நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
அணு உலை வேண்டாம்னு
அட்டையில எழுதிவச்சா
அவன்தாண்டா நக்சலைட்டு.
கூடங்குளம் ஆபத்துன்னு
கூடிநின்னு பேசினாக்கா
கும்பலோட நக்சலைட்டு.
'ஙே'ன்னு நீ முழிச்சாலும்
கொய்யால நீ நக்சலைட்டு.
திருதிருன்னு முழிச்சாலும்
தவறாம நக்சலைட்டு.
கடைய மூடச் சொல்லலையே.
கண்ணாடிய ஒடைக்கலையே.
கத்தியில்ல ரத்தமில்ல...
அட, ஆயுதமும் ஏதுமில்ல...
ஆனாலும் நக்சலைட்டு.
இடிந்தகரையில் வீடிருந்தா
இப்போது நீ நக்சலைட்டு.
உண்ணாவிரதப் பந்தலிலே
உண்ணாம நீ இருந்தா
உடனடியா நக்சலைட்டு.
பால்குடிக்கும் பாப்பாவும்
பள்ளிக்கூடப் பிள்ளையும்
பயங்கரமான நக்சலைட்டு.
நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
அரசாங்கம் சொல்லுறத
அப்படியே ஏத்துக்கிட்டா
உலகமகா உத்தமன் நீ.
உண்மையான இந்தியன் நீ.
தரமான தமிழன் நீ.
தலை நிமிர்ந்த மனிதன் நீ.
எதிர்த்து நின்னு ஒருவார்த்தை
ஏனென்று கேட்டாலும்
நீதாண்டா நக்சலைட்டு.
நாலு பேரு காறித்துப்பும்
நாதியத்த நக்சலைட்டு.
நல்லவனா இருக்கப்பாரு.
நாலு பேர மதிக்கப்பாரு.
கோஷமெல்லாம் போட்டுக்கிட்டு
கொடியெல்லாம் தூக்கிக்கிட்டு
போலீசில் அடிவாங்கி
பொறுக்கியாகிப் போகாதே.
நாட்டை நீயும் மதிக்கணும்.
நாமும் நல்லா இருக்கணும்.
கவருமெண்டு சொல்லுறத
காதுகொடுத்துக் கேக்கணும்.
புழுத்துப்போன அரிசியத்தான்
ரேஷனிலே வீசினாலும்
பொங்கித் திங்கப் பழகிக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
தெரு லைட்டு இல்லைன்னா
தடவி நடக்கப் பழகிக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
குடிக்கத் தண்ணி இல்லைன்னா
கொஞ்ச நாளு பொருத்துக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
கொசுத்தொல்லை இருந்தாக்கா
கொசு அடிக்கக் கத்துக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
கவலையெல்லாம் மறக்கணும்னா
கிரிக்கெட் பார்க்கக் கத்துக்க.
சிந்தனையும் சிக்கலானா
சீரியல் பார்க்கக் கத்துக்க.
சினிமா ரசிக்கக் கத்துக்க.
தினமலரை நீ படிச்சி
தினம் அறிவை வளத்துக்க.
வாழத்தானே பொறந்திருக்க?
வாழ்ந்துபாக்கக் கத்துக்க.
நாடு போற போக்கோட
நைசா போகப் பழகிக்க.
ஏன், எதுக்கு, எப்படின்னு
எடக்குமொடக்கா கேட்டுப்புட்டு
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு
பொழப்பையே நீ கெடுத்துக்காத.
பொறுக்கி பேரும் எடுத்துக்காத.
எவ்வளவு உரைச்சாலும்
எட்டி ஒதைச்சிக் கொன்னாலும்
நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
நாடே கெட்டுப் போகுது
நக்சலைட்டா ஆகுது!!
நல்லவனா நக்சலைட்டா?
நீயே முடிவு பண்ணிக்க.
புலம்பாம அலும்பாம
போத்திக்கிட்டு படுத்துக்க!!
3 comments:
எதர்த்தமான கவிதை
//எடக்குமொடக்கா கேட்டுப்புட்டு
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு
பொழப்பையே நீ கெடுத்துக்காத.
பொறுக்கி பேரும் எடுத்துக்காத.///
பின்னிட்டீங்க தல !
very nice and a correct statement (kavitha)of the fact...
Post a Comment