My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

11.3.12

குழந்தைப் பாராயணம் (கான்வென்டுப் படலம்) :சோதனை செய்யவும்.
செய்முறை :
கை கால்களை உதைத்து பாலுக்கு அழும் கைக் குழந்தையின் முகத்தருகில் சிட்டிக்கையிட்டு இடம் வலமாய் கையை ஆட்டி சோதனை செய்யவும்.
சிட்டிக்கை யொலிகேட்டு சிந்தனையோடு உங்கள் கை விரல்களையே பார்த்தால்
கைக் குழந்தை இப்பொழுதே கல்வி பயிலத் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

ஏபிசிடி வடிவில் பிளாஸ்டிக் எழுத்துக்களை வாங்கவும். பன்னாட்டுக் கம்பெனியின் டிரேட் மார்க் 'நான்-டாக்சிக்' பொம்மைகளையே வாங்கி அடுக்கவும்.
எழுத்துக்களைப் படிப்பதற்கு பதில் வாயால் கடித்து விழுங்கினால் கூட அது விஷத்தன்மை இல்லை என்பது அதன் தனிச் சிறப்பு.ஆனால்,
ஆங்கிலம் தொண்டையிலடைத்துக்கொண்டு, மரணம் நேரிட்டால், கம்பெனி பொறுப்பாகாது.

அடுத்ததாக, உடனே ஒரு கம்ப்யூட்டர் வாங்கவும். கண்டிப்பாக மல்டிமீடியா இருக்கவேண்டும். தாலாட்டை நிறுத்தி, ட்விங்கிள் ட்விங்கிள்
லிட்டில் ஸ்டார் முதல் ஹம்ப்டி டம்ப்டி வரை அனைத்து ஆங்கில ரைமிங்ஸ் பாடல் சிடிக்களை ஓடவிட்டு, அதி பயங்கரமாக அலறும்
ஹெட் போனை அதன் காதுகளில் மாட்டவும்.
'செகண்ட் லாங்குவேஜ்' என ஒரு நாதாரி சப்ஜெக்ட்டை இந்தக் குழந்தை படிக்க நேரிட இருப்பதால், எப்பவாவது ஒரு முறை, தாயின் மணிக்கொடி, தமிழ்த்தாய் வாழ்த்து,
வானாகி மண்ணாகி, போன்ற (ஒவ்வொரு தேர்வின்போதும் வரும்) மனப்பாடப் பகுதியை மனப்பாடப்படுத்தவும். எனக்குத் தெரிந்து,
ஜனகனமண தேவையில்லை. ஏனென்றால் அது கேள்வியாக்கப்படுவதில்லை. அது, பாடப்படும்போது வேறு எழுந்து நிற்க வேண்டும்.
பாவம், குழந்தையால் நிற்க முடியாது. படுத்தபடியாகவே படிக்கட்டும்.

காலம் வேகமாக ஓடுகிறது. அதோ இதோ என்று இந்தக் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிட்டது பாருங்கள்.
இதோ, நீங்கள் சீராட்டி, சிடி போட்டு, மனனம் பண்ணப்பட்ட குழந்தை, உங்கள் ஒரு வருங்கால டாக்டர் அல்லது
ராக்கெட் விஞ்ஞானி அல்லது ஏஆர் ரகுமான் அல்லது மன்மோகன் அல்லது எம். எஸ். சுவாமினாதன் அல்லது மணிரத்னம் அல்லது
கல்பனா சாவ்லா அல்லது அம்பானி அல்லது பிர்லா அல்லது குறைந்த பட்ச-பில்கேட்ஸ் அல்லது அதைவிட குறைந்த பட்சமாக நாட்டின் முதல் குடிமகன்(ள்)!

அந்த நாளும் வாராதோ? வரும். வரும். வந்துவிடும். கலாம் சொன்னது போல கனவு காணுங்கள். உங்கள் நடுத்தரத்திலிருந்து உங்கள் குழந்தை மேட்டுக்குடி வர்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அம்பானி போல அது ஒரு சிறிய வீடுகூட கட்டிக்கொள்ளுமென்றும் கனவும் காணுங்கள்.

ஏய்... கனவா...? கனவு காணக்கூடிய நேரமா இது? போய்யா போ. ப்ளே ஸ்கூல் நெறம்பிடப் போகுது. நல்ல மாண்டிசரி ஸ்டைல் (வீட்டிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்தாலும் பரவாயில்லை) பள்ளியில் சேர்த்துவிடு. பணத்தைக் கணக்கு பார்த்தால் 'அம்பானி-சிறிய கனவு வீடு' உண்மையிலேயே உடைந்து போய்விடும். உஷாராயிருக்க வேண்டும்.

வாங்க தொரை... வாங்க! இந்த கியூவில் நில்லுங்கள். பாவம் ரேஷன் கடைப் பக்கம் கூட எட்டிப்பார்க்காத நீங்கள்! விதி வலியது. நீங்கள் நிற்பது தரமான க்யூவா என்று பாருங்கள். உங்கள் முன்னால் நிற்பவர்கள் உங்களை விட வசதியானவர்களா என்று ஒரு முதல் பார்வையிலேயே கணித்துவிடுங்கள்.

"என்ன...ஆ...ஐய்யோ... போச்சா... அப்படியா.... ஐயையோ...சரி.... ஒண்ணு செய், ரிலையன்சிலிருந்து எடுத்து இன்ஃபொசிசில் போடு. தேறும் என்று இ.டி. சொல்லுது."

"ஐசிஐசிஐ... செக்கைத் தூக்கி சிட்டில போடு. ஆக்சிஸ்ல ஒரு பத்தாயிரத்தை ட்ராப் பண்ணி ஒரு மணிக்குள்ள கட்டிடு. செக்கு ரிடர்ன் ஆயிடுத்துன்ன நாறடிச்சிடுவான். வெளி நாட்டுக் கம்முனாட்டிங்க... வீட்டுக்கு ஆள் அனுப்பரானுங்க..."

இதுபோன்ற பேச்சுக்கள் இந்த க்யூவிலிருந்து உங்கள் காதுகளில் விழுந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பதுதான் சரியான க்யூ. அந்த படித்த மேன்மக்கள் சரியான பள்ளியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நீங்கள் தைரியமாக நம்பலாம். இரண்டாவதாக, க்யூவில் டீசன்சி கடைப்பிடிக்கப்படும். ரேஷன் கடையில் மாதிரி யாரும் உங்களுக்கு முன்னால் சந்தில் புகுந்துவிட மாட்டார்கள் - சண்டை சச்சரவும் இருக்காது.

ப்ரி-கேஜி அப்ளிகேஷன் வாங்கியாச்சா? சரி... நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு, கவனமாக அதை நிறப்புங்கள். நேமாலஜி ஜோதிடப்படி குழந்தையின் பெயருக்கு இடையில் ஏதாவது தெய்வீக எழுத்து சேர்த்திருந்தால் (அகிலேஷ்ஷ், ராஜேஷ்ஷ்), வீட்டில் போன் செய்து கேட்டு நிதானமாக தவறில்லாமல் நிறப்புங்கள்.

குழந்தையின் பள்ளி இண்டர்வியூவில் நீங்கள் பதற்றமடையத் தேவையேயில்லை. படுத்த படுக்கையிலேயே படித்த ரைம்ஸ் இங்கு கை கொடுக்கும். என்ன, கொஞ்சம் (உங்களைப் பொறுத்தவரை கடன் உடன் வாங்க வேண்டியிருக்கலாம். கனவு ஞாபகமிருக்கிறதில்லையா?) ரசீதில்லாத கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். பிச்சை புகினும் கற்கை நன்றே. அவ்வை சொன்னது.

இளமையில் கல் என்றும் அவ்வை சொன்னாள். இது முக்கியமான அடிப்படைக் கல்வி. குழந்தை கொஞ்சம் ததிங்கிணத்தோம் போட்டாலும் பேஸ்மெண்டை சரியாகப் போடுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். இந்த ப்ரி-கேஜி, எல்கேஜி, யுகேஜி படிப்பையெல்லம் ஏதோ போண்டா பஜ்ஜி சாப்பிடுவது என்று சுலபமாக நினைத்து விடவேண்டாம்.

அலாரம் வைத்து காலை ஐந்து மணிக்கே குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடவேண்டும். சும்மணாங்காட்டியும் பல் துலக்கி குளிக்கவைத்து புத்தகத்தின் மூஞ்சியில் உடனே முழிக்க வையுங்கள். மூளை வளர்ச்சிக்கு காலை வெறும் வயிற்றில் திக்காக ஜூனியர் ஹார்லிக்ஸ், அரை மணி நேரங்கழித்து
குழந்தையின் அபரிமிதமான உயர வளர்ச்சிக்கு காம்ப்ளான் கொடுங்கள். இல்லையென்றால் பள்ளியில் 'குள்ளன்' என்ற பேரெடுக்க வாய்ப்புண்டு. அரை மணி நேரங்கழித்து இரண்டு இட்டலி வாயில் திணிக்கப்பட வேண்டும். உடனே ஒரு டம்ளர் 4.5 பால் குடிப்பாட்டுங்கள். கவனம்... இந்த வேலைகளுக்கிடையிலும் குழந்தை புத்தகத்தை படித்துக் கொண்டேதானிருக்கவேண்டும்.

புத்தக மூட்டையை முதுகில் மாட்டிக் கையில் லன்ச்சு பேக் கொடுக்கும் நேரத்தில் பள்ளி வாகனத்தின் ஹாரன் காதைப் பிளக்கும். தரதரவென்று குழந்தையின் கையைப் பிடித்து இழுத்து வந்து வேனுக்குள் முப்பதாவது ஆளாக திணித்து விடுங்கள். அடுத்த நொடி வேன் சடுதியில் மறைந்துவிடும். இப்பொழுது நீங்கள் சற்று இளைப்பாரலாம்.

சாலை வாகன நெருக்கடியில் சிக்கித்தவித்து, அந்தி சாயும் நேரத்தில் பள்ளி வாகனமும் சாய்ந்து சாய்ந்து, ஆடியசைந்து வீட்டினருகில் வந்து நின்று உங்கள் குழந்தையை தள்ளிவிட்டுப் போகும். குழந்தையை லாவகமாக காட்ச் பிடித்து, தோளில் வாரி அணைத்துக் கொள்ளுங்கள்.

"டாடி, ஹி புஷ்ட் மி. சோ...ஐ கிக்ட் ஆன் ஹிஸ் நெக்...!" குழந்தை பேசும் மழலை ஆங்கிலம். கோடி கொடுத்தாலும் ஈடாகுமா? புளகாங்கிதமடையவும்.
இதோடு நிறுத்தாதேயும். அபாக்கசில் சேர்த்துவிட்டால் - நொடிக் கணிதம். பிறகு சல்ஸா நடனம், கராத்தே, குங்க்பூ, ஸ்கேட்டிங்க்.... உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! டபிள்யூ-டபிள்யூ-எஃப் - கண்ணுலயே காட்டாதீங்க. வன்முறை அதன் மனதுக்குள் புகுந்துவிடும். எல்லாம் ப்ளான் பண்ணி செய்யணும்.


"தூக்கம் வருது" என்று கண்களைச் சொக்கும் குழந்தை. நமக்கு மனம் இளகிப் போகும். என்ன செய்வது? இன்றைய கஷ்டம் என்பது நாளைய சுகம்.
வேண்டுமென்றால் சிறிது நேரம் போகோ அல்லது சுட்டியைப் பார்க்க விடுங்கள். குழந்தைக்கும் கொஞ்சம் 'ரிலாக்ஸ்' என்பது தேவைதானே!

இப்பொழுது கெல்லாக்ஸ் அல்லது நூடுல்ஸ் நேரம். உடனே ஒரு கிளாஸ் பூஸ்ட். சீக்ரெட் ஆஃப் குழந்தையின் எனர்ஜி. (மேலே கூறப்பட்ட, ஏ.ஆர். ரஹ்மான், கல்பனா சாவ்லா லிஸ்டில், எச்சிலிலேயே புத்தகம் எழுதிச் சாதித்த சச்சின் விட்டுப் போய்விட்டது. உங்கள் கனவு லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி - பூஸ்ட்).

சல்சா டான்ஸ் ட்ரெஸ், அதற்கு மேலே கராத்தே ட்ரெஸ், காலில் சக்கரம் கட்டி, சுட்டிக் குழந்தையை உங்கள் வண்டியில் அழைத்துச் செல்லும்போது சாலையின் இரு பக்களிலும் திரும்பித் திரும்பி கவனித்துப் பாருங்கள். இன்னும் ஏதாவது குழந்தை கற்றுக் கொள்ளக் கூடிய பயிற்சிக்கான விளம்பரங்கள் கண்ணில் படலாம்.

எல்லாப் பயிற்சி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்த உடனே ஹோம் வொர்க். அடியாத மாடு படியாது என்பது பெரியோர் வாக்கு. காதைப் பிடித்து திருகியோ, முடியைப் பிடித்து தலையில் நளினமான முறையில் தட்டியோ பாடங்களைச் சொல்லிக் கொடுங்கள். சட்டங்கள் கடுமையாயிருப்பதால் மூன்றாவது வீட்டு மனித உரிமை ஆர்வலர் பார்க்காதவாறும் பதுங்கிப் பம்மி அடிக்க வேண்டும்.

அதிக பட்சம் எட்டறை மணிக்குள் குழந்தை விரைந்து படிப்பை படித்து முடித்து விடவேண்டும்.பின் கதை சொல்லி தூங்க வைப்பதற்குப் பதில், 'உன்னால் முடியும் தம்பி' புத்தக வரிகளைப் படித்துதோ, கலாமின் புத்தக வரிகளைப் படித்தோ குழந்தையை சுலபமாக தூங்கிவிடச் செய்யலாம்.
நீங்கள் படுக்கைக்குச் செல்லும்முன் 'அஞ்சு மணி அலாரம்' வைக்க வேண்டும்.

ஆங்கிலக் கல்வி வழியில் பயின்றாலும் குழந்தை ஆங்கிலம் பேசத் திணறுவது உங்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கும். நல்ல பள்ளி என்றால் ஒரே வக்குப்பறையில் ஐம்பது குழந்தைகள் கூட படிக்க வாய்ப்புண்டு. அத்தனை குழந்தைகளுக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதென்பது இயலாத காரியம். அத்தனையும் அவர்கள் கட்டி மேய்க்கப் போராடுவதை நீங்கள் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையில் சிந்திதுப் பார்க்கவும். போகப் போக சரியாகி விடலாம் என்று பள்ளி நிர்வாகம் உங்களுக்கு ஆறுதல் சொல்லும். அதனால் ஆறுதல் அடைந்துவிடுங்கள். தமிழ் என்பது வேப்பங்காயாகத்தானிருக்கும். என்ன தமிழ் இது... கொம்பும், காலும், கொக்கியும், நெடிலும், குறிலும்.... குழந்தைகளுக்காக ஆங்கில எழுத்து மாதிரி ஒரு 26 எழுத்துகளிலேயே தமிழைச் சுருக்கிவிட தமிழ் ஆர்வலர்கள் முயன்றாலென்ன? செம்மொழி மானாட்டில் என்னதான் கிழித்தார்கள் என்று தெரியவில்லை.

இப்படியாக உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மூச்சிறைக்க, நாக்கு வெளித்தள்ள கான்வென்டுப் படலம் முடிந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். கலாம் சொன்னது போல, கனவுதான் முக்கியம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்.

No comments:

Post a Comment