"அன்பே..."
"ம்..."
"நான் கோவிலில்."
"நான் மசூதியில்."
"கவலைப்படாதே.
கட்டிடங்கள் நொறுங்கினால்
கடவுள் நொறுங்கும்.
கடவுள் நொறுங்கினால்
மதம் மரணிக்கும்.
மதம் மரணித்தால்,
மரணித்த நம் மனம்
மீண்டும் பிறக்கும்!"
"அன்பே..."
"ம்..."
"நான் ஏழை."
"நான் பணக்காரன்."
"நான் குடிசையில்."
"நான் மாடியில்."
"நிலைகுலையாதே.
உயரங்கள் சமமானால்
உள்ளங்கள் ஒன்றாகும்!"
"அன்பே..."
"ம்..."
"கடற்கரை?"
"சுடும்."
"திரை?"
"அறுக்கும்."
"பூங்கா?"
"அலுக்கும்."
"எனில்
எப்போது சந்திப்பு?"
"புவியின் வடக்கில் நான்.
புவியின் தெற்கில் நீ.
ஒரு பிரளயத்தின்போது
ஒன்றாகிவிடலாம்.
இன்றிலிருந்து,
இப்போதிலிருந்து
ஒரு பிரளயத்துக்கு
ஏற்பாடு செய்வோம்."
"அன்பே..."
"ம்..."
"அதுவரை பிரிவா?"
"ம்ஹூம்... முயற்சி.
நீயும் நானும்
நாளையொரு நாள்
மதமற்ற மேடையில்
உயரங்களற்ற அந்தரத்தில்
உனக்கும் எனக்குமான
உன்னதக் கைகோர்த்தலில்
இணைந்துகொள்ள
இன்றிலிருந்தே...
இன்றிலிருந்தே முயற்சி."
"அன்பே..."
"ம்..."
"பிரிவோம்."
"........"
"சந்திப்போம்."
"ம்...!"
4 comments:
வாழ்த்துவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை!
பிரிவும் சந்திப்புமாய் தொடர்கிற வாழ்க்கை சில சமயம்,இனிப்பும்,சிலசமயம் கசப்பும் கலந்து/
/நாளையொரு நாள்
மதமற்ற மேடையில்
உயரங்களற்ற அந்தரத்தில்
உனக்கும் எனக்குமான
உன்னதக் கைகோர்த்தலில்
இணைந்துகொள்ள
இன்றிலிருந்தே...
இன்றிலிருந்தே முயற்சி." அருமை புதிய பாமரன்
கனவுகளோடு கவிதை நன்று.
Post a Comment