காதலுக்காக வருந்திய
கிழவயதுக் கலாம்
ராஷ்டிர பவனத்து
ரோஜா இதழ்களை
வருடிக்கொண்டிருந்தபோது,
கடனால் தத்தளித்து
கதறிய உழவர்கள்
தூலத்தில் தூக்கிட்டுச் சாக
கயிற்றைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
கலாமின் காதல்
ஜெயித்ததோ இல்லையோ...
கயிறு ஜெயித்தது!
குடியரசுத் தினத்தில்
ஏழு முறை குண்டொலிக்க
இந்திய ராணுவம்
துப்பாக்கிகளில் தூசியை
துடைத்துக்கொண்டிருந்தபோது,
இலங்கை ராணுவம்
தமிழர்களைத் தேடிக்கொண்டிருந்தது.
இந்திய ராணும்
ஏழுமுறை சுட்டதோ இல்லையோ...
இலங்கை ராணுவம்
மீனவர்களைச் சுட்டுவிட்டது!
கனிமொழி கிறுக்கிவைத்த
கவிதை வரிகளுக்கு
கலைஞர் கருணாநிதி
' கரக்சன் ' பார்த்துக்கொண்டிருந்தபோது
ராஜாவின் மந்திரிசபை
ராவோடு ராவாக
அலைக்கற்றையை ஏலம்போட்டுவிட்டது.
கனிமொழியின் கவிதை
அச்சேறியதோ இல்லையோ...
ஏலம்போட்டு 'கரப்ஷன்' செய்ததில்
இந்தியாவின் மானம்
கப்பலேறிவிட்டது!
தோழியோடு தோழியாக
ஆறுமாத காலத்துக்கு
கொட நாட்டுத் தோட்டத்தில்
கும்பகர்ணத் தூக்கம்.
ஜெயலலிதா தூங்கினாரா தெரியாது...
பொதுமக்கள் சொத்துக்களை
திருடிக்கொண்டே இருந்தார்
விழித்துக்கொண்டிருந்த தோழி!
கூடங்குளத்து மீன்காரன்
கடலுக்குப் போனபோது,
அணு உலை ஒப்பந்தம்
அவனுக்கே தெரியாமல்
கையெழுத்தாகிப்போனது.
அவன் மீன்பிடித்தானா தெரியாது...
ஆனால் அணுஉலை கட்டிடம்
திறப்புவிழா வைபவத்துக்கு
தயாராகிவிட்டது!
கூழுக்கும் வக்கில்லாமல்
இந்தியக் கும்பிகள்
காய்ந்துகொண்டிருந்தபோது
நிலவைத் தொட்டுவிட
சந்திராயன் நட்டுவைக்கப்பட்டது.
இந்தியனுக்கு கூழ்
கிடைத்ததோ இல்லையோ...
ஆனால் சந்திராயன்
நிலவைத் தொட்டுவிட்டது!
இலவசங்களை அள்ளிக்கொள்ள
தள்ளு முள்ளு வரிசையில்
பாமரன் சிக்கிக்கொண்டபோது
இரவோடிரவாக
பஸ் கட்டணமும் பால்விலையும்
இரண்டு மடங்காக
உயர்த்திவிட உத்தேசிக்கப்பட்டது.
வரிசையில் காத்திருந்தவனுக்கு
இலவசங்கள் கிடைத்ததோ இல்லையோ...
விலை உயர்வு
இலவசமாகவே கிடைத்தது!
"ஓட்டுப்போடும் உரிமை கேள்
ஜனநாயகக் கடமை செய்"
தெருவுக்குத் தெரு
ஜனநாயகத் திருடர்கள்
உரக்கக் கூவினார்கள்.
மக்களெல்லாம் இந்திய நாட்டு
மன்னர்களோ இல்லையோ...
உலகமகா பணக்காரர்கள்
இந்த ஓட்டுத் திருடர்கள்!!
இந்த ஓட்டுத் திருடர்கள்!!
1 comment:
"கூழுக்கும் வக்கில்லாமல்
இந்தியக் கும்பிகள்
.................
கிடைத்ததோ இல்லையோ...
ஆனால் சந்திராயன்
நிலவைத் தொட்டுவிட்டது!"
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை தாங்கள் எதிர்ப்பது சரியாக தோன்றவில்லை.
இந்த வலைப்பதிவு கூட தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவே.
Post a Comment