My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

5.11.11

நான், எலி, ஏரோப்பிளேன்...


ஜன்னலோரத்து காட்சிகள் வேகவேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. தரையிலிருந்து மேலெழும்பியவாக்கில் வெறும் காங்கிரீட் வனமாகக் காட்சி தந்தது சென்னை. சிறு இடைவெளியில் அதுவும் மறைந்து, நான் மேகக்கூட்டங்களுக்கு மேலே பறந்துகொண்டிருந்தேன்.

" ஐ அம் பத்மவாசன் ராகவாச்சாரி. நீங்க?" பக்கத்திலிருந்தவர் கேட்டார். சுருட்டை முடியில் செக்கச் செவேலென்றிருந்த ஒரு முப்பத்தைந்து வயதுக்காரர். முகத்தில் 'இந்திய வடு' தெரியவில்லை என்றால் அவரை யாரும் ஒரு வெள்ளைக்காரன் என்றே கூறிவிடலாம். நெற்றியில் சிவப்புக் கலரில் ஒரு திருஷ்ணக் கோடு. "யு கேன் கால் மி மிஸ்டர். ஐய்யர்."

அதெப்படி?! பத்மவாசனை பத்து என்றுதானே சுருக்கமுடியும்?

"எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவா. உங்க பேர் சொல்லையே?"

"ஐய்யனார் அஞ்சுவீட்டுசாமி. ஐய்யனார்னு கூப்பிடுங்க"

"ஓ, ஃபன்னி நேம். அதென்ன அஞ்சுவீட்டு சாமி?"

"அப்பாவுக்கு குலதெய்வத்தோட பேர். அதான்."

"எங்க வேலை?"

"கிரேன் ஆபரேட்டர். கத்தார்ல. நீங்க?"

"நாசா. கேள்விப்பட்டிருக்கியா? அதுலதான் சயின்டிஸ்டா இருக்கேன். மாசச் சம்பளம் ஆறு லட்சம்!"

இருக்கையில் கை வைத்துக்குகொள்ளும் இடத்திலிருந்து என் கை தானாக வெடுக்கென்று இழுத்துக்கொண்டது. அனிச்சையான மரியாதை. ஆஹா, நாசா!! எவ்வளவு பெரிய இடத்தில் வேலை. கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

"வாஷிங்க்டன்ல இருக்கேன். அத்திம்பேர் கூட என்னோடதான் வேலை பார்க்கறார். என்னோட அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோரும் வாஷிங்க்டன்லயே செட்டில்ட். ஓன் ஹவுஸ். எல்லாருமே என்.ஆர்.ஐ. திருவையாறு தியாகராஜ ஆராதனைக்கு வந்தோம். திடீர்னு எனக்கு ஆபீஸ்லேர்ந்து போன். முக்கியமான மீட்டிங்னுட்டு வரச்சொல்லிட்டா. அதான் நான் மட்டும் திரும்பிப்போறேன். அர்ஜென்டுக்கு இந்த பிளைட்தான் கிடச்சுது. கத்தார்லேர்ந்து பிளைட் மாறிடுவேன். பிரிடிஷ் ஏர்வேய்ஸ்."

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எவ்வளவு பெரிய ஆள்! எவ்வளவு கேஷுவலாகப் பேசுகிறார்? என்ன இருந்தாலும் படித்தவர்கள் படித்தவர்கள்தான்.

"மிஸ்டர் ஐய்யனார், நான் சென்னையிலதான் படிச்சேன். ஐ.ஐ.டி. கேள்விப்பட்டிருக்கீங்களா? அதில நான் ஏ கிரேடு. ஜஸ்ட் படிப்பை முடிச்சிட்டு படியிறங்கி வர்றேன், அப்படியே நாசாக்காரன் அள்ளிட்டான். கேம்பஸ் இன்டெர்வியூல, 'எஃப்.சி. திருச்சி பிராமணாள்னு' என் ரெஸ்யூம்ல பார்த்து கண்டுபிடிச்சுட்டான். இண்டர்வியூ பண்ணினவரும் பிராமின். அப்புறம்... நேரா நாசாதான். பத்து வருஷமாகுது. நீங்க எங்க படிச்சீங்க?"

"நானா, கொட்டாம்பட்டி புத்து மாரியம்மன் ஐ.டி.ஐ. டிப்ளமா சார்." என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டேன். ஏனோ என் படிப்பை இவரிடத்தில் சொல்வதற்கு மிகுந்த சங்கோஜமாயிருந்தது.

நீண்ட நேரம் மௌனத்துக்குப் பிறகு ஐயர் கேட்டார். "நிறைய பேசலாம் ஐய்யனார். எனக்கு ஒரு உதவி செய்யணும். நீங்க தப்பா நெனைக்கலைன்னா, சீட்டு மாறி உட்கார்ந்துக்கலாமா? நேக்கு ப்ரயாணத்துல தூக்கம் வராது. அதனால ஜன்னலோரமாயிருந்தா வசதியாயிருக்கும்..."

எனக்கும் ஜன்னலோரம் பிடிக்கும்தான். ஆனால் இவர் வாய்திறந்து கேட்டுவிட்டரே என்பதற்காக சீட்டு மாறி உட்கார்ந்தாயிற்று.

விமானப் பணிப்பெண் தின்பண்டங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனார். அவர் திரும்பிப் போன பிறகு ஐய்யர் சொன்னார் : "பாரு, கெழத்தையெல்லம் வச்சிருக்கு இந்த ஏர்வேஸ். பிரிடிஷ் ஏர்வேஸ்ல பளபளக்கும். இந்தியன் கவர்ன்மென்ட் பிளைட்... அப்படித்தானிருக்கும்!" ஒரு குறும்புப் பார்வையுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

"பட், யூ நோ மிஸ்டர் ஐய்யனார், இண்டியா இஸ் அ கிரேட் கன்ட்ரி. எவ்வளவு பெரிய மகான்கள் பிறந்த இடம் அது? ஆரியபட்டா, கணித மேதை ராமனுஜர், மகாத்மா, ராஜகோபாலச்சார்யாள், பெரியவாள்... சொல்லிக்கிட்டே போகலாம். அப்புறம் பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், கோலம், பஜகோவிந்தம்...! ஆனா பாருங்க... இந்த முறை திருவையாறு ஆத்தங்கரையில உட்கார்ந்து தியாகைய்யர் சன்னிதி கீர்த்தனைகளை கேட்க நேக்கு கொடுத்து வைக்கலை....

கீர்த்தனைன்னா ஞாபகம் வருது. ராஜா, ரஹ்மான்... வாவ். அதிலும் இந்த ரஹ்மான் இருக்கானே... அப்பப்பா என்ன ஒரு ம்ம்யூசிக்? 'என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்....' கேட்டுப்பாருங்க... அடடா, ராஜால்லாம் ரஹ்மானுக்குப் பின்னாடிதான். என்னோட தாத்தா கூட ரஹ்மான் மியூசிக்னா உயிர விட்டுடுவார். எண்பத்தஞ்சு வயசுல ரஹ்மான் கேக்குறார். ரஹ்மான் ம்யூசிக் ஃபர் ஆல் ஏஜ்."

எண்பத்தைந்து வயதில் ஏ ஆர் ரகுமான் இசையை லயித்துக்கொண்டு அமெரிக்க வாழ்க்கை. 'டேய் கடவுளே, ஏண்டா இந்த ஓரவஞ்சனை?!' எனக்கு ஏனோ தின்பண்டங்களை சாப்பிடப் பிடிக்கவில்லை. மிஸ்டர் ஐயர் பேசிக்கொண்டே எல்லவற்றையும் காலி செய்துவிட்டு, இரு கைகளையும் தேய்த்து தட்டிக்கொண்டார்.

"அட அதைவிடுங்க ஐய்யனார்... ரஜினி... யூவ்... வாட் அ க்ரேட் மேன்? எவர்கிரீன் ஆக்டர். ஒரு படம் விட்றதில்லை. வாஷிங்க்டன்ல டிக்கெட் கிடைக்கலைன்னு பிளைட் புடிச்சி லாஸ் ஏஞ்செல்ஸ்ல போய் எந்திரன் படம் பார்த்தேன். அவ்வளவு வெறி. நீங்க படம் பாக்கறதுண்டா?"

"கத்தார் தியேட்டர்ல போய் பார்த்தா கட்டுப்படியாவாது சார். டவுன்லோட் பண்ணிப் பார்த்துடுவோம்."

"உங்களுக்கு என்ன சம்பளம் ஐய்யனார்?"

"நாலு வருஷமா கத்தார்ல வேலை சார். இது வரைக்கும் வாங்கின கடன், போக வர செலவு, தங்கறது திங்கறது எல்லாம் போக, ஏதோ ஒரு எட்டு லட்சம் சேர்த்திருக்கேன் சார். அதுலதான் ரெண்டு அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். எங்க அப்பன் வைத்திய செலவு பார்க்கணும். அடுத்த வருஷம் கான்ட்ராக்ட் முடியுது சார். ஒண்ணும் பெரிய சம்பாத்தியமில்லை... ஏதோ பொழப்பு ஓடுது சார்."

"அடப்பாவமே... இந்தியால அரசியல்வாதிங்க சரியில்லை ஐய்யனார். மொடா முழுங்கிங்க. எது கெடைச்சாலும் மென்னு முழுங்கிட்றானுங்க. ஆனா இந்த மன்மோகன் கொஞ்சம் பரவாயில்லை இல்லையா? மிஸ்டர். கிளீன் ஹேண்ட். அவருக்குத் தெரியாமத்தான் 2 ஜி நடந்து போச்சாம். வாஷிங்டன்னுக்கு அடிக்கடி வருவார். அவர்கூட கைகுலுக்கி போட்டோ எடுத்திருக்கேன். எல்லாம் சரியாகிடும் ஐய்யனார். 2020ல இந்தியா வல்லரசாகிடும் பாருங்களேன். கலாம் சொல்லியிருக்காரே! உங்களுக்கெல்லாம் விடிவுக்காலம் வந்துடும். நீங்கள்ளாம் பெரிய ஆளா ஆகிடுவீங்க. அப்புறம் நாங்க பிழைப்பு தேடி அமெரிக்காவிலேர்ந்து திரும்பவும் இந்தியா வந்து செட்டில் ஆகிடுவோம். அப்போ திரும்பவும் நாங்க இண்டியன்ஸ்...ஹா.. ஹா..." என்று கத்திச் சிரித்தார்.

பணிப்பெண் வந்து தட்டுகளைக் திரும்பக் கொண்டுபோனாள்.

ஐய்யர் லேப்டாப்பை திறந்து யாருக்கோ மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

நினைத்தாலே கடுப்பாயிருக்கிறது. நான் ஊருக்குப் போகும்போது, 'டூட்டி-ஃப்ரீயில்' நண்பர்களுக்காக வாங்கிவந்த சரக்கை உள்ளே தள்ளிவிட்டு, ஏரிக்கரையில் காற்றாட உட்கார்ந்துகொண்டு என்னையே எகத்தாளம் பேசுவார்கள் :
'இங்க இல்லாத வேலையாடா...'
'ஏண்டா, நம்ம அரசாங்கக் காசில படிச்சுட்டு, மத்த நாட்டுல போய் அவங்களுக்கா உழைக்கிறீங்களே, உங்களுக்கெல்லாம் வெட்கமாயில்லையாடா?'
'இந்தியாவின் அவமானச்சின்னம் நீங்கதாண்டா...'
ஆனால் இங்கு கதை வேறு. கொத்தனார், கம்பி முடுக்குபவன், பிளம்பர், டிரைவர், இன்னும் சொல்லப்போனால் கணினி சாஃப்ட்வேர் எஞ்சினீயர்... எல்லமே கொத்தடிமைகள். கொட்டடியில் கட்டப்பட்டு, வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு, வேலை வாங்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாங்களும் எங்களூர் மாடுகளும் ஒன்றுதான். சில இடங்களில் சவுக்கடியும் உண்டாம். எதையும் தட்டிக் கேட்கமுடியாது. எஜமானர்களின் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அரேபிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா எல்லா நாடுகளிலும் இந்தக் கதைதான். இது வேறு உலகம். அடிமை உலகம்! இந்த உச்சத்தை அடைய வெறும் புத்து மாரியம்மன் ஐ.டி.ஐ சர்டிபிகேட் போதும். இருந்தும் நாடு விட்டு நாடு ஓடிய பச்சோந்திப் பட்டம் எங்களுக்கு! என் அறையில் இருக்கும் நண்பன் என்றோ எழுதிய கவிதை வரிகள் என் ஞாபகத்துக்குவந்தன : 

எந்தையுந் தாயும் 
ஏங்கித் தவிக்கையில்
தங்கையர் தமக்கையர்
தேம்பியழுகையில்
தம்பியர் அண்ணன்மார்
தவித்துக் கிடக்கையில்
வெம்பிப் பிரிந்து எம்
ஊர்விட்டே வந்துவிட்டோம்.


ஆனால், இந்த ஐய்யர் சொல்லுகிற கதை வேறுமாதிரி இருக்கிறதே? மாதம் ஆறு லட்சம், பங்களா, சொந்த பந்தங்களோடு வெளிநாடு வாசம், உலகம் சுற்றி, எண்பத்தைந்து வயதிலும் ஏ.ஆர். ரஹ்மான் கேட்டு.... இந்த உச்சத்தை அடைய ஐ.ஐ.டி வேணும். பூணூல் போட்டிருந்தா, அடிஷனல் குவாலிபிகேஷன்!! அமெரிக்கா, ஐரோப்பா... எதை வேணுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். நான் ரெசிடெண்ட் இண்டியன் - எத்தனை கவுரவமான பட்டம்?! மன்மோகன்கூட இவர்களிடம்தானே கைகுலுக்குகிறார்?

"மெரிட்லதான் ஐ.டி.ஐல ஜாய்ன் பண்ணினேன், மிஸ்டர் ஐய்யனார். ஒத்த பைசா செலவு கிடையாது. இந்த இன்ஸ்டிடியூட்ல எங்க பரம்பரைல நிரைய பேர் படிச்சுட்டு பாரின்ல செட்டில் ஆகிட்டாங்க. ஆக்ஸ்போர்டுல என் சித்தப்பா பையன் இருக்கான். ஜெனீவால என் அத்தை பொண்ணு இருக்கா. ஐ.ஐ.டி... வாட் அ க்ரேட் இன்ஸ்டிட்யூஷன்... இந்திய அரசாங்கத்துல உருப்படியா நடக்கறது இது ஒண்ணுதான். உலக அளவுல பெரிய பேர் இருக்கு. இந்தியா ஈஸ் கிரேட் ஆன் கிரியேடிங் ஜீனியஸ்!!" என்று கொட்டாவி விட்டார். "என்னன்னு தெரியலை, தூக்கம் கண்ணச் சொக்குது" என்று ஐய்யர் தூங்க ஆரம்பித்தார். சற்று நேரத்திலேயே குரட்டை சத்தம் கேட்டது.

நான் மிகவும் குழம்பிப்போயிருந்தேன். ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

ஐய்யனார் ஐ.டி.ஐ - அய்யர் ஐ.ஐ.டி; அட... இவ்வளவு வித்தியாசங்களா?
கார்ப்பரேஷன் பள்ளிகளையும் அரசுதான் நடத்துகிறது; ஐ.ஐ.டிக்களையும் அரசுதான் நடத்துக்கிறது. இருந்தாலும் ஏனிந்த வேறுபாடு?
ஓ... கத்தாரின் கிரேன் ஆப்பரேட்டர் வேலைக்கும், நாசாவில் விஞ்ஞானி வேலை செய்வதற்கும் எத்தனை வேறுபாடுகள், மதிப்புகள், மரியாதைகள், சம்பாத்யங்கள்?

ஐய்யர் வாயைப் பிளந்துகொண்டு தலையை மல்லாத்தி தூங்கிக்கொண்டிருந்தார்.

சற்றே யோசித்துப் பார்த்ததில் அவரின் பச்சோந்தித்தனம் தெரிந்தது. அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இந்தியாவை சிலாகிப்பது, பாட்டன் பாட்டியைக்கூட விட்டுவைக்காமல் பிறந்த மண்ணைவிட்டு அகல்வது, இந்திய அரசாங்கத்தை இகழ்ந்துகொண்டே தான் படித்த அரசு நிறுவனத்தைப் புகழ்வது, இந்திய விமானப் பணிப்பெண்ணைக்கூட கேலி செய்வது... இந்தியா வல்லரசானவுடன் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிடப்போவதாகச் சொல்வது, இன்னும் ஒரு சிறிய விஷயத்தில் பார்க்கப்போனால்... தூக்கம் வராதென்று ஜன்னல் சீட்டு கேட்டு வாங்கிக்
கொண்டு, தூங்குவது...
இவர் சொன்னது என்ன பொய்யா அல்லது ஏமாற்றா? எவ்வளவு சுளுவாக நான் ஏமாற்றப்பட்டேன் அல்லது எவ்வளவு சுளுவாக இவர் ஏமாற்றுகிறார்?
இப்போது ஐய்யர் மீதிருந்த மதிப்பு முற்றிலும் காணாமல் போனது. நான் கத்தார் கிரேன் ஆப்பரேட்டராகவே இருக்க ஆசைப்பட்டேன். அது ஐய்யர் மீதிருந்த வெறுப்பிலா அல்லது அந்த வாழ்க்கை ஒரு எட்டாக்கனி என்பதாலா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த முறை திரும்பி ஊருக்குப் போகும்போது, அதே ஏரிக்கரையில் உட்கார்ந்துகொண்டு, என் நண்பர்கள் எகத்தாளம் பேசினால், அவர்களுக்கு எடுத்துச் சொல்ல நிறைய விஷயங்களை இந்த ஐய்யர் எனக்கு சொல்லிக்கொடுத்துவிட்டார். 'வர்றேண்டா வெங்காயங்களா... வந்து பேசிக்கிறேன்!'


என் காலில் யாரோ சுரண்டுவது போலிருந்தது.
குனிந்து பார்த்தபோது அது ஒரு சுண்டெலி.
கீழே சிந்திய பாப்கார்னை இரு கைகளாலும் ஏந்தி பரபரவென்று கடித்துக்கொண்டிருந்தது. ஒண்டவந்த எலி. என்றைகாவது ஒரு நாள் துறத்தியடிக்கப்படலாம். ஐய்யர் இந்த எலியைப் பார்த்திருந்தால் இதற்கும் ஒரு கதை சொல்லியிருப்பார். அதை துறத்தி விட மனமில்லாமல்
அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும்கூட என்னையே பார்த்துக்கொண்டு பாப்கார்னை பொறுக்கிக்கொண்டிருந்தது!
 பாவப்பட்ட இந்திய எலி... இல்லையில்லை... எலிகள்!!




8 comments:

Anonymous said...

The real fact

Ragu said...

Everybody in this world is selfish. when our ancestors shared Education,Land and business and service , people shared education land and business willingly and forced rest to take the service.

When education suddenly picked up to get money, everybody looking at Aiyyars as if they stole their share.

Now land prices are picked up, and without working hard, people are making money. Do those aiiyars complaining they are also entitled for your land. Will you share your land/business.

Shall we put a reservation for those too!

Ragu said...

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் சண்டையாம். பறவைகள் வென்ற பொது எனக்கு இறக்கை இருக்கிறது நானும் பறவை தான் என்று சேர்ந்து கொண்டது வௌவால். விலங்குகள் வென்றபோது எனக்கு பற்கள் இருக்கிறது நானும் விலங்குதான் என்று சேர்ந்து கொண்டது வௌவால்.

ஆதிக்க சாதி தான் இந்த வௌவால். இன்றைக்கு 2011 இல் கூட தீண்டாமை செய்து கொண்டே , இட ஒதுக்கீடு பெரும் புத்திசாலிகள் ஆதிக்க சாதிகளே!

கிட்டா said...

85% வாங்கின நேக்கு I T I கூட கிடைக்கலை, FC - யாம்.

Anonymous said...

Padmavaasan Raghavachari peru Iyera,idhulaye unga anda pulugu aagasa pulugu nalla theriyudhu.

Suresh said...

whatever you have mentioned it's correct

jayaramjobseekr.blogspot.com said...

absolutely wrong. Indian govt is giving lot of priorities to backwards and SCs. BUt they are enjoying thall the top brass posts. But what they expect still from Govt? FCs are studying hard and getting lower posts. It is absolutely not a justice.

எருமை said...

பக்கத்து வீட்டுக்காரரின் தோட்டமெல்லாம் பாளம்பாளம்பாக வெடித்துக்கிடப்பது பாட்ட எழுதினவுனக்கும் இசை அமைத்தவனுக்கும் பாட்டை சிலாகிக்கும் பூனூல் காரனுக்கும் அவிங்க மொழியில புரிய வைக்கனும்

Post a Comment