பிறப்புக்குக் கையேந்தி
பிறந்தபின் பாலுக்குக் கையேந்தி
அரிசிக்கும் கையேந்தி
அன்றாடம் அதையவிக்க,
சிடுசிடுக்கும் விளக்கெறிய,
சீமெண்ணைக்குக் கையேந்தி
பருப்புக்கும் கையேந்தி
பாழ் இருப்புக்குங் கையேந்தி,
குடத்தை வரிசையிட்டு
குவியும் கும்பலுக்குள்
தவிக்கும் வாய்த்
தண்ணீருக்குக் கையேந்தி
அவசியங்களுக்குக் கையேந்தி
அவ்வபோது கிடைக்கும்
இலவசங்களுக்கும் கையேந்தி
எப்போதும் கையேந்தி ஏந்தி...
கோயிற்புகக் கையேந்தி
குவளைகளுக்கும் கையேந்தி
பள்ளி செல்லக் கையேந்தி,
பாழும் படிப்புக்குக் கையேந்தி,
ஆசிரியன் அடிக்கும் கையேந்தி
ஆதரவுக் கையேந்தி,
சாதிக்கும் கையேந்தி
சாமிக்கும் கையேந்தி
மதத்துக்கும் மண்டியிட்டு
மௌனமாய்க் கையேந்தி,
உரிமைக்குக் கையேந்தி
உண்மைக்கும் கையேந்தி
தேவைக்குக் கையேந்தி
தினந்தோறும் கையேந்தி ஏந்தி...
வயிற்றுக்காய் உழைக்க
வேலைக்குக் கையேந்தி
கூழைக் கும்பிட்டு
கூலிக்குக் கையேந்தி
விளைநிலத்தைத் திரும்பக்கேட்டு
விவசாயக் கையேந்தி,
பெண்ணுக்கு மணமுடிக்க
மாப்பிள்ளையிடம் கையேந்தி,
சீதனம் கொடுக்க
சரவணாவில் கையேந்தி
செய்கூலி சேதாரத்தை
சிந்தாமல் கையேந்தி
புத்தாடை வாங்கி
பண்டிகைக் கொண்டாட
தள்ளுபடிப் படியிலே
தவமிருந்து கையேந்தி...
மருந்துண்டே உயிர்வாழ
மருத்துவமனையில் கையேந்தி
செத்துச் சவமாக,
சவமடக்கக் கையேந்தி...
கையேந்தும் நாம் பாமரர்கள்.
கைகளிரண்டும் ஏந்திஏந்தி,
மரபணுவிலும்
மாற்றம் கண்டு
திருவோட்டு உருவத்தில்
திரிந்தே போயின.
***
அதியமானிடம் அவ்வையார்
கையேந்தத் தொடங்கி,
பன்னாட்டுக் கம்பெனிகளிடம்
கருணானிதி/மாறன் கையேதியது வரை
நாம் கையேந்திப் பரம்பரைகள்.
வெளி நாடு வாழ் இந்தியர்களிடமும்,
கோக்கு பெப்சிகளிடமும்,
ஜப்பானிய ஐரோப்பிய கம்பெனிகளிடமும்
அமெரிக்காவிடமும்
அண்ட சராசரமும்,
மன்மோகன் பிரணாப் வகையறாக்கள்
உலகளாவிய நிலையில்
கையேந்துவதால்
நாமனைவரும் கையேந்தும் இந்தியர்கள்.
***
எதற்குமே கையேந்தும் அரசியல் கொள்கை!
நிதிக்காக கையேந்தும் 'ஹாவர்டு' நிதி மந்திரிகள்!
ஓட்டுக்காக கையேந்தும் அரசியல்வாதிகள்!
உலகமே வேண்டிக் கையேந்தும் பண முதலைகள்!
இப்படிக் கையேந்தி ஏந்தியே
அவர்கள் கைகளும் கூட
திருஓட்டு உருவத்தின்
சின்னம் ஆகின; திரிந்து போயின.
***
எத்தனையோ இருந்தும்
இப்போது ஆட்சி வேண்டி
அடிமைக் கையேந்திகளாகிய நம்மிடமே
வந்து கையேந்தும் ஆண்டைகள்,
அரசியல்வாதிகள்,
நடிகர்கள், நிலப்பிரபுக்கள்.
அவர்கள் நிலை கேவலமாக இருப்பதால்
"சீச்சீ... போடுவதற்கு ஒன்றுமேயில்லை எம்மிடம்...
போ போ"
என்ற உண்மையைச் சொல்லி
திருப்பியனுப்புவோம்!
***
1 comment:
"சீச்சீ... போடுவதற்கு ஒன்றுமேயில்லை எம்மிடம்...
போ போ"
சிறப்பு.
Post a Comment