அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், பெட்டியில் கூட்டம் குறைவாகவே இருந்தது. பொதுவாக அனைவருக்கும் இருக்கை கிடைத்திருந்தது. பாதிப்பேரின் கழுத்துக்குமேல் செய்தித் தாட்கள் தொத்திக்கொண்டிருந்தன. செய்தித்தாளையும், அதை வாசித்துக்கொண்டிருந்தவர்கள் உடம்பையும் இணைத்துவைத்து 'கிராஃபிக்ஸ்' செய்து பார்த்தபோது, அவர்கள் ஏதோ வேற்றுகிரக வாசிகள் போலத் தெரிந்தார்கள்.
எங்கள் சன்னலோரத்து இருக்கையில் காற்று சிலுசிலுத்து உற்சாகம் கொடுத்தது. இரயில் நகரை விட்டு வெளியில் வந்துவிட்டதை பச்சைப் பசுங்கழனிகளும், நெற்கதிர் வாசனையும் தெரியப்படுத்தின.
இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், இருக்கைகளின் நடுவாந்திரத்தில் இருந்த நடைபாதை வழியாக தொந்தரவு செய்யும் பிச்சைக்காரர்கள், 'இன்றைக்கு ஒன்றும் தேராது' என்பதற்காக லீவு எடுத்துக்கொண்டார்கள் போலும். ஆயினும் கூவி விற்கும் வியாபாரிகள் வந்து போய்க்கொண்டுதான் இருந்தார்கள். விதவிதமான வியாபாரிகள் விதவிதமான கூவல்களில் கூவி விற்றார்கள். ஆனால் நிறைய கூவல்கள் 'அவர்கள் என்ன விற்கிறார்கள்' என்பதையே புரிந்துகொள்ள முடியாதபடிக்கு தடுமாற்றத்தைக் கொடுத்தன. விற்கப்படும் பொருளை நேரில் பார்த்தபின்புதான் அவர்கள் இன்னதை விற்கிறார்கள் என்பது புரிந்தது. ஒவ்வொரு கூவலிலும் ஏற்ற இறக்கங்களும், குரல் மாடுலேஷனும், இன்னும் சொல்லப்போனால், ஏதோ ஒரு விதத்தில் சிறிய இசைத் துணுக்கும்கூட அதில் கலந்து இருந்தன.
"நெய் பட்டேர் பிஸ்கீட்டேய்... சூடான நெய் பட்டேர் பிஸ்கீட்டேய்...."
"இஞ்சி மொர்றேப்பா, சளி பித்தம் கபம் குறைக்கும் இஞ்சி மொர்றேப்பா..."
"சம்சேய்ய்யா... சம்சே சம்சேய்ய்ய்யா..."
ஒரு வியாபாரி போன பின்பு, சொல்லி வைத்தார்போல இன்னொரு வியாபாரி வருவார்.
இப்போது தலையில் மூங்கிற்கூடை சுமந்த ஒரு பெண்.
"வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய்.... வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய்...."
உயர்ந்த கீச்சுக்குரலில் ஒரு பெண் வெள்ளரிப்பிஞ்சுகளை விற்றுக்கொண்டிருந்தாள். நேர்த்தியாய் நறுக்கி, நாலாய்ப் பிளக்கபட்ட வெள்ளை வெளேர் வெள்ளரியில் மிளகாய்த்தூள் தூவல் கலர் காம்பினேஷனை ரசிக்கத்தான் வேண்டும். என் வாயில் லேசாக எச்சில் ஊறியதை என்னால் உணர முடிந்தது.
"அப்பா, வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய் வாங்கிக் குடுப்பா, ப்ளீஸ் அப்பா..." என்று விக்கி கேட்டபோது, நாங்கள் உட்பட எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களும் கொல்லென்று சிரித்தனர்.
"டேய் விக்கி, அது வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய் இல்லடா... வெள்ளரிப் பிஞ்சு. எங்கே சொல்லு?"
"சரி, வெள்ளரிப் பிஞ்சு. வாங்கிக் குடுப்பா."
வால்மார்ட் வியாபார நுணுக்கக் கணக்காக, வெள்ளரித் தட்டுக் கூடையை விக்கியின் மூக்கு நுனியருகில் ஒட்டியபடியே நீட்டிப் பிடித்திருந்தாள் அந்த வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பெண். வேறு வழியில்லை. வாங்கிவிட வேண்டியதுதான்.
பத்து ரூபாய்க்கு, ஹிண்டுவின் கால் பக்க 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்' வண்ண விளம்பரத்தை மறைக்கும் அளவிற்கு, பேப்பரில் மடித்துக் கொடுத்துவிட்டு, அவள் குரலெடுத்துக் கூவிக்கொண்டே சென்றாள். "வெள்ளறேய்ய்ய்ய்ய்ய்ய்ப் பிஞ்சேய்...."
வைசாலி கேட்டாள். "அப்பா, தம்பி கேட்டா மட்டும் வாங்கித் தர்றிங்க. நான் கேட்டா கண்டுக்காம இருக்கீங்களே? போன ஸ்டேஷன்ல ஒருத்தர் வித்துக்கிட்டுவந்த அழகான ரப்பார் பேண்டை வாங்கிக்கொடுங்கன்னு கேட்டா, காது கேக்காதது மாதிரி அம்மாவப் பார்த்து, 'ரேஷன் கடையில கோதுமை போட்டானான்னு' கேக்கறிங்க? ஆம்பளைப் பசங்களுக்கு ஒரு நீதி, பொம்பளைப் பசங்களுக்கு ஒரு நீதியா?"
திரும்பவும் கொல்லென்ற சிரிப்பொலி அந்த பெட்டி முழுதும் கேட்டது.
மீண்டும் ஒரு வியாபாரியின் கணீரென்ற கட்டைக்குரல் பெட்டியின் கடைசீ முனையிலிருந்தே கேட்டது. அவன் கையில் ஒரு எவர்சில்வர் தூக்கு இருந்தது. ஆனால் என்ன விற்கிறான் என்று புரியவில்லை. ஆனால் வாசனை மூக்கைத் துளைத்தது. என் மூக்கின் கணிப்பு சரியாயிருக்குமானால், அங்கே விற்கப்படும் பொருள் என்பது, எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், பச்சைக் கருவேப்பிலை போட்டு தாளிக்கப்பட்ட கருப்பு மூக்குக் கடலை சுண்டலாகத்தான் இருக்கவேண்டும். கண்டிப்பாக அதன் மேலே கொத்துமல்லித் தழை தூவப்பட்டிருக்கவேண்டும். அருகில் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்.
"டைம் பாஸ், சூட்ட்ட்ட்ட்ட்டான சுண்டேய்ல்ஸ்... சூட்ட்ட்ட்ட்ட்டான மஸ்ஸ்ஸ்ஸாலா சுண்டேய்ல்ஸ்.... சுண்ட... சுண்டேய்ல்ஸ்..." இதோ விற்பவன் அருகில் வந்துவிட்டான். தூக்கை என் அருகில் கீழே இறக்கி வைத்துவிட்டு மீண்டும் ஒரு எட்டுக்கட்டைக் குரலில் கூவினான்.
"டைம் பாஸ், சூட்ட்ட்ட்ட்ட்டான சுண்டேய்ல்ஸ்... சூட்ட்ட்ட்ட்ட்டான மஸ்ஸ்ஸ்ஸாலா சுண்டேய்ல்ஸ்.... சுண்ட... சுண்டேய்ல்ஸ்..."
நான் தூக்குக்குள்ளே எட்டிப் பார்த்தவாறு, பார்வையால் சோதனை செய்தேன். நான் நினைத்ததுதான் சரி. அச்சு அசலாக, நான் நினைத்த அத்தனை பொருட்களின் கலப்பும், தாளிப்பும் அதில் இருந்தது. இதில் என்னையே நான் மெச்சிப் பாராட்டிக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று என்னவென்றால், அது வெள்ளைச் சுண்டலாக இல்லாமல், நான் கணித்தபடியே கருப்பு மூக்குக் கடலை சுண்டலாய் இருந்தது. வாங்கவேண்டும் போலிருந்தாலும், பக்கத்தில் அமர்ந்துகொண்டிருக்கிற பெண்டாட்டிக்கு பயந்துதான் ஆகவேண்டியிருந்தது. 'சின்னப்பசங்க மாதிரி, திங்கறதுக்கு எப்படி அலையுது பாரு...? கொலட்ராலை ஒடம்பு பூரா சேத்து வச்சிக்கிட்டு, எண்ணை வடியுற சுண்டல் கேக்குதா?' என்று பாட்டுப் பாடுவாள். தேவையா?!
அனேகம்பேர் வாங்கினார்கள். மார்கழி மாதத்துப் பெருமாள் கோவிலில் சுண்டலுக்காக கையேந்தி நிற்கும் நினைவைக் கொண்டுவந்தது அந்தச் சூழலும், வாசனையும். படிக்கப்பட்டுக்கொண்டிருந்த பேப்பர்களெல்லாம் அவசரமாக மடித்து வைக்கப்பட்டன. சூடான செய்திகளெல்லாம்கூட சூடான சுண்டலுக்கு முன்னால் எம்மாத்திரம்?! பெட்டியிலிருந்த முக்கால்வாசி வாய்கள் சுண்டலை மென்று அசைபோட்டுக்கொண்டிருந்தன.
சுண்டல் விற்பவனுக்கு பரம திருப்தி. அவனது சட்டை மேல் பாக்கெட்டில், பத்தும், இருபதும், ஐம்பதும், நூறுமாக, ஒழுங்காக மடித்து வைக்கப்படாத நோட்டுக்கள் அவசரகதியில் செருகிவைக்கப்பட்டு, கீழே விழுந்துவிடும்போல், துருத்திக்கொண்டிருந்தன. தூக்கைக் தூக்கிக்கொண்டு கிளம்பும் முன்னதாக, சற்றே நின்று, நிதானித்து, என்னையே ஒரு முறை முறைத்துப் பார்த்த்துக்கொண்டிருந்தான் அந்த சுண்டல் வியாபாரி.
எல்லோரும் வாங்கி மொசுக்கும்போது, குடும்ப சமேதமாய் சும்மா குந்தியிருந்து நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது, அவனுக்கு எரிச்சலூட்டியிருக்க வேண்டும். சுண்டல் தூக்கையே, விக்கியும் வைசாலியும் ஆசையோடு பார்த்துக்கொண்டேயிருக்க, நான் எனது பார்வையை சன்னல் பக்கமாகத் திருப்பிப் பார்த்து அவனைத் தவிர்த்துக்கொண்டேன்.
ஓரிரு நிமிடத் தவிர்த்தலுக்குப் பிறகு, திரும்பிப் பார்த்தால், அந்த சுண்டல்காரன் இன்னும்கூட என் முகத்தைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான். சடாரென என்னைப் பார்த்துக் கேட்டான்.
"நீ போண்டா மணிதானே?," என்று அவனுடைய வியாபர உச்சஸ்தாயிக் குரலிலேயே கேட்டான் அந்தப் படுபாவி.
அனைவரின் கவனமும் திசை திரும்பி, எங்களையே வெடுக்கெனத் திரும்பி வெறித்துப் பார்த்தார்கள். நிறைய பேர்களின் சுண்டல்-அசைபோடும் தாடை அசைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!
நான் தடுமாறினேன். "ஏய்... யார் நீ? யார்ரா நீ?"
"டேய், டபாய்க்காதே, நீ போண்டா மணிதானே?" அதே கரடிக்குரலில் உச்சஸ்தாயியில் திரும்பவும் கேட்டான்.
இந்தமுறை, பாதிக்கும் மேலான ரயில் பெட்டி எங்களையே திரும்பிப் பார்த்தது.
"என்னடா, பிரச்சினை பண்ணுறியா, யார்ரா நீ?"
"நான் கேட்க்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீ போண்டா மணிதானே?" என்று, என் அனுமதி ஏதும் இல்லாமலேயே, இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த என்னை அவன் இடுப்பால் நெக்கித் தள்ளி என் பக்கத்தில் அமர்ந்து, மூன்று பேராய் அமர்ந்திருந்த எங்களோடு, நான்காவது ஆளாய் தன்னை அந்த வரிசையில் செருகிக்கொண்டான்.
"இப்ப சொல்லு. நீ போண்டா மணிதானே?"
எல்லோரும் என் முகத்தையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதை என் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டிருந்தது.
நான் குரலைத் தாழ்த்திச் சொன்னேன். "ஆமாம், நான் மணிதான். மணிவண்ணன். நீ யாரு?"
"ஹாஹ்ஹாஹ்ஹா..., ஹைய்யோ ஹையோ, எப்படிக் கண்டுபிடிச்சோம்ல?! டேய் போண்டா, எப்படிடா இருக்க?" என்று என் தோளைப் பிடித்திழுத்து, குனியவைத்து, முதுகில் 'படார்' என்று ஒரு அடி போட்டான். "எவ்வளவு வருஷமானாலும், உன் நீட்டுக் கிளி மூக்கு காட்டிக் குடுத்துடுமேடா."
என் மனைவியும், மகனும், மகளும் சற்றே கலவரமானார்கள். இங்கே ஏதோ விபரீதம் நடக்கப்போவதாய் உணர்ந்தார்கள். அந்த சுண்டல்காரன் ஒரு அரைக்கிறுக்கனோ என்று சந்தேகப் பட்டார்கள். நான்கூட, ஒரு நிதானத்துக்கு வருவதற்குள் அவன் சொன்னான்.
"டேய் போண்டா, நாந்தாண்டா பாம்பாட்டி... பாம்பாட்டி பட்டாபிடா!" என்று ஆச்சர்யங்களைக் கலந்து, என் முதுகில் இன்னொரு அடி போட்டான்.
எனக்குக்கூட ஆச்சர்யம் ஆச்சர்யமாகப் பிடுங்கிக்கொண்டு வந்தது. பாம்பாட்டி பட்டாபி. ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை என்னோடு குப்பை கொட்டியவன். அட்ப்பாவி, இவனா சுண்டல் விற்கிறான்? ஆச்சர்யங்கள் என் முகத்தின் வழியாய் அவனுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
"ம்.... இப்ப என்னைக் கண்டுபிடிச்சிருப்பியே? சும்மா நடிக்காதே. உன் மூஞ்சியே சொல்லுதே, நீ என்னை கண்டு பிடிச்சுட்டேன்னு. டேய் போண்டா மணி, எப்படிடா இருக்கே? நல்லா இருக்கியா? யாருடா இவுங்கள்ளாம்? இவுங்க உன் பொஞ்சாதியா? வணக்கம்மா... நானும் இவனும் ஒண்ணா படிச்சவனுங்க. இந்தக் குட்டிப் பையன் யாரு? உன் பையனா? டேய் டேய்... வாடா வா. இங்க வாடா செல்லம். பக்கத்துல வந்து உட்காந்துக்க. இந்தாடா ஐய்யா... எல்லாரும் சுண்டல் சாப்பிடுங்க..." என்று ஆளுக்கு ஒரு பொட்டலமாக பேப்பரில் மடித்து எங்கள் கையில் திணித்தான்.
"உன் பையனைப் பார்த்தா, உன்ன மூணாவது படிக்கும்போது பாத்தமாதிரியே இருக்குடா. டேய், எப்படிடா இருக்கே?" என்று என் தலையை கோதினான். என் தோளை இறுக்கிக் கட்டிக்கொண்டான். இப்போது அவன் குரல் தழுதழுத்து இருந்தது. கண்களின் அடிவாரத்தில் லேசான ஈரக்கசிவை என்னால் பார்க்க முடிந்தது.
"அடக் கடவுளே..., எப்படியெல்லாம் இருந்தோம்டா. எங்க எங்கியோ பிரிஞ்சிப்போய்ட்டோம். உன்னைப் பார்த்ததுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமாடா? ஒரே தட்டுல உண்டு, ஒறங்கி, விளையாடி, அடிச்சி, கடிச்சி...." கோர்த்துக்கொண்டிருந்த கண்ணீர் கரை உடைந்தது. அவன் திடுமென ஒரு சிறு பிள்ளை போல குலுங்கி அழுதான்.
இருந்தாலும் அவனைத் தேற்றிவிட என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. காரணங்கள் நிறைய இருந்தன. முதலில் அவன் என்னை இத்தனை பேர்களுக்கு மத்தியில், அதுவும் மனைவி மக்களுக்கு மத்தியில், 'போண்டா மணி' என்று அழைத்தது. அது எனக்கு மெத்த அவமானத்தைக் கொடுத்தது. என் முகம் இப்போது இஞ்சி தின்ற குரங்கு போல ஆகியிருந்தது. இரண்டாவது காரணம் அவன் சுண்டல் விற்கிறான். அநாயாசமாகக் கேள்விகள் கேட்டு, முதுகில் அடித்து.... நட்புதான். அதற்காகப் பிராண்டுவானா? ஒரு நாகரிகம் இல்லை?
பட்டாபியே பேச்சை என் மனைவியிடம் தொடர்ந்தான். மற்றவர்களெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள்.
"இங்க பாருங்கம்மா. உங்க வீட்டுக்காரரும் நானும் எட்டாவது வரையிலும் செவ்வாய்ப்பேட்டை பள்ளிகோடத்துல ஒண்ணாப் படிச்சவனுங்க. ரெண்டு பேரும் படிப்புல சுமார் ரகம்தான். படிப்பு முடிஞ்சி பிரிஞ்சிப் போனவங்க, இப்பத்தான் ஒருதரை ஒருத்தர் பார்த்துக்கறோம். சந்தோஷமா இருக்கும்மா."
வைசாலி கேட்டாள். "ஆனா அப்பா சொல்லியிருக்காரே, பள்ளிக்கூடத்திலயே அவர்தான் எப்பவும் ஃபஸ்ட்டு வருவாருன்னு?"
"அப்படியா?" என்று திரும்பவும் என் முதுகில் ஒரு அரை கொடுத்தான்.
"மணிக்கு அப்பத்திலிருந்தே வாயத் தொறந்தாப் பொய்யாத்தான் கொட்டுவான். பேனை பெருமாளாக்கி, அண்ட ஆகாசத்துக்கும் புருடா வுடுவான் பாருங்க. அப்படியே மரத்துல முட்டிக்கிட்டு சாகலாம்னு இருக்கும். இன்னும் திருந்தலையாடா நீ. கொழந்தைகளை எப்படி ஏமாத்தி இருக்கான் பாரு?" என்று அவன் சொல்லி முடிக்கவும், பெட்டி சிரிப்பலையால் அதிர்ந்தது.
"அப்பாவுக்கு போண்டா மணின்னு ஏன் பேர் வந்துது?" என்று விக்கி விலாவரி கேட்கவும், எனக்கு தரை இரண்டாகப் பிளந்து, நான் தண்டவாளங்களுக்கிடையிலே விழுந்துவிடுவதுபோல உணர்ந்தேன். போச்சு. என் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்போகிறது.
"அதுவா குட்டிப் பையா? உங்க அப்பனுக்கு எப்பவுமே மோப்ப சக்தி ஜாஸ்தி. பத்து கிலோ மீட்டருக்கு அந்தண்டகூட யாராவது போண்டா வடை சுட்டாலும், கருக்கா கண்டுபிடிச்சி இன்னார் வீட்டுல இது இது சுடுறாங்கன்னு கச்சிதமா சொல்லிடுவான். அதுமட்டுமில்லாம போண்டான்னா, அந்தக் காலத்துல இவன் உயிர விட்டுடுவான். ஒரு தடவ டீக்கடையில கைய வுட்டு, போண்டா திருடிட்டான். அன்னையிலிருந்து இவுரு பேரு போண்டா மணி." என்று சொல்லியவாறு தன் புஜங்களால் என்னை இடித்து நக்கலடித்தான்.
"ஹே ஹேய்.... எங்கப்பா பேரு போண்டா மணி, எங்கப்பா பேரு போண்டா மணி," என்று உரக்கக் கூவியவாறு, விக்கியும் வைசாலியும் ஒருவர் கையை ஒருவர் தலைக்குமேலே தூக்கித் தட்டிக்கொண்டு, உற்சாகமடைந்தார்கள். திரும்பவும் சிரிப்பொலியால் பெட்டி அதிர்ந்தது.
அந்தக் காற்றோட்டத்திலும், என் வழுக்கை மண்டையிலிருந்து வியர்வை கசியத் துவங்கியது. நான் அதிகமான அளவில் அவமானப்படுத்தப் படுவதாக உணர்ந்தேன். கோபமும் வெட்கமும் என் முகத்தில் கலந்துகிடந்தது. இந்த பட்டாபிக் காட்டான் இங்கிருந்து எப்படா ஒழிவான் என்றிருந்தது.
"எம் பேரு என்ன தெரியுமா? பாம்பாட்டி பட்டாபி. ஏப்பிடி இந்தப் பேரு வந்தது தெரியுமா? ஆறாவது படிக்கும்போது, மரத்தடியில பூகோள வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டிருந்தாரு. ஒரு பக்கம் பொண்ணுங்க, ஒரு பக்கம் பையனுங்க... சப்பளாங்கோல் போட்டமேனிக்கு தரையில உட்கார்ந்திருந்தோம். ஹி ஹி, நானு, உங்க அப்பனெல்லாம் எப்பவும்போல கடைசி வரிசை. எங்களுக்கு பின்னால ஈச்சம் புதரு. பாடம் நடந்துகிட்டே இருந்துச்சா... அந்தப் பாடத்தைக் கேக்கறதுகோ என்னாத்துக்கோ, வாயப் பொளந்தமேனிக்கு இருந்த என் காக்கி டவுசர் சைடு பாக்கெட்டுக்குள்ளாற ஒரு குட்டியூண்டு நல்லப்பாம்பு நைசா பூந்து சுருண்டுக்கிச்சி. நானு தற்செயலா என் தொடைமேல கைய வெச்சா, பாம்பு இப்புடியும் அப்புடியுமா நெளியுது. பயத்துல நான் உட்கார்ந்தமேனிக்கு மூத்திரம் போய்ட்டேன். பே பேன்னு நானு கத்தினப்புறம், யாரோ சடக்குன்னு டவுசருல கையவுட்டு பாம்பைப்புடிச்சி தூக்கி தூற அடிச்சாங்க. அன்னையிலேருந்து எம்பேரு பாம்பாட்டி."
எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். என் மனைவியோ தரையில் விழுந்து புரளாத குறையாக எக்காளமிட்டு சிரித்துக்கொண்டிருந்தாள். அவளைக் கரம் பிடித்த நாளிலிருந்து, இதுநாள் வரை அவள் அப்படிச் சிரித்துப் பார்த்ததேயில்லை. எனக்கும்கூட ஒரு சிறு புன்னகை என் முகத்தோடு ஒட்டிக்கொண்டது.
ஒரேயொரு நிமிட இடைவேளை கொடுத்து, இந்தப் பாதகப் படுபாவி, இன்னொரு விஷயத்தைப் படாரென்று போட்டு உடைத்தான்.
"டேய் மணி, நீ எட்டாவது படிக்கும்போது, உன்ன செருப்பாலயே வைச்சு விளாசினாளே ஒரு சிறுக்கி, அதாண்டா அணில் பல்லு அலமேலு... அவ அரக்கோணத்துல வாக்கப்பட்டு, ஆத்தமாட்டாம, ஆறு பெத்துவச்சிருக்காடா."
மீண்டும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நானோ புழு நெளிவதுபோல நெளிந்துகொண்டிருந்தேன்.
படுபாவி. எனக்கென்றே இந்த எமகண்டம் ரயிலேறிவந்து, என் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டிருக்கிறது. நான் ஓரக்கண்ணால் என் மனைவியை பார்த்தேன். ஒரு சிறு குழந்தைபோன்று, இதற்கும் கைதட்டி ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.
"உங்களோட பேரு என்ன?" என்று பட்டாபி என் குழந்தைகளைப் பார்த்துக் கேட்டான்.
"இவ வைசாலி. எட்டாவது படிக்கிறாள். இவன் விக்கி. மூணாவது படிக்கிறான்." என்றாள் என் மனவி.
"என்னம்மா பேரு இது... வைசாலி? அவளுக்கு என்ன வைசா ஆகிப்போச்சி? ஏதோ நோயாளின்னு சொல்றாப்புல என் காதுல விழுகுது. உன் பேரு என்ன விக்கியா? ஏண்டா மணி... அவனுக்கு கொக்கின்னு பேர் வைக்கறதுதானே? விக்கியாம் விக்கி. விக்கி, எப்பல்லாம்டா உனக்கு விக்கும்?" என்று கிண்டலடித்து, நிறுத்தி, பின்பு சொன்னான். "இதே போண்டா மணிதான் தமிழ் தமிழ்னு அடிச்சிக்குவான். தமிழ்தான் உயிர் அப்படீம்பான். தனக்குப் பிறக்கப்போற குழந்தைகளுக்கு சுத்த நெய்யிலே செய்ஞ்ச தமிழ் பேருதான் வைப்பேன்னு பீத்திக்கிடுவான். இப்போ இவனே மாறிட்டான். வட மொழியில பேரு வச்சிருக்கான். ஆனா நான் அப்படி இல்லை. என் நண்பன் சொன்னன் அப்படீன்ற ஒரே காரணத்துக்காக என் குழந்தைங்க அத்தனை பேருக்கும் தமிழ் பேருதான். பெரியவ தமிழ்ச் செல்வி. வயசுக்கு வந்துட்டா. அப்புறம் தமிழரசன். எட்டாவது படிக்கிறான். பிறகு தமிழ் மணி... ஆமாண்டா, உன் ஞாபகமாத்தான் வச்சிருக்கேன். அஞ்சாவது படிக்கிறான். அதுக்கப்புறமா கடைக்குட்டி தமிழ் இசை. மூணாவது படிக்கிறா. அடேய் போண்டா, ஏண்டா நீ சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணா இருக்கு? எப்பத்தாண்டா மாறுவ?"
பெட்டிக்குள் உற்சாகம் கரைபுரண்டோடியது. என்னைத் தவிர்த்து அனைவருக்கும் சந்தோஷம் பொங்கிக் கொப்பளித்தது. இன்னும்கூட என் மனைவி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துக்கொண்டேயிருந்தாள். நிறைய பேர் இடைவேளைவிட்டு, நினைத்து நினைத்து சிரித்தார்கள்.
கடந்து சென்ற வரலாற்று உண்மைகளை சிரிப்பு வெடியாய்க் கொளுத்திப் போட்டுக்கொண்டிருந்த பட்டாபியின் முகம் இப்போது சற்றே வாட்டம் கண்டது.
"நீ சென்னையில எதோ லாரி டிரான்ஸ்போர்ட்டு கம்பெனியில குமாஸ்தாவா இருக்கிறேன்னு முண்டக்கண்ணு மாரிச்சாமி எப்பவோ சொன்னதா ஞாபகம். நல்ல வேளையா நீ தப்பிச்சடா மணி. நல்லா இருடா. நல்லபடியா கொழந்தைகளை வளர்த்து, படிக்க வச்சி பெரியாளாக்கு. ஊருப்பக்கமெல்லாம் வராத. அங்க ஒண்ணுமே இல்லை. எல்லாம் சுடுகாடாப் போடுச்சி. இப்பல்லாம் விவசாயத்துல ஒண்ணுமே தேறலை. பயிரு வெதைச்சா பத்துப் பைசா கெடைக்கமாட்டேங்குது. உரம் வெலை ஏறுது, வெதை வெலை ஏறுது. நல்லாத்தான் வெளையுது. ஆனா பத்துபைசா வீட்டுக்கு வரமாட்டேங்குது. அதான் எப்படின்னு புரியலை! பத்து வருஷமாப் பட்டுப் பட்டு, சீ போன்னு விவசாயத்தையே வுட்டுட்டேன். ஆனா வயிருன்னு ஒன்னு இருக்குதே? என்னை நம்பி எட்டு ஜீவன். அதான் இந்த ரயில் ரூட்டுல சுண்டல் விக்கறேன். ஏதோ, கைக்கும் வாய்க்கும் சரியா இருக்குடா. எந்தக் கடவுளும் எனக்கு கை குடுக்குறதில்லை. விவசாயின்னா தெய்வம்கூட கண்ணை மூடிக்கிடுது. நான் என் உழைப்பைத்தான் நம்பறேன்," என்று தன் சுண்டல் தூக்கைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே சொன்னான்.
"ஆனா விவசாயத்துல பட்ட கடன் அம்பதாயிரம்! குட்டிமேல குட்டியா போட்டு ஒரு லட்சத்துக்கு வந்து நிக்குது. தெனத்தன்னைக்கும் கடங்காரன் வீட்டண்டை வந்து நிக்கறான். அதை நெனைச்சாத்தான் எனக்கு பயமா இருக்குடா... ராவுல தூக்கமே வரமாட்டேங்குது," என்று குரல் நடுங்கி, தரையைப் பார்த்தவாறு தலையைக் கவிழ்த்துக்கொண்டான். எல்லோரும் அவனையே இறக்கத்தோடு பார்த்தார்கள். இருந்தாலும் அவனுக்கு ஆதரவாக, என் கையை நீட்டி அவன் முதுகைத் தடவிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.
நான், என் இடப்பக்கமாக இருந்த சட்டை மேல் ஜேபியை கைகளை வைத்து, மூடி மறைத்துக் கொண்டேன். அதில் இருந்த எட்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டு, பட்டாபியின் கண்ணை உறுத்தியிருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் தட்டியது!
இதோ நாங்கள் திருத்தணிக்குப்போய், நான்கு பேரும் மொட்டை அடித்து, முருகனுக்கு வேண்டிக்கொண்டபடி எட்டாயிரத்தை உண்டியலில் போட்டுவிடவேண்டும். வைசாலிக்குப் பிறகு ஆண்பிள்ளை வரம் வேண்ட, ஐந்து வருடம் இடைவெளியில் விக்கி பிறந்தான். அதனால் நாங்கள் திருத்தணி வருவாதாக வேண்டிக்கொண்டிருந்தோம். ஏதோ எங்கள் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி, ஆறு மாதமாய்ச் சேர்த்துப் பிடித்த பணம். இதிலிருந்து ஏதாவது கொஞ்சம் எடுத்து பட்டாபிக்கு தானம் செய்ய என் மனம் ஏனோ ஒத்துக்கொள்ளவில்லை. கடவுள் குற்றத்துக்கு நாங்கள் ஏன் பலியாகவேண்டும் என்பதுகூட காரணமாயிருக்கலாம்.
குனிந்திருந்த பட்டாபி மெல்ல நிமிர்ந்து எழுந்தான். அவன் சிறிது நேரம் அழுததற்கான அறிகுறியாக அவன் கண்களிரண்டும் சிவந்திருந்தன.
"சரிடா மணி... நான் கெளம்பறேன். அடுத்த ஸ்டேஷன் வருது. என் பொழப்பைப் பார்க்கணும்." என்று சொல்லியவாறே, பட்டாபியின் சட்டை ஜேபியில் செருகி வைக்கப்பட்டிருந்த அத்தனை நோட்டுக்களையும் ஒன்று விடாமல் ஒரே அள்ளாக அள்ளி எடுத்தான். அதை இரண்டு கைகளிலும் தோராயமாக இரு பங்காகப் பிரித்து, என் மகன் கைகளிலும், என் மகள் கைகளிலும் அழுத்தித் திணித்தான்.
அடுத்த நிறுத்தத்தில் நிற்பதற்காக, ரயில் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டது.
"கோபிச்சுக்காதீங்க செல்லக்குட்டிகளா... திடீர்னு பார்த்ததுல, உங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க முடியல. டேய் மணி, நீ இறங்கினவுடனே, இந்தக் கொழந்தைங்க சாப்பிடறதுக்கு, முட்டாயி, பன்னு, பிஸ்கோத்துன்னு வாங்கிக் கொடுடா. எல்லாருக்கும் போய்ட்டு வர்றேன். குட்டிப் பசங்களா... நல்லாப் படிக்கணும். நான் போய்ட்டு வரட்டுமா?" என்று சொன்னபடி தன் சுண்டல் தூக்கை தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்தான்.
"ஏய், ஏய் பட்டாபி. என்னதிது? காசு கொடுக்கிற பழக்கம்? ஹும்? இதெல்லாம் வேண்டாம். இந்தா திருப்பி எடுத்துக்க..." என்று நான் கத்திக்கொண்டிருக்க, அவன் பெட்டி வாசல் வழியாக இரயில் நின்றதும் இறங்கிவிட்டான்.
வெளியிலிருந்து சன்னலில் குனிந்து பார்த்தவாறு பட்டாபி உரக்கச் சொன்னான் :
"டேய், நீ எனக்கு காக்கா நீச்சல் கத்துக் குடுத்ததுக்கும், பீடி பிடிக்கக் கத்துக்கொடுத்ததுக்கும், எனக்காக, எட்டாங்கிளாஸ்ல எனக்கு எதிரியா இருந்த குண்டு பூசணி கொமாரசாமி பல்லு ரெண்டையும் ஒடைச்சதுக்கும், எனக்காக எதிர்வீட்டு ஈஸ்வரிக்கு ரிஸ்க்கு எடுத்து லவ்வு லெட்டர் கொடுத்ததுக்கும், ஈடாவுமாடா நான் உன் குழந்தைகளுக்கு குடுத்த காசு? சும்மா வச்சுக்கோடா," என்று சொல்லிக்கொண்டே, எதிரில் வந்து நின்ற ரயில் பெட்டிக்குள் தாவி ஏறிக்கொண்டான்.
ஆனால் ஏனோ, இதற்குமட்டும் பெட்டியில் அமர்ந்திருந்த யாரும் சிரிக்காமல் உம்மென்று மௌனமாகவேயிருந்தார்கள்
"டைம் பாஸ், சூட்ட்ட்ட்ட்ட்டான சுண்டேய்ல்ஸ்... சூட்ட்ட்ட்ட்ட்டான மஸ்ஸ்ஸ்ஸாலா சுண்டேய்ல்ஸ்.... சுண்ட... சுண்டேய்ல்ஸ்..." பட்டாபியின் கட்டைக்குரல், அந்த ஸ்டேஷன் முழுதும் எதிரொலித்தது.
குழந்தைகளின் கையிலிருந்த சுருண்டுபோன நோட்டுகளை வாங்கி, அடுக்கி, எண்ணிப் பார்த்தேன். இரண்டாயிரத்து நூறு ரூபாய் இருந்தது.
'ஊவ்வ்' என்று எதற்காகவோ ஒலியெழுப்பியவாறு எங்கள் இரயில் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
ஆனால் எங்கள் பெட்டிக்குள் மட்டும் அனைவருமே மௌனமாய்க் கிடந்தார்கள்!
11 comments:
அற்புதமான உணர்வுப்பூர்வமான சிறுகதை..
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
நட்சத்திர வாழ்த்துக்கள். பதிவுகளை படித்து பிறகு, பின்னூட்டமிடுகிறேன்.
சுண்டல்காரர் நெஞ்சை தொட்டுவிட்டார்
தலைப்பை பார்த்தவுடன் இந்த மாதிரி ஒரு சிறுகதை எதிர்பார்க்கவில்லை. அருமை. பாராட்டுக்கள்.
சில இடங்களில் நகைச்சுவையும் குறிப்பாக சுண்டலை தூரத்தில் புரிந்துக்கொள்வதையும் போண்டா மணியை விளக்கி இணைத்த விதமும் உண்மையிலேயே அலுவலகம் என்பதை மறந்து வாய்விட்டு சிரித்து விட்டேன்; சில வரிகளில் கடந்து செல்லமுடியாத படிக்கு ஒரு சோக இழையோடியதும்.... என்று மொத்தத்தில் கதை அருமையாக இருந்தது.
அருமையான பதிவு.
நட்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
வாழ்த்துகள்.
பகடியாக எழுதப்பட்ட கதை. நகைச்சுவையாக ஆரம்பித்து கண்ணில் ஈரத்தோடு முடிக்கப்ப்ட்டது.. இருப்பவருக்கே பயம். இல்லாதோருக்கு அச்சமில்லை நாளை பற்றியோ, கடவுள் பற்றியோ..
மக்களின் மொழியில்(சொல் வழக்கில்) கதை முழுவதும் எழுதியுள்ளீர்கள், வாழ்த்துகள், கதை தொடங்குவதிலிருந்து, முடிவது வரை எங்கும் ஒரு சிறு அயற்சி கூட வராமல் இருக்கை நுனியில் உட்கார வைத்து கதை சொல்லியுள்ளீர்கள்,இது கதையாக இருக்காது நீங்கள் நேரில் பார்த்த உண்மையாக இருக்கக்கூடும் என நினைக்கின்றேன்….
மனதை தொட்டு உறுத்தி ஆக்கிரமித்தது இக்கதையின் உனர்வு
என்னுடைய மாத இதழில் பிப்ரவரி 2012 வெளியீடிற்காக நான் இக்கதையை வெளியிடலாமா?.
இதழ் பெயர் தலைச்சோறு.
தாங்கள் சம்மதித்தால் என்னுடைய மின் முகவரிக்கு அனுப்பவும். suthanngl@gmail.com
அருமையிலும் அருமை..... பாராட்ட வார்த்தைகளே இல்லை
Post a Comment