My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.7.11

சுதந்திரம் - ஸ்வீட் எடு - கொண்டாடு!!



ஆற்று நீரைக் குப்பிக்குள்ளே
அடைத்துவிடும் மந்திரம் - அதை
சோற்றுக்கில்லா சேரிக்குள்ளே
விற்றுவிடும் சுதந்திரம்.

காடு மலை மணல் கடத்தி
காசு பார்க்கும் தந்திரம் - எதிர்
கேள்வி கேட்கும் ஆதிகளை
சூடுபோடும் சுதந்திரம்.

சந்தைப் பங்கு விந்தை காட்டும்
சூதாட்டச் சுதந்திரம் - வெறும்
வெத்துப் பொருளாதாரம்
விலையுயர்வு நிரந்தரம்.

நாள்தோறும் விலையேற்றி
நாமமிடும் பெட்ரோலியம் - ஏற்றி
சொன்னால் கொடுத்துவிடும்
சுரணையற்ற சுதந்திரம்.

சூட்சுமத்தைக் கண்டு கொண்ட
சோனியா, சிங், சிதம்பரம் - இவர்
ஆளும் அதிகாரத்துக்கு
அமெரிக்காதான் வரம் தரும்.

***
காவிரியின் நீரைக் கேட்டு
சோரம் போன இயந்திரம் - அது
மூத்திரம் பேயும் ஸ்டைல் பார்த்து
சூப்பர் ஸ்டாரு பட்டயம்.

சிறுவாடைத் திருடிக்கொண்டு
திரைக்குச் செல்லும் தீவிரம் - தன்
தலைவனுக்கு கரகமாடி
தெருவில் நிற்கும் சுதந்திரம்.

***
வள்ளுவன் மேல் ப(ச்)சைபூச
வாய்த்துவிட்ட தருத்திரம் - தமிழ்
வாய் மூடிக் கைக்கட்டி
வணங்கி நிற்கும் சுதந்திரம்.

காசு கேட்டுக் கட்டங்கட்டும்
கல்விக்கூடப் பயங்கரம் - ஒரு
'டிசி'க்கே பயந்துவிடும்
வெட்கங்கெட்ட சுதந்திரம்.

***
தருத்திரத்தைத் தொலைத்துவிட
திருப்பதிமேல் தரிசனம் - கழுத்தில்
இருப்பதையும் அறுத்தெடுக்கும்
உண்டியலின் நிதர்சனம்.

நித்தம் ஒரு சாயிபாபா,
நித்தியானந்தம், சங்கரம் - அந்த
பத்மநாபன் பாதாளத்தில்
பணம் பதுக்கும் சுதந்திரம்.

***

நாற்று நட்டு நடவு செய்து
காற்றைத் தின்ற தத்துவம் - பின்
ஊரைவிட்டுத் தெறித்துவந்து
நகர வாழ்வில் நிரந்தரம்.

நேற்றுவரை கோவணத்தில்
நாகரிக மானுடம் - இன்று
கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு
கும்பி காயும் சுதந்திரம்.

ஓடியோடி உழைத்தபோதும்
போடு ததிங்கிணோம் - இப்படியும்
 
சுதந்திரம் கிடைத்ததென்று
கூவு - தத்தத் தரிகிடோம்!



- புதிய பாமரன்...

No comments:

Post a Comment