கு சேதி தெரிஞ்சுது. 16 கோடிக்கும் மேல நஷ்டமாயிடுத்தாம். நாடி லபக்கு லபக்குன்னு அளவுக்கு மீறி துடிக்க, பளபளப்பான சொட்டை மண்டையிலேருந்து வியர்வை தாரைத் தாரையாய் சொட்டிக்கொண்டிருந்தது சொக்கலாலுக்கு. தன்னுடைய ரங்க ராட்டினம் நாற்காலியில வாய பொளந்த மேனிக்கு மல்லாக்க சாய்ஞ்சு கெடந்தாரு சேட்டு.
அவரோட பெர்சனல் செக்ரடரி மஞ்சு சேஷாத்ரிக்கு (எம்.பி.ஏ) கொஞ்சம் பேஜாராப் போய்டுத்து. சேட்டின் ஏ.சி அறையிலேருந்து வெளியில படதட்டத்தோட ஓடி வந்து, ஆபீஸ்ல வரிசையா உட்கார்ந்து கம்ப்யூட்டர்லயே ஷேர் மார்கெட்ட நொடிக்கொருதடவை நாடி பார்த்துக்கிட்டிருந்த எல்லாருக்கும் கேக்கறமாதிரி கத்தி சொல்லுச்சி. "எம்.டி ய யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இன்னைக்கு விசிட்டர் யாரையும் அலோ பண்ணாதிங்க. நீங்களும் யாரும் என்னைக் கேக்காம உள்ளாற போகவேண்டாம்." அலுவலகமே அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தது.
ஒரு பத்து நிமிட இடைவெளியில, சேட்டுவோட பொஞ்சாதி டென்ஷனோட ஆபிசுக்கு வந்தாங்க. நெத்தியில 'சீரோ' வாட்சு பல்பு மாதிரி ஒரு பெரிய நெத்திச்சுட்டி டங்கு டங்குன்னு இடமும் வலமுமா ஆடிக்கிட்டே இருந்தது. அந்த அம்மாவோட உடம்பின் அகலமே குறைஞ்சது மூணு அடி இருக்கும். வெயிட்டு கேக்கவே வேணாம். நூறைத் தாண்டியே ஆகணும். இரண்டுக்கு இரண்டு சதுர அடி அகலத்துல இருக்கிற உப்பிப்போன வயித்தை சங்கோஜமில்லாம காட்டிக்கிட்டே வந்தாங்க. அவுங்க நடையில டென்ஷன் ஏகத்துக்கு இருந்தாலும் அவங்களால ஆமை மாதிரித்தான் நடக்க முடிஞ்சது! மஞ்சு சேஷாத்ரி, மிசர்ஸ் சொக்கலால் சேட்டை கைத்தாங்கலாய் பிடித்தபடி சேட்டின் அறைக்கு கூட்டிக்கொண்டு போச்சு.
சேட்டைப் பார்த்தவுடனே, மிசர்ஸ் சொக்கலால் ஹிந்தியில ஏதேதோ புலம்பியவாறு கண்ணீர் விட்டு, தலையைக் கோதிவிடுவதற்கு முடியில்லாததால, தடவிக் குடுத்தாங்க. மனைவியை பார்த்த பின்புதான் சேட்டுக்கு கொஞ்சம் அசுவாசம் வந்தது. ஒரு பெரிய டம்ளர்ல இருந்த ஐஸ் வாட்டரை மொடக் மொடக்னு குடிச்சாரு.
"மஞ்சு, கொஞ்சம் வெளிய இரு..." என்று மிசர்ஸ் சொக்கலால் சொன்னதும் மஞ்சு, கொஞ்சமா கதவைத் திறந்து வெளியில வந்துடுச்சி.
அடுத்த ஒரு அஞ்சு நிமிடத்துல ஒரு உச்சிக்குடுமி ஐய்யர் உள்ளார போனார். சேட்டம்மா வரும்போதே டாக்டருக்கு போன் பண்ணுச்சோ இல்லையோ ஐயருக்கு போன் பண்ணி இருக்குபோல! ஃபேமிலி டாக்டர் மாதிரி, ஃபேமிலி ஐயர்.
மஞ்சு கொஞ்சமாக் கதவத் தொறந்து வழிவிட்டதால, ஐயரால உள்ளே நுழைய முடியல. ஐயரின் உடம்பு சேட்டம்மாவின் உடம்பை விட மூணு அங்குலம்தான் கம்மி. அதனால மஞ்சு அறைக் கதவை 'பாணா'வா தொறந்தப்புறம் தான் ஐயரால உள்ளார போக முடிஞ்சது. அப்படி கதவை விரித்துத் திறந்தப்போ, அலுவலகத்துல இருந்த அத்தனை பேராலும் சேட்டையும் சேட்டம்மாவையும் பாக்க முடிஞ்சது. பாவம், ரொம்ப சோகத்துலதான் இருந்தாங்க. சேட்டுவின் தலைக்குப் பின்னால, பெரிய கோல்டு கலர் பிரேமுக்குள்ளாற, சீரியல் லைட்டு, பட்டை நாமத்தோட ஜொலித்துக்கொண்டிருந்த ஏழுமலையான் கூட, இங்கேருந்து பாக்கும்போது, சற்றே முகம் வாடினாப்புலதான் தெரிஞ்சாரு.
உள்ளே நுழைஞ்ச ஐயர், எடுத்தவுடனே சொக்கலால் சேட்டுகிட்ட சேதிய சொன்னாரு. "நான் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கேன். திருப்பதியானுக்கு வைர மாலை நேர்த்திக் கடன் ஒண்ணு பெண்டிங்ல இருக்குன்னு. நீங்க யாரும் அதை காதுல போட்டுக்கலை. அதனாலதான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. ஒரு வைரமாலை செய்ஞ்சு ரெண்டு நாள்ள திருப்பதியானுக்கு சாத்திடணும். இதுதான் பரிகாரம். அப்புறம் எல்லாம் சரியாகிடும் பாருங்கோ. என்ன, ஒரு அறுபது லட்சம் ஆகப்போகுது. செலவோட செலவா இதையும் செஞ்சுடுங்க. மிட்டாலால் சேட்டைக்கூட போன வருஷம் இந்த சாங்கியத்தை செய்யச்சொன்னேன். இப்ப அவருக்கு எல்லாம் நல்லபடியா நடந்துண்டிருக்கு. க்ஷேமமாய் இருக்கார். ஏழுமலையானோட பொல்லாப்பு நமக்கு எதுக்கு?" என்று கூறியவாறு, பையிலிருந்து கொஞ்சம் துளசியும் ஏதோ பிரசாதமும் கொடுத்தார். சேட்டு நெத்தியிலயும் சேட்டம்மா நெத்தியிலயும் ஐயரே பெர்சனலா விபூதி ஈஷி விட்டார். "இப்ப நோக்கு உடம்பு பரவாயில்லையா? உடம்பப் பார்த்துண்றுங்கோ."
சரின்னு இரண்டுபேரும் தலையாட்டினாங்க. "சரி, நான் கெளம்பறேன்," என்று சொல்லி, "நாராயணம், சதுர்ப்புஜம், சசிவர்ணம்," என்று ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டே கிளம்பிப் போய்ட்டாரு. ஒரு அரைமணி நேரம் கழிச்சி சேட்டம்மாவும் கிளம்பினாங்க. போகும்போது மஞ்சுகிட்ட சொன்னாங்க.
"மஞ்சுஜி, அறுபத் மூண் லட்சம் செக் போட் சேட்டுகிட்ட 'கையேய்த்து' வாங்கி, 'அக்காராம் அண்டு துக்காராம் ஜுவல்லர்ஸ்க்கு' உட்னே அன்ப்பிடு. மத்ததை மே பாத்கர்த்தியும்," என்று உத்தரவு போட்டுவிட்டு, நடக்க முடியாமல், அடிப் பிரதர்ஷனம் மாதிரி, பொடிப் பொடி நடையாய் நடந்து, லிஃப்டுக்குள் தன்னை நுழைச்சிக்கிட்டாங்க.
மஞ்சுவின் பளபள முகம் கூட சோகத்தால அப்பளம் மாதிரி கோணல் மாணலாக் கிடந்துச்சு. பாக்கவே சகிக்கல. 'க்ர்ர்ர்ர்க்' அப்படீண்ணு, காலிங் பெல் அடிக்கவும் மஞ்சு, கொஞ்சமாக் கதவத் துறந்து உள்ளார போச்சி.
சேட்டு சொன்னார். "மஞ்சு. எப்படியாகிப்போச்சு பார்த்தியா, ஏன் எனக்கு மட்டும் இந்த ஒரு மாசமா இப்படி ஆகுது..." கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தாரு. பிறகு சேட்டு சொன்னாரு. "எனக்கு ரெண்டு நாள் ரெஸ்டு வேணும். கம்ப்ளீட் ரெஸ்ட். அதுவும் அமைதியான இடத்துல. நான் மட்டும் போறேன், வேற யாரும் வேண்டாம். இப்பவே கிளம்பறேன்.. அமைதியான இடமாப் பாத்து ரூம் புக் பண்ணிடு. நான் இப்பவே கிளம்பியாகணும்," என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.
மஞ்சு வெளியில் வந்து, தனது கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தாள். சேட்டுவின் விருப்பப்படியே, ஒரு இடத்தை கம்ப்யுட்டரில் வலைவீசி, தேடு தேடு என்று தேடிப் பிடித்த மஞ்சு, சேட்டுவின் பேர் சொல்லி இரண்டு நாளைக்கு பதிவு செய்துவிட்டு, சேட்டுவிடம் போய் சொல்லிடுச்சி.
டிரைவர் ஆறுமுகம் சும்மா ஏரோப்பிளான் பைலட் கணக்கா, வெள்ளைச் சொக்காயும், வெள்ளைப் பேண்டும், வெள்ளைத் தொப்பியும், பளபள ஷூவுமா, செமத்தியான கெட்டப்புல இருந்தான். ஆறுமுகம் ஒருத்தனின் 'கெத்தே' போதும், சொக்கலால் சேட்டுவின் கவுரவத்தை உலகம்பூரா எடுத்துச் சொல்ல. பின்னே? பென்சு கார் டிரைவராச்சே?!
ஹேஹேய்... அந்த பென்சு கார் டிரைவர் நாந்தான் சார். நானேதான். எல்லாத்தையும், எனுக்குன்னு போட்டு வச்சிருந்த ஸ்டூல் மேல குத்துக்கால் போட்டு உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தது நாந்தான்... ஆறுமுகம். டிரைவர் ஆறுமுகம்!
கொஞ்ச நேரத்தில், வெள்ளை நிற பென்சு காரும், சேட்டுவும் நானும் கிளம்பிப்போனோம். சேட்டுக்கு கொண்டாட்டமோ இல்லியோ, எனக்கு கொண்டாட்டந்தான்!! ஏன்னா இந்த மாதிரி நிறைய இடத்துக்கு சேட்டொடவோ இல்லைன்னா அவுங்க பேமிலியோடவோ அடிக்கடி போய்ட்டு வருவேன். என்னோட ட்ரைவிங்னா சேட்டுக்கு ரொம்பப் பிடிக்கும்.
கடற்கரைச்சாலை. குளுகுளு காற்றை பென்சு கார் அனுபவிக்க, காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு, ஏசியில் சேட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, தூங்கித் தூங்கி விழுந்தார். ஈ.சி.ஆர் ரோடு, பென்சு காரு... அடேய் 'எட்டங்கிளாஸ் ஃபெயிலு' ஆறுமுகம்....! போ... போ, போய்ட்டே இரு. எனது இரண்டு மணி நேர சுகமான பயணத்தில், மஞ்சு சொன்ன இருப்பிடம் வந்துச்சி.
கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு,"சேட்ஜி, சேட்ஜி," என்று நான் என் சுண்டு விரல் நகத்தினால் சேட்ஜியின் சொட்டையில் பட்டும் படாமலும் சுரண்டினேன். கனாக்கண்டு எழுந்தமாதிரி, சொக்கலால் சடக்கென்று தலையை நிமிர்த்திப் பார்த்தார். பின்பு கீழே இறங்கினார். அதற்குள் ஒரு பெண் பூச்செண்டு கொண்டுவந்து சேட்டின் கையில் கொடுத்து, "வெல்கம் டு வில்லேஜ் ரிசார்ட், மிஸ்டர். சொக்கலால். எஞ்சாய் யுவர் ஹாலிடேய்ஸ்.." என்று ரெடிமேடான சிரிப்பு ஒன்றைச் சிரிச்சி வெச்சுது.
ஒரு அட்டெண்டர் வந்து காரின் முன்பக்கம் அமர்ந்துகொண்டார். "டிரைவர், வண்டியை எடுங்க. இங்கிருந்து பீச்சை ஒட்டினாப்புல ஒரு அரை கிலோமீட்டர் போகணும். அங்கதான் உங்க ஐயாவுக்கு புக் செய்த 'மட் ஹவுஸ்' இருக்கு என்று சொன்னார். சேட்டு திரும்பவும் காருக்குள் உட்கார, கார் மெல்ல நகர்ந்தது. அந்த ரிசார்ட்டுக்குள்ள இங்க ஒண்ணும் அங்க ஒண்ணுமா, தொலைவு தொலைவா, விதம் விதமா வீடுங்க இருந்துச்சி. நிறைய வெளி நாட்டு ஆணுங்களும் பொண்ணுங்களும் அவுங்க ஒடம்ப வெயிலில்ல காயப்போட்டுக்கிடிருந்தாங்க. அழகழகான தோட்டங்களுக்கு நடுவே மண்பாதை வளைஞ்சி வளைஞ்சி பென்சுக்கு வழிகாட்டிக்கொண்டே வந்துச்சி. எனக்கு, நான் ஏதோ சொர்கத்திலிருப்பதுபோல ஒரு ஃபீலிங்க் வந்தது. சிறிது நேரத்தில் அட்டெண்டர் வண்டியை நிப்பாடினாரு.
"வெல்கம் டு ஹெவன் ரிசார்ட்ஸ். திஸ் இஸ் யுவர் மட் ஹவுஸ்." என்று பணிவுடன் சொல்லிவிட்டு, கார் கதவைத் திறந்தாரு. சுற்றிலும் மூங்கில் பத்தையால வேயப்பட்ட வேலி. வேலிக்கு உள்ளார போகிற இடத்துல ஒரு வாச்மேன் இருந்தாரு. அவரு தங்கிக்க ஒரு சிறிய காங்கிரீட் கட்டிடம். அதுக்குப் பக்கத்துல கார் டிரைவர் தக்கிக்க ஒரு ரூம். டிரைவர் ரூம்ல, டிவி, ப்ரிஜ்ஜி எல்லாம் இருந்துச்சி. காரை நிப்பாட்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டு. காரை அங்க நிப்பாட்டிட்டு, அட்டெண்டர் எங்களை அந்த குடிசை நோக்கி கூட்டிக்கிட்டுப்போனார்.
இப்போ புரியுது, 'மட் ஹவுஸ்' அப்படீன்னா என்னன்னு. நட்ட நடுவுல ஒரு மண் குடிசை. கோரையால வேய்ஞ்ச கூரை. ரொம்பவும் மக்கிப்போயிருந்தது. குடிசைய வட்டவடிவில் களிமண்ணால கட்டியிருந்தாங்க. மூங்கிதட்டிதான் அதுக்கு கதவு. ரெண்டு குட்டி சைஸ் ஜன்னலுக்கு அரிசி கோணிப் பைய தச்சி, சீலையா தொங்க விட்டுருந்தாங்க. ஒரு பழைய மர நாக்காலியும் ஒரு மேசையும், அந்த மேசைமேல ஒரு லாந்தர் விளக்கும், ஒரு இன்டர்காமும் இருந்துச்சி. குடிசைக்குள்ளாற ஒரு நார் கட்டில். நல்லவேளையா அதுமேல மெத்துன்னு ஒரு மெத்தயும் தலவாணியும். போத்திக்க ஒரு கம்பிளி. கரண்டு, டிவி, ப்ரிஜ்ஜி, அடுப்பு எதுவும் காணும். குடிசைக்கு பின்னால சுத்தி பனை ஓலை கட்டி ஒரு சிறிய பாத்ரூம் டாய்லெட்டு.
குடிசையச் சுத்தி ஏகாந்தமா ஒரே பூந்தோட்டம், புல்வெளி, வாழ மரம், தென்ன மரம், பன மரம் அப்படீன்னு நெறைய இருந்துச்சி. நடு நடுவுல ஒத்தையடிப் பாதை ஒண்ணு வளைஞ்சு வளைஞ்சு சுத்தி வந்துது. பாக்கறதுக்கு அழகாத்தான் இருந்துது. ஆனா கரண்டு இல்லாம எப்புடி? நம்ம சேட்டுதான் வித்தியாசமா விரும்புற ஆளாச்சே.
தொபுகடீர்னு சேட்டு கட்டில்மேல உகார்ந்தாரு. அவரை விட்டுவிட்டு நாங்க வெளியில வந்துட்டோம். நான் காருக்குப் பக்கதிலிருந்த என் ரூமுக்கு போனேன். நல்லா வசதியா இருந்துச்சி. பேச்சுத்துணைக்கு வாச்மேன் இருந்தாரு.
"வாச்மேன் அண்ணே, என்ன கொடுமை பாத்தீங்களா? எவ்ளோ பெரிய பணக்காரன் இந்த சேட்டு, இந்த மண்ணு குடிசைல குந்திக்க ஆசப்படறான். என்னத்தச் சொல்ல?" என்று சலிச்சிக்கிட்டேன் நான்.
"ஒரு ராத் தங்க இருபதாயிரம் தம்பி. நம்புவியா? அது மட்டுமில்ல. இந்த குடிசைய புக் பண்ணி தங்கறவுங்களுக்கு எல்லாமே கிராமத்து டைப் சமையல், சாப்பாடு. பின்னால இருக்கிற சோலார் வாட்டர் ஹீட்டர் வழியா சுடுதண்ணி, பாத்ரூம்ல இருக்கிற பித்தள அண்டாவுக்கு வந்துடும். மொண்டு மொண்டு ஊத்தி குளிக்கணும். இந்த மாதிரி வீடுங்களுக்கு பேரு 'எக்கோ ஸ்டைலு ரிசார்ட்டு.' ஏதோ இயற்கை அது இது அப்படீன்றாங்க. ங்கொய்யால, ஒண்ணுமே இல்லாததுக்கு ரேட்டு போட்டு தீட்டிருவானுவ. ஃபைவ் ஸ்டார் ஓட்டலாச்சே!" வாட்ச்மேன் விவரம் சொன்னாரு.
"சாப்பாட்டு மெனுவை கேட்டின்னா, கெக்கேபிக்கேன்னு சிரிப்ப. காலம்பர சுக்கு காப்பி. அப்புறம் இட்டிலி, ஆப்பம். பதினோரு மணிக்கு ஒரு ஜோடுதலை நெறைய கம்பங்கூழு. மதியானம், கேழ்வரகு களி, கொஞ்சம் சோறு, மொச்கக்கொட்டை போட்ட கருவாட்டுக் குழம்பு. சாயுங்காலம் கொழுக்கட்டையும், சுக்குக் காப்பியும். ராத்திரிக்கு நாட்டுக்கோழி கறிக்குழம்பு. ஆனா செம டேஸ்ட்டா இருக்கும். எல்லாத்தையும் ஒரு காரைக்குடி ஆச்சிதான் செய்யுது, அதுக்கு சம்பளம் நாப்பதாயிரம் ரூவா."
எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. சிரிப்பும் தாங்கிக்க முடியலை.
"அட தம்பீ, இன்னும் இருக்கு கேளு... நல்லெண்ணையை தும்பைப்பூ போட்டு காய்ச்சி எடுத்துக்கிட்டு, ஒரு கரடு முரடான ஆளு வந்து மசாஜ் செய்ஞ்சி விடுவான். சும்மா, செத்த பொணத்த கொளுத்தும்போது, வெட்டியான் ஓங்கி ஓங்கி அடிப்பாம்பாரு, அதுமாதிரி சொத்து பொத்துன்னு மொத்தி எடுத்துடுவான். இதுக்கு பேருதாம்பா ஸ்பா." என்று சிரிப்பை அடக்க முடியாம சொல்லி முடிச்சாரு.
"வாச்மேன் அண்ணே, திருத்தணி பக்கத்துல மலைப்பாக்கம் அப்படீன்ற ஊருல எங்க தாத்தா இருக்காரு. எவ்வளவு கூப்பிட்டும் பட்டணத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. இங்க பாக்குறீங்க பாருங்க... இதே கெட்டப்புலதான் எங்க தாத்தா குடிசைபோட்டு, ஆடு மேய்ச்சி வாழ்ந்துகிட்டிருக்காரு. அதே கூழு, களி, சோறுதான் திங்கிறாரு. அது கஷ்டமான வாழ்க்கை. இங்க சொகுசான வாழ்க்கை. என்னணே உலகம் இது... த்தூ..." என்று சொல்லி நான் சலித்துக் கொண்டேன். "ஒரு இன்கிரிமெண்ட் போட்றதுக்கு பத்து தடவ யோசிப்பாண்ணே இந்த சேட்டு...!."
ஆடு, கோழி, மீனு, நண்டுன்னு என்னோட மெனு ஐட்டங்க ரெண்டு நாளா சும்மா ஜமாய்ச்சுது. நால்லா சாப்பிட வேண்டியது. சுத்திப்பாக்கவேண்டியது, கடல்ல குளிக்க வேண்டியது, தூங்க வேண்டியதுன்னு, போதாக்குறைக்கு வாச்சுமேன் அண்ணனின் சளைக்காத பேச்சு வேற. எனக்கு ரெண்டு நாள் போனதே தெரியலை.
ரெண்டாம் நாள் திரும்பிப் போக நானும் சேட்டுவும் தயாரானோம். என் கையில் கிரெடிட் கார்டு கொடுத்து பில்லை செட்டில் பண்ணச் சொல்லி இருந்தார். பில்லைப் படித்துக்கொண்டே மெயின் கேட்டில் இருக்கும் ரிசப்ஷன் ஆபீசுக்கு போனேன். நாப்பத்தி எட்டாயிரத்துச் சில்லரைக்கு பில். அட தேவுடா, ஒரு கப் கம்பங்கூழ் நானூத்து அம்பது ரூபாய். சுக்குக் காப்பி நூத்தி எண்பது. கொழுக்கட்டை அறுனூத்திப் பத்து. கறிச் சாப்பாடு ஆயிரத்து சொச்சம். நல்லெண்ணைக் குளியலுக்கு ஏழாயிரத்து நானூறு. பிளஸ் டேக்ஸ். எனக்கு பெருமூச்சு வந்தது.
அடேய் ஏழுமலையானே, ஏண்டா இந்த வித்தியாசம்?
சேட்டு காரில் ஏறி உட்கார்ந்து இருந்தாரு. "ஆறுமுகம்... ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா. நல்லா ரிலாக்ஸ் பண்ணினேன். நாம கட்டின பில்லுக்கு இது ரொம்ப வொர்த்." என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். "நீ என்னடா டல்லா இருக்க? நாளைக்கும் தயாரா இரு ஆறுமுகம். அக்காராம் அண்டு துக்காராம்ல இருந்து போன் வந்துது. வைர மாலை ரெடியாயிடுத்தாம். திருப்பதி போகணும்."
"சரி சேட்டு." என்று அவரோட உற்சாகமான முகத்தப் பார்த்து, அவருக்கு செயற்கையாக சிரித்து பதில் சொன்னேன்.
வரும்போது எனக்கு இருந்த உற்சாகம், திரும்பிப் போகும்போது காணவில்லை!
இ.சி.ஆர். ரோடுல, பென்ஸ் கார் ஏனோ கொஞ்சம்கூட சத்தமே இல்லாம மௌனமா போய்கிட்டே இருந்துச்சி. அந்த மௌனம் என்னோட கனத்த மனசுக்கு சப்போர்ட் பண்ணினாப்புல இருந்துச்சு. என்னைப்போல, அதுவும் ஒரு இயந்திரம்தானே?!
4 comments:
பொறந்தா இப்படி ஒரு டிரைவரா பொறக்கணும்.
அட ஆமாங்க. விருகம்பாக்கத்துல ஒரு கிராமிய உணவகத்துல பழைய சோறு கிடைக்குது. விலை 45 ரூபான்னு நெனைக்கிறேன்.
"ஒரு இன்கிரிமெண்ட் போட்றதுக்கு பத்து தடவ யோசிப்பாண்ணே இந்த சேட்டுவின் பகுமானத்தை தோலுரித்துள்ளது
miga arumayaana pathivu... namakkum oru mounam varugirathu
Post a Comment