வினவு துவங்கி
மூன்றாண்டுகள்
ஆயிரம் பதிவுகள்
45,000 மறுமொழிகள்
150 நாடுகளிலிருந்து
40 இலட்சம் பார்வைகள்………
______________________________________________________________________________________________
ஒரு பதியாலொண்ணு...
_____________________________
காந்தியக் குல்லாய்.
கறையில்லாக் கதர்.
பஞ்சாலான மெத்தை.
பஜனையிலே லயிப்பு.
மைதானத் தென்றல்.
மெல்லிய மெழுகொளி.
காமிராக் கோணம்.
காணொளிச் செய்தி.
திட உணவை மட்டும்
தின்னத் தவிர்த்த
உண்ணாவிரதம்.
ஊழலொழி எனும்
உன்னதக் கோரிக்கை.
மேடையிட்டு, மேடையிட்டு,
மயக்கத்திலேயொரு
அஹிம்சா வழி
அறப்போர்.
ஆரஞ்சுப் பிழிசலை
அரிசனம் கொடுக்க
இனிதாய் ஓர் நாள்
முடிந்தேபோனது.
கடைசியில் மிஞ்சியவை :
மனிதாபிமானங்கள்,
கண்ணீர்த் துளிகள்,
மன்மோகனின்
மர்மப் புன்னகை,
டன் கணக்கில்
டீம் அன்னாக்கள்
விட்டுச் சென்ற
குப்பைகள்!
***
தடியடித் தாக்குதல்.
தடித்துப்போன
தழும்புகள்.
உடைந்துபோன எலும்புகள்.
சூட்டால் இளகும்
தார்ச்சாலைக் கொதிப்பில்
சிந்திச் சிதறிய
செங்குருதி.
கைது; சிறை!
கரங்களில் இருந்தவை
மெல்லிய மெழுகுகளல்ல.
முழக்கப் பதாகைகள் :
'விருத்தாசல விவசாயியின்
நெல்லைத் திருடாதே.
சமச்சீர் கல்வியை
சட்டமாக்கு.
வெட்டியாய்ப் பள்ளிக்கனுப்ப
வெட்கப்படு.
படிக்க எங்களுக்கு
புத்தகங் கொடு.
பள்ளிக்குள் புகுந்த
பகற் கொள்ளையரை
கைது செய்.
மூவர் தூக்கை
முற்றிலும் ரத்து செய்.
தமிழக மீனவனுக்கு
துப்பாக்கி வழங்கு...'
கடைசியில் கிடைத்தது
திருடப்பட்ட நெல்
மறுக்கப்பட்ட கல்வி.
நிறுத்தப்பட்ட தூக்கு.
கூடவே...
குருதி, தழும்பு,
காயம், கைது.
அதற்காகச் சிந்தப்பட்டது
கண்ணீரல்ல
குருதி.
போடப்பட்டது
குப்பைகளல்ல
வித்துக்கள்.
எழுப்பப்பட்டது கோரிக்கைகளல்ல.
போராட்ட முழக்கங்கள்.
இதற்குத் தேவை
மனிதாபிமானமல்ல.
மனசாட்சி.
வீரம் செறிந்த மனசாட்சி.
இந்த வீரப்போராட்டங்களை
உணர்வூட்டி,
வித்திட்டு, விளக்கி,
எம்முள்
மயங்கிக் கிடந்த
மனசாட்சிக்கு
மனிதம் புகட்டி,
நியாயம் செலுத்தி,
நேர்மை நிறுத்தி,
வலிமை இறுத்தி,
எளிமையாய் எங்களுக்கு
எடுத்துரைக்கும் வினவே...
உன்
ஏற்றப் பாட்டு
எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்.
என்றென்றும்
தொடரட்டும்.
நீர் பாயும்;
நெல் விளையும்...!
ஒருபதியாலொண்ணு...!!
2 comments:
அது ஹைகிளாஸ் உண்ணா(?)விரதம்.போகஸ் அதிகம். இது லோகிளாஸ் ஆவேசபோராட்டம்.அருமையான சொல்லாடல்கள்.இரண்டு பதிவுக்குரிய விடயங்களை ஒரே கவிதையில் கூறியது சிறப்பு.
அருமை...
by-Maakkaan
Post a Comment