பயணச் சீட்டெடுத்து,
சன்னலோரத்து இருக்கையின்
நள்ளிரவு நெடும்பயணத்தின்போது,
நிலவும் வந்திருந்தது.
ஆனால் நான்
அதற்குச் சீட்டெடுக்கவில்லை.
சுடுகாட்டில் பிணமெரித்து
சோர்வில் திரும்புகையில்,
நிலவும் வந்திருந்தது
சோகமாய்.
ஆனால் அது
சுருட்டுப் பிடிக்கவில்லை.
அர்ஜுனன் தபசு முடிந்து
தூக்கக் கலக்கத்தில்
நடந்து வந்தபோதும்
நிலவு வந்திருந்தது.
அதற்கும் கதை புரிந்ததா
என்று தெரியவில்லை.
ஊருக்குள் உலாச் சென்ற
உற்சவர்
திரும்பி வந்தவுடன்
தயிர் சாதம் சுண்டல்.
'காலனி ஆள்' என்று
தொட்டுவிடாமல் இட்டதால்
சுட்டது தயிர் சாதம்.
எமைத் தொடாத ஆண்டைகளை
பெருமாளுக்கு சூடம் காட்டிய
ஐய்யரும் ஏன் தொடத் தவிர்த்தார்
என்பது எனக்குப் புரியவில்லை.
காத்திருந்த நிலவுக்கும்
சுட்டதா எனத் தெரியவில்லை.
அறுத்துக் கொண்டு போய்விட்ட
கறவை எருமைத் தேடி,
விடியலில் கண்டுபிடித்து,
கொட்டகையில் கட்டும்வரை,
வெளிச்சத்தில் மாடு தேட
நிலவும் கூட வந்தது!
ஏரிக்கரைச் சாய்வில் சாய்ந்தபடி
விவாதங்கள் நடந்து முடிந்து,
குழப்பங்களுடனே கலைந்தபோது
நிலவும் கூட்டத்திலிருந்தது.
விடை கண்டதாவெனத் தெரியவில்லை.
வாய்க்கால் மடை திறக்க
வெட்டிக் கொண்டு மாய்ந்தபோது
வாய்க்கால் நீரில்...
நிலவும் கலங்கியது.
வெள்ளி பார்த்து
தினம் எழுப்பும் தந்தை.
மதிப்பெண்ணுக்கான
விடியற்கால மனப்பாடப் போராட்டத்தை
என் நிலவும் ரசிக்கவில்லை.
இரவின் மௌனத்தில்
மனதின் இறுக்கத்தில்
சுக துக்கத்தில்
ஏதோ சொல்லியபடி
சில நாள் தேய்ந்தும்
சில நாள் வளர்ந்தும்
சில நாள் ஓடியும்
சில நாள் தவழ்ந்தும்
என் இனிய நிலவு
நாய் போல் கூடவே வந்தது.
ஆனால்,.
நான் அதை வளர்க்கவில்லை!
***
No comments:
Post a Comment