My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

8.4.11

நிலவின் ஒளியில் இரவின் மௌனம்



பயணச் சீட்டெடுத்து,
சன்னலோரத்து இருக்கையின்
நள்ளிரவு நெடும்பயணத்தின்போது,
நிலவும் வந்திருந்தது.
ஆனால் நான்
அதற்குச் சீட்டெடுக்கவில்லை.


சுடுகாட்டில் பிணமெரித்து
சோர்வில் திரும்புகையில்,
நிலவும் வந்திருந்தது
சோகமாய்.
ஆனால் அது
சுருட்டுப் பிடிக்கவில்லை.


அர்ஜுனன் தபசு முடிந்து
தூக்கக் கலக்கத்தில்
நடந்து வந்தபோதும்
நிலவு வந்திருந்தது.
அதற்கும் கதை புரிந்ததா
என்று தெரியவில்லை.


ஊருக்குள் உலாச் சென்ற
உற்சவர்
திரும்பி வந்தவுடன்
தயிர் சாதம் சுண்டல்.
'காலனி ஆள்' என்று
தொட்டுவிடாமல் இட்டதால்
சுட்டது தயிர் சாதம்.
எமைத் தொடாத ஆண்டைகளை
பெருமாளுக்கு சூடம் காட்டிய
ஐய்யரும் ஏன் தொடத் தவிர்த்தார்
என்பது எனக்குப் புரியவில்லை.
காத்திருந்த நிலவுக்கும்
சுட்டதா எனத் தெரியவில்லை.


அறுத்துக் கொண்டு போய்விட்ட
கறவை எருமைத் தேடி,
விடியலில் கண்டுபிடித்து,
கொட்டகையில் கட்டும்வரை,
வெளிச்சத்தில் மாடு தேட
நிலவும் கூட வந்தது!


ஏரிக்கரைச் சாய்வில் சாய்ந்தபடி
விவாதங்கள் நடந்து முடிந்து,
குழப்பங்களுடனே கலைந்தபோது
நிலவும் கூட்டத்திலிருந்தது.
விடை கண்டதாவெனத் தெரியவில்லை.


வாய்க்கால் மடை திறக்க
வெட்டிக் கொண்டு மாய்ந்தபோது
வாய்க்கால் நீரில்...
நிலவும் கலங்கியது.


வெள்ளி பார்த்து
தினம் எழுப்பும் தந்தை.
மதிப்பெண்ணுக்கான
விடியற்கால மனப்பாடப் போராட்டத்தை
என் நிலவும் ரசிக்கவில்லை.


இரவின் மௌனத்தில்
மனதின் இறுக்கத்தில்
சுக துக்கத்தில்
ஏதோ சொல்லியபடி
சில நாள் தேய்ந்தும்
சில நாள் வளர்ந்தும்
சில நாள் ஓடியும்
சில நாள் தவழ்ந்தும்
என் இனிய நிலவு
நாய் போல் கூடவே வந்தது.
ஆனால்,.
நான் அதை வளர்க்கவில்லை!


***

7.4.11

பெண்ணெனும் பளு...



ஒரு புர்கா கூடாரத்துக்குள்
ஒளித்து வைக்கப்பட்ட
எம் சகோதரிகளின் பரிமாணங்கள்.
பரிமாணங்களனைத்தும்
சுதந்திரந் தேடிய கூர்மத்திலிருந்தன.

இருளுக்குள் இருந்துகொண்டு
அவர்களின் கண்கள் மட்டும் 
ஒளிபாய்ச்சும் –
விலங்கொடிக்கும் விவரந்தேடி.
அவர்களின் கண்களில்
அந்த கையறு நிலையின் வீச்சம்.
அந்த ஒளிவெள்ளத்தில்
சமுதாயம் கண்கள்
கூசித்தான் போகவேண்டும்.
ஆனால் 
அவை
பார்ப்பதையே
தவிர்த்துக் கொண்டன!

அந்த ஒளிவெள்ளம்
ஆண்டவனை நோக்கியும்
பிரார்த்தித்துப் பாய்ச்சப்பட்டது.
அப்போது அந்த ஆண்டவன்
ஆண்களுக்கு மட்டுமே
போதனை செய்துகொண்டிருந்தான் –
பெண்களை எவ்வெவ்விதத்தில்
வழி நடத்த வேண்டுமென்று.
செய்வதறியாது திகைத்து,
அந்தக் ண்களிலிருந்து
ஒளிவெள்ளம் ஆண்டைகளின்,
ஆண்களின் குவியலுக்குள் 
பாய்ச்சப்பட்டது.
அவர்களோ 
போதனைகளின் போதையில்
அந்த இறைவனிடமே
சந்தேகங்களைக் மேலும் மேலும்
கிளறிக்கொண்டேயிருந்தார்கள்!
பெண்கள் எப்படியெல்லாம்
நடத்தப்பட வேண்டுமென்று!

இருளின் விடை காண
ஒளி பாய்ச்சித் தேடியபோதும்
கிடைத்தது…
மீண்டும் இருள்தான்!

அடிக்குங் கைகளைத்
தடுத்த போதும்,
இயலாமையில் அறற்றிப்
புலம்பியபோதும்,
இதயம் குமைதலால்
ஏனென்று கேட்டபோதும்,
சுமை பாரம் பூமிக்குள் அழுத்த
கைதொழுது அழுதபோதும்…
எம் சகோதரிகளுக்கு
கேட்காமலேயே கொடுக்கப்பட்ட
ஆறுதல் சுதந்தரம்
தலாக்!

புர்காவுக்குள் இருக்கும்
மூட்டை பளுவாயிருக்குமென்று
நினக்கும் நிமிடத்திலேயே
தலாக் எனும் வார்த்தை மூலத்தால்
ஒரு மூலையில் இறக்கிவைக்கப்பட்டு
ஆண்களின் பயணம்
தொடர்ந்துகொண்டேதானிருக்கிறது…

***

சாத்தான்களின் வேத அலறலில்
கழுத்திலேற்றப்பட்ட தாலி.
பெண்ணாய்ப்பிறந்த பெருமைக்காக
வாழ் நாள் முழுதும் 
விட்டகலா விலங்கு.
விலை கொடுத்து வாங்கப்பட்டதால்
விலங்கின் மதிப்பும் அதிகம்.
பொன்னும் பொருளுமாக
விலை கொடுக்கப்பட்டே
இவ்விலங்கு பூட்டப்படுகிறது.
கைமாற்றும், கடன் பெற்றும்,
கண்ணீர் உதிரம் சிந்தியும்
பெற்ற கடனை முடிக்கும்
பெண் பெற்ற பெற்றோர்.
கல்யாணம் சுப மங்களம்
ஆனால்
கடன் பட்ட வலியோடு...
மூன்று முடிச்சு விலங்குக்கு
முப்பத்து முக்கோடி
தேவர்களும் சாட்சி.

தாலியால் வேலியிட்டதால் -
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
அப்பெண்ணின் சுதந்தரத்தை
அக் கயிறொன்றே வழி நடத்தும்.
கட்டிய கணவன்
கொடியவனென்றாலும்
கட்டவிழாது.
கடவுள் சாட்சியாக
கட்டப்பட்ட முடிச்சுகள்
நீதிமன்றத்தில் மட்டுமே
நிறுத்தி அவிழ்க்கப்படும்.
அல்லது - 
அது கடைசியாக நிகழ்ந்துவிடும்...
அவளின் மரணத்தில்!

தாலி ஏற்றபின்
தாழ்ந்த தலை நிமிறக்கூடாது.
தாலி இழந்தபின்
தெருவில் எதிர் படக்கூடாது.
எனில்,
பெண்ணின் சுதந்தரம்
ஒரு தாலிக் கயிற்றுக்குள்தானா?

உதிரத்தில் மூழ்கி
உதிரத்தில் சிசு பிறந்தும்,
உதிரமென்பது தீட்டென்று
படைத்த பெண்டிரை வெறுக்கும்
பழம்பெரும் தெய்வங்கள்.
தெய்வங்களின் தராசு முட்களும்
பெண்களைத்தான் குத்துகின்றன.



***
யாதொரு மதத்திலும்
சாத்திரங்களும் சூத்திரங்களும்
பெண்களை தீது செய்வதேன்?

பெரிதும் படித்த பல்சான்றீரே,
ஞானம் முற்றிய பண்டிதரே,
யாதொரு மதத்திலும்
பாரபட்சம் பெண்ணுக்கு மட்டுமேன்
எனும் ஒரே கேள்விதான்
மனதை மாய்ந்து மாய்ந்து அறுக்கிறது.

***

பல நூறு மார்கத்திலும்
மதத்திலும் போற்றப்படும்
இவ்வண்ட சராசரத்து 
சக்தியுள்ள பெருந் தெய்வங்களே...
அகிலமாளும் ஆண்டவர்களே...
உங்களாலேயே படைக்கப்பட்ட
பெரியாரையும் பாரதிதாசனையும்
படித்துப் பாருங்கள்.
நீங்கள் எதை மறந்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
நினைவு படுத்துவார்கள்.
நீங்கள் எதை மறுத்தீர்களோ
அதை அவர்கள் நன்றாகவே
எடுத்தியம்புவார்கள்.

குறைந்த பட்ச கோரிக்கையாக
நீங்கள் கொடுக்க மறந்த - 
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பேதமற்ற சம உரிமை 
கொடுத்தருள்வீராக.
ஏனெனில்
நீங்கள் படைத்த காலந்தொட்டு,
வாழ்வெனும் சக்கரம்
இவ்விரு சக்திகளால்தான்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.





http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/  பின்னூட்டத்தின் தொடர்ச்சி.







3.4.11

"சீச்சீ... போடுவதற்கு ஒன்றுமில்லை போ போ"



பிறப்புக்குக் கையேந்தி
பிறந்தபின் பாலுக்குக் கையேந்தி
அரிசிக்கும் கையேந்தி
அன்றாடம் அதையவிக்க,
சிடுசிடுக்கும் விளக்கெறிய,
சீமெண்ணைக்குக் கையேந்தி
பருப்புக்கும் கையேந்தி
பாழ் இருப்புக்குங் கையேந்தி,

குடத்தை வரிசையிட்டு
குவியும் கும்பலுக்குள்
தவிக்கும் வாய்த்
தண்ணீருக்குக் கையேந்தி
அவசியங்களுக்குக் கையேந்தி
அவ்வபோது கிடைக்கும்
இலவசங்களுக்கும் கையேந்தி
எப்போதும் கையேந்தி ஏந்தி...

கோயிற்புகக் கையேந்தி
குவளைகளுக்கும் கையேந்தி
பள்ளி செல்லக் கையேந்தி,
பாழும் படிப்புக்குக் கையேந்தி,
ஆசிரியன் அடிக்கும் கையேந்தி
ஆதரவுக் கையேந்தி,
சாதிக்கும் கையேந்தி
சாமிக்கும் கையேந்தி
மதத்துக்கும் மண்டியிட்டு
மௌனமாய்க் கையேந்தி,

உரிமைக்குக் கையேந்தி
உண்மைக்கும் கையேந்தி
தேவைக்குக் கையேந்தி
தினந்தோறும் கையேந்தி ஏந்தி...

வயிற்றுக்காய் உழைக்க
வேலைக்குக் கையேந்தி
கூழைக் கும்பிட்டு
கூலிக்குக் கையேந்தி
விளைநிலத்தைத் திரும்பக்கேட்டு
விவசா
க் கையேந்தி,


பெண்ணுக்கு மணமுடிக்க
மாப்பிள்ளையிடம் கையேந்தி,
சீதனம் கொடுக்க
சரவணாவில் கையேந்தி
செய்கூலி சேதாரத்தை
சிந்தாமல் கையேந்தி
புத்தாடை வாங்கி
பண்டிகைக் கொண்டாட
தள்ளுபடிப் படியிலே
தவமிருந்து கையேந்தி...

மருந்துண்டே உயிர்வாழ
மருத்துவமனையில் கையேந்தி
செத்துச் சவமாக,
சவமடக்கக் கையேந்தி...

கையேந்தும் நாம் பாமரர்கள்.
கைகளிரண்டும் ஏந்திஏந்தி,
மரபணுவிலும்
மாற்றம் கண்டு
திருவோட்டு உருவத்தில்
திரிந்தே போயின.

***

அதியமானிடம் அவ்வையார்
கையேந்தத் தொடங்கி,
பன்னாட்டுக் கம்பெனிகளிடம்
கருணானிதி/மாறன் கையேதியது வரை
நாம் கையேந்திப் பரம்பரைகள்.

வெளி நாடு வாழ் இந்தியர்களிடமும்,
கோக்கு பெப்சிகளிடமும்,
ஜப்பானிய ஐரோப்பிய கம்பெனிகளிடமும்
அமெரிக்காவிடமும்
அண்ட சராசரமும்,
மன்மோகன் பிரணாப் வகையறாக்கள்
உலகளாவிய நிலையில்
கையேந்துவதால்
நாமனைவரும் கையேந்தும் இந்தியர்கள்.

***

எதற்குமே கையேந்தும் அரசியல் கொள்கை!
நிதிக்காக கையேந்தும் 'ஹாவர்டு' நிதி மந்திரிகள்!
ஓட்டுக்காக கையேந்தும் அரசியல்வாதிகள்!
உலகமே வேண்டிக் கையேந்தும் பண முதலைகள்!

இப்படிக் கையேந்தி ஏந்தியே
அவர்கள் கைகளும் கூட
திருஓட்டு உருவத்தின்
சின்னம் ஆகின; திரிந்து போயின.

***
எத்தனையோ இருந்தும்
இப்போது ஆட்சி வேண்டி
அடிமைக் கையேந்திகளாகிய நம்மிடமே
வந்து கையேந்தும் ஆண்டைகள்,
அரசியல்வாதிகள்,
நடிகர்கள், நிலப்பிரபுக்கள்.

அவர்கள் நிலை கேவலமாக இருப்பதால்
"சீச்சீ... போடுவதற்கு ஒன்றுமேயில்லை எம்மிடம்...

போ போ"
என்ற உண்மையைச் சொல்லி
திருப்பியனுப்புவோம்!

***