My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

21.4.11

நான் ஓமர் கையாம் எழுதுகிறேன்…




நான்
ஓமர் கையாம் எழுதுகிறேன்…

என்
இதயமும் மூளையும்
சிதைக்கப் பட்டுவிட்டதால்
இந்தக் கடிதத்தை
சிந்தனையேதுமின்றி,
என் விரல்களே
வரைந்துவிடுகின்றன.
அனிச்சையாய்.

இந்தக் கடிதத்தின் வார்த்தைகள்
அனிச்சையானவை.
தீச் சுட்டுவிடின்
வெடுக்கென இழுப்பதுபோல…
புலித் துறத்தலில்
‘அட்ரினல்’ சுரந்து
தலை தெறிக்க ஓடுவது போல…
கொல்லக் குறி பார்ப்போரை
திருப்பித்தாக்க
அதே ‘அட்ரினல்’ சுரந்து
எங்கள் கரங்கள்
கற்களைத் தேடுவது போல…
என் இந்த வார்த்தைகளும் கூட
‘அட்ரினல்’ கலந்ததுதான்.
மிகவும் அனிச்சையானது.

உங்களின் அனைத்து
கேள்விகளுக்கும்
என்னிடமிருப்பது
ஒரே பதில்தான்:
நான் யார் என்று
எனக்குச் சொல்லப்படாமலே
நான் கொல்லப்பட்டு விட்டேன்.
தீர்ப்புக்கு முன்னமே
மரண தண்டனை.

பாடப் புத்தகத்தில்
ஜனகணமன படித்து
ஒரு இந்தியன் என்கிற
இறுமாப்பில் நான் இருந்தபோதும்
சந்தேகப்படப் பட்டேன்.
சிறுவர்களின் விளையாட்டையும்
சந்தேகப்பட்டு,
ராணுவத் தோரணையில்
எங்கள் காதுகள்
திருகப்பட்டன.
அந்தத் திருகலில்தான்
நாங்கள் தனிமைப்பட்டதை
உணர்ந்து கொண்டோம்.
கோலியாடும் சிறுவர்களைக் கொன்று
வீரம் பயின்றது இராணுவம்.

சித்ரவதையில்,
விசாரணைக் கூடத்தில்,
என் உயிர் பிரியும் தருணத்தில்,
நான் என்னை உணர்ந்தேன்.
நான் இந்தியன் அல்ல;
வெறும் காஷ்மீரி என்று.
வெறும் காஷ்மீரியும் அல்ல;
வெறும் பிணமென்று.

விசாரணையின் பேரில்
கொல்லாதீர்கள் என்பது
எங்கள் கோரிக்கை.
ஆனால்
விசாரிக்காமலேயே
என்னைக் கொன்றுவிட்டார்கள்.

அதனால் நான்
என்னை இவ்வாறு
புரிந்துகொண்டேன் :
‘நான் இந்தியன் அல்ல;
பாகிஸ்தானியனும் அல்ல;
காஷ்மீரியனுமல்ல.
விடுதலை விரும்பிய
மனிதன்.’

நள்ளிரவில்,
இளம்பெண்ணின்
நகை போட்ட நடமாட்டம்தான்
காந்தி கோரிய
இந்தியாவின் சுதந்தரம்.
அதையே
நாங்கள் கோரியிருந்தால்
நகைப்புக்குறியது என்பீர்கள்.
எம் பெண்கள்
பகலிலேயே நடமாடும்
சுதந்திரம்தான் கோருகிறோம்.
சிறுவர்கள் ‘டீத்தூள்’ வாங்கி,
திரும்பவும் பத்திரமாக
வீட்டுக்குள் வந்துவிடும்
சுதந்திரம் கோருகிறோம்.
இரவிலல்ல,
பட்டப் பகலில்.

ஜீலம் நதிக்கரையில்
பதிந்த என் கால் தடங்கள்;
என் வீட்டு முற்றத்தில்
ஒட்டடை படிந்து கிடக்கும்
எனது புத்தகப் பை;
என் இரத்தக்கறையில்
தோய்ந்த துணிகள்;
நான் எதற்காகவோ
எடுத்து வைத்த
கற்குவியல்கள்;
இவைகள் யாவையும்
எமது விடுதலை வேண்டியே
அங்கேயே விட்டு வந்தேன்.



http://www.vinavu.com/2011/04/20/omar-khayyam/#comments

No comments:

Post a Comment